தினசரி பூஜை – 1

தினசரி பூஜை செய்யும் விதம்.

தெய்வ நம்பிக்கை உள்ளவர் அனைவரும் தினசரி இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டியது சாத்திரங்களில் விதிக்கப்பட்ட இன்றியமையாத கடமை ஆகும். இருந்தாலும் காலப்போக்கில் ஓடு ஓடு என்று ஓடும் வாழ்க்கையாகி விட்ட இந்த காலகட்டத்தில் இதை எப்படி நிறைவேற்றுவது?
நேரமே இல்லை என்பவர்களுக்கு:

பஞ்ச பூஜா முறை:


கந்தம், அர்ச்சனை, தூபம், தீபம், நிவேதனம்.

இவை முறையே நிலம், ஆகாசம், வாயு, அக்னி, நீர் தத்துவங்களை சார்ந்தது அல்லவா? ஆக இந்த 5 தத்துவங்களாலும் பூஜை செய்கிறோம்.

தேவையானது: சந்தனம், கொஞ்சம் பூ, கிடைக்காது என்றால் மஞ்சள் கலந்த அரிசி- அக்‌ஷதை, தசாங்கம் அல்லது ஊதுவத்தி, நெய் அல்லது எண்ணை இட்ட விளக்கு, கற்கண்டு, உலர் பழங்கள் – உலர் திராட்சை போல ஏதோ ஒன்று. அவ்வளவுதான்!

ஒரு படமோ அல்லது சின்ன விக்கிரஹமோ, அவரவர் இஷ்டமான தெய்வத்தினுடையது. இதை வசதியான ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளவும். தினசரி குளித்த பின் சுத்தமான ஆடையுடன், சுத்தமான மனசுடன் படத்துக்கோ விக்ரஹத்துக்கோ கொஞ்சம் சந்தனம் இடவும்.

கந்தம்: சந்தனம் இடுவது. முடிஞ்சது.

அர்ச்சனை: எட்டு பெயர்களை சொல்லி பூ/ அக்‌ஷதை வைத்தல். அந்தந்த தெய்வத்துக்கான பெயர்கள் எட்டை சொல்லி பூக்களை சமர்பிக்கவும். எட்டு பெயர்கள் தெரியவில்லை என்றால் ஒரே பெயரை எட்டு முறை சொல்லி வைக்கலாம்.

தூபம்: தசாங்கம் அல்லது ஊதுவத்தி காட்டுதல்

தீபம்: நெய் அல்லது எண்ணை தீபம் காட்டுதல்.

நிவேதனம்: ஏதோ ஒன்று உண்ணும் பொருளை காட்டுவது.- சூடாக்காத பால், உலர் திராட்சை, கற்கண்டு போன்றவை சுலபமாக பூஜை செய்ய உகந்தவை. இதை வேறு யாருக்கேனும் கொடுத்து விடலாம். அல்லது நாமே சாப்பிட்டு விடலாம். ஆதர்சமாக யாரேனும் பிறர் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

இதை எல்லாம் முடித்து ஒரு நமஸ்காரத்தை செய்துவிட்டு அடுத்த வேலைக்கு புறப்பட்டுவிடலாம்.

அடுத்து 16 அங்க பூஜை.

About Author