காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் , இதில் எழுதும் ஒவ்வொரு விஷயமும் முதலில் நானே என் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்துக் கொள்வதற்காகவே, என் திருப்திக்காகவே. அடுத்தது, இது பலருக்கு பயன்படும் என்பதற்காக. என்றாலும்,’காசி யாத்திரை’ என்பது எல்லோருக்குமானது, எந்த வட்டத்திற்குள்ளும் அடக்க முடியாதது. நம் குலம் தழைக்க, செழிக்க ஒவ்வொருவரும் அத்யாவஸ்யமாக செய்ய வேண்டியது பித்ரு கார்யம் (ஸ்ராத்தம், தர்ப்பணம்), இதற்கு அடுத்ததுதான் மற்ற எல்லாமே (நித்யகர்மா, குல தெய்வம், குல குரு, இஷ்ட தெய்வம், கோவில், குளம், மந்த்ரம், ஜபம், தியானம், இத்யாதிகள்). பித்ரு கர்மா செய்யாமல் கோவில் போவதனால் எந்த பிரயோசனமும் இல்லை. கோவிலில் இருக்கும் தெய்வம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், நம் முன்னோர்கள் நமக்கானவர்கள் மட்டுமே. அவர்கள் வாழ்த்தினால் நம் வம்சம் செழித்தோங்கும். வருந்தினால் கஷ்டப்படும்.
அது எப்படி, நம் பித்ருக்கள் நம்மை சபிப்பார்களா என்றால், இல்லை. ஆனால், பித்ரு தேவதைகள் அப்படி சும்மா விட்டு விட மாட்டார்கள். இது ஏதடா, பயமுறுத்துகிறானே, நாம் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என்றால், கவலைப்படவேண்டாம் அதற்குத்தான் இந்த ராமேஸ்வர, பிரயாக, காசி, கயா ஸ்ராத்தங்கள் (முக்கியமாக, கயாவில் பிண்டம் அளிப்பது நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல, இறந்து போன நம் அடுத்த வட்ட உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள், எதிர், பக்கத்து வீட்டார்கள், ஏன் நாம் வளர்த்த மாடு, ஆடு, குதிரை, நாய், பூனைகள் போன்ற பிராணிகளுக்காகவும் கூட). இதை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஸ்ராத்தம், தர்ப்பணம் (ஆண்டுக்கு குறைந்த பட்சம் 15) இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது நம் வம்சம் சுபிக்ஷம் அடைய (இதன் ஒரு பகுதியே இப்போதைய மாளய பக்ஷம்).
ஆனால், இந்த யாத்திரை அவ்வளவு சுலபமானது அல்ல. ராமேஸ்வரம் வேண்டுமானால் தனித்து இருப்பதனால் கொஞ்சம் எளிதாக இருக்கும். ஊரும் நம்ம ஊர். கர்மாக்களும் குறைவு. ஆனால், காசி போய் சேர்ந்து விட்டால் காலில் சக்கரம்தான் கட்டிக் கொள்ளவேண்டும். பித்ரு கர்மாக்கள் அதிகம். எல்லாமே ஜெட் வேகத்தில் நடக்கும். ஒவ்வொருநாளும் அதிகாலையிலேயே எழுந்து ஒவ்வொரு திசையில் 3 – 5 மணி நேர பயணம். போய் சேர்ந்த உடனே கார்யங்களை ஆரம்பிக்க வேண்டி இருக்கும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிவதற்கு முன்பே முடிந்தும் விடும். சரியாக செய்தோமா என்று சந்தேகமாகவே இருக்கும். இப்படியெல்லாம் மன வருத்தங்கள் ஏற்படாமல் பித்ரு கர்மாக்களை முடிந்த அளவு சரியாக செய்வதற்காக நம்மை ஓரளவு தயார் செய்து கொள்வதற்காகவே இந்தத் தொடர். ஆகவே, காசி யாத்திரை சென்று பித்ரு கர்மா செய்ய இருப்பவர்கள் இத்தொடரை கவனமாக படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக, எல்லோருமே படித்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது.
இன்னும் குறைந்த பட்ஷம் இரண்டு எபிசோடுகள் ராமேஸ்வரம். அதற்குப்பின் காசி.