தனூர் ராசி(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)–55/100
சனிபகவான் இதுவரை ஜென்மத்தில் இருந்தார் இனி தனம், குடும்ப ஸ்தானமான 2ம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்கள் செல்வாக்கு உயரும், தடைபட்ட திருமணம் கைகூடும், சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருந்து கொண்டு சுகஸ்தானமான 4ம் இடத்தையும், ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8ம் இடத்தையும் உத்தியோகம் லாபமாகிய 11ம் இடத்தையும் பார்ப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இதுவரை தடங்கலாய் இருந்த அனைத்தும் விலகி, சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும். உத்தியோகத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டு பொருளாதார வளம் கூடும். பணம் அதிகம் சேரும், குடும்பம் ஒற்றுமையாக இருக்கும், சமூக அந்தஸ்து கூடும் அதே நேரம் ஜென்மத்தில் இருக்கும் கேது, மற்றும் மற்ற கிரஹ சஞ்சார நிலைகள் சில சிரமங்களை கொடுக்கும். பகையை தோற்றுவிக்கும். கொஞ்சம் கவனம் தேவை. பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி அதிக நல்ல பலன்களை கொடுக்கிறது. வக்ர கால சஞ்சாரங்கள் ராகு கேது பெயர்ச்சிகள் ஓரளவு கஷ்டத்தை தரரும். சிலருக்கு சொத்து, சொந்த வீடு அமையும்.
உடல் நலம்/ஆரோக்கியம் :
நரம்புகளில் பாதிப்பு இருக்கும்.மன உளைச்சல் இருந்து கொண்டிருக்கும். வாழ்க்கை துணைவர் மற்றும் பெற்றோர்களின் உடல்நிலையில் பாதிப்புகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கும். 5ம் இடத்துக்குடைய செவ்வாயின் சஞ்சாரம் நன்றாக இல்லை. ஆதலால் சரியான மருத்துவ சிகிச்சை,தியானப்பயிற்சி போன்றவையும் ஆகாரவகையில் கவனமும் இருந்தால் உடல்ஆரோக்கியம்நன்றாகஇருக்கும். பெரிய பாதிப்புகள் வராது எனினும் மருத்துவ செலவுகளை இந்தசனிப்பெயர்ச்சி முழுவதும் கொடுத்து கொண்டிருக்கும். கவனம்தேவை.
குடும்பம் மற்றும் உறவுகள் :
கணவன் மனைவிக்கிடையில் அந்யோந்யம் அதிகரிக்கும், பெற்றோர்களுடைய உறவுகள் திரும்ப புதிப்பிக்கும்படி இருக்கும். ஒரு இணக்கமான சூழல் இருக்கும், குழந்தைகளுடனான உறவு மிக நன்றாக திருப்திகரமாக இருக்கும் மற்ற சகோதர உறவுகள் மற்ற உறவுகளும் நல்ல நிலையில் அனுசரித்து போக சந்தோஷம் தரும்படி இருக்கும். குடும்பத்துடன் அடிக்கடி விருந்து கேளிக்கைகள் என்று இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் புதிய உறவுகளை தரும். அதன் மூலம் நல்ல ஆதாயம் இருக்கும். இதுவரை பங்காளிகள் இடையே இருந்துவந்த பிணக்குகள் முற்றிலுமாக நீங்கி சுமூக உறவு இருக்கும்.
வேலை/உத்தியோகம் :
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இதுவரை தாமதப்பட்டுவந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு அலுவலகத்தில் வைத்திருந்த நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறுதல் என்று நன்றாகவே இருக்கும். விரும்பிய இடமாற்றம், சிலருக்கு புதிய வேலை, வெளிநாட்டு வேலை கிடைக்கும். அதேநேரம் சனி வக்ர சஞ்சார காலங்களிலும் (முன்னுரையில் கொடுக்கப்பட்டு இருக்கு) ராகு /கேது பெயர்ச்சியான செப்டம்பர் 2020 முதல் ஜூலை 2022 வரை அவ்வப்போது பிரச்சனைகள் வேலை பளு இடமாற்றம் பதவி உயர்வு தாமதமாதல் என்று இருக்கும். ஆனால் பொதுவில் இதுவரை உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் இருக்கும்.
தொழிலதிபர்கள் :
உற்சாகம் கூடும், தொழிலில் நல்ல முன்னேற்றம் பணவரவு, தொழில் விஸ்தரிப்பு என்று நன்றாக இருக்கும். எதிரிகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி பெருவீர்கள், புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கு அது கை கூடும், பெண்களை பங்குதாரரராக கொண்ட நிறுவனம், ரியல் எஸ்டேட், தரகு, மீடியா போன்ற தொழில்கள் நல்ல வளர்ச்சியை காணும், அதேநேரம் சனி வக்ர காலங்களில் கொஞ்சம் கவனமாய் இருத்தல் கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருக்க வேண்டும், கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆடம்பரத்தை குறைத்து சேமிக்கும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.
மாணவர்கள் :
தகவல் தொடர்பு, விஷுவல்கம்யூனிகேஷன், வர்த்தகம், நிதித்துறை போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றமான காலம், நல்ல கல்லூரி, விரும்பிய படிப்பு, உயர்கல்வி, வெளிநாட்டு படிப்பு என்று எண்ணம்போல் ஈடேறும் பெற்றோர் ஆசிரியர் பெரியோர்கள் பாராட்டை பெறுவார்கள். அதேநேரம் நண்பர் சேர்க்கையை சரியாக வைத்து கொள்வதும், தகுந்த ஆலோசனையை பெற்று அதன் படி நடப்பதும் நன்மை தரும். சனி வக்ர சஞ்சார காலம் சுமாராக இருக்கும் தடைகள் வரும், அதிக முயற்சி படிப்பில் அதிக கவனம் ஆசிரியர் ஆலோசனை படி நடத்தல் என்று இருந்தால் பெரிய தொல்லை இல்லை.
கலைஞர்கள்/அரசியல்வாதிகள் /விவசாயிகள்:
மிக நன்றாகவே ஆரம்பிக்கும், புதியவாய்ப்புகள் தேடிவரும், கலைஞர்கள் அரசின் பாராட்டையும் ரசிகர் ஆதரவையும் புகழையும் பெறுவர், சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், சனியின் வக்ர சஞ்சாரகாலம் பொருளாதார மந்த நிலையை தரும், எதிலும் ஒரு கவனத்துடன் இருக்க வேண்டும், அரசியல்வாதிகள் பதவி கிடைத்தாலும், தொண்டர்களை தக்க வைக்க அதிகம் செலவு செய்ய வேண்டும். எதிரிகள் சமயம் பார்த்து இருப்பர், வார்த்தையில் நிதானம், அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது எதிலும் ஒரு நிதானத்துடன் செயல்படுவது நல்லம் தரும். விவசாயிகள் பணப்பயிர் மூலம் லாபத்தை பார்ப்பர், வழக்குகள் சாதகம், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், புதிய சொத்து வாங்க வாய்ப்பு ஏற்படும், சனி வக்ர சஞ்சார காலங்களில் கவனமாய் இருத்தல் வேண்டும், வழக்குகளில் சிக்காமல் இருக்க வேண்டும், கால்நடையால் விரயம் வரும்.
பெண்கள் :
சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் குதூகலம் இருக்கும் திருமணத்தை எதிர்பார்த்தோருக்கு திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும், கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உழைக்கும் மகளிருக்கு பண வரவு தாராளம், செல்வாக்கு கூடும், அங்கம்பக்கத்தாரோடு இணக்கமான நிலை இருக்கும். சனி வக்ர சஞ்சார காலங்களில் கொஞ்சம் கவனமாய் இருந்து நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது.
ப்ரார்த்தனைகளும் வணங்க வேண்டிய தெய்வமும்:
சாஸ்தா, ஐயனார் இவர்களை வணங்க வேண்டும், குலதெய்வ வழிபாடும், ஊர் எல்லை தெய்வ வழிபாடும் மிகுந்த நன்மையை தரும், கோயிலில் நெய் தீபம் ஏற்றுதல் நலம் தரும், தான தருமங்களை அதிக அளவில் செய்யுங்கள், சரீரத்தினால் முதியோர், இயலாதோருக்கு உதவி செய்யுங்கள், விலங்குகள், பறவைகளுக்கு உணவிடுங்கள்.