வந்த கார்யம் முடிந்து விட்டது. தீர்த்த ஸ்ராத்தம் செய்து, பிரயாகையில் கரைக்க வேணி மாதவரை பத்திரப்படுத்திக் கொண்டாகி விட்டது. ராமேஸ்வரத்துக்கு வெளியே, உள்ளே உள்ள இதிகாச, புராண, சரித்திர புகழ் பெற்ற கோவில்களில் உறையும் தெய்வங்களையும் ஆலயத்திற்குள்ளே அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்தாகி….வெயிட். இன்னுமொரு மூர்த்தத்தை பார்க்க வேண்டியுள்ளது. ராமநாத ஸ்வாமியின் பின்புறம் இரண்டு, மூன்றாவது ப்ராகாரங்களுக்கு இடையே வெள்ளை சலவைக்கல்லால் ஆன சேது மாதவர் ‘என்னை பார்க்காமல் போகிறீர்களே, என்னாலும் உங்களை சந்திக்க வர முடியாமல் கால்களில் சங்கிலி போட்டு கட்டி இருக்கிறார்களே’ என்று வருத்தத்துடன் சொல்கிறார். வாருங்கள், ஏன் அவரை அவ்வாறு பிணைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, நம் அனுதாபத்தை தெரிவித்து, தரிசனமும் செய்து விட்டு வருவோம்.
பாண்டிய மன்னன் யாகம் செய்யும் பொருட்டு தன் மனையாளோடு கடலாடி திரும்பும் போது அழுதுக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி எதிர்ப்பட்டிருக்கிறாள். அரசன் தன்னோடு வருமாறு அழைக்க, அவள் ஒரு நிபந்தனை விதித்தாள் ‘என் விருப்பமின்றி என்னை யாராவது தொட்டால் அவரை தண்டிக்க வேண்டும்’ என்று. வேந்தன் அதிர்ந்தான். என்றாலும் சம்மதித்தான். பின்னொரு நாள் எவனோ ஒருவன் அவளை கைப்பிடிக்க அவள் கூச்சலிட்டாள்.கோன் ஓடோடி வந்தான். கை பிடித்தவன் கால்களை சங்கிலியால் பிணைத்து விட்டான். அன்றிரவு கனவு. வந்த கள்வன் ஸ்ரீமன் நாராயணனே, அவன் பிடித்த கைகள் ஸ்ரீமஹாலக்ஷ்மியுடயதே என்பதையும், அவள் தன் பக்தியை சோதிக்கவே செய்தாள் என்றும் புரிந்து கொள்கிறான். உருகி உருகி சேது மாதவ லக்ஷ்மி ஸ்துதி பாடுகிறான். இதை சேது மகாத்மியம் சிறப்பித்துக் கூறுகிறது.
ஸ்ரீமஹா லக்ஷ்மி இப்படி என்றால், பர்வத வர்த்தினி அப்படி. எப்படி?அவள் ராமர் பாதம் பதிந்த கந்தமாதன பர்வதத்தையே தன் பிறந்த வீடாக கொண்டு ஆடி மாதத்தில் அங்கு போய்விடுகிறாள். ஸ்ரீராமனாதர் திருக்கல்யாண உற்சவத்தின் போது மாமனார் வீடு சென்று தங்குகிறார் (அங்கேயும் இதே கதை தானா?). இந்த சமயத்தில் ராமேஸ்வர ஆலயம் அடைக்கப் பட்டிருக்கும். ஆகவே, ஆடி மாதம் ராமேஸ்வரம் போகிறீர்கள் என்றால் விசாரித்துக் கொண்டு செல்லவும்.
சொல்வதற்கு இன்னும் ஓரிரு விஷயங்கள் உள்ளது. ஸ்ரீசீதை இம்மண்ணை எடுத்து சிவலிங்கம் பிடித்ததால் ராமேஸ்வரத்தில் ஏர் கட்டி உழவில்லை, சூளையிட்டு சட்டிப்பானை சுட்டெடுப்பதும் இல்லை, சிவலிங்க வடிவமாக இருப்பதால் செக்கு ஆடுவதும் கிடையாது.
சரி, இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்போது காசி சென்று சேர்வது? ஆகவே, ராமேஸ்வர பார்ட்டை இத்துடன் முடித்துக் கொள்வோமா?
அடுத்த அத்யாயத்தில் வடக்கு நோக்கி, வாயு புத்திரனைப் போல பறந்து சென்று வாராணசி அடைகிறோம்.