கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழ விடு

புதுக்கருக்கழியாத அந்த  மர ஆடு குதிரையை மாயனின் குடிசை வாசலில் பார்த்த நாட்டாமைக்கு வயிற்றைப் பிசைந்தது. அதைத் தன் குழந்தைக்கு வாங்குவதற்கு பணம் சேர்க்க வேண்டும் என இரண்டு மாதங்களாக இரவு உணவைத் தவிர்த்த மாயனின் நோஞ்சான் உடம்பு அவர் நெஞ்சை நெருடியது.

இரண்டு நாட்கள் முன்பு ஜமீன்தாரின் பேரனின் காதுகுத்து விழாவில் குழந்தையின் தங்கச் சங்கிலி காணாமல் போனது. மாயன்தான் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதால் அவன் மேல் விழுந்தது பழி. இதோ, இன்று குழந்தையின் பட்டுச் சட்டையைத் துவைக்கும்போது, சங்கிலி கிடைத்து விட்டதைக் கூறினார் ஜமீன்தார்.

நாட்டாமைக்கு மாயனின் நேர்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தபோதும், நேற்றைய சூழ்நிலை காரணமாக, பாஞ்சாலி அம்மன் கோயிலில் திருவுளச் சீட்டு  போட்டு பார்க்க முடிவாகியது.

மாயனை ஊரைவிட்டு உடனே கிளம்ப உத்தரவிடப்பட்டதோடு, திருடன் என்ற பட்டமும் சூட்டப்பட்டது. இரவோடு இரவாக, சுமக்கமுடிந்தவரை மட்டும் எடுத்துக்கொண்டு ஊரைவிட்டுச் சென்றான் மாயன். ஆடுகுதிரைக்காக ஏங்கி திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டு, அழுது கொண்டே சென்ற குழந்தையின் முகம் நாட்டாமையின் மனதில் நிழலாடியது.

இன்று மாயனின் குடிசை வாசலைக் குற்ற உணர்வுடன் தாண்டிச்சென்ற நாட்டாமையின் மனம், “கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழவிடு” என்று கதறியது!

About Author