பதிலுக்கு பதில்…

துரோணரும், துருபதனும் அவர்களின் இளம் வயதில் ரிஷி பாரத்வாஜரின் குருகுலத்தில் பயின்றுவந்தனர். அப்பொழுது இருவரும் மிக நெருங்கிய தோழர்களாய் இருந்தனர். அந்த நேரத்தில், துருபதன் துரோணருக்கு ஒரு வாக்கு அளித்தார். அவர் நாட்டின் அரசராக ஆகும் பொழுது, அவரது சாம்ராஜ்யத்தின் பாதியை துரோணருக்கு அளிப்பதாக கூறினார். குருகுலம் முடிந்து இருவரும் பிரிந்தனர். துருபதன் நாளடைவில் பாஞ்சால நாட்டின் அரசன் ஆனான். துரோணர், க்ருபரின் சகோதரி கிருபையை மணந்து அஸ்வத்தாமன் என்ற மகனை பெற்றார். உலகிலேயே சிறந்த வில்லாளி ஆக வேண்டும் என்ற ஆசையில் பரசுராமரிடம் மேலும் பயின்றார்.

வித்தையில் சிறந்தவராக இருந்தாலும், போதுமான வருமானம் இல்லாததால் மிக வறுமையில் சிக்கி தவித்தார் துரோணர். ஒருமுறை, அஸ்வத்தாமன் அவனது அம்மாவிடம், ” அம்மா என் நண்பன் பால் பருகியதாகக் கூறினான். பால் என்றால் என்ன ? ” என கேக்கும் அளவிற்கு அவர்கள் வறுமையில் இருந்தனர். இதனால் வேதனையுற்ற கிருபை துருபதனின் வாக்கை துரோணருக்கு நினைவூட்டி அவரிடம் சென்று உதவி கேக்க சொன்னாள்.

இளம்பிராயத்து நினைவுகளும் துருபதனுடன் கழித்த இன்பமான நினைவுகளும் மனதில் தோன்ற பாஞ்சாலத்திற்கு சென்றார் துரோணர். அங்கே அரசவையில் துருபதனை நண்பனாய் நினைத்து பேச, அதிகாரத்தில் இருப்பதால் அகந்தையில் துருபதன் துரோணரை பிச்சைகாரன் என்றும் அரசரை நேரடியாக சந்தித்து பேச அருகதை இல்லை என்றும் அவமதித்தான்.

இதனால் கோபம் கொண்ட துரோணர், இதற்கு பழி வாங்க உறுதி பூண்டார். சில காலம் கழித்து , துரோணர் குரு வம்சத்து ஆச்சாரியாராக ஆனார். குரு வம்ச இளவரசர்களின் குருகுல காலம் முடிந்ததும், அவர்களிடம் குரு தட்சணையாக துருபதனை பிடித்து வர சொன்னார். இளவரசர்கள் அவர்களின் முதல் போரை எண்ணி சந்தோசத்துடன் சென்றனர்.

முதலில் போருக்கு சென்ற கௌரவர்களை எளிதாக தோற்கடித்தான் துருபதன். அதன்பின், யுதிஷ்டிரன் இல்லாமல் சென்ற பாண்டவர்கள், துருபதனை எளிதில் வீழ்த்தினர். அர்ஜுனன் அப்பொழுதே தீர செயல்கள் செய்து தான் சிறந்த போர் வீரன் என நிரூபித்தான். எதற்காக இந்த யுத்தம் என புரியாமலே அவர்களிடம் கைதியானான் துருபதன்.

தன் மாணவர்களின் சாமர்த்தியத்தை கண்டும், தன் சபதம் நிறைவேறியதை கண்டும் துரோணர் மகிழ்ந்தார். பின் துருபதனை நோக்கி ” நீ என்னை பிச்சைக்காரன் என்று அழைத்தாயே நினைவிருக்கிறதா ? இன்று உனது ராஜ்ஜியம் என்னிடம். இப்பொழுது, உன் உயிரை காப்பாற்றக் கூடியது என்று எதுவும் உன்னிடம் இல்லை. இப்பொழுது மற்ற பிச்சைக்காரர்கள் போன்றுதான் நீயும். உன்னை இப்பொழுதே கொன்றுவிட்டு உன் ராஜ்யத்தை நான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், எனக்கு உன் நட்பே மீண்டும் வேண்டும். அதனால், பாதி ராஜ்யத்தை திருப்பி அளிக்கிறேன் ” என்றார்.

தன் சபதம் நிறைவேறியதும் துரோணரின் கோபமும் தணிந்தது. ஆனால் அந்த சம்பவம் அப்படி நல்லபடியாக முடியவில்லை. துருபதனின் உள்ளிருந்த கோபம் வெளிப்படாமல் உள்ளுக்குள்ளே நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது பழி வாங்கத் துடிக்கும் , சண்டையிடவும் கொல்லவும் பிறந்த ஷத்ரிய வம்சத்தின் கோபம் அது. பிராமணரை கொல்லும் ஒரு மகனும், அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை மணக்கக் கூடிய மகளும் வேண்டும் என்று அப்பொழுதே மனதில் உறுதி கொண்டார். தன்னை கைது செய்து கொண்டுவந்தாலும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை அவரால்.

திருஷ்த்துட்யும்னன் , ஆச்சாரியார் துரோணரை கொன்றான், திரௌபதி அர்ஜுனனை மணந்து அதன் மூலம், பஞ்சபாண்டவர்களுக்கும் மனைவியானாள்.

About Author