- பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி
- எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்
- அழகர் கோவில் : An ecstatic visit
குலதெய்வங்கள் எல்லாம் ஏன் கிராமத்திலேயே இருக்கிறார்கள்?? என்று யோசித்ததுண்டு! ஏனென்றால் ஒருகாலத்தில் நம் மூதாதையர்கள் அங்கே வசித்திருக்கிறார்கள். அவர்களின் கனவில் வந்து தன் இருப்பிடத்தைச் சொல்லியோ, அல்லது சுயம்புவாகவோ அங்கே வீற்றிருக்கலாம் என்பது என் எண்ணம். யாரை மறந்தாலும் மறக்கலாம்! குலதெய்வத்தை மட்டும் மறக்கக்கூடாது.
காலத்தின் ஓட்டத்தில் தலைமுறைகள் அங்கே இருந்து இடம்பெயர்ந்து சென்றிருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை கண்டு ஆராதித்து வருவது எப்போதும் நன்மை தரும். எந்த ஒரு விஷயம் என்றாலும் குலதெய்வத்தை உடன் அழைத்துக் கொண்டு விட்டால் போதும்.
பெண் என்பவளுக்கு முதலில் பிறந்த வீட்டு குலதெய்வங்கள், திருமணமான பின் கணவனுடைய குலதெய்வம் என்று அவளுக்கு வழிபட தெய்வங்கள் வகுத்து வைக்கப்படுகிறது. அப்படி இன்று என் புகுந்த வீட்டு குலதெய்வத்தை பற்றி சொல்கிறேன் வாருங்கள்.
விழுப்புரம் அருகே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாஸ்தா அபிராமேஸ்வரர் ஆலயம். சாஸ்தா என்பவர் ஐயப்பனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. யானை தான் இங்கு வாகனம்.
இந்தக் கோவில் அய்யூர் அகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தாவுடன் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி மற்றும் இன்னும் பிற சன்னிதிகளும் உள்ளன.
இந்த சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டுள்ளவர்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்களால் முடிந்த போதெல்லாம் இங்கு வந்து சாஸ்தா அபிராமேஸ்வரரை தரிசித்துச் செல்கின்றனர். குலதெய்வம் என்பதால் இவர்கள் தங்கள் கையாலேயே சாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்யலாம். சாஸ்தாவை தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் என் கணவரே ருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்து விடுவார்.
அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருந்தால் ‘அபிராமன்’ என்றும் பெண்ணாக இருந்தால் ‘அபிராமி’ என்றும் பெயர் சூட்டப்படுகிறது. அதுவே அவர்களின் ஜாதகப் பெயராக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு அபிராமனும், அபிராமியும் உலா வருகின்றனர். எங்கள் மகளும் கூட அபிராமியே!
திருமணமான புதிதில் அங்கே முதல் முறையாக நான் சென்ற போது கோவில் குருக்கள் வீட்டில் தங்கி மறுநாள் அபிஷேகம் முடித்துத் திரும்பினோம். பின்பு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்காக தங்கும் இடம் கட்டப்பட்டது. கோவில் கமிட்டியிடம் முன்பே சொல்லி விட்டால் அதற்கான ஏற்பாடு செய்து விடுவார்கள். இப்போதெல்லாம் திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு அதிகாலையில் கிளம்பிச் சென்று அபிஷேகங்களை முடித்துக் கொண்டு மாலைக்குள் திரும்பி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.
இந்தக் கிராமத்தில் தான் திருஷ்டி பொம்மைகள் செய்யப்படுகிறது. அதே போன்று பெரிய பெரிய பிள்ளையார் பொம்மைகள் உருவாக்கப்பட்டு மும்பை போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.
உங்களுக்கு விழுப்புரம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் எங்கள் குலதெய்வத்தையும் தரிசித்து வாருங்களேன். பகிர்ந்து கொள்ள வாய்ப்புத் தந்த பாகீரதி இணைய இதழுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகச் சிறபாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஆதி.
வாழ்த்துகள்
கீதா
நன்றி