கும்ப ராசி

கும்பம் ராசி(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :55/100

அயன சயன சுகபோக ஸ்தானமான 12ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான். இவர் சகல சுகத்தையும் அள்ளி தருவார். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை தாம்பத்யம் அதிகரிக்கும், இவர் தனம், குடும்ப ஸ்தானத்தையும், ருணரோக சத்ரு ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். சிலருக்கு முதல் முதலாக வெளிநாடு சென்று பார்க்கும் யோகத்தை தருகிறார். உத்தியோகத்தில்/ சொந்த தொழிலில் நல்ல நிலமையை கொடுத்து குடும்பத்தையும் பண வரவையும் நன்கு வைத்திருக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் கொடுத்து நல்ல நிலையில் வைத்திருக்க போகிறார். அதே நேரம் குரு பகவான் 12ம் இடத்துக்கு வரும்போது சில சுப விரயங்களையும் மனதில் ஒரு சஞ்சலத்தையும் கொடுக்கிறார். மேலும் ராகு / கேது பெயர்ச்சியும் செப்டம்பர் 2020 முதல் ஒரு சில பண விரயம், உத்தியோகம் / சொந்த தொழிலில் ஒரு நஷ்டத்தையும் தருகிறார்கள் இருந்தாலும் ராசிநாதன் சனி பகவான் மற்ற கிரஹங்களுடன் சேர்ந்து பெரும்பாலும் நன்மையை தருவதால் இந்த சனி பெயர்ச்சி பெரிய கஷ்டத்தை தராது. மாறாக விருப்பங்களை பூர்த்தி செய்யும்.

உடல் நலம் ஆரோக்கியம் :

பெரியவர்களுக்கு மூச்சு திணறல் மறதி, தலைவலி போன்ற தொல்லைகளும் மற்றவர்களுக்கு தூக்கமின்னை டென்ஷன், திடீர் கோபம், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவற்றால் மருத்துவ செலவு அதிகரிக்கும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுவதன் மூலமும், சரிவிகித ஆகார பயிற்சியை மேற்கொள்வதன் மூலமும் பெரும் உடல் பாதிப்பிலிருந்து விடுபடலாம், இருந்தாலும் குடும்ப உறவுகள் மூலம் மருத்துவ செலவு இருந்து கொண்டிருக்கும்.

குடும்பம்/ உறவுகள்:

கணவன் மனைவிக்குள் காதல் பெருகும், அந்யோந்யம் உண்டாகும், பெற்றோர்கள் குழந்தைகள், சகோதர வகை , மற்ற உறவினர்கள் எல்லோருடனும் சுமூக உறவும் நெருக்கமும் இருக்கும், பிரிந்த உறவுகள் ஒன்று சேருவர், குரு மகரத்தில் வரும்போதும் பின் ஜென்மத்தில் வரும்போதும் சங்கடங்கள் மனஸ்தாபங்கள் உண்டாகும், கவனத்துடன், வார்த்தைகளை விடுவதில் அவசரப்படாதிருத்தல், அனுசரித்து போகுதல் இவற்றால் பாதிப்புகளை குறைக்கலாம். பொதுவில் குடும்ப ஒற்றுமை நன்றாக இருந்தாலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போவதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

வேலை / உத்தியோகம்:

மருத்துவம், வங்கி, பணம் புழங்கும் இடங்கள் இங்கெல்லாம் பணிபுரிபவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பர், மற்றவர்களும் நன்றாக இருந்தாலும் பொதுவில் அனைவருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும், வேலையில் உற்சாகம் இருக்கும், புதிய வேலைக்கு முயற்சிப்பவருக்கு வேலை கிடைக்கும், வெளிநாட்டு உத்தியோகம் நன்மை தரும், வேலை பளு குறையும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும், விரும்பின இடமாற்றம் உண்டாகும். சனி வக்ர சஞ்சார காலங்கள் (முன்னுரையில் கொடுக்கப்பட்டு இருக்கு) குரு மகரத்திலும் பின் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் காலங்கள் கொஞ்சம் அதிகமான வேலை பளு, சக ஊழியர்களுடன் கருத்து மோதல் மேலதிகாரிகளுடன் வாதம் என்று இருக்கும், மனதை ஒருமுக படுத்தி தியானப்பயிற்சி யோகா போன்றவற்றை செய்து வந்தால் நிதானம் உண்டாகும், வேலை இழப்பிலிருந்து தப்பிக்கலாம். பொதுவாக நன்மை உண்டாகுவதாக இந்த சனி பெயர்ச்சி அமைந்திருக்கிறது.

தொழிலதிபர்கள்:

ஏழரை சனி ஆரம்பம் எதிலும் நிதானமாக அடியெடுத்து வைப்பது நல்லது, மிகுந்த நன்மைகள் உண்டானாலும், தொழில் விஸ்தரிப்புக்கு ஏற்ற காலம் என்றாலும், கணக்கு வழக்குகளை சரியாக வைத்து இருப்பது, பொறுமையுடன் செயல்படுவது நல்லது, புதியதாய் தொழில் ஆரம்பிக்க விரும்புகிறவர்கள் தங்கள் ஜாதகத்தை அருகிலுள்ள ஜோதிடரிடம் காட்டி ஆலோசித்து தொழில் தொடங்குவது நல்லது. அரசாங்க உதவிகள் கிடைத்தாலும் அவற்றை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியாதைபடி குரு , ராகு/கேது சஞ்சாரங்கள் அமைகின்றன. எதிரிகள் தொல்லை இருந்து கொண்டிருக்கும், போராட்டம் நிறைய மற்ற கிரஹங்களும் அனுகூலமான நிலையும், பிரதிகூலமான நிலையும் கலந்து இருப்பதால் கொஞ்சம் யோசித்து நிதானமாக செயல்படுவது நல்லது.

மாணவர்கள்:

மருத்துவம், அறிவியல், சட்டம், வர்த்தகம், கணிதம் போன்ற பாடம் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம், தேவைகள் அதிகரிக்கும், அதனால் வாய்ப்புகள் தேடி வரும், படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள், மற்ற மாணவர்களும் சிறந்த பலனை பெறுவர், மேல் படிப்பு, வெளிநாட்டு படிப்பு, விரும்பிய பாட திட்டம், விரும்பிய கல்லூரி எல்லாம் கிடைக்கும், குரு சஞ்சார காலங்களில் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது ஆசிரியர் பெற்றோர் ஆலோசனைப்படி நடப்பது மிகவும் நல்லது. பொதுவில் நன்மை அதிகம் அதனால் கவலை வேண்டாம்.

கலைஞர்கள் / அரசியல்வாதிகள்/விவசாயிகள்:

திரைத்துறை, மீடியா இதில் இருப்போருக்கு நல்ல ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. வரும் வாய்ப்புகளை சரியாக பிடித்துகொண்டால் அடுத்த 3 வருடங்கள் செமையாக இருக்கும்.ரசிகர்களின் பாராட்டுகள் வருமானம், பேர் புகழ் நிறைந்திருக்கும். மற்ற துறை கலைஞர்களுக்கும் நன்மை அதிகம், குரு சஞ்சார காலங்களில் கவனமாய் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்குவிரும்பியபதவிகிடைக்கும். தொண்டர்கள்ஆதரவுஉண்டு, மேலிடத்தில் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் தாராளம். குரு சஞ்சார காலங்கள் கவனம். நிதானம் பொறுமை தேவை. விவசாயிகள் மகசூல் நிறைந்திருக்கும். பொருளாதாரம் மேம்படும், வழக்குகளில் சாதகம், வீடு பூமி வாங்க வாய்ப்பு. குடும்பத்தில் ஒற்றுமை குதூகலம் என்று இருக்கும். குரு சஞ்சார காலங்களில் அமைதி இன்மை இருக்கும்.இறை த்யானம், யோகா, தியான பயிற்சி போன்றவை நன்மை தரும்.

பெண்கள்:

அனைத்து வயது பெண்டிருக்கும், மகிழ்ச்சி பெருகி இருக்கும், செல்வம் வந்து சேரும், புனித யாத்திரைகள் விருந்து கேளிக்கைகள் என்று இருக்கும், குடும்பத்தில் ஒற்றுமை, அக்கம்பக்கத்தில் செல்வாக்கு உயருதல், கணவரிடம் நெருக்கம், திருமணத்தை எதிர்பார்த்த பெண்களுக்கு திருமணம் கைகூடல், குழந்தை பாக்கியம், ஆயுள் ஆரோக்கியம் மேம்படுதல், உழைக்கும் மகளிருக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுதல் பணம் கிடைத்தல் என்று இருந்தாலும், குருவின் சஞ்சார காலங்கள் மகரத்திலும் கும்பத்திலுமாக கொஞ்சம் பாதிப்பை தரும் இருந்தாலும் மனோ தைரியத்தால் வெற்றி பெற்று விடுவீர்கள்

ப்ரார்த்தனைகளும் வணங்க வேண்டிய தெய்வமும்:

தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல், வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு அர்ச்சனை, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று உழவாரப்பணிகளை மேற்கொள்ளல், முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம், முடவர்கள், ஊனமுற்றோருக்கு உதவி செய்தல், இனிய சொற்களால் மற்றவருக்கு மருந்தாக இருத்தல் போன்றவை நலம் தரும்.

About Author