அழியாத மனக்கோலங்கள் – இறுதி பகுதி

இப்பொழுது தபால் துறையும், தொலைபேசித் துறையும் தனிதனியாக இருப்பது போல் அல்லாமல் தபால், தொலைபேசி, தந்தி என்று எல்லாப் பிரிவுகளும் ஒன்றிணைந்து தபால் தந்தித் துறையாக நடுவண் அரசின் கீழ் இருந்தது. நான் வேலைக்காக விண்ணப்பித்திருந்தது தபால் பிரிவுக்கு. ஆகையால் சேலம் டிவிஷனுக்கான தபால் துறை அதிகாரியான சூப்பிரண்டெண்டட் அலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வரச் சொல்லியிருந்தார்கள். அந்த நேர்காணலில் எனது தகுதிச் சான்றிதழ்களை சரி பார்த்தார்கள். தபால் அலுவலகத்தின் நடைமுறைகள், பணிகளின் தன்மை இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்காக பயிற்சி அளிக்க வேண்டுமல்லவா?.. அந்த நாட்களில் வேலைக்காக நபர்களைத் தேர்ந்தெடுத்ததும் அவர்களைக் களத்தில் இறக்கி சில மாதங்களுக்கான அந்தக் களப்பணியையே வேலைக்கான பயிற்சி (Training) என்ற அருமையான ஏற்பாடு இருந்தது. அந்த களப்பயிற்சி காலம் ஆறு மாதங்கள் என்றும் பின்னால் அந்தப் பயிற்சிகாலம் வேலை பார்த்த பணிக்காலத்தோடு (Service Period) சேர்த்துக் கொள்ளப்படும் என்று தபால் இலாகாவின் நடைமுறைகள் இருந்தன.

ராசிபுரம் வட்டத்திலிருந்த குருசாமி பாளையம் தபால் அலுவலகத்தை எனது களப்பயிற்சி இடமாகத் தீர்மானித்து அதற்கான ஆணையை வழங்கினார்கள். ஒரு நல்ல நாளில் குருசாமி பாளையம் போய்ச் சேர்ந்தேன். அது ஒரு சின்ன கிராமம். நெசவாளர்கள் நிறைந்திருந்த கிராமம். ஒரு வீட்டின் முன்பக்கம் தபால் ஆபிசாக இருந்தது. அந்த வீட்டிலேயே போஸ்ட் மாஸ்டர் குடியிருந்தார். போஸ்ட் மாஸ்டர் நடேசன் என்னை விட மூனறு அல்லது நான்கு வயது பெரியவராய் இருப்பார். திருமணமானவர். குழந்தைகள் இல்லை. அலுவலக அன்றாட செயல்பாடுகளுக்கு நானும் சேர்ந்து கொண்டதில் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. கிட்டத்தட்ட அவர் வயதொப்பவனாய் நான் இருந்ததில் அந்த மகிழ்ச்சியை இரு மடங்காக உணர்ந்தார்.

போஸ்ட் ஆபிஸின் பின்பகுதி அந்த வீட்டின் உள்ளடங்கி இருந்தது. போஸ்ட் ஆபிஸின் பின்பகுதியையும் அந்த வீட்டையும் இணைத்து ஒரு சின்ன அறை. அந்த அறையை ஒட்டி ஒரு கதவு. அந்தக் கதவின் மறுப்பக்கத்தைப் பூட்டிக் கொண்டால் இந்தப் பகுதி ஒரு தனி வீடு போலாகி விடும். போ.மா. நடேசன் என்னை அந்த அறையில் தங்கிக் கொள்ளச் சொன்னார். கிருஷ்ணகிரி ரிஸர்வாயர் ப்ரோஜக்ட் கதை தான். ஆறு அல்லது எட்டு மைல் தூரத்தில் தான் ராசிபுரம். இருந்தாலும் “தினமும் போய் வருவது உங்களுக்கு சங்கடமாக இருக்கும். அதனால் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” என்று உரிமையுடன் நடேசன் சொல்லி விட்டார்.

சின்ன தட்டி விலாஸ் ஓட்டல் ஒன்றிருந்தது. நல்லவேளை சைவ ஓட்டலாக இருந்ததே போதுமானதாக ஆகி விட்டது. பேசாமல் ராசிபுரத்தில் தங்கி தினமும் குருசாமிபாளையம் வந்து போயிருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது. குளிக்க, சாப்பிட, தூங்க இன்னும் அதிக செளகரியங்கள் கிடைத்திருக்கும். வேலை செய்யும் இடத்திலேயே தங்குவது கொடுமையிலும் கொடுமை கூட…

சின்ன வயசிலிருந்தே என்னைத் தொடர்ந்து வரும் ஒரு பழக்கம் இருப்பதை இந்த சமயத்தில் உணர்கிறேன். தெளிவாக காரண காரியங்களை விளக்கி யாராவது எது குறித்தும் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பழக்கம். நானாக என் அனுபவத்தில் அது சரியில்லை என்று உணர்கிற வரை அந்த பழக்கம் என்னுள் பதுங்கியிருக்கும். ஆரம்பத்தில் இயல்பாய் என்னுள் கிளை பரப்பிய இப்படியான செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து இப்பொழுது எனது குணாம்சங்களில் ஒன்றாகவே வளர்ந்து போயிருப்பது நன்கு தெரிகிறது.

குருசாமிபாளையம் தபால் அலுவலகத்தோடு சேர்க்கப்பட்டு அதை விட சின்ன கிராமங்கள் சில இருந்தன. அந்த மாதிரி கிராமங்களில் வசதியுள்ள எழுதப் படிக்கத் தெரிந்த ஊர் பெரிய மனுஷர் யாராவது வீட்டுத் திண்ணையில் தபால் ஆபிஸ் வைத்திருப்பார். கார்டு, கவர், இன்லெண்ட், மணியாடர் இப்படி ஏதாவது பரிமாற்றம் இருந்து கொண்டு தான் இருக்கும். ரன்னர் போய் அப்படியானவைகளை சேகரித்துக் கொண்டு மாலை 5 மணிக்குள் வந்து விடுவான். சரியாக 6 மணிக்கு ராசிபுரத்திலிருந்து மெயில் வேன் குருசாமி பாளையம் தபால் ஆபிஸுக்கு வந்து விடும். அதற்குள் வேனில் அனுப்பி வைக்க நாங்கள் எல்லாவற்றையும் ரெடி பண்ணி தயாராக வைத்திருப்போம். மெயில் வேன் வந்து போய் விட்டால் அன்றைய வேலை முடிந்த மாதிரி தான்.

நடேசனுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது சினிமாத் தியேட்டருக்குப் போயாகணும். செகண்ட் ஷோ தான். ராசிபுரத்திற்குப் போனால் தான் சினிமா. சைக்கிள் கேரியரில் நான் அமர அவர் தான் தார்ச்சாலையில் ஓட்டிப் போவார். திரும்ப நடுராத்திரி இரண்டரை ஆகிவிடும். வழி பூராவும் சாலையில் புளிய மரங்கள், வீசுகிற காற்றில் ஹோவென்று தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும். வேண்டாத கதையெல்லாம் ஞாபகத்திற்கு வரும். ஒரு நாள் அப்படித் தான் அவசர அழைப்பில் சைக்கிளிலிருந்து இறங்கி ஒரு புளிய மரத்தடியில் ஒதுங்குகையில் வெள்ளை வெளேர் என்று வேட்டி மட்டும் காற்றிலாடுகிற நிழலினூடே கன்னங்கரேலென்று இரு கால்கள் மட்டும் தொங்குகிற காட்சியாய்…. சடாரென்று திரும்பி சைக்கிளுக்கு ஓடி வந்து விட்டேன். ஆனால் கன்னத்தில் மட்டும் ஏதோ உரசின மாதிரி உணர்வு. வழி நெடுக நடேசன் சைக்கிளை மிதித்தபடி நடிக நடிகர்களை பற்றி பத்திரிகை நிருபர்கள் விடும் சரடுகளை உண்மை போல நம்பி என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார். அவர் சொன்னது எதிலும் மனம் பதியவே இல்லை. அன்றிரவு போஸ்டாபீஸ் திரும்பியதும் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்து படுத்தது தான் தெரியும்..

காலையில் தாமதமாகத் தான் எழுந்தேன். எனக்கு முன்னாடியே எழுந்திருந்த நடேசன் வாசல் பக்கம் சேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கோண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் “என்ன, ராத்திரி சரியாத் தூங்கலியா? மூஞ்சிலாம் வீங்கின மாதிரி இருக்கு?” என்று கேட்டார். “ஓண்ணுமில்லியே!” என்று அவரிடம் சமாளித்து பல் விளக்குகையில் வாஷ் பேசின் கண்ணாடியில் பார்க்கும் பொழுது லேசாக வீங்கின மாதிரி எனக்கும் தோன்றியது.. எல்லாம் பிரமை என்று ஒதுக்கித் தள்ளினேன். அடுத்தடுத்த நாட்களில் இதை மறந்தே போனேன்.

அடுத்த சனி விட்டு அதற்கடுத்த சனிக்கிழமை நடேசனுடன் ராத்திரி சினிமாக்கு போக வேண்டிய முறை. போதாக்குறைக்கு எம்ஜிஆரின் புதுப்படம் வேறு ரிலீசாகியிருந்தது. அந்த புளியமரம் வழியில் எந்த இடத்தில் இருக்கும் என்பது வேறு நன்றாக நினைவிலிருந்தது. இந்தத் தடவை சினிமா பார்த்து விட்டு வரும் பொழுது சைக்கிளிலிருந்து இறங்கவே கூடாது என்று தீர்மானித்திருந்தேன்.

அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. அந்த வார புதன் கிழமையே சேலம் சூப்பிரெண்டெண்ட் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு தபால் வந்திருந்தது. பிரித்துப் பார்த்ததில் அடுத்த இரண்டு மாத பயிற்சிக்காக குமாரபாளையம் தபால் ஆபிஸில் அடுத்து வருகிற திங்கட்கிழமை பணியில் சேர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

அந்தக் கடிதத்தின் நகல் ஒன்றையும் நடேசனுக்கு அனுப்பியிருந்தார்கள். எனக்கு முன்னாடியே அவர் அதைப் படித்திருக்கிறார்.. “வர்ற சனிக்கிழமை இங்கேயிருந்து ரிலீவ் ஆயிடலாம்.. அன்னிக்கு ராத்திரி சினிமா பார்த்திட்டு ஞாயிற்றுக் கிழமை காலம்பற சேலம் கிளம்பலாமே?” என்றார்.

“சரியாப் போச்சு..” என்று மறுத்தேன். சேலம் போய் திங்கட்கிழமையே குமார பாளையத்தில் ஜாயின் பண்ணனுமே!.. எடுத்துக்கிட்டு போற பொருள்லாம் வேறு பேக் பண்ணனும்.. அதற்கென்ன, பின்னாடி வர்றேன் .. ஒரு நாள் இருந்து தங்கி சாவகாசமா திரும்பினாப் போச்சு..” என்றேன்.

“அப்படி வந்தேனா, சனிக்கிழமையா பார்த்து இங்கே வந்திடு…. ராத்திரி சினிமாக்கு போக செள்கரியமா இருக்கும்” என்றார் நடேசன்..

சரியான சினிமாப் பைத்தியம்!

எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம். தபால் இலாகாவில் தான் பணியில் சேர்ந்தேன் என்று ஆரம்பித்தது தொலைபேசி இலாகாவிற்கு இட்டுச் சென்றதெல்லாம் பெரிய கதை. அதுவே சேலத்தின் தொடர்புகளிலிருந்து விலகலாகவும் ஆரம்பம் கொண்டது.

ஆயிரம் இருக்கட்டுமே, என் இளம் பருவ நிகழ்வுகளில் அழியாத மனக்கோலங்களாய் சேலம் மாநகரில் வாழ்ந்த நினைவுகள் இன்றும் நெஞ்சில் தடம் பதித்திருப்பதை நினைத்தால் பெருமிதமாகத்தான் இருக்கிறது.

( நிறைவுற்றது)

About Author