தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி சாலையில் உள்ளது வல்லநாடு என்ற ஊர். அங்கிருந்து சுமார் 2 அல்லது 3 கிமீ தொலைவில் மேற்கில் உள்ளது அகரம் சின்னஞ்சிறு கிராமம். இந்த ஊரில் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ரொம்பவே விசேஷம். இங்கே அமைந்திருப்பது அகரம் காசி விஸ்வநாதர் ஆலயம்.
ஸாத்யை என்ற தேவதை தேவலோகத்திலேயே தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தாள். இவளின் கணவன் ஸாத்யன் ஒரு முறை ஈஸ்வரனுடைய கோபத்திற்கு ஆளானான். அவனை நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கினார் ஈஸ்வரன். அதையடுத்து ஸாத்யையும் சிவனுடைய சாபத்தால் மானுடப் பிறவி எடுத்தாள். பூமியில் அகரம் எனும் கிராமத்தில் வசித்த சிவ பக்தர்களான சுருதிதாமா- கமலினி தம்பதிக்கு மகளாகப் பிறந்து, காஞ்சனமாலினி எனும் பெயருடன் வளர்ந்தாள் ஸாத்யை.
பெற்றோரைப்போலவே சிவபக்தியில் திளைத்த காஞ்சனமாலினி, தாமிரபரணிக் கரையில், கண்வ மகரிஷியிடம் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, தவத்தில் ஈடுபட்டாள். இதனால் மகிழ்ந்த ஈஸ்வரன் அவளுக்கு அருள்புரிய திருவுளம் கொண்டார். உமையவளுடன் திருக்காட்சி தந்தார். அவரின் திருவருளால், உயிர்பெற்ற ஸாத்யன், பழைய உடலை அடைந்தான். அவனுடன் இணைந்து, தேவலோகத்தை அடைந்தாள் ஸாத்யை.
தாமிரபரணி மஹாத்மியத்தில், வியாசரால் போற்றப்படும் இந்தத் தலத்தில்… காசி தலத்தைப் போலவே, ஸ்வாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். எனவே இதை, ‘தட்சிண காசி என்று சிறப்பிக்கிறது தாமிரபரணி மகாத்மியம். இங்கே வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை தட்சிண கங்கை என்று போற்றுகின்றனர். இது, பித்ரு சாப விமோசன தீர்த்தமாகத் திகழ்கிறது.
ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளிலும் இங்கே வந்து, தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடன் ஸ்ரீகாசிவிஸ்வநாதருக்கு வில்வ மாலையும் ஸ்ரீவிசாலாட்சிக்கு செவ்வரளி மாலையும் சார்த்தி வழிபடவேண்டும். அத்துடன், பசுநெய்யால் 21 தீபங்கள் ஏற்றி வைத்தோ, தில ஹோமம் (எள்ளினால் செய்யப்படும் ஹோமம்) செய்தோ வழிபட, ஈசனின் அருளும் கிட்டும்; பித்ருக்களும் ஆசீர்வதிப்பர்! இதுவரை பித்ரு தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள், அரிசி மற்றும் காய்கறிகளைத் தானம் அளித்து தர்ப்பணம் செய்யுங்கள். முடிந்தால், வசதி இருந்தால் கோ தானமும் செய்யலாம். பித்ரு தோஷம் நீங்கி, வளமுடன் வாழலாம்!
அகரம் காசி விஸ்வநாதர் ஆலயம் படங்கள் கீழே
மேலும் இந்த ஊரில் அஞ்சேல் பெருமாள் என்ற கோயிலும் இதில் ஒன்று. இங்குதான் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளையும் தந்திருக்கிறார். பெருமாள் இங்கு தசாவதாரக் காட்சி தந்ததால் இத்தலம் தசாவதாரத்தலம் என்று அழைக்கப்படுகிறது. தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு முகமாக செல்வதால் தட்சிண கங்கை எனவும், சம்பு தீர்த்தம் எனவும் போற்றப்படுகிறது. எனவே இங்கு நீராடி வழிபட்டு எந்த பரிகாரம் செய்தாலும் அது காசியில் செய்த நற்பலனைத் தரும். இத்தல பெருமானை ஹயக்கிரீவர், அத்ரி மகரிஷி மாண்டவ்யர், கவுதமர், ஆங்கிரஸர், வசிஷ்டர், சோமர், துர்வாசர், கபிலர், முத்ராதேவிக்ஷ, அகத்தியர் போன்றோர் வழிபட்டுள்ளனர்.
மூலவர் அஞ்சேல் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சிதருகிறார். மேலும் கணபதி, தர்மசாஸ்தா, கிருஷ்ணன் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் ஒரே சிலையில் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளுடன் அருள்பாலிக்கிறார்.நெல்லைக்கு வருபவர்கள் இந்த இரு ஸ்தலங்களையும் மறக்காமல் வந்து தரிசித்து ஈஸ்வரன் மற்றும் பெருமாள் அனுக்ரஹம் பெற்று வருமாறு வேண்டுகிறோம்.