நீண்ட சடைமுடியியில், இளஞ்சந்திரனையும் கங்கையினையும் அணிந்தவரும், மானையும் மழுவையும் கரங்களில் ஏந்தியவரும், நெற்றிக்கண்ணை உடையவரும், தேவர்களின் மணிமுடிகள் தனது பாதங்களில் பட்டுக் கொண்டிருப்பவரும் , கொன்றை மாலையை முடியில் அணிந்தவரும், அரவத்தை இடுப்பினில் அணிந்தவருமான சிவபெருமான் கயிலாயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்க தேவர்களும், ரிஷிகளும், சிவனடியார்களும் நான் முந்தி நீ முந்தி என்று அவரை தரிசிக்க நெரிசலை உண்டு பண்ண நந்திதேவர் அவர்களை நெறிப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
Category: தொடர்கள்
சேலத்துப் புராணம் – கயிலாயச் சருக்கம்
பொன்முடிகளால் மின்னும் வெள்ளியங்கிரியாக விளங்கும் கயிலாய மலையின் மீது சிவபெருமான் வீற்றிருந்தார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளை வந்து தொழுவதற்கு பிரம்ம தேவனும், மகா விஷ்ணுவும் காத்திருந்தனர். நாதன் அருளும் மலை, நான்மறை தோன்றிய மலை, பர்வத ராஜனின் மகளான பார்வதி தேவி எம்பெருமானுக்கு இட பாகத்தில் அமர்ந்து காட்சி தந்து கொண்டிருக்கும் மலை. இந்தக் கயிலை மலையின் அகலம் இருபது கோடி யோசனையாகும். நாற்பது கோடி யோசனை தூரம் நீளத்தை உடையது அந்த உயர்ந்த மலை. பல இலட்ச எண்ணிக்கையில் சிகரங்களைத் தன்னகத்தே கொண்ட மலை (ஒரு யோசனை என்பது நான்கு மைல்களிலிருந்து ஏழு மைல் கல் நீளம்- ஆசிரியர்)