அழியாத மனக்கோலங்கள்

அழியாத மனக்கோலங்கள் – 1

This entry is part 1 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

ஒன்பதாவது வகுப்பு அரை ஆண்டுத் தேர்வை எழுதிய கையோடு டி.ஸி. வாங்கிக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து சேலம் வந்தாச்சு. அந்தக் காலத்தில் ஒரு வகுப்பில் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் வெளியேறுவதோ, சேர்வதோ சிரமமான காரியம். இருந்தாலும் யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை, சேலம் பாரதி வித்தியாலயா உயர் நிலைப் பள்ளியில் என்னை ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள்.

சேலம் நகர அமைப்பே விசித்திரமானது. மிகப் பெரிதும் அல்லாத அதே நேரத்தில் மிகச் சிறிதும் அல்லாத அமைப்பைக் கொண்ட நடுவாந்திர நகரம் அது. மூன்று இரயில் நிலையங்களைக் கொண்ட விசேஷம் கொண்ட ஊர். மெயின் இரயில் நிலையம் இருந்த இடம் சூரமங்கலம் என்று அழைக்கப்பட்ட பகுதி. இரண்டாவது ரயில் நிலையம் முற்றிலும் வியாபார போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டு மார்க்கெட் இரயில் நிலையம் என்றிருந்தது. சேலத்தின் மிகப் பெரிய வியாபார ஸ்தலமான லீபஜார் அருகிலேயே இருந்தது. இந்த இடத்தில் நடப்பது என்பது லாரிகளுக்கிடையே புகுந்து வெளி வருவதாகத் தான் இருக்கும். மூன்றாவது இரயில் நிலையம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். நகர்ப் புறத்து மக்கள் வாழும் பகுதி. சென்னைக்கு அடுத்தபடி சேலத்தில் தான் திரையரங்குகள் அதிகம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சினிமா பார்ப்பதில் பிரியம் கொண்டவர்கள்.

சேலத்தில் மரவனேரி என்ற பகுதியில் பாரதி வித்தியாலயா பள்ளி இருந்தது. எங்கள் வீடு இரண்டாம் அக்கிரஹாரத் தெருவில் இருந்தது. சேலத்தில் முதல் அக்கிரஹாரம், இரண்டாவது அக்கிரஹாரம், மூன்றாவது அக்கிரஹாரம் என்று மூன்று அக்கிரஹாரத் தெருக்கள் உண்டு. முதல் அக்கிரஹாரத்தில் பாதிப் பங்கு கடைகளுக்கு ஒதுக்கப் பட்டதாயும் மீதிப் பகுதியில் மக்கள் வாழ்வதாகவும் இருந்தது. இரண்டாம் அக்கிரஹாரம் முழுவதும் குடியிருப்புகள். இப்பொழுது இந்தத் தெருவில் மருத்துவர்களின் கிளினிக்கும் பட்டு ஜவுளி வியாபாரமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மூன்றாவது அக்கிரஹாரத் தெரு மற்ற இரண்டு அக்கிரஹாரத் தெருக்களை விட அளவில் சிறியது. அதில் பெரும்பாலும் குடியிருப்புகள் தாம் இப்பவும் இருக்கின்றன என்றே எண்ணுகிறேன்.

இரண்டாம் அக்கிரஹாரத்திலிருந்து முதல் அக்கிரஹாரம் நோக்கி நடந்து இடது பக்கம் திரும்பி கொஞ்ச நேர நடையில் மைதானம் போன்ற மிகப் பெரிய திடல் ஒன்று வரும். பாரதத்தின் முதல் பிரதமர் நேரு அவர்கள் அந்த பரந்த பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றிய நினைவில் கொஞ்சம் தூக்கிக் கட்டிய இடத்தில் அதைக் குறித்த கல்வெட்டு
ஒன்று காணப்படும். அந்த நாட்களில் பீஷர் காம்பவுண்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மைதானம் அது. அந்த மைதானம் இப்பொழுது என்னவாகியிருக்கிறது என்று தெரியவில்லை. சேலத்துக்காரர் யாராவது சொன்னால் தான் தெரியும்.

சேலத்துச் செல்லமான திருமணிமுத்தாறு மிகப் பழைமையான புராண காலத்து ஆறு. பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட ஆறு என்று ஸ்தலப் புராணம் கூறுகிறது. திருமணி முத்தாறு என்பது காரணப் பெயர். முத்துச் சிப்பிகள் நிறைந்திருந்த ஆறாகையால் திருமணி முத்தாறு என்று பெயர் ஆயிற்று. சென்னை கூவம் போல இன்னொரு கூவமாக இன்று உருக்குலைந்து போயிருக்கிறது. தமிழன் ஏமாளி. அவனுக்கு பொய்யான இனப்பெருமை பேசினாலே திருப்தி அடைந்து விடுவான் என்கிற அளவுக்கு ஏமாளி. இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை.

சேலம் டவுன் இரயில் நிலையத்திற்கு அருகில் திருமணிமுத்தாற்றின் மேல் போடப்பட்ட இரயில் தண்டவாளப் பாதையை அடுத்து இந்த பீஷர் காம்பெளண்ட் மைதானம் அமைந்திருக்கும். அதைத் தாண்டினால் சிற்றாறு போகக் கூடிய அளவில் தரைப்பாலம், அதைத் தாண்டி மேடு தூக்கிய பாதை என்று மரவனேரிப் பகுதிக்கு சாலை போகும். அந்தப் பகுதியில் தான் பாரதி வித்தியாலயா பள்ளி அமைந்திருந்தது.

ஒன்பது, பத்து . பதினொன்று வகுப்புகளில் நான் வாசிக்கும் பொழுது பாரதி வித்தியாலயா பள்ளியில் தமிழாசிரியராய் இருந்த கங்காதரன் அவர்கள் மறக்க முடியாதவர். பாடம் நடத்தும் பொழுது தான் நடத்துகிற பாடத்திலேயே தோய்ந்து போய்விடுவார். வகுப்பு நேரம் முடியும் போது கணகணக்கும் மணியோசை கூட பாதிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றால் கர்ண கடூரமாய் அவருக்கு இருக்கும். தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை மாணவர்களுக்கு புரிகிற மாதிரி விளக்கி விட்டுத் தான் அடுத்த வகுப்புக்குப் போவார். அப்படிப் போவதும் பாதிப் பாடத்தில் விட்டு விட்டுப் போகிறோமே என்று மனசில்லாமல் எங்களை விட்டுப் பிரிகிற மாதிரி இருக்கும்.

நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பொழுது தமிழ்க் கட்டுரை வகுப்பில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதச் சொல்லியிருந்தார். நான் எழுதிய கட்டுரையில், ‘பறவைகளைப் பார்த்து பறக்கக் கற்றுக் கொண்ட மனிதன், காக்கைகளைப் பார்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை எப்பொழுது கற்றுக் கொள்ளப் போகிறானோ?’ என்று ஒரு வரி எழுதியிருந்தேன். ஆசிரியர் கங்காதரன் அந்த வரியைக் கட்டுரையைத் திருத்தும் பொழுது மிகவும் ரசித்திருக்கிறார் போலும். அடுத்த நாள் வகுப்பில் இந்த வரியை வைத்துக் கொண்டு ஒரு வகுப்பு நேரம் பூராவும் பேசிக் களித்தார். என்னை அருகே அழைத்து மற்ற மாணவர்கள் முன்னால் வெகுவாகப் பாராட்டினார். அந்தப் பாராட்டு தான் தொடர்ந்து நான் எழுதிய தமிழுக்கு ஆதி உந்துதலாய் இருந்து தொடங்கி வைத்தப் பாராட்டு. இதை எழுதும் பொழுதும் கங்காதரன் ஐயா நினைவில் மனம் நெகிழ்கிறது. இளம் வயதில் கிடைக்கும் இப்படிப்பட்ட பாராட்டெல்லாம் தொடர்ந்த வளர்ச்சிக்கு அந்தச் சிறார்களை நெறிப்படுத்துவதாக உணர்கிறேன்.

தமிழில் சொந்தமாக நிறைய எழுதுவதற்கான திறமை கொஞ்சம் கொஞ்சமாக கைவரப் பெற்றது என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் மாணவர்களுக்குத் தோன்றாத் துணையாய் இருந்தது கோனார் நோட்ஸ் தான். பாட நூல்களுக்கான வழிகாட்டி உரை நூல்கள் எழுதிய திரு. அய்யம் பெருமாள்
கோனாரின் பங்கு அளப்பரியது. தமிழ்க் கட்டுரைகளுக்கு கோனாரைப் படித்து மனனம் செய்து எழுதும் மாணவர்களின் ஒரே மாதிரியான வாசக அமைப்பு கொண்ட கட்டுரைகளைத் தொடர்ந்து ஒருவித சலிப்புடன் வாசித்து மதிப்பெண் போடும் ஆசிரியர்களுக்கு எனது கட்டுரை வித்தியாசமாக இருக்கும் என்று எண்ணிக் கொள்வேன். எல்லாம் நினைப்பு தான். நடைமுறை வேறு மாதிரியாக இருந்தது. ஆசிரியர்களின் பிள்ளைகள் கூட தேர்வுத்தாளைத் திருத்தும் அதிர்ச்சிகளைப் பிற்காலத்தில் கண்டதுண்டு.

1959-ம் ஆண்டில் வெற்றிகரமாக பள்ளி இறுதித் தேர்வை முடித்தேன். கல்லூரி படிப்பெல்லாம் சிந்தனையிலேயே இல்லை. அந்நாட்களில் வேலைக்குப் போவதற்கு உதவியாக இருக்கும் என்று தட்டச்சு, சுருக்கெழுத்து கற்பது மாணவர்களின் பழக்கமாக இருந்தது. வெள்ளைத் தாள் ஒன்றை சுருட்டி கையில் எடுத்துக் கொண்டு தட்டச்சு வகுப்புக்குச் செல்வது அக்காலத்து ஸ்டைல்!..

சேலம் தேரடித் தெருவில் இருந்த ராஜ கணபதி கோயில் 400 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோயில். அந்தப் பக்கம் செல்லும் பொழுதெல்லாம் கணபதி தான் கண் கண்ட தெய்வமாய் அருளாசி வழங்குவார். சின்னக் கோயில் தான். போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே நகரத்தின் ஜனசந்தடியான இடத்தில் கோயில் அமைந்திருந்தது. பக்கத்தில் தேர் நிலை. இன்னொரு பக்கத்தில் அந்நாட்களில் காஃபிக்கு க்யாதி பெற்ற ஹோட்டலான வில்வாத்ரி பவன். இடையில் மணி புக் ஸ்டால் என்ற வாரப்பத்திரிகைகள், வெற்றிலை–பாக்கு இத்யாதி விற்கும் கடை இருந்தது. இந்தக் கடை அந்தக் காலத்தில் எனக்கு தாய் வீடு மாதிரி இருந்தது. கல்கி, விகடன், குமுதம், தினமணிக் கதிர், கலைமகள்,கல்கண்டு, கண்ணன் என்று அவை வெளி வந்த புத்தக வாசனையோடையே ஒரு புரட்டு புரட்டிப் பார்த்து விடுவேன். இந்தக் கடைக்கு நேர் எதிரே ராஜன் புக் ஸ்டால் என்று இன்னொரு இதே மாதிரியான கடையும் இருந்தது. அதற்கு அருகில் பெரிய பெட்டிக் கடை மாதிரி அமைந்திருந்த A.V.S. புக் செண்டரைப் பற்றி நிறையச் செல்ல வேண்டும். பழைய ஆங்கில, தமிழ் நாவல்களை வாடகைக்கு விடுவதும், விற்பதும் பிரதான தொழில். இந்த புக் செண்டரின் உரிமையாளர் சிவராமன் நாளாவட்டத்தில் நெருங்கிய நண்பரானார்.

எல்லா ஆங்கில புத்தகங்கள் பற்றியும் விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பார். சிவராமனின் பழக்கத்தில் ஆங்கில புத்தகங்களின் வாசிப்பு மேலோங்கியது. அந்நாட்களில் Erle Stanley Gardner- ரின் பைத்தியமாகத் திரிந்திருக்கிறேன். கார்டனரின் கோர்ட் உலகத்தையும், பெர்ரி மேஸனையும் மறக்கவே முடியாது. தமிழ்வாணனின் சங்கர்லாலின் வளர்ச்சி பெர்ரி மேஸனில் கொண்டு போய் விட்டிருக்கலாம்.

இந்த நேரத்தில் நடந்த இன்னொரு விஷயம் தான் முக்கியமானது.

(வளரும்)

Series Navigationஅழியாத மனக்கோலங்கள் – 2 >>

About Author