ஸ்வாமியின் பாதங்களில் வார்ப்பதாக கற்பனையுடன் ஒரு உத்தரணி நீரை மூர்த்தத்தின் மீது விட வேண்டும். (இது பாத்யம்) அதே போல் கைகளில் வார்ப்பதாகவும். (அர்க்யம்). அடுத்து ஆசமனம்.
அடுத்து குளியல். இதை நேரத்தை பொருத்து நீட்டிக்கொள்ளலாம். ஒரு நிமிஷத்திலும் முடிக்கலாம்; ஒரு மணி நேரமும் செய்யலாம். உண்மையில் மற்ற உபசாரங்கள் நிலையான நேரம் எடுத்துக்கொள்ளும். இது மட்டுமே அதிக வித்தியாசம் இருப்பதால் நாம் பூஜை செய்யும் கால அளவை இதுவே பெரும்பாலும் நிர்ணயிக்கிறது.
சீக்கிரம் முடிக்க உத்தரணியால் நீரை மூர்த்தங்கள் மீது வார்க்கலாம்.
நேரம் இருப்பவர்கள் தான் சொல்ல நினைக்கும் மந்திரங்களை / ஸ்லோகங்களை பொருத்து எதால் எவ்வளவு நேரம் அபிஷேகம் என்று நிர்ணயித்துக்கொள்ளலாம்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் என்றால் அதிக ப்ரியமாம். விஷ்ணுவுக்கு அலங்காரம். அம்பாளுக்கு நிவேதனம். பிள்ளையாருக்கு தர்ப்பணம்.
ஆகவே சிவ பூஜை செய்வோர் விரிவான அபிஷேகமாக செய்கின்றனர். சுத்த நீர் எப்போதும் அபிஷேகத்துக்கு தகுந்தது. சுட வைக்காத பால், இளநீர், தேன், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், நல்லெண்ணை, நெய், திருநீறு ஆகியனவற்றையும் பயன்படுத்தலாம். நல்லெண்ணை, நெய் பயன்படுத்தினால் அதன் பின் வென்னீரால் அபிஷேகம் செய்வதுண்டு. அது முன் செய்தவற்றின் பிசுக்கை மூர்த்தத்தின் மீதிருந்து நீக்கிவிடும்.
அபிஷேகம் ஆன பின் சுத்தமான மடித்துணியால் துடைத்துவிட்டு ஆசனத்தில் அமர்த்தி மேற்கொண்டு தொடரலாம்.
குளியல் முடித்து ஆசமனம் சமர்பிக்க வேண்டும்.
அடுத்து உடை. பால க்ருஷ்ணன் போல சில மூர்த்தங்கள் வைத்து இருப்பவர்கள் வெல்வெட், பட்டுத்துணியால் உடை தைத்து வைத்திருப்பர். அதை அணிவிப்பர். காசி கங்கை கரையில் நான் பார்த்த பெண்மணி ஒரு புது துணியை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்ர்ரென்று நாடாக்களாக கிழித்து தான் பிடித்து வைத்த 11 மண் லிங்கங்களுக்கும் அணிவித்தார்!
பெரும்பாலும் பயனாவது அக்ஷதைதான்!
உபவீதமும் அவ்வாறே. பிள்ளையார் சதுர்த்திக்கு மண் பிள்ளையாருக்கு குறிப்பாக உபவீதம் அணிவிப்பர்.
அதே போல் சாக்தர்கள் அம்பாளுக்கு ஆபரணங்கள் அணிவிப்பர்.
அடுத்து சந்தனம் சாற்றுதல். நேரம் சிரத்தை இருப்பவர் சந்தனக்கட்டையை சந்தனக்கல்லில் தேய்த்து சந்தனம் தயார் செய்வர். பச்சை கற்பூரம் என்று சொல்லும் வெள்ளை வஸ்துவை ஒரு சின்ன க்ரிஸ்டல் எடுத்து விரல்களால் அழுத்தி பொடியாக்கி நாம் பயன்படுத்தும் தீர்த்தத்திலும் சேர்க்கலாம். அதே சமயம் இந்த சந்தனம் அரைக்கவும் சேர்க்கலாம். அதனால் அரைக்கப்படும் சந்தனத்தின் அளவு அதிகமாகும். இது வெறும் உராய்வை அதிகமாக்குகிறதா இல்லை வேறு சமாசாரமா என்று தெரியவில்லை.ஆனால் சும்மா அரைப்பதைவிட அதிக சந்தன விழுது விரைவில் உருவாகிறது.
சந்தனம் அரைக்கும் போது கூட குங்குமப்பூ சேர்க்கலாம். நல்ல நறுமணத்தையும் நிறத்தையும் இது தருகிறது. இதில் சில நுணுக்கங்கள்….