அஷ்ட வசுக்கள்

அஷ்ட வசுக்கள்

அஷ்ட வசுக்கள் அவரவர் மனைவியுடன் மலைப்பிரதேசத்தில் மகிழ்வாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்டனர். அந்த சமயத்தில் ரிஷி அங்கில்லை. ஆசிரமத்தின் அருகே தெய்வ பசு நந்தினி மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அஷ்ட வசுக்களில் ஒருவர் அந்த பசுவின் தெய்வீக வடிவை கண்டு மயங்கி அதை புகழ்ந்து பேச துவங்கினார். அவரது மனைவியும் கருணை வடிவாய் இருந்த அந்த சாதுவான பசுவை பார்த்து மயங்கி அந்த பசுவை தங்களுடன் எடுத்த செல்ல விரும்பினார். ஆனால் மற்ற வசுக்கள் இதை எதிர்த்தனர். மனைவி விரும்பி கேட்டதால் அந்த ஒரு வசு மற்றவர்களை இதற்கு சம்மதிக்க வைத்து, நந்தினியை அங்கிருந்து கவர்ந்து சென்றனர்.

வசிஷ்டர், ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு நந்தினியை இவர்கள் கடத்தி சென்றது அறிந்து கோபம் கொண்டார். வசுக்களை வரவழைத்து அவர்களை சபித்தார்.

நீங்கள் உங்கள் நிலைக்கு தகுதி இல்லாத செயலை செய்தீர்கள் ! எனவே நீங்கள் மனிதனாக பிறக்க வேண்டும் “

அவரது சாபம் கேட்டவுடன் அனைத்து வசுக்களும் பயந்து, நந்தினியை திரும்ப ஒப்படைத்து சாபத்தில் இருந்து விடுவிக்க கோரினர். ஒருமுறை சபித்தால் அதை மீண்டும் பெற இயலாது. இருந்தும், நந்தினி மீண்டும் வந்ததால் கோபம் தணிந்த வசிஷ்டர் ” அந்த ஒரு வசு மட்டுமே நந்தினியை திருட எண்ணியதால் , அவன் மட்டுமே மனிதனாக பிறந்து முழு வாழ்வும் வாழ்ந்து பின் இறப்பை சந்திக்க நேரிடும். மற்ற அனைவரும் பிறந்ததுமே சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வசுக்கள் ஆவீர்கள் ” என சாபத்தை மாற்றினார்.

இதன் பின், வசுக்கள் கங்கையை சென்று சந்தித்து, தங்களின் சாபத்தை பற்றிய விவரத்தைக் கூறி பூலோகத்தில், தங்களது தாயாக இருக்க வேண்டினார்கள். அவர்கள் மேல் கருணை கொண்ட கங்கையும் அதற்கு சம்மதித்தாள் . பூலோகத்திற்கு வந்து, சந்தனு ராஜாவை சந்தித்து அவரை மணந்துக் கொண்டாள். ஆனால் அதற்கு முன் , தான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்கு அரசன் சம்மதத்தைப் பெற்றாள்.

முதல் ஏழு வசுக்கள் பிறந்த பொழுதும், பிறந்தவுடனேயே அவர்களை கங்கை நதியில் வீசி அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தாள் . ஏழு குழந்தைகளை அவள் கங்கையில் வீசிய பொழுதும் எதுவும் கேட்காத சந்தனு, அவள் எட்டாவது குழந்தையை வீச முயன்றபொழுது, அவளை தடுத்து அவளது செய்கைகளுக்குக் காரணம் கேட்டார்.

சந்தனுவிடம் தன் உண்மை தோற்றத்தை காட்டிய கங்கை, தனது செய்கைகளுக்கு உண்டான காரணத்தையும் விளக்கி கூறினாள். பின், ” நீ எனக்கு அளித்த சத்தியத்தை மீறியதால், இனி என்னால் உன்னுடன் வாழ இயலாது. இப்பொழுது இக்குழந்தையை என்னுடன் அழைத்து செல்கிறான். உரிய காலம் வரும் நேரத்தில் அவன் உன்னிடம் வந்து சேர்வான் ” எனக் கூறி அக்குழந்தையுடன் அங்கிருந்து சென்றாள்.

அதன் பின், பதினாறு வருடங்கள் கழித்து அனைத்தும் கற்ற இளம் வாலிபனாய் அரசனிடம் திரும்பி வந்தது அக்குழந்தை. தேவவிரதன் என அழைக்கப்பட்ட அந்த இளைஞன், அனைவராலும் மதிக்கப்பட்டு, பயத்துடன் பார்க்கப்பட்டான் .அவன் அனைவருக்கும் கவலைப்பட்டு அனைவரையும் பார்த்துக் கொண்டாலும், மகிழ்ச்சி என்பதே வாழ்வு முழுவதும் அறியாமல் இருந்தான்.

About Author