எங்கள் லிஸ்ட்டில் அந்நாட்களில் வெளிவந்த கிட்டத்தட்ட அத்தனை பருவ இதழ்களூம் இருந்தன. ஆரம்பத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் என்று எங்கள் தெருவிற்கு அருகாமையில் இருந்த ஏரியாக்களை மட்டும் தேர்தெடுத்தோம். மேட்டுத் தெரு, மரவனேரிப் பகுதி, மூன்றாவது அக்ரஹாரம், கிச்சிப் பாளையம் என்று சின்ன வட்டத்திற்கே இருபது வீடுகள் தேறி விட்டன. இருபது வீடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததில் வாங்கிய புத்தகங்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிந்தது. ஒரு பகுதிக்கு ஆனந்த விகடன் என்றால் இன்னொரு பகுதிக்கு குமுதம் இப்படி. திங்கள், புதன், வெள்ளி ஒரு பகுதி என்றால் செவ்வாய், வியாழன், சனி இன்னொரு பகுதி. ஞாயிறு எங்கள் நடமாடும் நூலகத்திற்கு விடுமுறை.