சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

ஜெய்ஸ்ரீமன்நாராயணா புத்தாண்டு ஏப்ரல் 13ம் தேதி இரவு 07.52 மணிக்குபிறக்கிறது. கிரஹநிலைகள் திருக்கணித பஞ்சாங்கப்படி கீழே தரப்பட்டுள்ளது. சார்வாரி வருஷ புத்தாண்டு பலன் பொது பலனிற்கு பிறகு கீழே உள்ளது.

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

சார்வாரி வருஷத்திய பலன் வெண்பா :

சாருவாரி ஆண்டதனிற் சாதி பதினெட்டுமே

தீரமறு நோயால்தி ரிவார்கள், – மாரியில்லை

பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமின்றி சாவார் இயம்பு

அர்த்தம்: உலகில் அனைத்து சாதியினரும் நோயில் பாதிக்கபடுவார்கள், மழையில்லை பூமி விளைச்சல் இல்லை குழந்தைகள் மற்றவர்கள் வயிற்றுக்கில்லாமல் இறப்பர்.

ஆனால் சார்வாரி வருஷம் பிறப்பது தனூர் ராசியில் துலாலக்னத்தில், சந்திரன் குரு வீட்டில் நல்ல மழை உண்டு. புதன் ராஜ்யாதிபதியாகிறார். காற்றும் மழையும் உண்டு. மந்திரி சந்திரன் நூதன வகை பயிர் அபிவிருத்தி, பொருளாதாரம் செழிப்பு அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்து நன்மைகள் பல செய்யும், விளைச்சல் உண்டு. மக்கள் சுகம், மழை அதிகம்.

பொது பலன்கள்:

புதன் இந்த வருடத்திய ராஜா என்பதால் காற்றும் மழையும் நன்றாக இருக்கும். மே 21 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் ராகு இருப்பதால் நோய்களின் தாக்கம் இருந்து கொண்டிருக்கும், மத்திய மாநில அரசுகள் நல்ல பல செயல் திட்டங்களை கொண்டு வரும்.அதன் மூலம்அனைத்து பிரிவினரும் பயன் அடைவர்.

மழை பொழிந்து விளைச்சல் நன்றாக இருக்கும்.கனிம பொருட்கள், விவசாய பொருட்கள் மலிவாக கிடைக்கும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.ராகு, கேது பெயர்ச்சி நாட்டில் நல்ல வளர்ச்சியை உண்டாகும். மக்கள் பீதி குறைந்து சுகமாய் இருப்பார்கள்.

குறிப்பு:

  இவை பொது பலன்களே. உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி சரியான பலன்களை பெறுவது உத்தமம். உங்கள் தசாபுக்திகள் கிரஹவலிமையை கொண்டு பலன்கள் மாறும்.

லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌமஜோதிடநிலையம்

FG , II Block, Alsa Green park, Near MIT Gate

Nehru Nagar, Chrompet, Chennai – 600 044

Email: mannargudirs1960@gmail.com

Phone: 044-22230808 / 8056207965

Skype ID : Ravisarangan


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம் முடிய):

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

வருடத்தை 3 ஆக பிரித்துக் கொள்ளலாம். சித்திரை,வைகாசி,ஆனி,ஆடி என முதல் நான்கு மாதங்கள். அதில் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டு இருக்கும். வக்ர கிரஹங்கள் தொழிலில் ஒரு பின்னடைவைத் தரும். இருந்தாலும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். குடும்பம் ஓரளவு நன்றாக ஓடும். சுப நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு தேவைப்படும். தாயார் உடன் பிறந்தோரால் அனுகூலம் உண்டு. சித்திரையில் தொடங்கி ஆடி வரை பெரிய முன்னேற்றம் இருக்காது. ஆனால் கெடுபலன்களும் அதிகம் இருக்காது. அதே நேரம் கடன்களை அடைத்து விடுவீர்கள், சேமிப்பு கடினம். இருந்தாலும் பணவரவு தாராளம்.

தொழிலாளர்கள் கொஞ்சம் கடின உழைப்பை தர வேண்டும், சொந்த தொழில் செய்வோர், கலைஞர்கள், அனைத்து பிரிவினரும் ஓரளவுதான் முன்னேற்றம். பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் சில தாமதம் ஏற்படும். ஆவணி பிறக்கும் வரை பொருத்து இருக்க வேண்டும். இந்த முதல் 4 மாதங்கள்சுமாராகஇருக்கும்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் நல்ல சூழல் உருவாகிறது. கிரஹங்கள் வக்ர நிவர்த்தியுடன் பல கிரஹங்கள் அனுகூலமாக இருப்பதால் நினைத்ததை முடித்து கொள்ளலாம். வாக்குறுதிகள் நிறைவேற்றுவீர்கள். பணப் புழக்கம் தாராளம், தொழிலில் வெற்றி, உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு,வெளிநாட்டு வேலை. அனைத்து பிரிவினருக்கும் ஏற்றம், பணப்புழக்கம் தாராளம். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடித்து இருக்கும்.

மார்கழி,தை, மாசி, பங்குனி நாலு மாதங்கள் ராகு 2லும் கேது 8ல் வருகிறது, மேலும், முதல் 4 மாதத்தில் இருந்தது போல குரு மகரம் வருகிறார். ஆனால் இதுவும் ஒரு வித நன்மையை தருவது போலவே அமையும். சனியின் வக்ரநிவர்த்தி, குருவின் பார்வை, ரிஷபத்தில் ராகு கெடுபலனை செய்யாது.அதனால் துன்பங்கள் குறைவு, எடுத்த காரியத்தில் வெற்றி, உத்தியோகத்தில் நல்ல நிலை விரும்பிய இடமாற்றம், அல்லது நல்ல வேலை கிடைத்தல், திருமணம் குழந்தை பாக்கியம், சிலருக்கு உண்டாகுதல், சிலருக்கு வீடு அமையும் யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம், அரசியலில் செல்வாக்கு, ஆடம்பரம் கேளிக்கைகள், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

பொதுவில் இந்த புத்தாண்டு பெரிய சங்கடங்களை மேஷராசிக்கு தராது. பல கிரஹங்கள் அனுகூலநிலையில், உடல்ரீதியானபடுத்தல்அல்லதுஉறவினர்கணவர்/மனைவி, பெற்றோர் வகையில் கொஞ்சம் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் அவ்வப்போது இருந்தாலும், பெரிய பாதிப்புகள் கிடையாது. முதல் நான்கு மாதத்தில் வாக்குகளை கொடுப்பதை தவிர்க்கவும். இந்த வருடத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்களை கைவிடமாட்டார். அதே போல வருட கிரஹங்களில் குரு பார்வை, ராகு போன்றவை நன்மையே தரும். சிக்கனமாக இருந்தால் பின்னர் நிறைய சேமிப்பு இருக்கும். வருட மத்திக்கு பின் மகிழ்ச்சிக் கூடும்.

அனைத்து பிரிவினருக்கும் முதல் 4 மாதம் சுமாரான பலன். அடுத்த 4 மாதம் மிக நல்ல பலன். கடைசி 4 மாதம் நல்ல பலன் என்று இருப்பதால் வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்து கொண்டு முன்னேற்றத்தை நோக்கி நகருங்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து பெரிய வாக்குறுதிகளை கொடுக்காமல், பொறுமையை கடைபிடித்து செல்லவும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

சிவனைவணங்குங்கள், சிவ நாமத்தைசொல்லுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவது சிறந்தது. முடிந்த அளவு தான, தர்மங்களைசெய்யுங்கள், மாற்று திறனாளிகளுக்குஉதவுங்கள்.


ரிஷபம் (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதம் முடிய):

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

இந்த வருடம் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 9 ல் சனி, குரு, செவ்வாய் சஞ்சரிக்கின்றனர், இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். குரு பார்வை அதிக நன்மையை செய்கிறது. முதல் 4 மாதங்கள் ஆடிவரை மிகுந்த நல்ல பலனும், அடுத்த 4 மாதங்கள் கொஞ்சம் சுமாரான பலனும், கடைசி 4 மாதங்கள் நல்ல பலனும் உண்டாகிறது. சேமிப்புகூடும்.எதிலும் வெற்றி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருந்த நீங்கள் கொஞ்சம் உஷாராக நிதானித்து செயல்படுவீர்கள். வீட்டில் செல்வம் சேரும்.

முதல் 4 மாதங்கள் ஆடி வரை சூரியன் 12,ஜென்மம்,2, 3ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது குரு வக்ரகதியிலும் அதிசாரத்திலும் இருந்து சில நன்மைகளை செய்வார். திருமண தடை நீங்கும். எதிர்பார்த்த இனங்களிலும் வருவாயும், வீடு வாகன யோகங்களும், குடும்பத்தில் சந்தோஷம், கேளிக்கைகள், ஆரோக்கியம் எல்லாம் நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல நிலை உண்டாகும்.வெளிநாட்டு வேலை கிடைக்கும், வருமானம் உயரும். மற்ற தொழில் செய்வோர் ஏற்றம் பெறுவர். புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கு அரசு உதவி, வங்கி கடன்உதவி எல்லாம் கிடைக்கும், அனைத்துப் பிரிவனருக்கும் ஏற்ற காலம்.

ஆவணி முதல் கார்த்திகை வரை சுமாரான பலன்கள். குடும்பத்தில் வியாதி,மருந்து செலவு, மனஸ்தாபங்கள், பிரிவு இப்படி கொஞ்சம் இருக்கும். அதே நேரம் தசா புக்திகள் சாதகமாய் இருந்தால் இவை இருக்காது. புதிய முயற்சிகளை கடுமையாக கொண்டால் ஒழிய வெற்றி இருக்காது. உத்தியோகம், தொழில் கொஞ்சம் பின்னடைவை கொண்டிருக்கும்.கடன் தொல்லைஇருக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரையிலும் கொஞ்சம் நிமிர்ந்து இருக்கும்படி நல்ல பலன்கள் இருக்கும். ராகு கேதுபெயர்ச்சி, குருவின் 9ம் இட சஞ்சாரம், மற்ற கிரஹங்களின் அனுகூல சஞ்சாரம் ஓரளவு நிம்மதியை தரும்.எதிலும் வெற்றி உண்டாகும். அனைத்துப் பிரிவினரும் தங்கள் முன்னேற்றத்தை காண்பர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பம் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருக்கும். கணவன் மனைவிஅன்பு பெருகும். குழந்தைகளால் நன்மை உண்டு. தொழில் செய்வோருக்கு அரசு அனுகூலம்,வங்கி கடன் போன்றவை கிடைக்கும்.கலைஞர்கள், அரசியல்வாதிகள், சினிமா துறை முன்னேற்றத்தைக் காண்பர்.

பொதுவில் இந்த வருடம் கலந்து கட்டி நன்மையும் சுமாரான பலனும் இருக்கும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும், எதிரிகள் எதிரில் இருப்பர், கவனமாய் இருக்கவும். வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை 8ல் இருக்கும் கேது குடும்பத்தினர் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும். பின் 7ல் வரும் போதும் வாழ்க்கை துணைவரின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனைபடி நடத்தல், உணவுக் கட்டுப்பாடு, தியானப்பயிற்சிகள் போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இந்த வருடம் ராகு,கேது மட்டுமல்லாமல், குருவும் அவ்வப்போது படுத்தும் என்பதால் தக்ஷிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபடுதல். மேலும், பிள்ளையார், நரசிம்மர் இவர்களையும் வணங்கவேண்டும், அருகிலுள்ள கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடிந்தஅளவு அன்னதானம், வஸ்திரதானம் போன்ற தர்மங்களை செய்யுங்கள்.


மிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம் முடிய):

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

வருட ஆரம்பத்தில் ராசி நாதன் பத்தில் நீசம், ஜென்மத்தில் ராகு, 8ல் சனி,குரு,பார்க்க கொஞ்சம் பயமாயிருக்கும். ஆனால் கவலை வேண்டாம். தைரியஸ்தானாதிபதி சூரியன் உச்சத்தில் லாபத்தில். மேலும் குரு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறது. சனியும் பார்ப்பதால் கொஞ்சம் வார்த்தைகளை கவனமாக விடவேண்டும். கணவன் மனைவிவிட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

முதல் நாலு மாதங்கள் ஆடி முடிய பெரிய கஷ்டங்கள் ஏதும் வராது. பொருளாதாரம் பரவாயில்லை. குடும்பம் குதூகலமாக இருக்கும். நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். அப்போது பெரிய பாதிப்புகள் இருக்காது. தொழிலில் / உத்தியோகத்தில் கொஞ்சம் சுருதி குறைந்து இருக்கும். வீண்வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.பத்தாம் இடம் அதிபதி குரு நீசத்தில் இருந்தாலும் திரும்ப ஜூன் முதல் 7ல் வருவதால் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டிருக்கும். சேமிப்பை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. அனைத்து பிரிவினருக்கும் கடுமையான உழைப்புக்கு பின் ஓரளவு பலன் இருக்கும். உடல் ரீதியான படுத்தல்கள் 7ல் இருக்கும் கேதுவும், அவ்வப்போது சந்திரனும் கொடுக்கும், மருத்துவ ஆலோசனைகளை கடைபிடிப்பது நன்மை தரும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை மிக நன்றாக இருக்கும். வருட கிரஹங்களை விட செவ்வாய், புதன், சுக்ரன், சூரியன் மிகுந்த நன்மையை செய்வதால் லாபங்கள் அதிகரிக்கும். வீடு,வாகன யோகங்கள் சிலருக்கு இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்குகுழந்தைபாக்கியம்இருக்கும், உத்தியோகத்தில் நல்ல நிலை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கைக்கூடும். வேலை தேடிக்கொண்டிருப்போருக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த தொழில் தொடங்க ஏற்ற காலம் இது. அரசு உதவி, வங்கி கடன் கிடைக்கும். அனைத்து பிரிவினருக்கும் நல்ல சூழல் உண்டாவதால் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறவும்.

மார்கழி முதல் பங்குனி வரை ராகு/கேது, சனி, மற்றும் குரு பார்வை இவை மிகுந்த நன்மை தரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் தொழிலில் மேம்பட்ட நிலை இருக்கும். பண வரவு தாராளம், சிலருக்கு இல்லத்தில் சுபநிகழ்வுகள் நடந்து புதிய உறவுகள் உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம் எல்லாம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தடைகள் நீங்கும்.

பொதுவில் முதல் நான்கு மாதங்கள் சுமார். வருமானம் குறைவு, உடல் நிலை குடும்பத்தினரின் உடல்நிலை, மற்றும் பிணக்குகள் போன்றவை இருந்து கொண்டிருக்கும். வருட கிரஹங்களான சனி, குரு, ராகு/கேது பெரிய நன்மை செய்யாவிடினும், மற்ற கிரஹங்கள் அவ்வப்போது அனுகூலநிலையைத் தரும். வருட மத்தியில் ராகு/கேது பெயர்ச்சி நன்மையை தரும். நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம். இன்னல் யாவும் தீரும். முயற்சிகள் வெற்றி அடையும். மற்ற 8 மாதங்கள் நல்ல பலன்களை அதிகம் தரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நின்ற திருக்கோல பெருமாளை, ஸ்ரீனிவாசனை மனதில் எப்பொழுதும் நினைத்துக் கொள்ளுங்கள்.அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள், தான தர்மங்களை முடிந்த அளவு செய்யுங்கள். வார்த்தைகளை விடுவதில் கவனம் செலுத்துங்கள்.வீண் விவாதங்களைத் தவிருங்கள். நன்றாகஇருக்கும்.


கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்முடிய):

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

ஆண்டு தொடக்கம் 6ல் சந்திரன்,கேது, 7ல் செவ்வாய் உச்சம், குரு நீசம், சனி ஆட்சி, குருபகவான் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். 9ல் புதன்நீசம், 10ல் தொழில் ஸ்தானம் சூரியன் உச்சம், 11ல் சுக்ரன் ஆட்சி. வெற்றி மீது வெற்றி, எதை தொட்டாலும் பொன் ஆகும்.

கிரஹங்கள் சாதகமாக இருப்பதால் உங்கள் புதிய முயற்சிகளை தொடங்குங்கள். முதல் 4 மாதம் ஆடி வரை, சிறப்பாக இருக்கும், உடலில் ஆரோக்கியம் மேம்படும், மகிழ்ச்சிக் கூடும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும், விட்டுக் கொடுத்து அனுசரித்து போவீர்கள். பேச்சில் இனிமை இருக்கும். உத்தியோகம், தொழிலில் மேம்பட்டநிலை இருக்கும். எதிர்பார்த்த பதவி,சம்பளம் கிடைக்கும்.அரசு வேலைக்கு முயற்சித்தால் கிடைக்கும். அதிகாரம் பதவி வரும்.சொந்தத் தொழில் தொடங்கினால் அரசு, வங்கி உதவிகள் கிடைக்கும், கண்டச் சனிபடுத்தும் என்பார்கள்.ஆனால் அதுஉங்களுக்குஇல்லை வாழ்க்கைத் துணையுடன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பீர்கள். செவ்வாய் பூமி லாபத்தைத் தரும், சிலர் புதிய வீடு, வாகனம், பூமி வாங்குவர். விவசாயம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு ஏற்ற காலம், அனைத்து பிரிவினரும் சௌக்யமாக இருப்பர்.

ஆவணி முதல் கார்த்திகை வரை வருட கிரஹங்கள் வக்ரநிலை . கொஞ்சம் உடல்ரீதியாக படுத்தும். மற்ற கிரஹங்கள் சாதகமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் கொஞ்சம் கட்டுப்படும், ராகு/கேது பெயர்ச்சி நன்மை தரும். இருந்தாலும் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது, குடும்ப அங்கத்தினருடன் கருத்து மோதல்கள் வரலாம்.விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும், தொழிலில் போட்டிகள் அதிகம் இருக்கும், அனைத்து பிரிவினரும் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய காலம்.நன்மை தீமை கலந்து இருக்கும்காலம்.இந்த நான்கு மாதம்.

மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு செழிப்பை தரும். குரு பார்வை நன்மை தரும் குரு பகவான் மகரத்திலிருந்து கும்பத்துக்கு செல்வதும் நன்மையைதரும். வருட ஆரம்பத்தில் உங்களது முயற்சிகளின் பலனை இரட்டிப்பாக இப்பொழுது அனுபவிப்பீர்கள். மேலும் சூரியனின் சஞ்சாரம் 6,7,8ல் வரும்போது(மார்கழி, தை,மாசி) மட்டும் உடல் உபாதைகள் உஷ்ணத்தினால் பாதிப்புகள், குடும்பத்தினர் வைத்தியசெலவுகள் என்றுஇருக்கும், அதேநேரம் செவ்வாய், மற்றும் ராகுவால் செலவுகள் கட்டுப்படும்.ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொதுவில் இந்த வருடம் நல்ல பலன்கள் அதிகம். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுங்கள்.அரசியலில் இருப்பவர்கள், அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு நன்மை அதிகம் உண்டாகும். பெண்களுக்கும் நல்ல நிலை குடும்பத்தில் மகிழ்ச்சி,உழைக்கும் மகளிருக்கு ஏற்ற வகையில் பதவி,பணம் கிடைக்கும். அனைத்து பிரிவினருக்கும் நன்மை அதிகம் உண்டாகும் வருடம் இது.

உங்கள் இஷ்டதெய்வம், குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள், அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். நன்மை அதிகம்.அதனால் இயன்ற அளவு தான தர்மங்களை செய்யுங்கள், முதியோர், ஊனமுற்றோர், வறியோர் இவர்களுக்கு சரீர ஒத்தாசை செய்யுங்கள்.


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்முடிய):

வருட ஆரம்பத்தில் ராசியாதிபதி சூரியன் பாக்கியத்தில் உச்சனாய் பலமாய்,9க்கு உடைய செவ்வாய் 6ல் உச்சம், 6ல் சனிஆட்சி, இவை மற்ற கிரஹங்களை விட பலம்.அதனால் நல்ல பலன்கள் அதிகம், முதல் இரண்டு மாதங்கள் கொஞ்சம் நல்ல பலன், கொஞ்சம் கெட்ட பலன் என கலந்து இருக்கும். காரணம் 5க்குடைய குரு 6ல் மறைவது, புதன் சஞ்சாரம் குடும்பத்தில் சிறுசலசலப்பு, பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம், உத்தியோகத்தில் பின்னடைவு, உடல்ரீதியான தொல்லைகள் முக்கியமாக வயிறு, புண், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகள் உண்டு. வயதான பெற்றோர்கள் கொஞ்சம் பாதிப்பு அடையலாம், சரியான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் ஆனி வரை கொஞ்சம் படுத்தல் இருக்கலாம்.எதிலும் கவனமாய் இருக்க வேண்டும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.அதே போல எதிலும் அவசரப்படுதல், ஜாமீன் கையெழுத்து போன்ற விஷயங்களில் கவனம் தேவை. மனம் சலனமும் இருந்து கொண்டு இருக்கும். தெய்வ வழிபாடு நலம் தரும்.

ஆனி முதல் கார்த்திகை வரை 5ல் இருக்கும். குரு பார்வையாலும் நன்மை செய்வதும், மற்ற கிரஹங்கள் அனுகூலம் இருப்பதாலும் ஓரளவு நல்ல பலன் இருக்கும். பண புழக்கம் தாராளம். செவ்வாயின் சஞ்சாரம் இந்த மாதங்களில் அதிகாரம் செல்வாக்கு இவற்றை அதிகரிக்கும்.நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பம் உண்டாகும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு,சம்பள உயர்வு போன்றவை பெறுவர்.புதிய வேலையும் நன்மை தரும். தொழில் செய்வோருக்கு அரசாங்க அனுகூலம் உண்டாகும். அதே நேரம், ராகு-கேது பெயர்ச்சி கொஞ்சம் மந்த நிலையை தரும், 10ல் வரும் ராகு தொழிலை பாதிக்கும்.ஆனாலும் கவலை வேண்டாம். குருவின் பலம் அதை சரி செய்துவிடும். வருமானத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். அனைத்து பிரிவினரும் நன்மைகள் நிறைய பெற்று, சிரமங்கள் குறைவாக இருக்கும், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரை கொஞ்சம் சங்கடங்கள் இருக்கும். கிரஹங்கள் சாதகம் இல்லை.இருந்தாலும் குரு பார்வை அதிசாரமாக கும்பத்தில் செல்லும் குரு நன்மை தரும். பொருளாதாரம் பாதிப்பதால் அதிக சிக்கனம் தேவை. எதிலும் யோசனையுடன்செயல்பட்டால்பிரச்சனைகளின்தாக்கம்குறையும், விட்டுக்கொடுத்துபோவது, பொறுமையுடன் செயல்படுவது, மேலதிகாரி, அரசு போன்றவர்களுடன் மோதல் இல்லாமல் இருத்தல் போன்றவை அதிகபாதிப்புகள் இல்லாமல் செய்யும்.எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வதும் நல்லது.

பொதுவில் இந்த வருடம் திருமண முயற்சி, வீடு வாங்குதல், குழந்தை பாக்கியம், நிலத்தில் பணத்தை முதலீடு செய்தல் போன்றவை வெற்றியை தரும், சேமிப்பவர்களுக்கு நன்மை அதிகம் இருக்கும், குடும்பத்தில் குதூகலம் சுபநிகழ்வுகள் என்று சந்தோஷம் இருந்தாலும், பொருளாதாரத்தில் ஏற்றம், இறக்கம் இருப்பதால் கொஞ்சம் சிக்கனமாய் இருப்பது அவசியம், அதே போல உடல் ஆரோக்கியம், குடும்ப உறவுகளின் ஆரோக்கியமும் பாதிப்படைவதால் சரியான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையையும் எடுத்துக் கொண்டால் பாதிப்பு குறையும். நன்மை தீமை கலந்த வருடம்.

ஓம் நம சிவாய என்று சொல்லிக் கொண்டே இருங்கள். சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது.அபிஷேகத்துக்கு பால் கொடுப்பது, சிவ ஸ்தோத்திரங்கள் சொல்வது, தான தர்மங்களை செய்வது நன்மை தரும்.


கன்யா (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய):


வருஷம் பிறக்கும் போது உங்களுக்கு சாதகமான கிரஹ நிலைகள் உள்ளது. 5ல் சனி, குரு, செவ்வாய், மேலும் 9ல் சுக்ரன் என்றும், 8ல் இருக்கும் சூரியன் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பது ஒருவிதத்தில் நன்மை தரும். மேலும் ராசிநாதன் புதன் சனி பகவானின் பார்வை பெற்று நீசபங்கராஜ யோகமாக நன்மையை செய்கிறார். வேண்டுவன அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வ வளமும், பணப்புழக்கம் மிக தாராளமாயும், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளும் அதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க நினைப்போருக்கு ஆடி வரை ஏற்ற காலம். தொழில் செய்வோருக்கு வங்கி அரசு உதவிகள் கிடைக்கும்.போட்டிகளைஎதிர்கொண்டுவெற்றிபெறுவீர்கள், அனைத்துபிரிவினருக்கும், முதல் நான்கு மாதங்கள் ஏற்றமாய் இருக்கும். இதை பயன்படுத்தி கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை கிரஹநிலைகள் சற்று சாதகமில்லை. குறிப்பாக சனி, ராகு,கேது மற்றும் செவ்வாயின் சஞ்சாரம் சில இடைஞ்சல்களை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம்,குடும்பத்தை விட்டு பிரிதல், தொழிலில் மந்தநிலை என்று இருக்கும். அதே நேரம் வருமானம் பாதிக்காது. தேவையான அளவு இருந்து கொண்டிருக்கும். சிக்கனமாய் இருந்தால் சமாளித்து விடலாம். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது. தசாபுக்திகள் சாதகமாய் இருந்தால் அவஸ்தைகள் குறையும். அதேநேரம் வருடகிரஹங்களில் குரு தன் பார்வையால் நன்மை செய்வதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

மார்கழி முதல் பங்குனி வரை குரு, ராகு/கேது மற்றும் சுக்ரன், சூரியன் சஞ்சாரம் ஓரளவு நன்மை தரும். சந்திரன் அவ்வப்போது மன சஞ்சலத்தை தரும். செவ்வாயின் சஞ்சாரம் பணவரவை சரி செய்யும், இழந்த வேலை கிடைக்கும். மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். அனைத்து பிரிவினரும் மகிழ்ச்சி அடையும்படி பொருளாதார நிலை நன்றாக மாறிவிடும். மனோபலம் கூடும். உத்தியோகஸ்தர் நல்லவேலையை பெறுவர். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். பாதியில் நின்ற வீடு போன்றவை முழுமை அடையும்.கடன் தொல்லை தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

பொதுவில் வருடத்தில் ஆடி முதல் கார்த்திகை வரை சுமாரான பலன்கள் இருந்தாலும் பெரும்பாலும் நல்ல பலன்களே இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பணப்புழக்கம் தாராளம், குடும்பஒற்றுமை அதிகரிக்கும், வியாதிகள் நீங்கும், மருத்துவ செலவு குறையும்.அனைத்து பிரிவினரும் தங்களது வேலையில் நல்ல முன்னேற்றம் அடைவர். வீடு வாகன வசதிகள் பெருகும்.

நரசிம்மரை வணங்குகள், அருகில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். உங்கள் துன்பம் விலகி விடுவதால் நன்மை அதிகம் நடைபெறுவதால் நரசிம்மனை துதிப்பது நலம் தரும், முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம் போன்றவற்றை செய்வது நன்மை தரும்.


துலாம் (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3):

புத்தாண்டு தொடக்கம் லக்னாதிபதி 8ல் ஆட்சி, 7ல் சூரியன் உச்சம், 4ல் செவ்வாய் உச்சம், சனிஆட்சி, குருநீசபங்க ராஜ யோகமாய், இருப்பதில் சூரியனும் செவ்வாயும் அதிக பலம் பெறுவதால் நன்மை அதிகம் இருக்கும்.

முதல் நான்கு மாதங்கள் ஆடி வரை முயற்சிகள் வெற்றிபெறும். எதை நினைத்தீர்களோ அதில் வெற்றி கிட்டும். மற்ற கிரஹங்களும் ஓரளவு சாதகமாய் இருப்பதால், வருட ஆரம்பம் நன்றாகவே தொடங்குகிறது. உத்தியோகத்தில் நல்ல நிலை இருக்கும் விரும்பிய இடமாற்றம், பதவி சம்பளம் என்று தேடிவரும்.சொந்த தொழில் செய்வோர் முன்னேற்ற பாதையில்செல்வர். எதிரிகள் தாமாக விலகுவர், பணப்புழக்கம் தாராளம், குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும், மகிழ்ச்சி குதூகலம் என்று இருக்கும் தாமதமான திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும். அதே நேரம் 3ல் இருக்கும் கேது கொஞ்சம் தைரியத்தை கெடுத்து பயத்தை உண்டாக்கும், 9ல் இருக்கும் ராகு குடும்பஉறவுகளின் உடல்நலம் பாதிக்கசெய்வார். மருத்துவ செலவுகள் உண்டாகும் கவனம் தேவை. ஆனாலும் எதிர்பார்ப்புகள் ஈடேறும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை குரு 3ல். ஆனால் பார்வையால் பலம் தரும் வருட கிரஹங்கள் சனி,ராகு,கேது பெரிய நன்மையை செய்யவில்லை.ஆனால் புதன், செவ்வாய், சூரியன், சுக்ரன் சஞ்சாரங்கள் இந்த 4 மாதத்தில் நன்மை தருவதாக இருப்பதால் கவலை வேண்டாம்.முயற்சிகள் தாமதத்துக்கு பின் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணப் புழக்கம் தாராளம் என்பதால் பெரிய கஷ்டங்கள் மனசஞ்சலங்கள் இருக்காது. ராகு கேது பெயர்ச்சி ஓரளவு நன்மை தரும். இந்த 4 மாதங்களில் உங்கள் நிலை நன்றாகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குரு 4ல் சென்று பார்வையால் ஓரளவு நன்மை தரும். பயம் இருந்து கொண்டிருக்கும், தெய்வ வழிபாடுஅதை போக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரை கிரஹநிலைகள் சாதகம், குருவின் அதிசார சஞ்சாரம், ராகு கேதுவின் நிலை. சனியின் வக்ரநிவர்த்தி போன்றவையும் மாதாந்தர கிரஹங்களான செவ்வாய், சூரியன், சுக்ரன் இவை நன்மை செய்கின்றபடியால் உத்தியோகத்தில் இருந்து வந்த தேக்கநிலை மாறி பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில்அரசு, வங்கி உதவி கிடைத்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து பிரிவினருக்கும் பணப்புழக்கம் தாராளம், செல்வநிலை இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலம், தடைபட்ட திருமணம் கைகூடல், எதிர்பார்த்த குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம் என்று நன்றாகவே இருக்கும்.

பொதுவில் இந்த வருடம் நன்மைகள் அதிகம் இருப்பதால் கவலை வேண்டாம். வருவதை சேமிக்க தொடங்குங்கள். வருடத்தைக் கடந்து விடலாம்.கொஞ்சம் மனசஞ்சலம் சந்திரன் சஞ்சாரத்தாலும் 3ல் கேது இருக்கும் காலம் வரையிலும் இருக்கும். அதேபோல் குடும்பஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் காலமும் குடும்பத்தில் சிறுசலசலப்பு இருந்து கொண்டிருக்கும். விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நல்லது. பெரிய கஷ்டங்கள் வராது.

அம்பாளை வணங்குங்கள். அருகில் உள்ள கோயிலுக்கு சென்று தாயாருக்கு விளக்கு ஏற்றுங்கள், லக்ஷ்மீ அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் போன்றவை படியுங்கள். முடிந்த அளவு தான தருமங்களை செய்யுங்கள். அன்னதானம், வஸ்திரதானம் போன்றவையும் சரீரத்தினால் ஒத்தாசைகளையும் செய்யுங்கள்.


விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டைமுடிய):

ராசிநாதன் தைரியஸ்தானத்தில் உச்சம், தைரியாதிபதி 3ல் ஆட்சி, ருணரோக சத்ருஸ்தானத்தில் சூரியன் உச்சம், 7க்குடையவர் 7ல் ஆட்சி இப்படி ஆரம்பிக்கிறது. வருடம் துணிச்சல், கம்யூனிகேஷன்ஸ்கில் பெருகுதல், வியாதிகள் பறந்தோடல், வாக்குடையவர் தைரிய ஸ்தானத்தில் நீசபங்க ராஜயோகமாய் உங்கள் அதிகாரம் செல்வாக்கு எல்லாம் ஏற்றம் பெறும். சித்திரை முதல் ஆடி வரையில் மிக சிறப்பான காலம், நினைத்தது நிறைவேறும்.அனைத்து முயற்சிகளிலும் வெற்றி, மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும்.

மேலும் பாக்யாதிபதி சந்திரன் இந்த நாலு மாதங்களில் இரட்டை ராசிகளில் வரும் போதெல்லாம் மகிழ்ச்சியை தருகிறார். உத்தியோகத்தில் உள்ளவர்கள் (தனியார்துறை, அரசுதுறை) வேலையில் உற்சாகம் பிறக்கும். உடன் பணியாற்றுபவர்கள் மேலதிகாரிகள் ஒத்துழைப்புக் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைத்து ஒன்று சேருவர். அனைத்து தொழில் செய்வோரும், விவசாயியும் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவதை உணர்வார்கள். புதியவீடு, வாகனம், நிலம், இவற்றை சிலர் பெறுவர்.திருமணத் தடை விலகி இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.  ஆக இந்த நாலு மாதம் உங்களுக்கு வெற்றியையும் அனுகூலத்தையும் தரும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை ராசிநாதனும், புதன், சுக்ரன், சூரியன் என்று மாத கிரஹங்கள் மட்டுமே நல்ல பலனை தரும். சனி வக்ரகதியில் பெரிய நன்மையை செய்யாது. மேலும் ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் சிறு சலசலப்பையும் உடல் ஆரோக்கிய பாதிப்பையும் ஏற்படுத்தும். குருபார்வையும் அவ்வளவு சுகம் தராது இருந்தாலும் 3க்குடையவர் 3ல் ஆட்சியாக இருந்து 5, 9 இடங்களை பார்ப்பதால் பெரிய துன்பங்கள் யாவும் விலகி பனிபோல் ஓடிவிடும். எதிலும் கொஞ்சம் கவனமாய் இருந்து செயல்படுவது நலம் தரும். சுக்ரன் ஐஸ்வர்யத்தை தரும், அதேபோல புரட்டாசியில் சூரியன்,புதன் சேர்க்கையும் நல்ல லாபத்தையும், புத்தி சரியாக செயல்படுவதையும் தரும். பொதுவில் ஏற்றம் இறக்கம் இருக்கும். கவனமாக செயல்பட வேண்டும்.

மார்கழி முதல் பங்குனி வரை குருவின் அதிசாரம் கும்பத்தில் வரும் போதும் ,சனி வக்ர நிவர்த்தி பெற்று பலம் பெறும் போதும் நன்மைகள் தேடி வரும். மற்ற மாத கோள்களில் ராசிநாதன் செவ்வாயும், புதனும் ஓரளவு நன்மைகள் செய்யும். குரு பார்வை நன்மை தரும் புதிய முயற்சிகள் வெற்றிதரும். இருந்தாலும் சின்ன சின்ன சோதனைகளும் உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மூலம் வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நல்லது.சிலருக்கு வீடு, வாகன யோகம்அமையும். உத்தியோகஸ்தர், தொழில் செய்வோர், விவசாயி, பெண்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் நன்மைகள் இருந்தவண்ணம் இருக்கும். பணப்புழக்கம் தாராளம், இருந்தாலும் செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். தாக்குபிடிப்பீர்கள் கடந்தகாலங்களின் அனுபவங்கள் உங்களை பக்குவப்படுத்தி சரியாக வழிநடத்தும்.

பொதுவில் முதல் நான்கு மாதங்கள் மிகுந்த நன்மைகளை தந்தாலும் பின்வருமாதங்கள் சிரமங்களையும் சேர்த்துத் தரும். ஆனால் கடந்த சில வருடங்களில் தாங்கள் பட்ட வேதனைகளை போல இருக்காது. பக்குவம் உங்களை நிதானமாக அடியெடுத்துவைக்க உதவி செய்யும். பணம் வரும்போது சேமிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த மாதங்களுக்கு உதவும்.

முருகன் கோயிலுக்கு செல்லுங்கள். சஷ்டிவிரதம் இருங்கள்.கந்தசஷ்டிகவசம், அனுபூதி போன்றவை படியுங்கள்.கோயிலில் விளக்கேற்றுங்கள், நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். உடல்ஊனமுற்றோர், வயதானோருக்கு சரீரத்தின் மூலம் உதவிகளை செய்யுங்கள்.


தனுசு (மூலம், பூராடம் , உத்திராடம் 1ம் பாதம்முடிய) :

ராசியில் கேது, சந்திரன் இணைவு போல் தோன்றினாலும் கேதுவின் எதிர் திசையில் சந்திரன் விலகி இருப்பதால் கெடுதல் இல்லை.ராசிநாதன் 2ல் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார்.2க்குடையவரும், 5க்குடையவரும் சேர்ந்து இருக்கின்றனர். வாக்கு, பூர்வ புண்ய ஸ்தானம் வலுப்பெறுகிறது. 5ல் சூரியன் உச்சத்தில் மனதில் ஒளி பிறக்கும் . எதிர்காலம் பற்றிய சிந்தனை வலுப்பெறும். முதல் 4 மாதங்களில் குரு பகவான் மகரத்திலிருந்து திரும்ப ஜென்மத்துக்கு வந்து விடுகிறார். வந்து பார்வையால் அருள் செய்கிறார். செவ்வாய் சுப விரயத்தைத் தருகிறார். வீட்டில் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். 7ல் ராகு கொஞ்சம் வாழ்க்கைத் துணைவரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் அல்லது கருத்து வேறுபாடு உண்டாகும்.இதுவும் மே 21 வரையில்தான். அதன் பின் ராகு செவ்வாயின் நக்ஷத்திரத்தில் இயங்கும்போது வாழ்க்கைத் துணைவர் மூலம் லாபம் வந்து சேரும்.சனி பகவான் 2ல் ஆட்சி வக்ரமும் பெறுகிறார்.இதனால் வார்த்தைகள் தடிக்கும். கவனம் தேவை. வாக்குக் கொடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் புதனின் சஞ்சாரம் ஓரளவு நிம்மதியை தரும்.எதிர்பார்த்திருந்த திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். உத்தியோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்காது.எனினும் எதிர்பார்த்த வருவாய் இருக்கும். அனைத்து பிரிவினரும் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ஆவணி முதல் கார்த்திகை வரையிலும், மாத கிரஹங்கள் சாதகம், சனி சாதகம். அதனால் எதிர்பாரா இனங்களின் மூலம் வருவாய், தொழிலில் நல்ல முன்னேற்றம், அரசாங்க உதவி, வங்கி கடன் போன்றவை கிட்டும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை உண்டாகும். பதவி தேடி வரும். அரசாங்கத்தில் பணிபுரிவோர் அரசியல்வாதிகள் வரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் அடுத்த மாதங்களை வெற்றிக் கொள்ளலாம்.செப்டம்பர் 25க்கு மேல் ராகு/கேது சஞ்சாரம் ஓரளவு நன்மை தரும்.அதேபோல குரு,சனி வக்ரநிவர்த்திக்கு பின் இல்லத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவர். புனித பயணம், விருந்து கேளிக்கைகள் என மகிழ்வீர்கள். வீடு,வாகன சுகம் உண்டாகும்.

மார்கழி முதல் பங்குனி வரை குருவின் சஞ்சாரமும், செவ்வாய், புதன் ,சுக்ரன் சஞ்சாரமும் நல்ல பலனை தரும், விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரிந்தவர் கூடுவர், புதிய வீடு குடி போகும் யோகம் சிலருக்கு உண்டாகும். வேலையில் பளு குறையும்.பதவி உயர்வு உண்டு. போட்டியாளர் விலகி தொழில் நன்றாக இருக்கும். விவசாயம் பெருகும். எதையும் தைரியத்துடன் செய்வீர்கள். மகிழ்ச்சியான மாதங்களாக அமையும்.

பொதுவில் நன்மை தீமை கலந்து இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு மாதங்களிலும் மாத சஞ்சார கிரஹங்கள் நன்மை புரிவதால் தீமைகள் குறைவாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். தெய்வ நம்பிக்கைக் கூடும். பணப்புழக்கம் தாராளம், கவலை வேண்டாம். சிரமங்களை உங்கள் முயற்சியால் வெல்வீர்கள். மனோதிடம் கூடும்.

தக்ஷிணாமூர்த்தி, எல்லை தெய்வங்கள், சாஸ்தா என்று வழிபடுங்கள். ஐயப்பன் கோயிலுக்கு செல்லுங்கள். விளக்கேற்றுங்கள். தானதர்மங்களை செய்யுங்கள். அன்னதானம் செய்யுங்கள். விலங்குகள்,பறவைகளுக்கும் உணவிடுங்கள்.


மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்முடிய):

வருட ஆரம்பமே அமர்க்களம், ராசிநாதன் ஆட்சி, லாபாதிபதி உச்சம், 3க்குடையவர் நீசபங்க ராஜயோகம். மூவரும் சேர்ந்து ராசியில், 4ல் சூரியன்உச்சம். மேலும் 5க்குடையவர் 5ல் ஆட்சி கெடுதல் பார்வைகள் ஏதும் இன்றி மனதில் உற்சாகம் கூடும். தைரியம் கூடும். இதுவரை இருந்து வந்த சோதனைகள் யாவும் முறிந்து இனி தொடர் வெற்றி என்பது போல இருக்கும். சித்திரை முதல் ஆடி வரையிலான காலகட்டங்கள் மிக சிறந்தவை .உங்கள் தேவைகள் பூர்த்தி அடையும். எதிர்பார்த்த இனங்களில் வரவு உண்டாகும். வீடு வாகன யோகங்கள் கிடைக்கும். திருமண தடை, புத்திர தடை விலகும். இல்லத்தில் ஒற்றுமை, கணவன் மனைவிக்குள் நெருக்கம், குழந்தைகளால் மகிழ்ச்சி என்று நன்றாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடை விலகி, புதிய உத்தியோகம் அல்லது நல்ல நிலை உண்டாகும். சொந்த தொழிலில் இருந்து வந்த எதிரி தொல்லை போட்டிகள் நீங்கி ஏற்றம் பெறும். உடல் ஆரோக்கியம் நன்று. வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுங்கள்.

ஆவணி முதல் கார்த்திகை மாதம் வரையிலும் குருவின் அதிசாரம், ராகு கேதுவின் சஞ்சாரம் செவ்வாய், சுக்ரன் இவர்களின் சஞ்சாரம் நன்றாக இருப்பதால் பெரிய சிரமங்கள் ஏதுமில்லை. அதே நேரம் வார்த்தைகளை விடுவதில் கவனம் செலுத்துங்கள். விரயத்தில் இருக்கும் குருபகவான்சிலசிரமங்களைதரலாம், விட்டுக்கொடுத்துசெல்வதுநன்மைதரும், புதியமுயற்சிகளைநன்குபரிசீலித்துபின்செயல்படுத்தவும். உத்தியோகத்தில்வேலைபளுகூடும்அதேநேரம்உழைப்புக்குதகுந்தஊதியம்இருக்கும். அனைத்துதொழில்பிரிவினருக்கும்ஓரளவுநன்மையும்கொஞ்சம்சிரமமும்இருக்கும், நிதானமாகசெயல்படுவதால்நன்மைவிளையும். திருமணங்கள்நடைபெறுவதில்கொஞ்சம்தாமதம்ஆகலாம்ஆனால்பெரியதடைஏதும்வராது. புதியவீடுநிலம்வாங்குவதில்அதிககவனம்செலுத்தவும். அவசரப்படவேண்டாம்.

மார்கழி முதல் பங்குனி வரையிலான காலங்களில் சனி பகவான் முழுவீச்சுடன் பலனை தருகிறார்.மேலும் ராகு, கேது, மாத கிரஹங்களில் புதன், சூரியன், சுக்ரன் நல்ல பலனை தருவதால் ஓரளவு நிம்மதியுடன் இருக்கலாம். பெரிய கஷ்டங்கள் வராது எனினும் எதையும் நிதானமாக யோசித்து தகுந்த குரு ஆலோசனை பெற்று செய்வது நன்மைத் தரும். இல்லத்தில் மகிழ்ச்சி நீடித்து இருக்கும். சுப நிகழ்ச்சிகளால் புதிய உறவுகளை பெறுவீர்கள். அதனால் நன்மை விளையும். சிலருக்கு வீடு நிலம் அமையும். வெளிநாட்டு பயணம் பலனைத் தரும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தால் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.வாராத கடன்கள் வசூலாகும். அரசாங்க, வங்கி உதவிகள் கிடைக்கும்.

பொதுவில் இந்த வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். பெரும் கஷ்டங்கள் இருக்காது. எனினும் எதையும் நன்கு யோசித்து பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது நன்மை தரும். யோகங்கள் நிறைய இருப்பதால் இந்த ஆண்டில் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ஆஞ்சநேயரை வணங்கவும்.ராமநாமத்தை சொல்லவும். அருகில் உள்ள அனுமார் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். வறியோர், ஏழைகளுக்கு உணவு உடை போன்றவற்றை தர்மம் செய்யுங்கள்.விலங்கு, பறவைகளுக்கு உணவிடுங்கள். உண்மைக்கு மாறாக நடக்காதீர்கள். சத்தியத்தை கடைபிடியுங்கள்.


கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) :

ராசிநாதன் 12ல் ஆட்சி, 3, 10க்குடையவரும் 12ல் உச்சம், லாபாதிபதி 2க்குடையவர் குருநீச பங்கராஜ யோகம். இவை 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அதே நேரம் இந்த இடம் மோக்ஷசயன ஸ்தானம் ஆகும். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பிரிவு விலகி ஒரு நெருக்கம் ஏற்படும். 5க்குடையவர் புதன் 2ல் நீசமானாலும் சனியின் சாரம் என்பதால் புண்ணியம் அதிகம். 3ல் சூரியன் உச்சம் மன தைரியம் கூடும். முதல் 4 மாதங்கள் சித்திரை முதல் ஆடி வரையிலும் தைரியமும் பயமும் கலந்தே வரும். எதிலும் செயல்பாடுகளில் ஒரு தயக்கம் இருந்து கொண்டிருக்கும் உத்தியோகஸ்தர்கள் அவசரபடாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. அனைத்து தொழில் பிரிவினரும் பிறர் சொல்வதை நம்பி முழுமையாக இறங்கக் கூடாது. அசட்டு தைரியம் கஷ்டத்தை கொடுக்கும். இல்லத்தில் ஒற்றுமை இருந்தாலும் மற்றவர் கை ஓங்கி இருக்கும். அதைக் கண்டு அமைதியாக செல்வது நல்லது. பெண்கள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் நல்லநிலை இருந்தாலும் கொஞ்சம் மெதுவாக செல்வது போல தோன்றும். வருவாய் நன்றாக இருக்கும் பணப்புழக்கம் தாராளம். வீடு,வாகன யோகம், திருமண தடை விலகல் என்று நல்ல விஷயங்களும் நடக்கும். சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆவணி முதல் கார்த்திகை வரை குரு லாபத்திலும், சுக்ரன் செவ்வாய் புதன் நல்ல நிலையிலும் இருப்பதால் பண வரவு தாராளம். 4ல் ராகுவும் 10ல் கேதுவும் இருந்துகொண்டு உத்தியோகத்தில் ஒரு மந்த நிலையை தரும். தொழிலில் போட்டிகள் அதிகம் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுதல் நன்று. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குரு அதிசாரம் வந்து போவது ஓரளவு பலன் தந்தாலும், கார்த்திகையில் 12ல் வரும் குரு சுபவிரயங்களை கொடுப்பார். பணத்தை சேமித்து வைத்திருந்தால் கஷ்டமில்லாமல் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இல்லாவிடில் கடன் வாங்கி நடக்கும். உத்தியோகம், சொந்த தொழில் அனைத்து பிரிவினருக்கும் மிக கவனமாக செல்லக் கூடியநேரம் இது. எதையும் யோசித்து செயல்படுவது உத்தமம். பெரிய கஷ்டங்கள் வராது எனினும் மனஉளைச்சல் இருந்து கொண்டிருக்கும். பெரியோர்கள் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

மார்கழி முதல் பங்குனி வரை மாதாந்திர கிரஹங்களான புதன், சுக்ரன், மற்றும் ராசிநாதன் சனி ஆகியோர் மட்டுமே பலன் தருகின்றனர். நிதானமாக செயல்படுதல் புதிய முயற்சிகளை ஒத்தி போடுதல், கடன் வாங்காதிருத்தல் போன்றவை சிரமங்களைக் குறைக்கும். உழைப்பவர்களுக்கு ஊதியம் கிடைப்பது சிரமம் அல்லது எதிர்பார்த்த பதவி சம்பள உயர்வு கிடைப்பது சிரமம். அனைத்து பிரிவினருக்கும் பெண்களுக்கும் நிதானத்தை கடைபிடித்தால் இந்த மாதங்களை கடந்துவிடலாம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாதிருத்தல் நலம். பிறரை நம்பி செயல்படுதல், அவசரப்படுதல், யோசிக்காமல் ஒரு செயலில் இறங்குதல் போன்றவை துன்பத்தைக் கொண்டுவரும்.

பொதுவில் முதல் நான்கு மாதங்கள் நல்லநிலை. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அடுத்த 8 மாதங்களை சமாளித்து விடலாம். சுபசெலவுகள், இல்லத்தில் சுபநிகழ்வுகள் இருந்தாலும் அதன் மூலமும் கடன் சுமை ஏறும். கூடுமா னவரையில் கடன் வாங்காதிருத்தல் நலம் தரும். வாக்கு கொடுக்காதீர்கள் அல்லது பெரியோர் சொல்படி நடக்கவும். வீட்டில் மூத்தவர் இருந்தால் அவர் அறிவுரை அல்லது நல்ல நண்பர்களின் பேச்சுப்படி நடப்பது நன்மை தரும். பொதுவில் கஷ்டபலன்கள் நிறைய இருக்கின்றன.

அம்பாளை வணங்குகள், லக்ஷ்மியை வணங்குகள், அருகில் உள்ள கோயிலுக்கு சென்று தாயாருக்கு விளக்கேற்றுங்கள். தான தருமங்களை விடாமல் செய்யுங்கள். அன்னதானம் செய்வது உத்தமம்.விலங்கு பறவைகளுக்கும் உணவிடுங்கள்.


மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதிமுடிய) :

ஆரம்பம் ராசிநாதன் நீசபங்க ராஜயோகமாய் லாபத்தில், சனி ஆட்சி, செவ்வாய் உச்சம் என அவற்றுடன் சேர்ந்து இருக்கிறார். குடும்ப வாக்குஸ்தானத்தில் சூரியன் உச்சம், 3ல் தைரியஸ்தானாதிபதி ஆட்சி என்று நன்றாகவே இருக்கிறது. துணிச்சல் அதிகரிக்கும். வேலையில் கெட்டிக்காரத்தனம் பளிச்சிடும், உழைக்கும் வர்க்கத்தினருக்கு உற்சாகம் உண்டாகும். சொந்த தொழில், பிற தொழில் செய்வோருக்கும் ஏற்றம் உண்டாகும். முதல் 4 மாதம் ஆடி வரை நன்றாகவே இருக்கும். பொருளாதாரம் தாராளம், பணம் புரளும். விருந்து கேளிக்கைகள், குடும்ப மகிழ்ச்சி, கணவன் மனைவி ஒற்றுமை, உறவுகளுடன் நெருக்கம் என்று சிறப்பாக இருக்கும். அதேநேரம் 10 கேது ஒரு மந்த நிலையைத் தரும். 4ல் ராகு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சண்டை சச்சரவுகளுக்கும் குறைவு இருக்காது. இதுமே 21 வரை இருக்கும். ராகு செவ்வாயின் நக்ஷத்திர சாரத்தில் வரும்போது குடும்பத்தில் அமைதி ஏற்படும். மேலும் புதிய வீடு குடி போகும் யோகம் சிலருக்கு உண்டாகும். அதன் மூலம் மிகப் பெரிய நன்மையும் உண்டாகும். சொத்து சேரும் கஷ்டகாலம் விலகிவிட்டது போல தோன்றும். செல்வவளம் இருக்கும் இந்த நேரத்தில் பணத்தை சேமியுங்கள்.பின்னர் உதவும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 10ல் இருக்கும். குரு பகவான் உத்தியோகத்தில் தொழிலில் ஒரு மேன்மையைத் தருவார்.பதவி உயர்வு , சம்பள உயர்வு, தொழில் விஸ்தரிப்பு அரசாங்க வங்கி உதவி என்று நன்றாக இருக்கும். அதேபோல இந்த 4 மாதத்தில் சூரியன், சுக்ரன், புதன் ஓரளவு நன்மை செய்வதால் பணவரவு தாராளம். விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்திலும் சரி தொழில் செய்யும் இடத்திலும் சரி நன்மையை பெறலாம். தடைபட்ட திருமணம் கை கூடும்.சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பதவிதேடிவரும், வாழ்க்கையில் ஒரு சிறப்பான எதிர்காலம் நோக்கி பயணிக்கத் தொடங்குவீர்கள். எதையும் தாங்கும் வல்லமை உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். வீடு, வாகன யோகங்கள் உண்டாகும். சராசரிக்கும் மேல் ஒரு வாழ்க்கை இருக்கும். பொதுவில் வருவதை சேமித்து முன் யோசனையுடன் நடந்தால் இந்த மாதங்கள் சிறப்பாக இருக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரை குரு லாபத்தில் ராகு கேது நல்ல நிலையில் அதோடு சனி, புதன், செவ்வாய், சுக்ரன் இவர்களும் நல்லபலனை அதிகம் தருவதால் எண்ணங்கள் தேவைகள் நிறைவேறும். விட்டுப்போன சொந்தங்கள் தேடிவரும். உத்தியோகம் வேறு காரணங்களால் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உண்டாகும்.பெரியோர்கள் ஆசீர்வாதம் உண்டாகும்.மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் உயர்ந்தநிலை அல்லது நல்ல உத்தியோகம் கிடைக்கும், சொந்தத் தொழில் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் நல்லநிலை உண்டாகும். பணவரவு தாராளம், எதையும் யோசித்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.பெரியோர்கள் சொல்படி நடப்பது நலம் தரும்.

பொதுவில் நல்லபலன்கள் அதிகம். இந்த வருடத்தில் இருப்பதால் சேமிக்கத் தொடங்கவும். அது அடுத்த சில ஆண்டுகளுக்கு உதவும்.எல்லா பிரிவினருக்கும் நன்மை அதிகம் நடைபெறும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கையில் விட்டுப் போன உறவுகளை புதிப்பிப்பதன் மூலம்மகிழ்ச்சிஅதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்வுகளால் புதிய உறவுகள் கிடைக்கப்பெற்று அவர்கள் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். பணத்தை சேமிக்கும் பழக்கத்தைஏற்படுத்தி கொள்ளவும்.

பிள்ளையாரை சேவியுங்கள், விக்நவிநாயகனை வழிபடுவது நலம் தரும். விநாயகர் அகவல் படியுங்கள்.மரத்தடி பிள்ளையாருக்கு ஒரு விளக்கேற்றுங்கள். முடிந்த அளவு அன்னதானம் போன்ற தானதர்மங்களை செய்யுங்கள். நல்ல பலன்அதிகம் உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.