ஸ்ரீவித்யா உபாஸனை

அம்பாள் உபாசனை – ஸ்ரீவித்யா உபாஸனை

ஸ்ரீவித்யா உபாஸனை என்பது சமூகவலைத்தளம் மூலம் கிடைக்காது. அதுக்கு தகுந்த குருவை வெளியில் தேட முயற்சிக்கவும். அதை விட்டுட்டு யாரோ முகனூலில் அம்பாளை பற்றி பத்து பதிவு போட்டாங்கன்னா உடனே அவரை போய் குருவே குருவேன்னு துரத்தாதீங்க. பாவம் அவர் எங்க இருந்து காப்பி பேஸ்ட் (என்னை மாதிரி) பண்றாரோ. எந்த உண்மையான ஸ்ரீவித்யா உபாஸகரும் தன்னை உபாஸகர்னு சொல்றது கிடையாது. அம்பாள் உபாஸனை என்பது வேறு அம்பாளிடம் பக்தி என்பது வேறு

இதுல ஒருத்தர் புரவிபாளையத்துல ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்தா எனக்கு அமானுஷ்ய சக்தி வரும். 1500 ரூபாய் கொடு உன்னோட பிரச்சினைக்கு பதில் கேட்டு சொல்றேன்னு மெசஞ்சர்லயும் வாட்ஸ் அப்பிலும் மெசேஜ் அனுப்பிட்டு அக்கவுண்ட் நம்பரும் சேர்த்து அனுப்பறார். இன்னொருவர் வாராஹி உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாள் அப்படின்னு அவரோட போட்டோவுக்கு கீழே அவரோட வாட்ஸ் அப் நம்பர், அட்ரஸ் எல்லாம் அனுப்பி வைக்கிறார். முடிஞ்சா வீட்டுக்கே ஆட்டோ அனுப்பி பிக் அப் வசதியும் பண்ணி கொடுப்பார் போலிருக்கு. அடேய் உங்களை சொல்லி தப்பில்லை. சமூக வலைத்தளங்கள் அப்படிங்கறது டீக்கடை பெஞ்சை விட மோசமாகிட்டு வருகிறது.

பெரியவா சொல்லியிருக்கிற விஷயம் //அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது. என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.//

நாம் ஆரம்பிக்க வேண்டியது அம்பாளுடைய சரணாரவிந்த தியானம்தான். கொஞ்சம் கொஞ்சம் தியானம் செய்தாலே அதன் ருசி தெரியும் – அம்பாளுடைய சரண கமலத்தைக் காட்டிலும் சாந்தி அளிக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை என்று புரிய ஆரம்பிக்கும். விடாமல் இப்படித் தியானம் செய்தால் முடிவில் இந்த உடம்பு போனபின் செத்தும் சாகாதவராகலாம் – அமிருதமாகலாம்.

பகவத்பாதாள் சொல்கிறார் //ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் – அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம்? சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்!

அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.// இப்படிப்பட்ட நிறைகுடமான ஆசார்யாளே இப்படி கூறும் போது ஒன்னுமே தெரியாத நாம் ஏன் இப்படி சதமானம்பவதின்னு சொல்லி நமக்கு நாமே அக்ஷதை போட்டுக்கணும்.

தெய்வத்தின் குரலில் ஒரு பகுதி அம்பாள் இருக்க அகம்பாவம் ஏன் அப்படின்னு? அதுல சொல்றார் // நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக்குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளையே வேண்டி இப்படியாக நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.//

நான் என்னமோ அம்பாளைப் பற்றி எழுதறேன்னு சொல்றவங்களுக்கும் இதே தான் பதில். அம்பாள் கிட்டே மனம் விட்டு பேசுங்க. வாய் விட்டு பேசுங்க. வெளிய கிளம்பறச்சே அம்பாள் கிட்டே சொல்லிட்டு போங்க. வந்த உடனே அம்பாள் கிட்டே உட்கார்ந்து சொல்லுங்க. வீட்ல அம்பாள் உட்கார்ந்து இருக்கா. அது வெறும் படம் இல்லைன்னு முதல்ல உங்களுக்கு நம்பிக்கை வரணும். எல்லோர் வீட்லயும் அம்பாள் இருக்கத்தான் செய்றா.

அதை புரிஞ்சிண்டு அவ காலை கெட்டியா புடிச்சிப்போம்.. பாக்கி தானே நடக்கும்..

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ..

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.