இரணியனின் தவம்

தனது சகோதரன் இரண்யாட்சன் கொல்லப்பட்டதையறிந்த இரணியகசிபு சினங்கொண்டு, பரமனைப் பழி வாங்கத் துடிக்கிறான்.

‘என் சகோதரனைக் கொன்ற பரமனைப் பழிக்குப் பழி வாங்குவேன். அவனது அடியார்களைத் துன்புறுத்தி அழிப்பேன். அப்படி அழித்து, எங்கும் அந்த பரமனை வணங்கித் துதிப்பவர் இல்லாது செய்வேன்’ என்று சபதம் செய்து, தவம் இயற்றச் செல்கிறான்.

பிரமனை நோக்கி இரணியகசிபு கடுந்தவம் செய்கின்ற வேளையில், விண்ணவர் தலைவன் இந்திரன் அவன் மனைவியும், அவனது குலக்கொழுந்தைக் கர்ப்பத்தில் தாங்கியவளுமான கயாதுவைக் கவர்ந்து செல்கிறான். இரணியகசிபுவின் வலிமையே மூன்று உலகங்களையும் ஆட்டுவித்து அதிரச் செய்வதால், அவனது மைந்தன் இன்னும் என்னவெல்லாம் செய்வானோ என்றஞ்சி முளையிலே அழிக்க நினைக்கிறான் இந்திரன்.

வழியில் குறுக்கிட்ட நாரத முனி, ‘இக்குழந்தை மிகப் பெரிய பக்தனாக விளங்குவான். இவனால் எல்லோருக்கும் நன்மையே விளையப் போகிறது’ என்று இந்திரனுக்குச் சொன்னவுடன், கயாதுவை அவரிடம் விட்டு விடுகிறான் இந்திரன்.

தனது ஆசிரமத்திலேயே நாரத முனி கயாதுவை இருக்கச் செய்து, நல்லுபதேசங்களை அருளுகிறார். அப்படி அருளும் தருணங்களில், கயாது உறங்கிப்போனாலும், அவளது கருவில் இருக்கும் குழந்தை ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டும், ஆமோதித்துக் கொண்டும் இருப்பதையறிந்த நாரத முனி பரமனின் திருவிளையாடலை எண்ணி நெகிழ்கிறார்.

கால் பெருவிரலால் மட்டுமே அசையாது நின்று, ஊண்/உறக்கமின்றி பல வருடங்களாகத் தவமியற்றும் இரணியகசிபுவின் உடல் எலும்புக்கூடாய் ஆகிறது; எறும்புப் புற்றினால் அவனுடல் மூடப்படுகிறது.

இத்தகைய கடும் தவத்தினால் மகிழ்ந்த பிரமன் அவன் முன் தோன்றுகிறார். அவரது அருளால் அவன் உடல் பழைய நிலைக்கு மாறுகிறது. பிரமன் இரணியகசிபுவிடம் ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்ட தருணம் மிகவும் சிக்கலான தருணம்.

இரணியகசிபு தான் முன்பே தீர்மானித்தபடி வரத்தைக் கேட்டுப் பெற்று, மகிழ்ச்சியில் திளைக்கிறான்; ஆனந்தக் கூத்தாடுகிறான்.

அவன் பெற்ற வரம்தான் என்ன?

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.