காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 6 !

மறு நாள் காலை, அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்று ஸ்படிக லிங்க தரிசனம் (ஐந்து முதல் ஆறு மணி வரை). பின் மடம் திரும்பி ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்தத்தில் (இந்திய பெருங்கடல்) முதல் குளியல். அதென்ன அக்னி தீர்த்தம்? ஸ்ரீசீதையை மீட்டு வந்த ஸ்ரீராமன் அவளை அக்னிப் ப்ரவேசம் செய்யச் சொன்னன். இதைகேட்டு அக்னி பயந்தான். ஸ்ரீ சீதை அவனை சமாதானப் படுத்தினாள் ‘உன்னால் எனக்கு ஒரு தீங்கும் நேராது. உன் வெப்பம் என்னை தாக்காது. நான் இக்குளியல் செய்வதனால் உனக்கு எந்த வித அபகீர்த்தியையும் உண்டாகாது. என் பதிவ்ரதத்தீ உனக்கு புகழே சேர்க்கும்’ என்று. அவள் தீ புகுந்த இடமே இன்று ‘அக்னி தீர்த்தக் கரை’யாக விளங்குகிறது. அக்னியும் அவளை சுடாமல் குளிர்ந்தான். தன் பாவம் நீங்க இங்கு நீராடியிருக்கிறான். ஆகவே, ‘அக்னி தீர்த்தம்’. (இங்குதான் ஸ்ரீசீதை இதை சொல்லி இருப்பாள், அக்னி பிரவேசம் செய்திருப்பாள் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஸ்தலங்களை நாம் காண்பதற்கே பல ஜன்மாக்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்).

அக்னி தீர்த்தத்தில் இருந்து ராமநாத ஸ்வாமி கோவிலை நோக்கி வரும் போது வளைவில், இடதில் உஜ்ஜயினி காளி கோவில். திறந்திருந்தது. ஒருவரும் இல்லை. ஆகவே மூன்று சுற்று சுற்றி விட்டு கீழே இறங்கினால்… வலதில் ஸ்ரீசங்கர மண்டபம் (பிரயாகை பாலத்தில் செல்லும் போது (காசியில் இருந்து) கங்கை, யமுனை, சங்கமத்தில் படகுகள் இவற்றைத் தவிர தூரத்தில் தென்படுவது ஸ்ரீசங்கர விமானமே. இதற்கெல்லாம் காரணம் யார்? வேறு யார்? நம் ஸ்ரீ மஹா பெரியவா தான். காசியிலும் பஞ்சாயதன முறையில் ஒரு கோவில் கட்டி இருக்கிறார்). இந்த சங்கர மண்டபத்தில் நுழைந்தால் தாமதாகி விடும் என்பதால், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே அதைத் தாண்டி விரைகிறோம் (அவசியம் பாருங்கள்).

ஆலயத்தில் நுழைந்து தீர்த்தப் பிரகாரத்தை சுற்றி வந்தால் இருபத்தி இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். இவற்றில், ஸ்ரீமஹாலக்ஷ்மி, சேது மாதவ தீர்த்தங்கள் மட்டும் குளங்கள். மற்றவை கிணறுகள். அனைத்துமே விசேஷம். எனினும் சர்வ, சேது மாதவ, கோடி தீர்த்தங்கள் மிகவும் ஸ்ரேஷ்டமானவை. ஸ்ரீராமன் தன் வில்லினால் சிவ அபிஷேகத்திற்கென உண்டாக்கியதே கோடி தீர்த்தம். தன் மாமன் கம்சனை கொன்ற தோஷ நிவர்த்திக்காக ஸ்ரீக்ருஷ்ணனே இதில் நீராடி இருக்கிறான். ஆனால், ஸ்வாமி அபிஷேக்கதிற்கு இந்த தீர்த்தம் பயன்படுத்தப் படுவதால் இதில் நாம் நேரடியாக ஸ்நானம் செய்ய முடியாது. உள்ளிருந்து கொட்டும் நீர் கோமுகம் வழியாக நம்மை நனைக்கும். காசி யாத்திரை முடிந்து மீண்டும் இங்கு வந்து கங்கையினால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு ஊர் திரும்பும் போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கோடி தீர்த்தமும் வாங்கிக் கொண்டு போய் அதையும் கங்கை சொம்புகளுடன் சேர்த்து வைத்தே சமாராதனை பூஜை செய்ய வேண்டும்.

தீர்த்தக் குளியல்கள் முடிந்ததும் இருப்பிடம் அடைந்து (சிருங்கேரி மடம்) உடை மாற்றி பார்வண (அ) ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து, பின் சுவாமி தரிசனம் (பித்ருக்களை காக்க வைத்து விட்டு கோவிலுக்கு செல்லக் கூடாது). அவை நாளை.

About Author