அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்துடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தப்பின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் நேரத்தை அங்கே செலவளித்தனர்.
ரிஷியின் சாபம்
அதே காட்டில் ரிஷி ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற வரத்தின் காரணமாய் அவர் விரும்பிய வடிவு எடுக்கும் வல்லமை பெற்றவர். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் மானாக மாறி இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பக்கம் வந்த பாண்டு மானைக் கண்டு அம்பெய்தினான். அவரது அம்பு பட்டு அந்த ரிஷி மரண காயம் அடைந்தார். அவர் அடிபட்டவுடன் அவரது மனைவியும் அவரும் மனித உருவை அடைந்தனர்.
பாண்டுவின் மேல் கோபம் கொண்ட ரிஷி ” பாண்டுவும், அவன் மனைவியுடன் சேரும் சமயத்தில் அவன் இறக்க நேரிடும்” என சாபம் அளித்தப் பின் இறந்து விட, சோகத்தால் தாக்கப்பட்ட அவரது மனைவியும் அங்கேயே இறந்துவிட்டார்.
இரண்டு அப்பாவிகளை கொன்றது அவன் மனதை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே தன் மனைவிகளுடன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், இருவரிடமும் நடந்ததை விவரித்தான். அதனால் அவன் பெற்ற சாபத்தை பற்றியும் கூறினான். இந்த சம்பவத்தால், ஆசைகள் நீங்கியவன் அதற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. தூதுவனை அழைத்து நடந்ததை பீஷ்மருக்கும் நாட்டு மக்களுக்கும் விளக்குமாறு கூறியவன் , அவனுடன் தனது பரிவாரங்கள் மற்றும் அவனிடம் இருந்த நகைகள் முழுவதையும் குடுத்து அனுப்பினான். மாத்ரி மற்றும் குந்தியும் அவர்களிடம் இருந்த அரச உடைகளை கொடுத்தனுப்பி விட்டு சாதாரண உடைகளை அணிந்தனர்.
குந்தியின் வரம்
அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள். எந்த கடவுளை நினைத்து சொல்கிறோமோ, அந்தக் கடவுளின் குணங்களுடன் கூடிய குழந்தையை அளிக்க வல்லது அம்மந்திரம். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, அந்த மந்திரங்கள் மூலம் குழந்தை பெற சம்மதம் கூறினான்.
முதலில் தர்ம தேவதையை வேண்டி, யுதிஷ்டிரரையும் , பின் வாயு தேவனை வேண்டி பீமனையும் பின் மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள். குந்தியிடம் இருந்து மந்திரங்களை கற்றுக் கொண்ட மாத்ரி மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை வேண்டி நகுல சகாதேவர்களை பெற்றெடுத்தாள்.
காட்டினுள் முனிவர்களின் கண்காணிப்பில் இளவரசர்கள் நன்கு வளர்ந்து வந்தனர். இளவரசர்களுக்குண்டான வாழ்வில்லை என்ற போதும் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால் அத்தகைய மகிழ்வான வாழ்வு எப்பொழுதும் நீடித்து இருப்பதில்லையே.. ஒரு நாள் மாத்ரியுடன் இருந்தபொழுது , அங்கிருந்த சுற்றுப்புறங்களும் காலமும் பாண்டுவை தூண்ட அவன் மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாய் தன் உயிரையும் விட்டான்.
குந்தி வந்தவுடன், மாத்ரி நடந்ததை அவளுக்கு விளக்கி விட்டு, பாண்டுவின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று கூறி , அவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். இளவரசர்கள் ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்தியின் மேல் விழுந்தது.