இரணியனின் வல்லமை

நான்மறைகளின் பொருளைப் பிரமனே இரணியனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறான்; இது போதாதெனத் தன் அறிவினால், தன் தவத்தினால் மகிழ்ந்து அளிக்கப்பட்ட பிரமனின் வரங்களைப் பெற்றுக் கொண்டு வருகிறான்.

மும்மூர்த்திகள், ஐம்பூதங்களின் வலிமை ஒன்று சேர்ந்து இயல்பாய் அமைந்தவனிடம் வரமும் சேர்ந்தால் என்னவாகும்?

இரணியனின் வரம் அவனை வைகுந்தம் வரை செல்லும் வலிமையைத் தந்து விடுகிறது; தன் சகோதரனைக் கொன்றதற்குப் பழிக்குப் பழி வாங்க – எல்லோரையும் காக்கும் – பரமனையே அழிக்கத் துணிகிறான்.  பரமனுக்குத் தெரியாதா அவன் வருவான் என?  அதனால் இரணியன் வரும்போது, பரமன் மறைந்து விடுகிறான்.

எத்துணை வலிமை கொண்டாலும், வரத்தைப் பெற்றாலும் மெய்யறிவு இல்லாது போனால் பயன் தான் என்ன?  இதைப் புரிந்து கொண்ட பரமன், புன்முறுவலுடன் இரணியனின் இதயத்தில் சென்று அமர்ந்து கொள்கிறான்.  அங்குதான் இரணியன் தேட மாட்டான்!  

வைகுந்தத்தில் பரமன் இல்லாததால் (?!), பல இடங்களில் பரமனைத் தேடுகிறான் இரணியன்.  உள்ளே இருப்பவனை அறியாது, வெளியே தேடுவதில் என்ன பயன்? (இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!  அவர் ஏதுமறியாரடி ஞானத்தங்கமே!)  ‘தன் வலிமையை அறிந்து, பரமன் ஓடி விட்டான்’ என்று நினைத்துக் கொண்டு, உரத்த குரலில் கூக்குரலிட்டுத் தான் வென்று விட்டதாய் எண்ணி பேருவகை கொள்கிறான்.

எந்த ஊருக்குப் போகிறவர்கள், திரும்ப மாட்டார்களோ, அந்த ஊருக்குப் போய்த் திரும்பி வந்தவன் இரணியனாய்த்தான் இருக்க முடியும்.  எந்த வைகுந்தத்தில் பரமனைத் தரிசித்து ஆராதிக்க வேண்டுமோ, அதில் பரமனைத் தரிசிக்கக் கொடுத்து வைக்காது திரும்பி வந்தவன் இரணியனாய்த்தான் இருக்க முடியும்.  எந்த பரமன் பயமற்றவனோ, அவன் தன்னைக் கண்டு பயந்து ஓடியதாய் நினைத்துத் திருப்திப்பட்டுத் திரும்பி வந்தவன் இரணியனாய்த்தான் இருக்க முடியும்.

செந்தாமரைக் கண்ணன் என்று போற்றப்படக்கூடிய பரமனின் திருநாமம் தவிர்த்து, தன் நாமம் ஒன்றையே கூற வேண்டும் என்று கூறி, அந்தணர்/முனிவர்கள் வளர்த்த, ஓமப் பொருள்களைக் கொண்ட வேள்வித் தீயில் சேர்க்கப்படும் விண்ணவர்க்குரிய அவி உணவை தானே உண்கிறான்.

படைத்தல்/காத்தல்/அழித்தல் தொழில்களைச் செய்ய முடியாது செயலற்றுப் போகின்றனர் மும்மூர்த்திகள்; முனிகளின் பெரும்பதவி பறி போகிறது; விண்ணவர்களும் சக்தியிழந்து இரணியனின் தாள்களையே பூசை செய்கின்றனர்.

பிரமனும், சிவனும், விண்ணவர்களின் குருவும், தொன்றுதொட்டு நான் மறைகளில், எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கும் தெய்வமும் கூட இரணியனுக்கு அஞ்சி, ‘இரணியனே நம:’ என்று நிதமும் துதிக்கின்றனர்.

மருக்கொள் தாமரை நான்முகன் என்கிற கம்பன் மொழிகளை ‘மணங்கமழும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் நான்முகன்’ என்கிற சாதாரணப் பொருளைக் கொள்ளாது, ‘திருமாலின் நாபியாகிய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் நான்முகன்’ எனக் கொள்ள வேண்டும்.  அதே போல, ‘தொன்று தொட்டு உயிர்தொறும் தோன்றாது இருக்கும் தெய்வமும்’ என்பதை எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கும் தெய்வம் என்றே கொள்ள வேண்டும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.