அழகர் கோவில்

அழகர் கோவில் : An ecstatic visit

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

போன வாரம் எம் குலதெய்வமான ஸ்ரீ கள்ளழகரைச் சேவிக்க அழகர் கோவில் சென்றிருந்தேன், (மதுரை. திவ்யதேசப்பெயர்: திருமாலிருஞ்சோலை

வழக்கம் போல, அனுபவங்கள் பல, ஆச்சரியங்கள் பல 

 அழகர் கோவில்

1) போன முறை போல இந்த முறையும் பெருமாளின் விஸ்வரூப தரிசனம் சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். தனுர் மாதமானதால் காலை 4 மணிக்கே விஸ்வரூப சேவை. வழக்கமாய் விஸ்வரூப தரிசனத்திற்கு வரும் யானை, முதுமலைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளதால், பசு மாடு சகிதம் மட்டுமே தரிசனம் 

2) போன முறை போலவே இந்தமுறையும் சேவாகால கோஷ்டியில் உட்கார்ந்து திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, திருவாய்மொழி சேவிக்கும் (பாராயணம் சொல்லும்) பாக்கியம் பெற்றேன். கூடிய விரைவில் ‘சுந்தர பஹுஸ்தவம் ” கற்க வேண்டும்.  

3) கூடுதலாக விஷ்ணுசஹஸ்ரநாமத்தை பட்டர் சுதர்சன் மாமாவுடன் சேர்ந்து பாராயணம் செய்த அனுபவம் அற்புதம் (பலச்ருதி ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை) . இது நானே எதிர்பாராமல் எனக்குக்  கிடைத்த கொடுப்பினை 

4) பெருமாளுக்கு ‘ஹம்ஸே’ (நைவேத்தியம்)  செய்த பிரசாதம் கிடைத்தது ஆச்சரியமான ஆனந்தம் . அப்படியே லபக் என்று 
பொங்கலும், ததியோன்னம் மார்கழி குளிருக்கு ‘ecstasy’ ஆக அமைந்தது 

5) பெருமாளுக்கு மொத்தமுமாய் புஷ்பலங்காரம் செய்திருந்தார்கள். இப்படிப்  பெருமாள் சேவை எனக்கு அமைவது இதுவே முதல் முறை .
உண்மையாகவே ‘அழகர்’ தான் 

6) முதல் முறையாக மொத்தக் கோவிலையும் 9 முறை பிரதக்ஷணம் செய்த போது உடலும் மனமும் தெம்பானது. ஏன் தசாவதார சந்நிதியில் 7 அவதாரம் தான் இருந்தது என்று தெரியவில்லை 

7) இப்போதெல்லாம் யோக நரசிம்மர் சந்நிதியிலும் ஆண்டாள் சந்நிதியிலும் நெய் விளக்கு ஏற்றுகிறார்கள் 

8) இங்குள்ள சக்கரத்தாழ்வார் பிம்ப ரூபமாய் காட்சி தருவார். இது வேறெங்கும் கிடைக்காத அம்சம் 

9) வழக்கம் போல, பெருமாளை சேவிக்க வந்த எல்லாரும் அப்படியே சென்றுவிடுகின்றனர். உடையவர் மற்றும் கூரத்தாழ்வான் சந்நிதியைச் சேவிக்க ஒருவரும் இல்லை. உடையவராய் தூரத்திலிருந்து தான் சேவிக்க முடியும். அவருக்கு இடப்பக்கம் 
மிகுந்த வித்வத்துடன் கூரத்தாழ்வார் சேவை சாதிக்கின்றார். 

10) அழகர் ஒரு அனைத்துக் குலக்கடவுள். கருப்பண்ணசாமி சந்நிதியில் ஒரு பயம் கலந்த கடாக்ஷம் வழக்கம் போல தென்பட்டது. 

எனக்குப் பொதுவாகவே மாட்டிற்கு தீவனம் கொடுக்கும் வழக்கம் உண்டு. துவாதசி என்பதால் கருப்பண்ணசாமி சந்நிதி எதிரிலிருந்த கடையில் அகத்திக்கீரை வாங்கி 11 மாடுகளுக்கும் கொடுத்தேன்.  

கோவிலுக்கு  வாசலில் புதிதாய் 
ஆயுர்வேத பொடி விற்கும் கடை கண்ணில் பட்டது. 
வல்லாரைப்பொடி , தேன் காய் பொடி , ஆவாரம்பொடி என்று கொஞ்சம் வாங்கிக்கொண்டேன் (அடியேன் கொஞ்ச நாளாய் டயபடீஸ் பேஷண்ட்) . பொடி விற்கும் பெண்ணிடம் பேச்சு கொடுத்த போது 

“இதை சாப்பிட்டா சக்கரை குறையுமா ” 

“சாமி, கொறையாட்டி அடுத்த வாட்டி என்னன்னு கேளுங்க. வேணுமுன்னா கொரியர் பண்ணிவிடறேன். அமெரிக்காவுக்கு எல்லாம் நாங்க அனுப்பறோம்” 
“அமெரிக்காவா? ” 

“அதென்ன சாமி பிரமாதம். டெல்லிக்கே அனுப்புவோம்னா பாத்துங்கோங்க” 

நான் “ங்னே” என்று விழித்தேன். ஏன் டெல்லிக்கு அனுப்புவது அமெரிக்காவிற்கு அனுப்புவதை விட பெரிய விஷயமாக சொன்னாள்  என்று புரியவில்லை. 

ரொம்ப வருடங்கள் கழித்து மதுரை சிட்டியிலுள்ள கூடல் அழகர் கோவிலுக்கும் செல்லும் பாக்கியம் பெற்றேன். இவரும் திவ்யதேசப்பெருமாள் தான். 

இங்குள்ள ஆண்டாள் சந்நிதியும், கோவில் பிரகாரச் சுவற்றில் வரைந்திருக்கும் மற்ற திவ்ய தேசப் பெருமாள் வண்ணங்களும் மிக அழகாக இருக்கும்

(கள்ளழகர் படமும், திருச்சித்திரக் கூடமும், பார்த்தசாரதியும் ரொம்ப தத்ரூபமாய் இருந்தது) 

என் முன்னால் செம்ம அழகான ஒரு வடகலை அய்யங்கார் பெண் பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்தார். சரி கேட்டு வைப்போமே என்று 

“உடையவர் சந்நிதி இங்க இருக்கா?  ” 

“வேதாந்த தேசிகரைக் கேக்கறேளா? 

“இல்லம்மா, உடையவர் “

“உடையாரா?” 

அதற்குள் அவள் அம்மா (நான் ஏதோ அவளை மாருதி ஆம்னியில் கடத்திக் கொண்டு சென்று விடுவேன் எனப்போல ஓடி வந்து)

“என்ன ஆச்சு?” 

“இல்ல மாமி, உடையவர் சந்நதி இருக்கான்னு கேட்டுண்டிருந்தேன் “

“ஓ, உடையவரா … அதோ தெரியறது பாருங்கோ தேசிகர் சந்நிதி” 

“இல்ல … உடையவர் … ஐ மீன் … ராமாநுஜர் ” 

அதற்கு அந்த மஞ்சள் சூடிதார் பெண் “யூ மீன் … தி கிரேட் ராமானுஜாச்சாரியா “

“எஸ் ” 

“Actually I do not know” 

என்று சொல்லி இரண்டு பெரும் விலகினர் . “அட ராமா” என்று தலையில் தட்டிக் கொண்டேன். 

திருமோகுர் போகலாம் என்று நினைக்கையில் 11:30 ஆனது. 

தனுர் மாதத்தில் எல்லாக் கோவிலும் 11 மணிக்கே நடை சாத்தி விடுவார்கள் என்று சிகப்பு இளநீர் விற்றுக் கொண்டிருந்த “வைதேகி” என்னும் பூக்காரப் பெண்மணி சொன்னதால் என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருக்கையில் ஒரு மாமா 

“என்னங்காணும் … என்ன முழிக்கறீர்” 

“மாமா மணி 11:30 ஆறது மாட்டுத்தாவனில 1:30 மணிக்கு தான் பர்வீன் பஸ். அதுவரைக்கும் உங்காத்துக்கு வந்து சாப்பிட்டு போய்டவா. கைல கொண்டு வந்திருக்கேன்” 

அதற்கு அவர் “வாங்கோ. என் பேரன் வரேன்னு சொல்லிருந்தான். சரி நீங்களாவது வந்தேளே. உங்கள பாத்தா என் பேரன் ஜாடை தான் ” 

காப்பி கொடுத்தார்கள். சூப்பர் அக்ராஹார வீடு. அந்தக்கால தூண் வைத்துக் கட்டிய ஹால், வலை பீரோ, கிணறு, பெருமாள் உள் தாண்டியவுடன் தான் தளிகை பண்ணும் உள், அந்தகால டேபிள் பான் மற்றும் இத்தியாதிகள். ஹாலில் ஹயக்ரீவர் செம்ம அழகாய் போட்டோவில் இருந்தார் (திருவஹீந்திபுரம் பழைய போட்டோ) 

சாப்பிட்டு வீட்டுக் கிளம்புகையில் அவர் தன் மனைவியிடம் “அவன் வரேன்னு சொன்னான் ஆளைக்காணும்” என்று புலம்பிக்கொண்டிருந்தார். 

“யார் மாமா?” என்றேன் 

“அதான் பா சொன்னேனே. என் பேரன் அனந்த நாராயணன் ” 

“என் பேரும் அதான் மாமா” 

“சரி இருக்கட்டும். பெருமாள் ஆஹார ரூபத்துல உம்மை அனுப்புச்சிருக்கார்” என்று சொன்னதும் ஒரு நிமிடம் பரவசமானேன். 

கள்ளழகர் சங்கத்திற்கு வருகிறேன். 

சுஜாதா ஸ்ரீரங்கத்தைப் பற்றி சொன்னது நினைவிற்கு வருகிறது. அதை அவர் ‘கற்றதும் பெற்றதும் ” பகுதியில் சொன்னதை அந்தக்காலத்தில் படித்த போது பெரிதாக விளங்கவில்லை. அதன் மகத்துவம் எனக்கு இப்போதெல்லாம் எம் குலதெய்வக்கோவிலுக்குச் செல்லும் போது வருகிறது. 

இந்த இடத்தில தான் 7 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளார்கள், இங்கு தான் எம் பாட்டனும், முப்பாட்டனும் பெருமாளைச் செவித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வரும் உணர்வுக்கு என்ன வார்த்தை என்று சொல்லத்தெரியவில்லை. 
அதனாலேயே கோவிலின் ஒவ்வொரு தூணையும் தொட்டுச் சேவித்தேன். வழக்கமாய் நான் எந்தக்கோவிலிலும் கச்சத்துடன் தென்கலை திருமண் சகிதம் இருப்பேன்.

அதனாலேயே நிறைய பேர் என்னை பட்டர் (அர்ச்சகர்) என்று எண்ணிக் கொண்டு “சாமிய எப்போ பாக்கலாம்” “தண்ணீ எப்போ கொடுப்பாங்க” என்று கேட்பார்கள். 
அப்போதெல்லாம் “நானும் உங்கள மாதிரி சேவிக்க வந்தவன்தானுங்க” என்று சொல்லி மாளாது . 

சொர்க்கவாசலை (பரமபத வாசல்) புகைப்படம் எடுத்துக் கொண்டேன். 

பொதுவாக மதுரைக்காரர்களுக்கு இயல்பான நகைச்சுவை இருக்கும் 

1) கூடலழகர் கோவிலின் தாயார் சந்நிதிக்கு திரை சாத்தும் நேரம் ஓடி வந்து கொண்டிருந்த பெண்மணியிடம், கோவில் வேலை செய்யும் ஒருவர் “துவாதசி அன்னைக்கு வெள்ளண வரியலே, தாயார நேரமா பாக்கணும்னு தெரியலயா ” 

பதிலுக்கு அந்த பெண்மணி “மருமனே, நான் காலையில இங்க வந்துட்டா உங்க மாமாவை யாரு வேலைக்கு அனுப்புவாங்க” 

அவர் “ஓ அப்படி ஒன்னு இருக்கோ. இதுக்குத்தான் நான் கல்யாணமே பண்ணிக்கல” 

பெண்மணி “20 வருஷம் பொறு, பெரியவ இப்போத்தான் ஒண்ணாங்கிளாஸ் பரீட்சை எழுதப்போயிருக்கா” 

அவர் “ஏன் அக்காக்கு தங்கச்சி ஏதும் இல்லையோ” 

பெண்மணி “இது தெரியாம எங்காப்பாரு முன்னமே போய் சேர்ந்துட்டாரேப்பா ” 

2) ஆண்டிபட்டியில் பஸ்ஸை நிறுத்தி எல்லாரும் அடையார் ஆனந்த பவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் வெளியில் எதுவும் சாப்பிட மாட்டேன். பழம், இளநீர் என்று தான் உள்ளே தள்ளுவேன்

வாசலில் இளநீர் சாப்பிடவுடன் நான் “என்னன்னே இளநீரில தண்ணீ கம்மியா இருக்கே” 

“ஐயுரு சாமி இதுக்காக நான் என்ன பம்ப் செட்டு வெச்சா கொடுக்க முடியும்” 

“அதில்லனே தண்ணியும் கம்மியா இருக்கு, வழுக்கையும் இல்லையே “

“ஒரு 6 மாசம் அங்கே ஓரமா உக்காருங்க. பங்குனிக்கு க்ரிஷ்னகிரில இருந்து காய் சொல்லி விட்டுருக்கேன்” 

“சரி அதென்ன ஒரே கூட்டம்” 

“(ஒரு மிகப்பிரபலாமான ஆளுங்கட்சி அரசியவாதி பெயர் சொல்லி) அவரோட தம்பி வந்திருக்கான் சாப்பிட” 

“ஏன்னே கோபமா பேசறீங்க, நீங்க (எதிர்க்கட்சி பெயர் சொல்லி) அந்தக்கட்சியா” 

“இல்லப்பா, அந்தம்மா இருந்த வரைக்கும் எனக்கு அவங்க தான் எல்லாமே” என்று சொல்லிவிட்டு சில சங்கதிகள் சொன்னார். அதை பொதுவில் சொல்ல முடியாது. அதாவது அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

ஆச்சரியம் என்று சொன்னேன் அல்லவா. அது இதோ 

நேற்று இரவு என் பெங்களுர் வீட்டிலிருந்து மெஜெஸ்டிக் சென்ற ஊபர் ட்ரைவர் பெயர் சுந்தர்ராஜூலு . மதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அழகர் கோவில் சென்ற டாக்சீ ட்ரைவர் பெயர் சுந்தரராஜன். கூடல் அழகர் கோவிலிலிருந்து மாட்டுத்தாவணி பிரைவேட் பஸ் ஸ்தான்டிற்கு கொண்டு விட்ட ஆட்டோ ட்ரைவர் பெயர் “சுந்தரராஜன்” 

திரும்பவும் சில்க் போர்ட் ஸ்டாப்பிலிருந்து வீட்டிற்கு கொண்டு விட்ட ஊபர் ட்ரைவர் பெயர் “சுந்தரப்பா “. 

கள்ளழகரின் திருநாமம் “சுந்தரராஜன்” 

ஸ்ரீ கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள் துணை 

Series Navigation<< பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி

About Author

2 Replies to “அழகர் கோவில் : An ecstatic visit”

  1. எங்கள் குல தெய்வமும் கள்ளழகர்தான். வாசிக்கும்போது நேரே சென்று தரிசித்த மாதிரி உணர்ந்தேன்.

Comments are closed.