ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -2

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போதெப்போதிப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

நேரிழையாய் நேரிழையீர்= உனக்கேற்ற அழகான ஆபரணங்களைப் பூண்ட பெண்ணே,

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போதெப்போபோதிப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ = நாம் பேசும்போதெல்லாம் இரவும் பகலும் எல்லா நேரமும் என் அன்பு, பக்தி அனைத்தும் அந்தப் பரஞ்சோதியான ஈசனுக்கே என்பாயே? இப்போ என்னவென்றால் படுக்கையை விட்டே எழுந்திராமல் இந்தப் படுக்கையின் மேல் பாசமும், நேசமும் வைத்தாயோ?” துயிலெழுப்ப வந்த பெண்கள் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணைக் கேட்க அவள் பதில் கூறுகிறாள்.
​​
சீசீ இவையும் சிலவோ விளையாடி=பெண்களே, இது என்ன விளையாட்டு??
ஏசும் இடம் ஈதோ=இப்படி என்னை ஏசிக்கொண்டு இத்தைய சொற்களைப் பேசும் இடம் இதுவல்லவே என்று அவர்களைக் கடிந்து கொள்கிறாள். வந்த பெண்களும் மனம் மகிழ்ந்தார்கள். மேலும் சொல்கின்றனர்.

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்= விண்ணோர்களான தேவாதி தேவர்களே புகழ்ந்து பாராட்டக் கூசுகின்ற அழகான மலர்ப்பாதங்களை உடைய ஈசனின் திருவடிகளை நமக்குப் பற்றெனப் பிடிப்பதற்காகத் தந்தருள இவ்வுலகில் எழுந்தருளிய ஞானகுருவான

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு =சிவலோகத்துக்கு அதிபதியும், தில்லைச் சிற்றம்பலத்தில் நித்தியம் நடனம் ஆடிக்கொண்டிருப்பவும் ஆன ஈசனுக்கு

அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்= நாம் செய்யும் அன்பு எவ்வளவு உயர்ந்தது?? அன்பு செய்யும் அடிமைகளாகிய நாம் மேலும் மேலும் ஈசனிடம் அன்பு செய்யும் வண்ணம் எழுந்து வா என்றார்கள்.​

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.