மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ள இருவரும் தாமே பெரியவர் என்று அறுதியிட்டுக் கூற, பின்னர் ஈசனிடம் சென்று கேட்டால் அவன் உண்மையுரைப்பான் எனத் தோன்ற ஈசனிடம் சென்று எங்கள் இருவரில் யார் பெரியவர் எனக் கேட்கிறார்கள். ஈசனும் அடிமுடி கண்டுபிடிக்க முடியாத பெரும் சோதி வடிவில் நின்றான். இருவரையும் இதற்கு மூலமும், முடிவும் கண்டு வரச் சொல்ல பிரம்மாவோ ஈசனின் தலையைக் காணவும், விஷ்ணுவோ அடியைப் பணியவும் தேடிச் சென்றனர். ஆனால் விஷ்ணுவால் காணமுடியாமல் திரும்பி வந்து தான் தோற்றதை ஒத்துக்கொண்டார். மேலே,மேலே, மேலே சென்ற பிரம்மாவோ,விண்ணையும் தாண்டிச் சென்றும் முடியைக்காண இயலவில்லை. அப்போது ஈசன் சடாமுடியில் சூடி இருந்த தாழம்பூ ஒன்று கீழே விழுந்தது. கீழே கீழே வந்த தாழம்பூவைப் பார்த்து மகிழ்ந்த பிரம்மா இது நிச்சயம் ஈசன் முடியிலிருந்து வந்ததால் நாம் முடியைக் கண்டோம் எனச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, தாழம்பூவைச் சாட்சி சொல்ல அழைக்க, தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.
ஈசன் முடியைக் கண்டதாக பிரம்மா கூற ஈசன் உண்மை தெரிந்து பிரம்மாவை சபிக்கிறார். தாழம்பூவுக்கும் இனி என் வழிபாட்டில் நீ இடம்பெற மாட்டாய் என்று ஒதுக்கிவிடுகிறார். அப்படி அடிமுடி தேடிய விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் காண முடியாமல் நின்ற ஈசனை நாம் உணர்வோம் என்று பொய்யுரை பேசுகிறாளாம் இந்தப்பெண்.
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்= ஆஹா இனிமையான சொற்களால் பொய்யுரைகளை பேசும் வஞ்சகப் பெண் இவள் அன்றோ, வாசற்கதவைத்திறப்பாயாக!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்= இந்த மண்ணகத்தில் உள்ளவராயினும், விண்ணகத்தில் உள்ளவராயினும் மற்றும் உள்ள எவராலும் அறிய முடியாத, காண முடியாத பரம்பொருளின் கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்= திருமேனியின் அழகும், நம்மையும் நம் போன்ற எளியோரையும் ஆட்கொண்டருளும் அருட்குணத்தையும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று= ஐயனவன் சீலத்தையும் பாடி என் சிவனே என் சிவனே என்று ஓலம் இடினும் உணராய் உணராய் காண்= எத்தனை முறை ஓலம் இட்டோம். அவ்வாறு கூவியும், நீ எழுந்துவரவே இல்லையே, ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்= ஈசனுக்கல்லாது உன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் பக்தி எங்கே போயிற்று? என்று எழுப்பவந்த தோழியர் அழைக்கின்றனர்