புதுப் பத்திரிகையின் முதல் இதழ். அதைப் பார்க்க வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது. உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு சேலம் டவுன் ரயில் நிலையத்திற்குப் பறந்தேன். அங்கு பார்ஸல் பகுதிக்குப் போய் பில்லைக் காட்டினேன். ஏதாவது ஐடி இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று தெரிந்ததும் உங்களை ஏஜெண்ட்டாக நியமித்த கடிதமாவது இருக்கிறதா என்று கேட்டார்கள். கொண்டு வரவில்லை என்று தெரிந்ததும் உங்கள் ரப்பர் ஸ்டாம்பு சீலாவது கொண்டு வந்திருக்கிறீர்களா என்று லேசான எரிச்சலுடன் கேள்வி வந்தது.