- காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1
- காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 2 – ராமேஸ்வரம் !
- காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3
மறுநாள் காலை ஸ்நான சங்கல்பம், தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக்கென செய்யப்படுவது) முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி சென்றோம். செல்லும் பாதை பின் பார்க்கப்போவதை முன்னமே எடுத்துக் காட்டும் வகையில் சற்று சூன்யமாகத்தான் இருந்தது. ஜன, கால் நடைகள் நடமாட்டம் அதிகம் இல்லை. இரு பக்கங்களிலும் கருவேலம், பனை (அ) தென்னை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் சில கிராமங்கள். எப்போதோ, எதிர் திசையில் இருந்து கடந்து செல்லும் மினி பஸ்கள், ஜீப்புகள். எங்கள் ஜீப் முகுந்த ராயர் சத்திரத்தை அடைந்ததும் டிரைவர் கீழிறங்கி வண்டியை போர் வீல் டிரைவ் ஆக மாற்றினார். இல்லையேல் கடற்கரை மணலில் ஜீப்பை நினைத்தபடி வளைத்து செலுத்த முடியாது. போகும் வழியெங்கும் 1964 ஆண்டில் அடித்த புயலின் சேதாரங்கள் நினைவுச் சின்னமாக தென்படுகிறது. துருப்பிடித்த படகுகள்,உருக்குலைந்த ரயில் நிலையம்….அந்த ரயில்….சட்டென்று மின்விளக்குகள் அணைய, என்ன செய்வது என்று புரியாமல் என்ஜின் டிரைவர் ரயிலை மேற்கொண்டு செலுத்த, கடல் எனும் பகாசுரன் மொத்த பயணிகளுடன் அதை அப்படியே விழுங்கி விடுகிறது. நினைக்கும் போதே மனசு படபடக்கிறது. ஓரத்தில் கொஞ்சம் பயமும் எட்டிப் பார்க்கிறது. என்றாலும் இது மாதிரியான அட்வென்ச்சர் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல.
இப்படியே சுமார் எட்டு கிலோமீட்டர் பயணம். சில இடங்களில் கடல் நீர், சகதி. ஒரு வழியாக கரையை அடைந்து, முன்னோர்களுக்கான பிண்டங்களை கடலில் இட்டு, முப்பத்தி ஆறு முறை மூழ்கிக் குளித்து, கரையில் இருந்து சிவலிங்கங்கள் பிடிக்க மண் எடுத்துக்கொண்டு மீண்டும் ஜீப்புக்கு திரும்பினோம். முகுந்த ராயர் சத்திரம் வந்ததும் டிரைவர் மீண்டும் டூ வீல் டிரைவுக்கு மாற்றினார் (மைலேஜ் கிடைக்க வேண்டுமே). இந்த வாகனங்கள் வெகு சீக்கிரத்தில் ‘கண்டம்’ ஆகி விடுகின்றன. நாங்கள் பார்க்கும் போதே ஒரு ஜீப் ப்ரேக் டௌன் ஆகி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் டிரைவர் இதற்கு முன்னால் கேரளாவுக்கு மீன் லாரி ஒட்டிக் கொண்டிருந்தாராம். அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை, ஆனால் ஓனர்ஷிப் ஆகாது, வருகிற பணத்தில் பாதிக்கு மேல் பராமரிப்பு, இத்யாதி (!) செலவுகளுக்கே போய்விடும் என்றார்.
வரும் வழியில் கோதண்ட ராமர் கோவிலில் ஜீப்பை நிறுத்தினார். இங்குதான் ஸ்ரீராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இக்கோவிலும் புயலின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்திருக்கிறது. அதன் மீதமாக வாசலில் இரு தூண்கள் மட்டுமே. சுவாமி தரிசனத்திற்கு ஈரத்தை உடுத்திக் கொண்டு போகக்கூடாதே என்று கேட்டேன். எல்லோரும் அப்படிதான் செல்கிறார்கள் என்றார் (இதற்கு ஒரு உபாயம் உண்டு. வேஷ்டியை 6/7 முறை உதறி கட்டிக்கொண்டால் அது உலர்ந்ததை கட்டிக் கொண்டதற்கு சமம்).
இன்னும் கொஞ்ச தூரம் வந்ததும் ஜடா மகுட தீர்த்தம். ராவண சம்ஹாரம் முடிந்து ராமன் தன் ஜடையை களைந்து இங்கு நீராடி இருக்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு சிம்ம ராசிக்கு வரும் போது மாசி மகமும், பௌர்ணமி திதியும் கூடிய சுப தினத்தில் இத்தீர்த்தத்தில் குளிப்பது விசேஷமாம். மற்ற நாட்களில் யாரும் இங்கு போவது இல்லை. அட்லீஸ்ட், டிரைவர் அப்படித்தான் சொன்னார்.
மீண்டும் சிருங்கேரி மடத்தை அடைந்து, கொண்டு வந்த மண்ணை மூன்று சிவலிங்களாக (சேது, பிந்து, வேணி மாதவர்) பிடித்து பூஜை செய்தோம். பிறகு, வேணி மாதவரை ஒரு பெரிய துண்டில் கட்டி எடுத்துக் கொண்டோம் (மூடி போட்ட தாமிர (அ ) பித்தளை பாத்திரத்தில் எடுத்துக் கொள்வது உசிதம்).இது இனி திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் வரை நம் பூஜை அறையில். சேது மாதவரை அவர் சன்னதியில் சேர்க்க வேண்டும். ஆனால், அது இப்போது சாத்தியம் இல்லை. எனவே, அவரை கடலில் கரைப்பதற்கு அங்கேயே வைத்து விட வேண்டும். பிந்து மாதவரை காசி யாத்திரையில் நம் கூட வருமாறு வேண்டிக்கொண்டு பிராமணருக்கு தானமாக தர வேண்டும் (அவர் பஞ்ச கங்கா காட் டில் (காசி) இருக்கும் போது ஏன் இங்கேயே தானம் கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை).
அது சரி, எதற்காக இங்கிருந்து சிவலிங்கம் பிடித்துக் கொண்டு போய் அங்கு கரைத்து, அங்கிருந்து கங்கை நீர் எடுத்து வந்து இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்?
கங்கையைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த ஸ்ரீராமர் தன் வில்லைக்கொண்டு நிலத்தை கீற கங்கையும் சந்தோஷமாக வெளிப்பட்டாள் (கோடி தீர்த்தம்). ஆனால், நாம் கீறினால் கங்கை வருவாளா? அதனால், சிவன் மனம் குளிர இங்கிருந்து பிரயாகை கொண்டு போய் கங்கையில் சேர்க்கிறோம். அங்கிருந்து கங்கையை கொண்டு வந்து இங்கு ஸ்ரீசீதை பிடித்த சிவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். மேலும், இங்கிருந்து சிவன் நமக்கு துணையாகவும், அங்கிருந்து கங்கை நம் கூடவும் வருகிறார்கள். கிட்டத் தட்ட (இல்லை, ரொம்ப ரொம்ப தூரத் தட்ட) நாமும் பகீரதன் போலத்தான்.
பகீரதன் என்று சொன்னவுடன், அவன் சகர மன்னனின் புதல்வர்களான தன் பாட்டனார்கள் அறுபதினாயிரம் பேரை கரை சேர்க்கத் (சத் கதி அடைய) தானே கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான், ஆகவே அந்த கங்கையின் கரைகளில் காசியிலும், அவள் யமுனை, சரஸ்வதியுடன் சங்கமிக்கும் பிரயாகையிலும் நம் மூதாதையர்களுக்கு பித்ரு கார்யங்கள் செய்வது தானே விசேஷம். நம் பாக்கியம். நம் வம்சத்திற்கு அனுக்ரஹமும் கூட எனத் தோன்றுகிறது.