ஐபிஎல்

ஐபிஎல் கதைகள் – 1



முதல் ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் ஐகான் என்று ஒரு வீரரை அளித்தது பிசிசிஐ, சென்னை மற்றும் ராஜஸ்தானுக்கு மட்டும் ஐகான் வீரர் இல்லை. டெல்லிக்கு சேவாக், பஞ்சாபிற்கு யுவராஜ், மும்பைக்கு சச்சின், கல்கத்தாவிற்கு கங்குலி, ஹைதரபாத்திற்கு லட்சுமன், பெங்களூருக்கு ட்ராவிட். இந்த ஐகான் வீரர்கள் அனைவரும் அப்போது கிரிக்கெட்டில் கோலோச்சி கொண்டிருந்தவர்கள், அதோடு அந்தந்த நகரதோடு அவர்களுக்குமான பிணைப்பும் இருந்தது. அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்களும் புகழ்பெற்ற இந்திய பேட்டிங் மத்திய வரிசை நால்வர்களுமான சச்சின், ட்ராவிட், கங்குலி, லட்சுமன் ஆகிய நால்வரோடு, இளைஞர்களின் சூப்பர் ஸ்டார்களான யுவ்ராஜ், சேவாக்கும் இனைந்துகொண்டனர். தோனி அப்போதுதான் இளம் இந்திய அணியை தலைமையேற்று உலககோப்பை ஜெயித்து கொடுத்திருந்தார், ஆனால் அவரது சொந்த ஊரான ஜார்கண்டுக்கு தனியாக அணியில்லாததால், அவர் ஐகான் கனக்கிற்குள் வரவில்லை, மார்க்கி ப்ளேயராக பொது ஏலத்தில் அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இந்திய அணியின் இன்னொரு மாபெரும் ஜாம்பவனான அனில் கும்ளேக்கு ஐகான் அந்தஸ்து கிடைக்கவில்லை, பெங்களூருக்கு ஏற்கனவே ட்ராவிட் இருந்ததால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.

இந்த ஐகான் ப்ளேயர்கள் அந்தந்த அணியின் இயல்பான தலைமையுமாவார்கள் என்பதுதான் ஏற்பாடு. அதனால் ஆறு அணிகளுக்கு கேப்டன்கள் தன்னாலே அமைந்துவிட்டார்கள், ஆனால் சென்னை, ராஜஸ்தான் இருவருக்கும் பொது ஏலம் சென்றுதான் கேப்டன்களை தேர்ந்தெடுகவேண்டிய கட்டாயம். சென்னை அணி குறிப்பார்த்து காத்திருந்தது, தோனி பெயர் வந்ததும் தூக்கிவிட்டார்கள். கிட்டதட்ட எல்லா அணிகளும் தீவிரமாக போட்டியிட்டன தோனியை எடுக்க, கடைசியில் அந்த ஏலத்தின் அதிகப்பட்ச தொகையான 6.50 கோடிக்கு தோனியை சென்னை தட்டி தூக்கியது.

ஏலம் முடிந்ததும் சென்னை அணி உரிமையாளரான ஸ்ரீனிவாசனிடம் மீடியாக்காரர்கள் மைக்கும் கேமராவுமாக சூழ்ந்த்கொண்டு ஏன் இவ்வளவு பணம் செலவழித்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு மொய்க்க, அவர் நிதானமாக சொன்னார், எவ்வளவு விலை சொன்னாலும் தோனியை எடுத்திருப்பேன், அவரது மதிப்புக்கு விலையே கிடையாது என. சம்பவம் நடந்த 2008ல் 6.50 கோடி என்பது ரொம்பவே பெரிய பணம், விளையாட்டில். தோனியும் அப்போது யுவ்ராஜ் போல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார், அவரை தாண்டி கேப்டனுமாகிவிட்டார், இன்னும் வளருவார், அணியை நெடுங்காலம் வழிநடத்துவார் என்ற திட்டம் இருந்திருக்கும், ஆனால் இவ்வளவு நீண்ட காலம் வழிநடத்துவார் என்று நினைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

ராஜஸ்தான் அணி புபுத்திசாலித்தனமாக அப்போது ரிட்டயர்ட் ஆகியிருந்த ஷேன் வார்னேயை தங்கள் தலைவராக ஏலத்தில் எடுத்துகொண்டனர். ஷேன் வார்னே ஒரு ஜீனியஸ் என்று எல்லாருக்கும் தெரியும், அதோடு அவரது தலைமை பண்பும் பெரியது என்பது அப்போது மற்றவர்களுக்கு அதிகம் தெரியாது, ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தாத சிறந்த கேப்டன் என அவரை சொல்வார்கள். ஸ்டீவ் வாவிற்கு பிறகு இவருக்கு வரவேண்டிய கேப்டன் பதவி வயது காரணமாக நெடுங்கால திட்டமாக பாண்டிங்கிற்கு போய்விட்டது. அதனாலே ஷேன் வார்னேயின் கேப்டன்சி மூளையை சர்வேத கிரிக்கெட் அனுப்விக்க முடியாமலே போய்விட்டது. சரியாக அவரை தூக்கிய ராஜஸ்தான் கேப்டன் பொறுப்பையும் கொடுத்தது.

அணிகளின் பெயர் அறிவிப்பிற்கு எல்லா ரசிகர்களும் ஒருவித எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இதற்கு முன்னோடியான ஐசிஎல் போட்டிகளிலும் இதே போல் நகரங்களின் பெயர்களை கொண்ட அணிகள் உண்டு, அவர்களை போல் தொனிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் இருந்தது.

ஐசிஎல் போட்டிகளில் சென்னை அணியின் பெயர் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ், சூப்பர்ஸ்டார்ஸ் என்ற பெயர் ஏன் வைத்தார்கள் என்று புரிந்திருக்கும், அப்போது ரஜினியின் சிவாஜி படம் வெளியாகி அகில இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து, இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப்பா, ரஜினியா என நடந்த நேரம். அக்காலகட்டத்தில் சென்னை சூப்பர்ஸ்டார் என பெயரிட்டால் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

ஐபிலிலும் சென்னைக்கு அம்மாதிரியான ஒரு வீச்சு கொண்ட பெயரை யோசித்தவர்கள் சூப்பரை மட்டும் எடுத்து கிங்க்ஸையும் சேர்த்துகொண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் என பெயர் அறிவித்தார்கள். பெயரை பாதி பேர் ரசித்தாலும், விமர்சனமும் இருந்தது. சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் என்பதில் இருக்கும் ஒத்திசைவு சூப்பர் கிங்க்ஸில் குறைவாகவே இருந்ததாக கருத்து இருந்தது. இன்று இதை சொன்னால் யாரும் ஒத்து கொள்ளமாட்டார்கள், இப்போது சூப்பர் கிங்க்ஸுக்கு நாம் பழகிவிட்டோம். டெல்லி அணி தங்களது பெயரை மோனை அழகியலோடு டெல்லி டேர்டெவில்ஸ் என அறிவித்தார்கள், அது நிறைய பேருக்கு பிடித்திருந்தது, அதில் ஒரு ஒத்திசைவும் ஷக்தியும் இருந்தது.

ஹைதரபாத் அணியை வாங்கியது டெக்கான் கிரோனிக்கல் பத்திரிக்கை நிறுவனம். அவர்கள் தங்கள் அணிக்கு தங்கள் கம்பெனியின் பெயராலே டெக்கான் சார்ஜர்ஸ் ( Deccan Chargers) என எளிதாக வைத்துகொண்டார்கள். பேரு வச்சாப்லயும் ஆச்சி, கம்பெனிக்கு விளம்பரமும் ஆச்சி.

இதே போல் இன்னொரு நிறுவனமும் செய்தது. பிரபல மது தயாரிப்பு நிறுவனங்களின் தலைவரும், இந்தியாவின் ரிச்சர்ட் ப்ரான்சன் என்றழைக்கப்பட்டவருமான விஜய் மல்லையா, தான் வாங்கிய பெங்களூர் அணிக்கு தனது நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பான ராயல் சேலஞ்ச் என்ற மதுவின் பெயராலே ராயல் சேலஞ்சர்ஸ் என பெயரிட்டார், அதோடு அதன் பிராண்ட் நிறமான சிவப்பையும் தங்க வண்ணத்தையும் அணியின் நிறமாக வைத்தார்.

About Author