பூவின் தத்துவம்
பெரியவர் வாக்கிங் கிளம்பும் போதே சொல்லிவிட்டார்! நானாக ஏதாவது சொன்னால் கேட்டுக்கொள். நீயாக பேசக்கூடாது. பேச்சு ஒன்றுமில்லை என்றால் ஜபம் பண்ணிக்கொண்டு வா.
கையில் ஒரு தடியுடன் கிளம்பியாச்சு. அதே தெருவில் ஒரு தங்கரளி செடி. பூக்களை கொய்ய ஆரம்பித்தோம். என்னுடைய கான்செப்ட் என்னவென்றால் செடியில் கொஞ்ச பூக்களை அழகுக்கு விட்டுவிட்டு மீதியை பார்த்து கொய்ய வேண்டும் என்பது. ஆனால் அவரோ எல்லாவற்றையும் கொய்யச்சொன்னார். “பூச்செடியை வைத்தால் அது பூக்கும் போது பூக்களை கொய்து பகவானுக்கு சமர்பணம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை இருந்தால் வீட்டு பூஜைக்கு. அல்லது கோவிலுக்கு கொண்டு கொடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் செடியிலேயே பூவை வாட விடுவது பாபம்.”
எனக்கு ஆச்சரியம்! இப்படிக்கூட இருக்கா?
முகத்தை பார்த்துவிட்டு , “உம், கேள்” என்றார்.
“செடி ஜீவனா? அல்லது ஒவ்வொரு பூவும் ஒரு ஜீவனா?”
“ஆமாம். ஒவ்வொரு பூவும் ஒரு ஜீவன். அதன் லக்ஷியமே பகவானை அடைவதுதான். அதை நிறைவேற்ற வேண்டியது செடியை நட்டு வளர்த்தவனின் கடமை. அப்படி செய்யவில்லை என்றால் பூக்களை அவனை சபிக்கும். எங்காவது ஊருக்கு போவதென்றால் கூட தகுந்த ஏற்பாடு செய்துவிட்டு போக வேண்டும். இந்த பூவின் தத்துவம் பலருக்கு தெரிவதில்லை. அழகாக இருக்க வேண்டும் என்று விட்டுவிடுகிறார்கள். அது சாயந்திரம் வாடிவிடுகிறது. குறைந்தது அது காயானாலாவது அதன் வம்சத்தின் மூலம் பகவானுக்கு போய் சேரலாம். அப்படி இல்லாத பூச்செடிகளில் பூவை பறிக்கா விட்டால் பிரச்சினைதான். வாசனை இல்லாத பூக்களை பறிக்கத்தேவையில்லை. அவை பூஜைக்கு உதவ மாட்டா.”
பேசிக்கொண்டே ஒரு எருக்கஞ் செடி அருகில் வந்தார். அதில் கொத்தாக மொட்டாக இருந்ததை விரல்களால் அழுத்தி மலரச் செய்தார்.
“இந்த செடிகள் சிலதுக்கு தானாக மலரும் சாமர்த்தியம் இல்லை. இப்படி யாரேனும் மலர்த்தி விட வேண்டும்.”
போகிற போக்கில் சில வீடுகளில் பூத்திருந்ததை விட்டுவிட்டு போய்க்கொண்டே இருந்தார்.
கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதான் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறாரே!
ஆனால் என் சந்தேகத்தை புரிந்து கொண்டார். “இங்கெல்லாம் பூ பறிக்க எனக்கு அனுமதி இல்லை. முன்னே பறித்த இடங்களில் அனுமதி இருக்கிறது!”
வழியில் ஓரிரண்டு சின்ன கோவில்கள். கொஞ்சம் பூக்களை சமர்பித்தோம்.
“முன்னே …ஊரில் இருந்த போது இப்படித்தான் போகும் வழியில் பூக்களை பறிப்பேன். வழியில் ஒருவர் வீட்டில் பூக்கள் வாடிக்கொண்டு இருப்பதை பார்த்தேன். அவரிடம் பறித்து கோவிலுக்கு கொடுக்க அனுமதி கேட்டேன். ‘மாட்டேன், அவை அழகுக்காக வைத்திருக்கிறேன்’ என்றார். ‘சரி’ என்று கிளம்பிவிட்டேன். அதே தெருவில் பரிச்சயமான நபர் ஒருவர் உண்டு. அவர் நாங்கள் பேசுவதை பார்த்துவிட்டு ‘என்ன சாமி?’ என்று விசாரித்தார். நானும் நடந்ததை சொன்னேன்.
அடுத்த நாள் அதே தெரு வழியாக போன போது பூ வீட்டுக்காரரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள்! ஹார்ட் அட்டாக்காம். அதே தெரு நண்பர் அடுத்த நாள் தேடிக்கொண்டு வந்தார். பூ பறிக்கக்கூடாது என்றதால் நான் ஏதோ செய்துவிட்டேன் என்று சந்தேகம்! ‘அப்படி எல்லாம் ஒன்றுமில்லை; பூக்களை பறித்து பகவானுக்கு கொடுக்காமல் இருப்பதே பாவம் இல்லையா?’ என்று சொன்னேன். ‘அவர் என் ஆபீஸ்தான். அவருக்கு இப்படி சந்தேகம். நான் இருக்காது என்று சொன்னேன். இருந்தாலும் பயந்து போய் இருக்கிறார். உங்கள் கையால் திருநீறு கொடுங்கள்’ என்று சொல்லி வாங்கிக்கொண்டு போனார்” என்று சொல்லி கதையை முடித்தார்.