ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-4

ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ(டு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

எழுப்பவந்த பெண்கள் உள்ளே தூங்கும் பெண்ணைப் பார்த்து,

ஒண்ணித்தில நகையாய் இன்னமு புலர்ந்தின்றோ= ஒளி பொருந்திய முத்துப்பற்களை உடைய பெண்ணே, இன்னமுமா உனக்கு விடியவில்லை?? பொழுது எப்போதோ புலர்ந்துவிட்டதே! என்று கூறுகின்றனர். உள்ளே இருந்தவள் இதுக்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை.

வண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ= கிளியைப் போன்ற அழகான குரலில் இனிமையாக மிழற்றும் நம் மற்றத் தோழியர் அனைவரும் வந்தனரோ? என்று நிதானமாக விசாரிக்கிறாள்.

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்= இங்கே வா பெண்ணே, எண்ணிக்கொள் , அத்தனை பேரையும் உள்ளபடியே சொல்லுவோம்.
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே= நாங்க எண்ணிண்டு இருக்கும்போது நீ பாட்டுக்குக்கண்ணை மூடிக்கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுப் ப்பொழுதை வீணாக்காதே.

விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளை= விண்ணுக்கு ஒரு மருந்தை இங்கே தேவர்களுக்கு அமுதம் போன்றவன் என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலும் உள்ளார்ந்து யோசித்தால், பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஹாலாஹால விஷத்தை உண்டு அனைவரையும் காத்தவன் என்ற பொருளையும் கூறலாம் என்று தோன்றுகிறது. ஈசன் புரிந்த இத்தகைய தியாகத்தாலேயே தேவர்களுக்கு அமுதம் கிடைத்தது. ஈசனை விடவும் உயர்ந்த அமுதம் வேறு இல்லை எனினும் தேவர்களைக் காக்கவேண்டி அவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தான். அத்தகைய அமுதம் போன்ற ஈசன், வேதங்களுக்கெல்லாம் அவனே பொருளாய் இருப்பவன்,

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்= நம் கண்களுக்கு இனியவனை, பார்ப்பவர்கள் கண்களுக்கெல்லாம் இனியவனை, அழகனை பாடி உள்ளம் காதலால் கசிந்து உருக

உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்= உள்ளம் நெக்கு உருகி மனம் கசிந்து கண்கள் ஆறாய் நீரைப் பெருக்க, ஈசனைப் போற்றிப் புகழ்ந்து பாட வந்த எங்களால் இப்போது எவர் வந்தனர், எவர் வரவில்லை என்ற கணக்கெடுக்க இயலாது பெண்ணே! நீயே எழுந்து வா. வந்து நீயே எண்ணிக்கொள், எவரேனும் ஒருவர் குறைந்தாலும் மீண்டும் போய்த் தூங்கிக்கொள்வாய்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.