அம்பை

பழிவாங்கும் தீ – அம்பை

சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைபெற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல் செய்தனர். ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் சுயம்வரத்திற்கு வந்ததால் இந்த கேலி நிகழ்ந்தது. இதனால் கோபம் அடைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் சண்டைக்கு அழைத்தார். மிக எளிதாக எந்தவித கஷ்டமும் இன்றி அந்த இளவரசர்கள் அனைவரையும் தோற்கடித்து, மூன்று இளவரிசிகளையும் அங்கிருந்து அழைத்து சென்றார்.

அம்பை, ஸுபால ராஜன் சால்வனை விரும்பியதையும், சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட விரும்பியதையும் பீஷ்மர் அறியவில்லை. அஸ்தினாபுரம் திரும்பும் வழியில் , சால்வன் இவரை வழிமறித்து போருக்கு அழைத்து தோல்வியடைந்தான். அஸ்தினாபுரம் வந்தபின்பே, அம்பை , தனது மனதில் இருப்பதை பீஷ்மரிடம் கூறினார். தான் தவறு செய்ததை உணர்ந்த பீஷ்மர், தக்க பாதுகாப்புடன் அவளை சால்வன் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, பலர் பார்க்க பீஷ்மர் என்னை தோற்கடித்தார். எனவே என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என கூறினான்.

இதனால் மனம் உடைந்த அம்பை, கோபத்துடன் மீண்டும் பீஷ்மரிடம் திரும்பி வந்து, நடந்ததை கூற, அவர் விசித்திரவீரியனிடம் அம்பையை திருமணம் செய்யக் கூறினார். அவனோ, மனதில் வேறொரு ஆணை நேசிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி மறுத்துவிட்டான்.

மீண்டும் சிலகாலம் கழித்து சால்வன் மனம் மாறியிருப்பான் என எண்ணி , அம்பையை அங்கே அனுப்ப, அவன் மீண்டும் மறுத்துவிட்டான். இதனால் கடுங்கோபம் கொண்ட அம்பை, நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம் எனவே நீங்களே என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீஷ்மரிடம் சண்டையிட்டாள்.

ஆனால், ஏற்கனவே பிரம்மச்சரிய விரதம் பூண்டதால் பீஷ்மர் அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது வலிக்கும் வாழ்வின் பிரச்சனைக்கும் பீஷ்மர் மட்டுமே காரணம் என எண்ணிய அம்பை அவரை அழிக்க சபதம் பூண்டாள். சுப்ரமணியரை நோக்கி தவம் இருந்து, என்றும் வாடாத தாமரை மாலையை வரமாகப் பெற்றாள். அந்த மாலையை அணிந்தவர் பீஷ்மரை அழிக்க இயலும் என்பதே வரமாகும்.

அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள். முதலில் சால்வனிடம் பேசி அவளை திருமணம் செய்துகொள்வதாய் அவர் கூற, இனி தன் வாழ்வில் இல்லறத்திற்கு இடம் இல்லையென்றும், பழி வாங்குவது மட்டுமே தன் லட்சியம் என அவள் மறுத்துவிட , பீஷ்மரை போருக்கு அழைத்தார் பரசுராமர். நீண்ட நாட்கள் இருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை நீடிக்க, இறுதியில் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு அங்கிருந்து விலகினார் பரசுராமர்.

இதனால், மனம் உடைந்த அம்பை மீண்டும் சிவனை நோக்கி கடுமையான தவமிருக்க துவங்கினாள். இறுதியில் அவள் தவத்தை மெச்சி காட்சியளித்த சிவன், அடுத்த பிறவியில் அவள் பீஷ்மரை கொல்ல முடியும் என வரமளித்தார். இதனை கேட்டவுடன், தீ மூட்டி, அதில் இறங்கினாள் அம்பை.

அடுத்த பிறவியில் துருபதனின் மகளாக பிறந்தாள் . சிறு வயதிலேயே அம்பை முன்பு வாயிலில் தொங்க விட்டு சென்ற தாமரை மாலையை எடுத்து அணிந்து கொண்டாள் . இதை அறிந்த துருபதன், பீஷ்மரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவளை காட்டிற்கு அனுப்பி வைத்தார். காட்டில் போர்கலைகளை கற்றவள், அங்கிருந்த யட்சனின் உதவியுடன் ஆணாக சிகண்டியாக மாறினாள்.

மகாபாரத யுத்தத்தில் சிகண்டி பெண்ணாக பிறந்தவள் என அறிந்திருந்த பீஷ்மர் அவளை தாக்கவில்லை. பத்தாம் நாள், யுத்தத்தில், அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணரின் இடத்தில் சிகண்டி இருக்க, அர்ஜுனன், சிகண்டி இருவருமே அவர் மேல் கணைகளை தொடுத்தனர். பிதாமகர், அர்ஜுனனின் அம்புகள் வலிமையாகவும் துன்புறுத்துவதாகவும் இருந்ததாகக் கூறினார். அவருடைய நீண்ட துன்பகரமான வாழ்வு அங்கு முடிவுக்கு வந்தது.

About Author