அழியாத மனக்கோலங்கள் – 2

This entry is part 2 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

பொதுவாக எது நமக்குப் பிடித்திருக்கிறதோ அதன் மேலேயே ஆழ்ந்த கவனம் செல்லும். நமக்குப் பிடித்திருப்பதே இன்னொருவருக்கும் பிடித்திருப்பது நமக்குத் தெரியவந்தால் அவருடன் நெருக்கம் அதிகமாகும். நமக்குப் பிடித்திருப்பதில் பாண்டித்தியம் பெற்றவர்களைக் கண்டால் அவர் மேல் நமக்கு ஒரு மரியாதையும் அன்பும் பெருகும். இப்படித் தான் தமிழ் எழுத்தாளர்கள் பலர் என் உள்ளம் கவர் கள்வர்கள் ஆனார்கள். தமிழ்ப் பத்திரிகைகளை வாசிப்பதும் நேசிப்பதுமே பொழுது போக்கைத் தாண்டிய என்னை இயக்கிய ஆதார சுருதி ஆயிற்று.

எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எப்படி அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் பிடித்துப் போனதோ அப்படியே மேடைப் பேச்சில் பல புதுமைகளைப் புகுத்திய அந்நாளைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மனசுக்கு மிகவும் பிடித்துப் போனவர்கள் ஆனார்கள். அவர்கள் பேசிய தமிழ் மனதைக் கவர்ந்தது. மேடைப் பேச்சிலும் உரைநடையிலும் அடுக்கு மொழியைப் புகுத்திய அண்ணாவின் தமிழ் கேட்டு தேன் மாந்திய வண்டானேன். வீட்டு வெளித் திண்ணையில் படுத்துக் கொள்வதாக சொல்லி விட்டு பாயும் தலையணையையும் போட்டு விட்டு முன் இரவு தாண்டியதும் அண்ணா பேசுகிறார் என்றால் பொதுக் கூட்டத் திடலுக்குப் போய்விடுவேன்.

அண்ணா மைக்கைப் பிடிக்க எப்படியும் பதினொன்றுக்கு மேலாகி விடும். பாரதி சொன்னானே, தேன் வந்து பாயுது காதினிலே என்று. அப்படித் தமிழ்த் தேன் காதில் பாய்வதைக் கேட்டு பரவசம் அடைந்தவன் நான். அது ஒரு ரசவாத வித்தை தான். எப்படி இப்படி ஆற்றொழுக்காக ஒருவரால் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாகப் பேச முடியும் என்பது அந்நாட்களில் புரியாத புதிராக இருந்தது. சிலர் வரவழைத்துக் கொண்டு அடுக்கு மொழியாய் பேச முயற்சிப்பார்கள். அண்ணாவுக்கோ இயல்பாக வாய்த்த திறமை அது. வடமொழி வார்த்தைகள் இயல்பாய்த் தமிழோடு பின்னிப் பிணையும். அ-வில் ஒரு வார்த்தை ஆரம்பித்தால் அவர் சிந்தனையில் தொடர்வண்டித் தொடர் போலத் தொடரும் அடுத்த வார்த்தை அ-வில் ஆரம்பிக்கும் வடமொழி வார்த்தையாக இருக்கிறதே என்று அந்த வார்த்தையைத் தவிர்க்க மாட்டார். வடமொழியும் தமிழும் கலந்து ஆற்றொழுக்காக அவர் பேசுவது தமிழ்ச் சங்கீதத் தாலாட்டு போல இருக்கும். சீர்திருத்த கருத்துக்களை இயல்பான நம் அன்றாட நிகழ்வுகளில் பொறுத்தி அவர் சொல்லும் பொழுது மாற்றுக் கருத்து கொண்டோரும் கேட்டு மகிழும் வண்ணம் இருக்கும். எனக்கோ கட்சி, கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் ஆழ்ந்த ஈடுபாடுகள் ஏதுமில்லை. ஈடுபாடுகள் கொள்வதற்கான வயதும் இல்லை. அரும்பு மீசை பருவத்தை, adolescent பருவம் என்று சொல்வார்களே, அந்த மாதிரியான எதையும் ரசிக்கும் கேளிக்கை பருவம். இன்றும் அண்ணா தனித்தன்மை கொண்டவராக மனத்தில் பதிந்திருக்கிறார்.

தமிழ் வாழும் இடமெல்லாம் நமக்கான இடம் என்ற பரந்த வட்டத்தை எனக்குள் போட்டுக் கொண்டது மனதுக்குப் பிடித்திருந்தது. அந்த பெரிய வட்டத்துள் வருவோரில் வேண்டுவோர், வேண்டாதோர் என்று யாருமில்லை. எனது நேசிப்பு, தமிழை நேசித்தோருடையேயான பிணைப்பு சங்கிலி ஆயிற்று.

மணி புக் ஸ்டால் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், அல்லவா?.. அவர்களின் விற்பனைக்காக புத்தக நிலையங்களிலிருந்து வந்திருந்த ஏகப்பட்ட புத்தகங்களில் விற்பனையானவை தவிர்த்து நிறைய புத்தகங்கள் தேங்கிப் போயிருந்தன. அவற்றையெல்லாம் திரட்டி சேலம் தேரடித் தெருவிலேயே ஒரு வாடகை நூல் நிலையத்தைத் துவங்கினர். புத்தகம் வாசிக்கும் என் ஆர்வத்தைப் பார்த்து இந்த வாடகை நூல் நிலையத்தைப் பார்த்துக் கொள்ள இவனே சரியான நபர் என்று தீர்மானித்து என்னிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

காலை எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை நூல் நிலையத்தின் வேலை நேரம். இடையில் மதியம் 1 மணியிலிருந்து 4 மணி வரை ஓய்வு நேரம் என்றும் அந்த நேரத்தில் என் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகளைப் பெறலாம் என்றும் ஆலோசனை சொன்னார்கள். நான் தட்டச்சு பயின்ற கணேஷ் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டும் அடுத்த கட்டிட மாடியிலேயே இருந்தது. தட்டச்சு+சுருக்கெழுத்து இரண்டுக்குமான பயிற்சிக்காக மாதம் பத்து ரூபாய் செலவாயிற்று. அந்தத் தொகையையே நூலகத்தைப் பார்த்துக் கொள்வதற்கான சம்பளமாகத் தருவதாக நண்பர் மணி சொன்னார். அறுபது ஆண்டுகளுக்கு முன் பத்து ரூபா காசுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது.

எனது புத்தக வாசிப்பு ஆர்வம் கரும்பு தின்னக் கூலியா என்று தான் இருந்தது. இருந்தாலும் வீட்டில் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி வீட்டில் சொன்னேன்.அவர்களோ “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பேசாமல் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு போனோமா, வந்தோமா என்றிரு..” என்று சொல்லி விட்டார்கள். அவர்களுக்கு படிக்கிற வயசில் வேலைக்குப் போய் பையன் மனசை இறுக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம். எனக்கோ புத்தகம் வாசிக்கும் நேரம் தான் பொன்னான நேரம் என்ற எண்ணம். கடைசியில் எப்படியோ வீட்டாரை சரிப்படுத்தி அந்த வாடகை நூல் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

அம்மாடி!. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலம் அது. நிறைய வேற்று மொழி இந்திய எழுத்தாளர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த காலம். காண்டேகர், சரத்சந்திரர், கே.ஏ. அப்பாஸ், பங்கிம் சந்திரர், பிரேம்சந்த், எம்.டி. வாசுதேவன் நாயர், தகழி, முகமது பஷீர், பொற்றேகாட் என்று யாரையும் விட்டு வைக்க வில்லை. அத்தனை பேர் எழுத்தையும் தமிழில் தான் படித்தேன் என்பது இன்னொரு அதிசயம். அந்நாட்களில் அகில இந்திய எழுத்தாளர்களின் அறிமுகம் தமிழில் கிடைத்ததும் இப்பொழுது அந்த வாய்ப்பு சுருங்கிப் போனதும் நம் மொழிக்கான இன்னொரு இழப்பு. இதனால் தான் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு கதையாய் நமக்குள்ளேயே முடங்கிப் போகும் அவலமும் இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அந்த வாடகை நூல் நிலையத்திற்கு இன்னொரு பக்கத்தில் பத்துக்கு பத்து அளவில் சின்ன கடை மாதிரியான இடம் இருந்தது. அங்கு எம்.என்.ஆர். ஏஜென்ஸி என்ற பெயரில் பத்திரிகைகளின் ஏஜெண்டாக ஒரு பெரியவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். கதர் வேட்டி, கதர் ஜிப்பா, நல்ல உயரம், கொஞ்சம் தாட்டியான உடல்வாகு. சைக்கிளில் வந்து கால் ஊன்றி இன்னொரு காலை சைக்கிள் முன் பக்க பார் வழியாக வெளிக் கொண்டு வந்து இறங்குவார். முன்பக்க ஹாண்ட் பாரில் ஒரு பெரிய காக்கிப் பை நிறைய புத்தகங்கள் இருக்கும். பின் பக்க கேரியரில் நிறைய புத்தகங்கள் அடுக்கிக் கட்டப் பட்டிருக்கும். சாதுவான முகம். நெற்றியில் ஒற்றைக் கோபிக் கோடு. அவரை முதன் முதலாகப் பார்த்த பொழுதே எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சந்தர்ப்பம் கிடைத்த பொழுதெல்லாம் அவருடன் பேசி மிகவும் பிடித்துப் போய் விட்டது. பத்திரிகை ஆபிஸ்கள், பிரபல எழுத்தாளர்கள் இவர்கள் பற்றியெல்லாம் நிறைய தகவல்கள் சொல்வார். அவருடனான பழக்கம் நாமும் ஏன் ஒரு பத்திரிகைக்கு உள்ளூர் முகவராக செயல்படக் கூடாது என்ற எண்ணத்தை என்னுள் விளைவித்தது. அடுத்த நாள் ‘தினமணி’ செய்தித்தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். புதிதாக திருவாரூரிலிருந்து வெளிவரவிருக்கும் ‘மாதவி’ என்ற ஏட்டிற்கு முகவர் தேவை என்ற விளம்பரம் பார்த்து எம்.என்.ஆரிடம் எப்படி விண்ணப்பிப்பது போன்ற சடங்கு நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்தேன்.

(வளரும்)

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 1அழியாத மனக்கோலங்கள் – 3 >>

About Author