சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

This entry is part 1 of 3 in the series சிவ தாண்டவம்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”
-பாரதி.
“தமிழுக்கும் அமுதென்று பேர்”
பாரதிதாசன்.

இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.
அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ்.

அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை இயல்,இசை,நாடகம்.

இயற்றமிழ்:- எழுதுவதும் பேசுவதுமாகிய தமிழ் இது.

இசைத்தமிழ்:- பண்ணிசைத்துப்பாடுவதே இசைத்தமிழ்

நாடகத்தமிழ்:-நாட்டியம் அல்லது நாடகமாக விரிந்திருப்பதே நாடகத்தமிழ்.

நாடகத்தின் ஒரு பரிமாணம் கூத்து எனக்கொள்ளலாம்.கூத்தின் இன்னுமொரு பரிமாணம் நடனம் அல்லது நாட்டியம்,நர்த்தனம்.எல்லாமே நாடகம் தான்.ஆடல் தான்.

ஆயகலைகள் அறுபத்து நான்கில் கண்ணைக்கவரும் கவின் கலைகளில் நாட்டியம் முதன்மையானது என்றால் மிகையில்லை. நமது கலை வடிவங்கள் அனைத்தும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை தான்.இன்னும் சொல்லப்போனால்இசையும்,நாட்டியமும் இறைவனை அடைய மேற்கொள்ளும் ஒரு வழியாகவே நமது பண்பாடு கற்றுத்தந்துள்ளது. இறையருளால் இசையும் இசையால் இறையும் சித்திக்குமே. நாட்டியமும் அப்படித்தான்.

சாக்ஷாத் பரமேஸ்வரனல்லவா முதன் முதலில் நாட்டியமாடியவன்.

லிங்கத்திருமேனியாக வணங்கப்பட்டாலும் அனைத்து கோயில்களிலும் சிவனின் நடராஜ மூர்த்தமே உற்சவத்திருமேனியாக வீற்றிருக்கிறது. “ஆடல் வல்லான்” என அழகு தமிழ் இயம்பும் நடராஜரை.அவனே நடனத்தின் அதிபதி.

“கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ” – பாட்டும் நானே பாவமும் நானே பாடலில் விளங்கும் இந்த உண்மை.

சாதாரண நாட்டியமா அவன் ஆடுவது! பூமியின் இயக்கமல்லவா அவன் நடனம். “நானசைந்தால் அசையும் அகிலமெல்லாமே”என்று கண்ணதாசன் சொல்வது இதைத்தானே. ஒரு நொடி ஈசனின் ஆட்டம் நின்றால் கூட பூமியின் இயக்கம் ஸ்தம்பித்துப்போய்விடுமே. ஏன்? அப்படியென்ன அதிசயம்?

ஈசன் செய்யும் ஐந்து தொழில்களைக்குறிப்பதே அவனாடும் நடனம்

படைத்தல்
காத்தல்
மறைத்தல்
அருளல்
அழித்தல்

ஆகிய ஐந்து தொழில்களையும் கணநேரமும் ஓய்வின்றி நடத்துபவன் ஈசன்.அதன் குறியீடே நடராஜ மூர்த்தி . அதனாலேயே சைவக்குரவர் நால்வரும்,திருமூலரும்,திருவருட்பிரகாச வள்ளலாரும் இன்ன பிறச்சான்றோர்களும் தங்கள் பாடல்களில் நடராஜனின் அற்புத நடனத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.

“வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக்கிளர்
அண்டம்ஏழாடப்
பூதங்கள் ஆடப்புவனம்
முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான்
ஞானானந்தக்கூத்தே”

என்கிறார் திருமந்திரத்தில் திருமூலர்.

அசைவற்றுக்கிடந்த உலகமும் உயிர்களும் கூத்தனின் திருநடனம் கண்டு ஆடத்தொடங்கியதாம்.அதாவது இயங்கத்தொடங்கியதாம்.

இதையே எளிய தமிழில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுகிறார்

“அஷ்ட திசையும் கிடுகிடுங்க சேடன்
தலைநடுங்க
அண்டம் அதிர கங்கை
துளி சிதற
பொன்னாடவர் கொண்டாட
இஷ்டமுடனே கோபாலகிருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட………”

அப்பப்பா எப்படிச்சுழன்று சுழன்று ஆடியிருப்பார் நடேசன்.

அந்த காட்சியைக்காண ஆயிரம் கண் போதுமோ.

“ஆடிக்கொண்டார் அந்த
வேடிக்கை காண கண்
ஆயிரம் வேண்டாமோ!”-
முத்துத்தாண்டவர்.

“ஆர நவமணி மாலைகளாட
ஆடும் அரவும் படம் விரித்தாட”
என்றே வர்ணிக்கிறார்.

இதைக்கண்டு கண்டு மகிழ்வதற்காகவே மீண்டும் மீண்டும் பிறக்க அவா,நாவுக்கரசருக்கு

“இனித்தமுடன் எடுத்த பொற்பாதம் காணப்பெற்றால்
மனித்த பிறவியும்
வேண்டுவதே இம்மாநிலத்தே”
என்ற மிகப்பெரிய ஆசை!

திரிசரம் எரித்த விரிசடைக்கடவுள் திருவுலா நடனம் திருவொற்றியூரில் காணற்கரிய காட்சி.நந்திதேவனின் வேண்டுகோளுக்கிணங்க அமர்ந்து இருந்து அசைந்து ஆடினாராம் தியாகேசன்.

அதைக்கண்டு உடலும் உள்ளமும் சிலிர்த்த வள்ளலார் பாடுகிறார்

“சீரார் வளம்சேர் ஒற்றிநகர்த்
தியாகப்பெருமான் பவனிதனை
ஊராருடன்சென் றெனதுநெஞ்சம்
உவகை ஓங்கப்பார்த்தனன் காண்”

நந்தி மத்தளம் கொட்ட நாரதர் கானம் பாட தும்புரு யாழ் வாசிக்க தேவாதி தேவர்களும் கண்டு களித்த ஆனந்த தாண்டவத்தைக்காண நிஜமாகவே ஒரு பிறவியும் ஆயிரம் கண்ணும் போதுமோ

அம்மையப்பனாக அழகு நடம் புரியும் ஈசனே அழித்தல் தொழில் புரியும்போது ருத்ரனாக மாறி ருத்ர தாண்டவமாடுகிறார்.அது வீர தாண்டவம் கொடும் கோர தாண்டவம் ,விண்ணும் மண்ணும் நடுநடுங்க நெற்றிக்கண் திறந்து,விரியும் சடைகள் விரைந்து சுற்ற திரியும் கால்கள் திசையை எற்ற,சீற்றமிக்க தேவனாடும் கோர தாண்டவம்.

சிவசக்தி நடனத்தை மட்டுமே போற்றி எத்தனை எத்தனை பாடல்கள்……ஆனந்த நடமாடுவார்,நடனம் ஆடினார்,இடது பதம் தூக்கி ஆடும்,ஆனந்த நடமிடும் பாதன் அடுக்கிக்கொண்டே போகலாம்.

அடியார்களின் சிந்தையில் அம்மையப்பனின் ஆனந்த நடனம் நீக்கமற நிறைந்துள்ளது என்பதே காரணம். இப்படி ஈசன் ஆடிய பலவகை தாண்டவங்களைப்பற்றிய குறிப்புகளும் சிற்பங்களும் சிதம்பரம் ,தஞ்சை பெரிய கோவில் உட்பட பல இடங்களில் காணக்கிடைக்கிறது.
நடன முத்திரைகளும்,ஈசன் ஆடிய நூற்றியெட்டு கரணங்கள் எனப்படும் நாட்டிய நிலைகளும்(postures) சிற்ப வடிவில் இக்கோயில்களில் வடிவமைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.அவற்றையெல்லாம் காணவே ஆயிரம் கண் வேண்டுமே!

References:-
திருமூலர் ‘திருமந்திரம்’-உமா பதிப்பகம்”தேவாரத்திருப்பதிகங்கள்”-கங்கை பதிப்பகம்”கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்”,முத்து தாண்டவர் கீர்த்தனைகள்”,”திருவருட்பா”-shaivam.org

Series Navigationசிவ தாண்டவம் – 2 >>

About Author

12 Replies to “சிவ தாண்டவம்”

  1. சிவதாண்டவத்தை பற்றிய அருமையான பதிவு. வாழ்த்துகள்

  2. ஆஹா நடனத்தின் சிறப்பும் பெருமையும் கண்முன்னே …… அருமையான கட்டுரை

Leave a Reply to கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.