கயிலாயச் சருக்கம்​

​சேலத்துப் புராணம் – ​கயிலாயச் சருக்கம்​

This entry is part 2 of 4 in the series சேலத்துப் புராணம்

கயிலாயச் சருக்கம்​

​பொன்முடிகளால் மின்னும் வெள்ளியங்கிரியாக விளங்கும் கயிலாய மலையின் மீது சிவபெருமான் வீற்றிருந்தார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளை வந்து தொழுவதற்கு பிரம்ம தேவனும், மகா விஷ்ணுவும் காத்திருந்தனர். நாதன் அருளும் மலை, நான்மறை தோன்றிய மலை, பர்வத ராஜனின் மகளான பார்வதி தேவி எம்பெருமானுக்கு இட பாகத்தில் அமர்ந்து காட்சி தந்து கொண்டிருக்கும் மலை. இந்தக் கயிலை மலையின் அகலம் இருபது கோடி யோசனையாகும். நாற்பது கோடி யோசனை தூரம் நீளத்தை உடையது அந்த உயர்ந்த மலை. பல இலட்ச எண்ணிக்கையில் சிகரங்களைத் தன்னகத்தே கொண்ட மலை (ஒரு யோசனை என்பது நான்கு மைல்களிலிருந்து ஏழு மைல் கல் நீளம்- ஆசிரியர்)

எட்டு மதில்கள் சூழப்பட்ட மலை; எட்டு கோபுரங்களால் விளங்கும் மலை; எட்டு வாயில்களைக் கொண்ட மலை. பொன்னைப் போன்ற சிகரத்தை உடைய மலை. மாணிக்கத் தூண்கள் நிறைந்து மாணிக்க ஒளியினால் செக்கச் சிவந்து பிரகாசிக்கும் மலை.

எண் திசைகளுக்கும் எண்மர் காவல் புரிந்தனர். கணபதி, வீர பத்திரர், நந்தி தேவர், பைரவர், ஸ்கந்தன், துர்கை, மாகாளர், ஐயனார் என்ற எண்மரே அவர்கள். 

ஏழு கடல்களும், ஏழு தீவுகளும், எண்வகை மலைகளும், ஒரு மகாமேருவும் இவற்றைச் சூழ்ந்திருக்கும் சக்கரவாளகிரியும் உள்ளடக்கிய பரப்பினை ஓர் உலகம் என்பார்கள். இவ்வாறு பதினான்கு உலகங்கள் சேர்ந்தது ஓர் அண்டம் எனப்படும். இதைப் போல ஆயிரத்தெட்டு அண்டங்களின் தொகுப்பு ஒரு புவனமாகும். இருநூற்று இருபத்து நான்கு புவனங்கள் சேர்ந்தது ஓர் அகிலாண்டம் எனப்படும். கோடி அகிலான்டங்கள் சேர்ந்தது ஒரு பிரமாண்டமாகும். சிவபிரானின் திருவருளால் அநேகம் பிரமாண்டங்கள் கடல் அலையின் நுரையினைப் போல தோன்றி மறையும் தன்மை கொண்டவை.

ஒவ்வொரு அண்டத்திலும் ருத்திரன், மகாவிஷ்ணு, பிரம்மன் போன்றோர் தோன்றி தங்களுக்குரிய வசிப்பிடங்களாகிய கைலாயம், வைகுந்தம், சத்யலோகத்தில் இருந்து உலகைப் படைத்து, காத்து, இரட்சித்து வருகின்றனர்.

அத்திருக் கயிலாயத்தில் வித்யாலக்ஷ்மி, பிரதாபலக்ஷ்மி, சௌந்தர்யலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, தயாலக்ஷ்மி, புவனலக்ஷ்மி, தனலக்ஷ்மி , வீரலக்ஷ்மி என்னும் அஷ்ட லக்ஷ்மிகள் சூழ்ந்திருந்தனர். 

சிவபெருமானை ஒரு கணநேரமும் பிரிய சம்மதமில்லாது ஒரு சிவனடியாரைப் போல சதா சர்வ நேரமும் மேனியெங்கும் வெண்ணீறு பூசிக் கொண்டதைப் போல பனி படர்ந்து விளங்கியது அந்த கயிலயங்கிரி. இந்த அண்டங்களை எல்லாம் காப்பதற்காக எவரும் தொடக் கூட அஞ்சும் ஆலகால நஞ்சினைத் தனது மிடற்றில் வைத்த பெருமானின் எல்லையில்லாத கருணையைக் கண்டு காமதேனு அன்பு மீதுற விடாது பால் பொழிந்து வழிவதைப் போல தனது மேனியெங்கும் பனியின் காரணமாக வெண்மை படர்ந்திருந்தது அந்தக் கயிலை மலை.

முக்கண் கொண்டு விளங்கும் உருத்திரர்களும், புகழ்பெற்று விளங்கும் விஷ்ணு, பிரம்மா முதலிய தேவர்களும், நாகர் கூட்டமும், மயிலின் சாயல் ஒத்த இளம் பெண்களின் கூட்டமும், மற்ற தேவர்களின் கூட்டமும் அந்தக் கயிலை மலையைச் சுற்றி திகழ்ந்திருக்கும்.

கயிலை மலையில் வசிப்பவர்கள் காலம் என்ற ஒன்றைக் கடந்தவர்கள். தவ சீலர்கள். அம்மலையில் அறுபத்து நான்கு கலைஞானங்களும் வித்யாரூபங்களை எடுத்து சிவபெருமானை பூஜிக்கின்றன. தீவினைகள் இல்லை என்பதால் குற்றங்கள் இல்லை.இரவு என்ற ஒன்று இல்லாததால் பகல் என்ற ஒன்று இல்லை.

நான்மறை வேத முழக்கம் ஒருபுறம், அன்பர்களின் பக்தி மிகுதியில் எழும் ஹூங்காரம் ஒருபுறம் என்று அது மலையா சமுத்திரமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

ஒருபுறம் சுந்தரமூர்த்தியார் கவரி வீசினார்; நாரதர் யாழில் பண்களை மீட்டினார்; அன்ன வாகனத்தையுடைய பிரம்ம தேவரும், துளசி மாலையணிந்த விஷ்ணுவும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். அறுகால் வண்டினங்கள் தேனைத் தங்கள் காலால் எங்கும் சிதறவிடும் அளவிற்குத் தேன் நிறைந்த கொன்றை மலர்ச் சரத்தையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும் சடையில் சுமந்து உமையொரு பாகனாய் விளங்கிய அந்த சிவபெருமானின் கோலத்தைக் கண்டவர்களால் சொல்ல முடியவில்லை. சொன்னவர்களால் காண முடியவில்லை.

நந்தியம்பெருமான் கயிலையின் வாயிலில் அமர்ந்து உள்ளே செல்வோரை நெறிப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்.

பூணூல் பிரகாசமாக விளங்கவும், உடலெங்கும் திருநீறு தரித்து, வாயில் நான்மறை ஓதிக் கொண்டு சனகாதி முனிவர்கள் அப்போது நந்தி தேவரை அணுகினார்கள். அவர்களில் சிவகதிக்கு ஒரு விதையைப் போல விளங்கிய சனத்குமாரர் நந்தி தேவரிடம் பேசத் தொடங்கினார்.

“ மலையரசன் மகள் பார்வதியை மணந்து திருமணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி தரும் இந்தக் கயிலாய மலையைப் போல பிரளய காலத்திலும் அழிவடையாத தலம் ஒன்று இந்த பூலோகத்தில் உள்ளதா? “ என்று வினவினார்.   

இவ்வாறு கேட்ட சனத் குமாரரின் முகத்தைப் பார்த்து நந்திதேவர் மகிழ்ச்சி புன்னகை ஒன்றை உதித்தார்.” மேருவில்லியாக சிவபெருமான் வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் தலம் ஒன்று பூலோகத்தில் உள்ளது. பாவநாசம் என்பது அதற்குப் பெயர். அதன் பெருமைகளை உனக்குச் சொல்வேன்’ என்று கூறினார்.

Series Navigation<< சேலத்துப் புராணம் – 1​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி >>

About Author