காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 4

தில ஹோமம் செய்த அன்று மதியம் ராமேஸ்வர கோவில்களை சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். ரூபாய் இருநூறுக்கு கண்டக்டட் டூர். அந்த லிஸ்டில் சர்வரோகஹர தீர்த்தத்தக் கரையில் தென் திசை காவல் தெய்வமாக கோவில் கொண்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த நம்பு நாயகி அம்மன் இல்லை. ஆட்டோக் காரரை கேட்டதில் அக்கோவில் அதிக தூரம் எனவும் அதையும் சேர்த்தால் நானூற்று ஐம்பது ருபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். கொஞ்சம் பேரம் பேசியதில் நானூறுக்கு ஒப்புக்கொண்டார்.

நாங்கள் முதலில் போனது கந்த மாதன பர்வதத்திற்கு. ஸ்ரீராமர் இந்த மலை ஏறித்தான் இலங்கைக்கு பாலம் கட்ட உகந்த இடத்தை தேடியிருக்கிறார். அவர் இம்மணர்குன்றின் மீது தன் பாதம் பதித்ததின் அடையாளம் இன்றும் காணக்கிடைக்கிறது. இதன் காரணமாக இவ்விடம் ‘ராமர் பாதம்’ என்றும் வழங்கப்படுகிறது.

இருட்டிவிட்டால் போக முடியாது, கோவிலையும் மூடிவிடுவார்கள் என்று ஆட்டோ டிரைவர் சொன்னதன் காரணமாக நாங்கள் அடுத்து சென்றது நம்பு நாயகி கோவிலுக்குத் தான். சுயம்பு அம்மன். அருகிலேயே பூஜைக்குரிய விக்ரஹம். வயதான பூசாரி மிகவும் மெல்லிய குரலில் பேசினார். குனிந்து, சுயம்பு நம்பு நாயகியிடம் நம்மைப் பற்றி விவரம் கூறினார். நம்மிடம், அவள் அளப்பரிய சக்தி உடையவள், நம் கூடவே இருந்து காப்பாள் என்றும் சொன்னார். தன் தந்தை, பாட்டன் பரம்பரை வழி வந்த நம்பு நாயகியின் பிரசித்தத்தை கூறும் பல கதைகளை எடுத்துரைத்தார்.

அங்கிருந்து பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். பிரம்மாண்ட சிலா ரூபம். இங்குதான், ஸ்ரீராமர் பாலம் அமைக்க உபயோகப்படுத்திய மிதக்கும் கற்களைக் கண்டோம். அங்கிருந்தவர் ஏதாவது ஒரு கல்லை தூக்கச் சொன்னார். தண்ணீரை விட்டு வெளியே எடுத்ததும் கனம் கூடிற்று. இங்கு, இக்கற்கள் விலைக்கு கிடைக்கிறது.

(இப்போதே கருமை படர்ந்து விட்டதாலும், மின் வெட்டு காரணமாகவும், ஆடி அமாவாசை அடுத்த சில நாட்களில் என்பதாலும் இனி பார்த்த தீர்த்தங்கள், கோவில்களில் போட்டோ எடுக்க முடியவில்லை)

அடுத்தது, லக்ஷ்மண தீர்த்தம். சேது மகாத்மியம் இத்தீர்த்தத்தின் மஹிமையை விஸ்தாரமாக எடுத்துரைக்கிறது. இத்தலத்தில் தீர்த்த ஸ்ராத்தம் செய்வது விசேஷமானது. சங்கல்பம் செய்து, முடி கொடுத்து, இக்குளத்தில் நீராடி பிண்டப்ரதானம் செய்து பித்ருக் கடனை நிறைவேற்ற வேண்டும்.

‘அஸ்வத்தாமா ஹத : குஞ்ஜர :’ என்று தர்ம புத்திரனை சொல்ல வைத்து ‘குஞ்ஜர :’ என்பது துரோணாச்சாரியர் காதில் விழாமல் துந்துபி முழக்கி அவரை வீழ்த்திய ஸ்ரீகிருஷ்ணனின் தந்திரம் தெரிந்ததும் யுதிஷ்டிரர் மனக்கிலேசமுற்று இங்கு அமைந்துள்ள ராம தீர்த்தத்தில் நீராடி அருகிலேயே கோவில் கொண்டுள்ள ஸ்ரீராமரை தரிசித்திருக்கிறார்.

எதிர் திசையில் சீதா தீர்த்தம். குளத்தில் தண்ணீர் இல்லை. தூர்வாரி ஊற்றுக் கண்களை திறக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் போகும் போது நீர் நிரம்பி காட்சி அளிக்கலாம்.

ராமேஸ்வரத்தின் மற்ற திசைகளுக்கும் காவல் தெய்வங்கள் உண்டு. வடக்கில் பத்ரகாளி. கிழக்கில் உஜ்ஜயினி காளி (அக்னி தீர்த்தம், சங்கர மடம் அருகில்),மேற்கில் துர்க்கை அம்மன். இவர்களையும் தரிசித்து விட்டு சிருங்கேரி மடம் திரும்பினோம்.

மறுநாள் காலை….

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.