அடுத்து பஞ்சாயதன பூஜை.
பஞ்சாயதன பூஜை செய்வது பல ஆண்டுகளாக வந்திருக்கிறது. ஷண்மதங்களை ஸ்தாபித்த ஆதி சங்கரருக்குப் பின் பிரபலம் ஆகி இருக்கலாம். இந்த பூஜையில் வைக்கப்படும் மூர்த்தங்கள் விநாயகர், சிவன், விஷ்ணு, அம்பாள், சூரியன் ஆகிய 5 தெய்வங்களுக்கு உரியவை. பாரம்பரியமாக நம் குடும்பத்தில் உள்ள வழக்கப்படியே செய்ய வேண்டும். வீட்டில் இந்த பூஜை பழக்கம் இல்லாதிருந்தது. நான் துவக்கலாம் என ஆரம்பித்த போது எதை மத்தியில் வைத்துக்கொள்ளப்போகிறாய் என்று என் அத்தான் கேட்டார். பிள்ளையார் என்று தயங்காமல் சொன்னேன். ஆனால் அவரோ சிரித்துக்கொண்டு ஆசார்யாள் சொல்லி இருப்பதை சிவனைத்தான். அப்படியே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்!
எப்படி இருந்தாலும் ஐந்து தெய்வங்களுக்குமே பூஜை நடக்கும். இவை நடுவில் ஒரு மூர்த்தமாகவும் மற்றவை சுற்றியும் வைக்கப்படும். சிவனுக்காக பாணலிங்கமும், அம்பாளுக்கு ஸ்வர்ணரேகா எனப்படும் தங்க தாது (ore) உம், விஷ்ணுவுக்கு சாளக்ராமமும், சூரியனுக்கு ஸ்படிகமும், பிள்ளையாருக்கு சோனா பத்ரம் எனும் சிவப்பு நிற கல்லும் உபயோகிக்கப்படுகின்றன.
பாணலிங்கம் கிடைப்பது நர்மதை நதிக்கரையில்; சோனாபத்ரம் சோன் நதிக்கரையில், ஸ்படிகம் வல்லம் என்னும் ஊரில் (தஞ்சை மாவட்டம்?) ஸ்வர்ணரேகா ஸ்வர்ணமுகி ஆற்றின் படுகையில், (ஆந்திரா); சாளக்ராமம் நேபாளத்தில் கண்டகீ நதிக்கரையில் கிடைக்கும் வஜ்ரநகம் எனும் பூச்சியின் ஃபாஸில்.
போலிகளுக்கு எப்போதும் குறைவில்லை. பாணலிங்கத்தின் மேலே ஒரு வெட்டு காணலாம். சோன் நதிக்கரையிலோ வேறு எங்கோ கிடைக்கும் சிவப்புக்கல்லை எடுத்து வந்து சம்மட்டியால் உடைத்து விற்கிறார்கள். பூஜைக்கு உகந்தது சோன் ஆற்றின் படுகையிலேயே இருந்து நீரால் வழ வழ என்று ஆக்கப்பட்ட கல். இதை பல கோணங்களிலும் பார்க்க தும்பிக்கையுடன் பிள்ளையாரின் முகத்தை காணலாம். ஒரே கல்லில் இப்படி பல முகங்களையும் பார்க்கலாம். ஸ்வர்ணரேகாவில் அதிகம் ஏமாற்ற முடியாது. தங்கத்துகள் மின்ன வேண்டும். கண்ணாடித்துண்டை ஸ்படிகம் என்று விற்கிறார்கள். ஸ்படிகம் என்றால் கையில் வைத்தால் சில்லென்று இருக்க வேண்டும். தண்ணீரில் போட்டால் அனேகமாக அது இருபப்தே தெரியாது!
தேவிப்பட்டினம் அருகில் கிடைக்கும் கருப்பு உருண்டையான கல்லை சாளக்ராமம் என்று விற்கிறார்கள். உண்மை சாளக்ராமத்தை வல்லுனர்களே சரியாக அறியமுடியும். அவற்றில் பலதில் பூச்சியின் வட்ட வடிவம் தெரியும். இதை சக்கிரம் என்கிறார்கள். எவ்வளவு சக்கிரம் எந்த அமைப்பில் இருக்கிறது என்று பார்த்து அதை பல வகைகளாக சொல்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலனும் சொல்கிறார்கள். அது பெரிய சப்ஜெக்ட்!
ரைட் இந்த சப்ஜெக்ட்ல இருக்கு போதே மற்ற போலி விஷயங்களை பாத்து விடலாம்….