வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி)

This entry is part 4 of 4 in the series சேலத்துப் புராணம்

அத்தியாயம்-3

தக்ஷனின் யாகத்திலிருந்து வெளியேறிய ததீசி முனிவரை நாரதர் வழி மறித்தார். நேரே கயிலாயம் சென்று உமா மகேஸ்வரனை மனந்தினாலும், நாவினாலும், உடலினாலும் சிந்தித்து, துதித்து வணங்கி நடந்தவற்றை முறையிட்டார்.

“இல்லை நாரதா! தக்ஷன் பேசிய பேச்சின் வீரியம் என்னை இன்னும் வாட்டிக் கொண்டிருக்கிறது. நீதான் திரிலோக சஞ்சாரி. உன்னை கயிலாயம் வாசலில் தடுப்பார் எவருமில்லை. நான் போய் யோகத்தில் ஆழ்கிறேன். நீ சென்று நடந்ததை ஈசனுக்கு எடுத்துரை’என்று ததீசி முனிவர் தனது ஆசிரமம் நோக்கி நடந்தார்.

நாரதர் தனது மகதி என்ற வீணையை மீட்டியபடி கைலாயம் நோக்கிப் புறப்பட்டார்.

“என்ன நாரதா! உன் முகத்தில் ஏகப்பட்ட கலவரமாக உள்ளது?”என்று உமையம்மை அவரை வினவினாள்.

“உங்களுக்கு விஷயமே தெரியாதா? தேவருலகமே இந்தப் பேச்சாகவே உள்ளது. நீங்களோ எதுவும் அறியாமல் ஈசனடி போற்றி எந்தையடி போற்றி என்று இங்கேயே பாட்டு பாடிக் கொண்டு இருக்கிறீர்களே?”என்றார் நாரதர்.

“நாரதா’என்ற சிவபெருமானின் குரலில் மிரட்டல் தொனித்தது.

“சம்போ மகாதேவா”

“இன்று தேவர் உலகில் என்ன விசேஷம் நாரதா?” என்றாள் சசிதேவி விடாது.

“தக்ஷன் உங்களின் தந்தைதானே?”

“ஆமாம் இதில் என்ன சந்தேகம்?”

“பெரிய யாகம் செய்யும் தக்ஷன் மாப்பிள்ளையை அழைக்க வேண்டாம் பெற்ற பெண்ணைக் கூடவா அழைக்க மறப்பான்?”

“என்ன சொல்கிறாய்?’

“என்ன சொல்வது. உங்கள் இருவருக்கும் அழைப்பு இன்றி அவிர்பாகத்துக்குரிய பரமேஸ்வரனை பூஜிக்காமல் யாகம் செய்வதோடு சர்வேஸ்வரனை நாக்கில் நரம்பின்றி ஏசியிருக்கிறான். எதிர்த்து கேள்வி கேட்ட ததீசி முனிவர் அவமானப்படுத்தப்படவே அவர் வெளிநடப்பு செய்து விட்டார்.”

என்னதான் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஆகாமல் போனாலும் பெற்ற தந்தை நடத்தும் யாகத்திற்குச் செல்ல உமாதேவிக்கு ஆவல் மிகுந்தது. ஒன்றும் நிகழாதது போல மிகப் பணிவாக ஈசனிடம் அனுமதி கேட்டாள். அனுமதி கிடைக்கவில்லை. எனவே பணிவாக அவரது பாதங்களை வணங்கி விட்டு அங்கிருந்து அகன்று தக்ஷனின் யாகம் நடக்கும் இடத்திற்கு வந்தாள்.

நீண்ட வரிசையில் தேவர்கள் தங்கள் தேவிகளோடு நின்று யாகத்தில் தக்கன் அளித்த வெகுமதிகளையும், மரியாதைகளையும் பெற்றுக் கொண்டிருப்பதை உமாதேவி கவனித்தாள்.

காச்யபர் முனிவர் ரிஷிகளின் நடுவில் தானும் ஒரு ரிஷியாக தனது தர்ம பத்தினியுடன் நின்று கொண்டிருந்தார். தக்ஷன் உமையின் வருகையை கண்டும் காணாமல் இருந்தான். வா என்று அவன் வாயிலிருந்து ஒரு சொல் கூட இல்லை.

“இங்கே நிற்கும் என்னை நீ மறக்கலாம் தந்தையே! ஆனால் நான் மறக்கவில்லை. எனக்கும் உன் மாப்பிள்ளைக்கும் அழைப்பு விடுக்காததன் காரணம் அறிந்து போக வந்துள்ளேனே தவிர உன் வெகுமதிகளுக்காக வரவில்லை” என்று சசிதேவி முழங்கினாள்.
தக்ஷன் அவள் குரலை செவிமடுக்கவில்லை.

“சொல் தந்தையே! என்னிடம் என்ன குறை கண்டாய்?”

“என் மகளிடம் காண்பதற்குக் குறை ஏது?என் மீதுதான் குறையுண்டு. இளமையும், வனப்பும், செழிப்பும் மிக்க உன்னை அந்தச் சுடுகாட்டுப் பிக்ஷாடனுக்குக் கொடுத்தேனே என் மீதுதான் பிழை”

“உனக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பளிக்கிறேன். செய்த தவறைத் திருத்திக் கொண்டு ஈசனிடம் மன்னிப்பு கேட்டு விடு”

“அந்தப் பித்தனிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன். கண்ணுக்குக் கனாக வளர்த்த உன்னைக் கவர்ந்து சென்றவன் அவன் ”

“தக்ஷா! இன்று முதல் நான் உன் மகளுமில்லை. என் ஈசனுக்கு நீ மாமனாரும் இல்லை. நம் உறவை அறுத்துக் கொண்டு இந்த யாகசாலை அதன் பொலிவிழந்து அதன் சான்னித்தியம் இழந்து சுடலை என்ற பெயர் பெறட்டும்” என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்து அகன்றாள்.

யாகசாலை முழுவதும் புழுதி மண் மேடாக மாறியது. தானே முளைத்த எருக்கஞ் செடிகளின் அருகில் கோட்டான்கள் கூவின. நரிகளும், நாய்களும் கூடி பலத்த குரலில் ஊளையிட்டன. அங்கிருந்த வெளிச்சம் முழுவதும் மறைந்து இருள் சூழ்ந்து மேகங்கள் யாச குண்டங்களில் இரத்த மழை பொழிந்தன.

வைகுந்தத்திலும் சத்யலோகத்திலும் இனி என்ன நேருமோ என்ற அச்சத்தில் விஷ்ணுவும் பிரம்மனும் தவித்துக் கொண்டிருந்தனர். நாரதர் சிவலோகத்தில் பார்வதியையும் ஈசனையும் காணாமல் எல்லா லோகங்களிலும் இருவரையும் தேடிச் சென்றார்.

உமையைப் பிரிந்த மகேஸ்வரன் சடைமுடியை அவிழ்த்து அனைவரும் அச்சம் கொள்ளும் வண்ணம் ஊழித்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான்.

நாரதர் மிகவும் அச்சம் கொண்டு ஈசன் அருகில் சென்று”சம்போ மஹாதேவா! சிவ சம்போ மஹாதேவா!”என்று வணங்கி நின்றார்.

“உமை எங்கு சென்றாள்?”என்று சிவனின் முழக்கம் காதில் விழுந்தது.

“தக்ஷனின் அவமானம் தாளாமல் உமையம்மை உருவம், அருவமாகிய இரண்டு நிலைகளையும் கடநந்து அருவுருவமாக விளங்குகின்றாள்”
“தக்கனின் யாகசாலையில் என்ன நடந்தது?’
நாரதர் எல்லாவற்றையும் உள்ளது உள்ளவாறு கூறினார்.

அப்போது சிவனுக்கு எழுந்த கோபத்தை என்னவென்று சொல்வது?

ஆலகால நஞ்சின் கொடுமையோ? ஊழிக்காலத்தில் இந்தப் பிரபஞ்சத்தை அழிக்க கிளம்பும் யுகாக்னியின் கோரமோ? ஈரேழு பதினான்கு உலகத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்க சென்ற யமதர்மனின் வேகம் என்பதா?
ஆண்டவனின் சினம் முழுவதும் ஒரு வடிவம் தாங்கி அங்கோர் தேவன் தோன்றினான்.

கலீர் கலீர் என்று கால்களில் வீரக் கழல்கள் முழங்க. நீண்ட ஜடாமுடியை வாரிச் சுருட்டிய மகுடத்தில் கொக்கின் இறகு உயர்ந்து தோன்ற, பெரிய புள்ளிகளை உடைய புலியின் தோலால் இடுப்பைச் சுற்றி இருக்க,. எட்டு தோள்களும் அனைவருக்கும் அச்சம் ஊட்டுவதாக விளங்க, கண்களில் சினமானது கொழுந்து விட்டுஅக்னியைப் போல சிவந்து எரிய அந்த வீரபத்திர சுவாமியானவர் அனைவருக்கும் அச்சம் ஊட்டும் வண்ணம் அங்கே வந்து தோன்றினார்.

Series Navigation<< ​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

About Author