திருவெம்பாவை எட்டாம் நாள்
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
பொழுது விடியும்போது சேவலும், கோழியும் கூவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்= அவ்வாறு கோழி மட்டும் சிலம்பவில்லை, குருகு=பறவையினங்கள் அனைத்துமே விழித்துக்கொண்டு ஒலியெழுப்புகின்றன.
ஏழில் இயம்ப இயம்பும்வெண்சங்கெங்கும்= உதய கீதங்கள் கோயிலில் இசைக்கப்படும், அவ்வொலியோடு வெண்சங்கு ஊதும் ஒலியும் கேட்கிறது.
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை= ஒளிச்சுடராய் விளங்கிய ஈசனின் ஒப்பற்ற பெரும் கருணையைப் புகழும்
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ= ஈசன் புகழ் பாடும் பொருள் கொண்ட சிறப்பான பாடல்களை நாங்கள் பாடினோமே? உனக்குக் கேட்கவில்லையா?
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்= அடி பெண்ணே இப்படிக் கிடக்கிறாயே? நீ வாழி, உனக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும், வாயைத் திறக்க மாட்டாயா?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ= ஆழி இங்கே கடல் . கடல் போன்ற அன்புள்ள ஈசனின் திருவடிக்கு அன்பு செய்யும் நெறிமுறை இதுவா??
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.= ஊழிக்காலத்திலும் அவன் ஒருவனே நிரந்தரமாய் இருப்பான். அத்தகைய உலக முதல்வனை, ஏழைகளுக்கெல்லாம் கருணை செய்பவனைப் பாடித் துதிக்கலாம் வா. இங்கே ஏழைப்பங்காளன் வெளிப்படையான பொருளில் பணமில்லாமல் சிரமப்படும் ஏழைகளுக்கும் கடவுளே தெய்வம் என்ற கோணத்தில் திக்கற்றவர்களுக்கு தெய்வம் என்றும் கொள்ளலாம்.
இன்னொரு பொருளில் பக்தியில் ஏழையாக இருந்தாலும் அவன் அதைக் கண்டு கொள்ள மாட்டான். நீ அவனை மனமார ஒருமுறை நினைத்தாலே போதும், உன்னைத் தடுத்தாட்கொள்வான் என்றும் கொள்ள முடியும். பொதுவாய் ஆன்றோர் கூறுவது, இங்கே ஏழை என்பது பல்வேறு அணிகள்பூண்ட உமையைக் குறிக்கும், பங்காளன்=உமைக்குத் தன் உடலில் சரிபாதி பங்கு கொடுத்த ஈசன் என்றும் பொருள் கொள்கிறார்கள். மேலும் அன்னைக்குத் தன் உடலில் சமபாகம் கொடுத்தருளிய நிகழ்வு கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையிலேயே நடைபெற்றது. ஆகவே அதுவும் பொருந்தும்.