ஐபிஎல்

ஐபிஎல் கதைகள் – 2

ராஜஸ்தான் அணியை ஷில்பா ஷெட்டியின் கணவர் (அப்போதைய வருங்கால கணவர்) ராஜ் குந்த்ரா பல பங்குதாரர்களுடன் வாங்கியிருந்தார். அவர்கள் ரொம்பவே மெனக்கெடவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை, ராஜஸ்தான் ராயல்ஸ் என்று மோனை ஒலியுடன் பெயர் அமைந்துவிட்டது, தவிர நிறைய அரச குடும்பங்கள் இருந்த மாநிலமாதலால் அந்த பெயர் அர்த்தத்துடனும் அமைந்துவிட்டது.

ஷாருக்கான் கோல்கத்தா அணியை வாங்கிருந்தார், ஜூஹி சாவ்லாவுக்கும் அதில் பங்கு இருந்தது. ஆரம்பகாலத்தில் ஷாருக்கானே கோல்கத்தாவின் முகமாக இருந்தார். கோல்கத்தா அணிக்கு வித்யாசமாக கோல்கத்தா நைட் ரைடர்ஸ் என பெயரிட்டார். முதலில் இந்த பெயரை புரிந்து கொள்ளவே போதுவில் சிரமம் இருந்தது, நமக்கு Night தெரிந்த அளவில் Knight இங்கு வெகுஜன புழக்கத்தில் இல்லை. முன்னர் Night riders எனும் ஒரு சீரியல் பிரபலம், இரவில் பைக் உலா செல்லும் நாயகன் பற்றியது, அதனால் Night rider. அதே போல் இவர் Knight rider என அணிக்கு பெயராக வைத்துவிட்டார். பார்க்க பாலிஷாக தெரிந்தாலும் அர்த்தம் பார்த்தால் கொஞ்சம் அனர்த்தமாக இருக்கும், ஐரோப்பாவில் Knight என்றாலே அடிப்படையில் குதிரை வீரன்தான், அதனால் அவன் தன்னளவிலேயே ஒரு ரைடர்தான், அப்படியிருக்க மறுபடியும் ஒரு ரைடர் என்ற வார்த்தை தேவையில்லாதது, ஆனால் அது யாருக்கு தேவை, கேட்க புதிதாக இருந்தது, நன்றாக இருந்தது ஒத்துகொண்டார்கள் மக்கள்.

இன்னொரு நடிகை வாங்கிய அணி பஞ்சாப், வாங்கியவர் ப்ரீத்தி ஜிந்தா, பஞ்சாப்காரர் என்பதால் அவருக்கு மகிழ்ச்சி. அணியில் முக்கிய பங்குகள் அவரது அந்நாளைய காதலரான நெஸ் வாடியாவிடம் இருந்தது, இருவரும் சேர்ந்துதான் அணியை வாங்கிருந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் என பெயரிட்டார்கள். கிரிக்கெட் அணிக்கு அந்த லெவன், இந்த லெவன் என பெயரிடுவது பழைய கால முறை, இன்றும் கிளப் லெவலில் அப்படி பெயரிடுவது உண்டு, அந்த பாணியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் என பெயரிட்டார் ஜிந்தா.

அம்பானி ஏலத்தில் எடுத்த மும்பை அணிக்கு என்ன பெயர் வைப்பார்கள் என பெரிய ஆர்வம் இருந்தது, சச்சினும் அந்த அணியின் ஐகான் வீரராக இருந்தது அந்த ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது. கடைசியில் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் என்ற பெயரை வெளியிட்டதும் சப்பென்று ஆகிவிட்டது. இது உள்ளூர் போட்டி, இங்கு ஏன் இந்தியன் என்ற பெயர்? நீங்க மட்டும்தான் இந்தியனா, எல்லா அணியும் இந்தியன்தானே, உங்கள் அணியில் வெளினாட்டு வீரர்கள் ஆடுவார்கள், பெயர் மட்டும் இந்தியனா ? என்றெல்லாம் மக்கள் கிண்டலடித்தார்கள். அப்படி சுவாரசியமற்ற பெயராக இருந்தது பின்னர் பெரிய பிராண்டாக வளர்ந்துவிட்டது.

அணிகளின் ஜெர்சி வெளியீடு இன்னும் சுவாரசியமாக இருந்தது. ஷாருக்கான் சோல்கத்தா அணிக்காக முழு கருப்பு நிற ஆடையில் ஜோலிக்கும் தங்க நிற பார்டர்களுடன் இருக்கும் சீருடையை வெளியிட்டார். கோல்கத்தா காளியின் நகரம், காளியின் கருப்பும், செல்சம், வெற்றியை குறிக்கும் தங்க நிறத்தையும் சேர்த்ததாக சீருடை இருக்கும் என்றார். இதில் அவர்களின் ஹெல்மெட்டும், பேட்டிங் பேடுகளும் தங்க நிறத்தில் ஜோலித்தது வித்யாசமாக இருந்தது.

கருப்பு நிறத்தை தேர்ந்தெடுத்த இன்னொரு அணி டெல்லி. நல்ல கருப்பு ஆடையில் நல்ல அழுத்தமான சிவப்பு பார்டர்கள் தோள்பட்டையிலும் விலா பார்டர்களிலும் ஓடுமாறு இருந்தது அந்த சீருடை. அந்த சீசனில் நிறைய பேருக்கு பிடித்த சீருடையாகவும் இது இருந்தது.

ராஜஸ்தான் நீல நிறத்தை தேர்ந்தெடுத்தார்கள் நல்ல அழகான நீலம். ராஜஸ்தான் அணியின் அப்போதைய லோகோ போன்றவற்றில் இருந்த நீலத்துடன் இது ஒத்து போனது. மும்பை அணியும் நீலத்தையே தேர்ந்தெடுத்தார்கள் , சட்டையின் முன்பகுதியின் நடுவில் நீலத்தின் இன்னொரு ஷேடில் பட்டை ஓடுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

பெங்களூர் அணி முழு சிவப்பு ஆடையும் தோள்பட்டை போன்ற இடங்களில் மது புட்டி மூடியின் மழுங்கிய செம்பு நிறத்தில் பட்டைகளுமாக வடிவமைக்கப்பட்டிருந்தது, அவர்களுது ஹெல்மெட் மற்றும் பேடுகளும் அதே மழுங்கிய செம்பு நிறத்தில் கவனம் ஈர்ப்பதாக இருந்தது. சிவப்பை எடுத்த இன்னொரு அணி பஞ்சாப். ஷாருக் ஜொலிக்கும் தங்க நிற பேடு, ஹெல்மட்டுகளை தனது அணிக்காக வடிவமைத்தால், அவரின் சக நடிகரும் தோழருமான ப்ரீத்தி ஜிந்தா தனது அணிக்கு வெள்ளியை எடுத்துக்கொண்டார், ப்ஞ்சாப் அணியின் பேடுகளும் ஹெல்மெட்டும் வெள்ளி நிறத்தில் இருந்தன. அவர்களுது கால்சட்டைகள் சிவப்பல்லாமல் வெளிறிய இளஞ்சிவப்பு சாம்பல் நிறத்தில் இருந்தன, அதோடு இரண்டு முட்டிகளிலும் ஒரு கிளிசல் இருந்தன.

சென்னை அணி வித்யாசமாக மஞ்சள் நிறத்தை தேர்ந்தெடுத்தார்கள். உலக விளையாட்டு சீருடைகளில் மஞ்சளுக்கு அப்போது பெரிய மரியாதை இருந்தது, கால்பந்தில் பலமான பிரேசிலின் நிறம், கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத ஆஸ்திரேலிய அணியின் நிறம். அதனால் மஞ்சளை எடுத்தார்கள் என்று சிலர் நினைத்ததுண்டு. பின் சென்னை அணியினர் கலைஞரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கிய போது, அவருக்காகத்தான் அவரது மஞ்சள் துண்டு போல் இருக்க இந்த சீருடையை தேர்ந்தெடுத்தார்கள் என்றும் பொதுவாக பேசிக்கொள்வார்கள், அவர்களே சொன்னால்தான் எதனால் என தெரியும். வழக்கமான இந்த நிறங்கள் தவிர வித்யாசமான நிறம் எடுத்த அணி டெக்கான் சார்ஜர்ஸ், அவர்கள் கருப்பு கால்சராயும், பெய்ஜ் போன்ற நிறத்தில் சட்டையும் அணிந்துகொண்டனர். பார்ப்பதற்கு கண்ணை பறிக்காமலும் அதே நேரத்தில் அழகாக மேச்சோவாக இருந்தது இந்த சீருடை.

About Author