இரணியன் என்றே விளிக்கிறான் கம்பநாடன். அவன் வழியிலே நாமும் செல்வோம்.
இரணியன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால்,
1. பெண்களாலோ, ஆண்களாலோ, திருநங்கைகளாலோ, உலகத்தில் நிலைபெற்றுள்ள உயிருள்ளவைகளாலோ, உயிரற்றவைகளாலோ இறவான்; கண்களால் காணப்படுவனவாலும், எண்ணங்களில் நினைக்கப் படுவனவற்றாலும், நிலத்திலும், விண்ணிலும் இறவான்.
கம்பன், ‘இரணியன் அழியான்’ என்பதை உயிரினங்களுக்கு ‘உலவான்’, கருத்து/எண்ணங்களுக்கு ‘கழியான்’, ஐம்பூதங்களுக்கு ‘சாகிலன்’ என்று வித்தியாசப்படுத்திக் காட்டுகிறான்.
2. விண்ணவர்கள், தியானிக்கவும்/துதிக்கவும் மட்டுமே முடிந்தவர்களான மும்மூர்த்திகள் (பிரமன்/விஷ்ணு/சிவன்) கொன்றாலும், அவனது ஆவி போகாது; வலிமையும் நீங்காது.
கண்களுக்கு புலப்படாத மும்மூர்த்திகளை ‘எண்ணவும், நினைக்கவுமே இயன்றவர்’ என்று அருளுகிறான். மானிடன் என்கிற சொல்லை மனிதன் என்று பொருத்திப் பார்த்திருந்த நமக்கு, மான்இடன் – ‘மானை இடக்கையில் தரித்த சிவபெருமான்’ என்ற விவரிப்பு வியப்பைத் தருகிறது.
3. தண்ணீராலும், தீ-யினாலும், காற்றினாலும், மண்ணுலகில் உள்ள வேறு எதனாலும் இறவான்; எதையும் பகுத்து ஆராய்ந்து உணரும் தன்மை கொண்ட விண்ணவர்கள், தவ வலிமை மிகுந்த முனிகள், மற்றோர்கள் சினங்கொண்டு இடப்படும் சாபங்கள் இரணியனை ஏதும் செய்யாது.
‘மாளான்’ என்கிற சொல்லும் இங்கு கையாளப்படுகிறது.
4. வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும், இரவிலும், பகலிலும், தரும தேவன் உயிரைக் கவரும் போதும் இறவான்; என்றும் அழியாத தெய்வப் படைக்கலன்களால் (உ-ம்: பிரம்ம அத்திரம்) இரணியனுக்கு அழிவு நேராது.
5. ஐம்பூதங்கள், ஐம்புலன்களை விஞ்சிய நான்மறைகளில் உச்சரிக்கப்பட்ட மந்திரங்களினால் அழியான்; தனது தந்தையினால் கொல்லப்பட முடியாதவன்.
நான்மறையின் சிறப்பு அவை புலன் உணர்வுகளால் அறியப் படுவதில்லை என்பதாம்; மெய்யுணர்வு கொண்டே அவைகளை அணுக வேண்டும் என்பதை உணர்த்தவே ‘பூதம் ஐந்தோடும் பொருந்திய, உணர்வினில் புணரா’ என்கிற அடைமொழியை நான்மறைகளுக்கு இடுகிறான்.
‘ஈது அவன் நிலை; எவ்வுலகங்கட்கும் இறைவன்’ என்று அருளுகிறான் கம்பன். ‘இத்தகைய நிலைமையினால் எல்லா உலகிட்கும் அவனே இறைவன்’ என அவனது தவ வலிமையைச் சொற்களால் நிறைக்கிறான் கம்பன்.