காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1

This entry is part 1 of 3 in the series காசி யாத்திரை

காசிக்கு போகிறோம் வருகிறீர்களா?’ என்று மனைவியின் சகோதரி ஜெயந்தியும் அவர் கணவர் பாலமுகுந்தனும் கேட்டவுடன் கொஞ்சமே கொஞ்சம் யோசித்து ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். சென்னை – டில்லி – வாராணசி -டில்லி – சென்னை ரவுண்டு ட்ரிப் ஏர் டிக்கெட் புக் பண்ணச் சொன்னார்கள் (ஆகஸ்ட் மூன்றாவது வாரம்). அதை செய்து முடித்ததும், ‘இந்த யாத்திரையின் பஸ்ட் லெக் ராமேஸ்வரம், நாங்கள் இந்த மாதம் (ஜூலை) ஆடி அமாவாசைக்கு முன்பு அங்கு செல்வதாக இருக்கிறோம், நீங்களும் வந்தால் தீர்த்த ஸ்ராத்தம் முடித்து, தனுஷ் கோடியில் இருந்து திரிவேணி சங்கமத்தில் கரைக்க வேணி மாதவரை (மண்) எடுத்துக்கொண்டும் – இந்த மண்ணைக் கொண்டு சேது, பிந்து மாதவர்களையும் கூட சிவ லிங்கங்களாக பிடித்து பூஜை செய்து அதன் பின் பிந்து மாதவரை காசி யாத்திரை நல்ல படியாக முடிய பிரார்த்தித்துக் கொண்டு தானமாகவும், சேது மாதவரை தற்போது அவர் சன்னதியில் சமர்ப்பிக்க முடியாது என்பதால் (செய்தால் காசி யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்) கடலில் கரைப்பதற்கும் பூஜை செய்த இடத்திலேயே வைத்து விடுவோம் – வந்து விடலாம்’ என்றார்கள். அதற்கும் ‘சரி’ சொல்லி (ப்ளைட் புக் பண்ணிய பிறகு வேறு என்ன சொல்வது?) அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பு காரில் கிளம்பினோம்.


மேற்கில் (தென் மேற்கு, மேற்கு, வடமேற்கு) இருந்து ராமேஸ்வரம் செல்பவர்களுக்கு மையப்புள்ளி மதுரை (தெற்கு திசையில் இருந்து வருபவர்களுக்கு திருச்செந்தூர், தூத்துக்குடி. வடக்கில் இருந்து (சென்னை) பயணிப்பவர்கள் திருச்சி – புதுக்கோட்டை – தேவகோட்டை வழியாக ராமேஸ்வரம் அடையலாம்). எப்படி வந்தாலும் காமன் மீட்டிங் பாயிண்ட் ராமநாதபுரம். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சுமார் 175 கிலோமீட்டர். சிலைமான்-திருப்புவனம்-திருப்பாச்சேத்தி-மானாமதுரை-பார்த்திபனூர்-பரமக்குடி-ராமநாத……வெயிட். கொஞ்சம் வேகத்தை குறைத்து ராம்நாடுக்கு (இங்கிலீஷ்யா) சுமார் எட்டு கிலோமீட்டருக்கு முன் வலதில் ‘உத்தர கோச மங்கை’ – உத்திரம் என்றால் உபதேசம், கோசம் – ரகசியம், மங்கை என்பது உமையை குறிக்கும். மீனவப் பெண்ணாக பிறந்து வளர்ந்த அம்பிகையை மணந்து அவளுக்கு ஞான உபதேசம் செய்த தலம் – என்று பலகை காட்டும் திசையில் எட்டு கிலோமீட்டர் பயணித்தால் மங்கலேஸ்வரர், மங்களேஸ்வரி, சந்தனக்காப்பு நடராஜர், சஹஸ்ரலிங்கம், மாணிக்க வாசகர் (இருவருக்கும் தொடர்பு உண்டு. ஆயிரம் முனி புங்கவர்கள் சிவ தரிசனம் பெற வேள்வி நடத்த, அவர் மண்டோதரிக்கு குழந்தையாய் காட்சி கொடுக்கப் போக, அக்னியில் இருந்து ஜோதி எழுந்தது. தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது முனிவர்கள் அதில் மூழ்கி மறைய – அவர்கள் ஈசனோடு ஐக்கியமாகி சஹஸ்ரலிங்கமாயினர் .

சிவன் கொடுத்துச் சென்றிருந்த மறையை காக்கும் பொருட்டு ஒருவர் மட்டும் தங்கிவிட, அதனால் மகிழ்ச்சியுற்ற ஈசன் அவர் பெருமையை உலகத்திற்கு பறை சாற்ற மாணிக்க வாசகனாய் பிறப்பித்தான். திருவாசகத்தானும் இதுவே இறைவனின் வீடு என போற்றுகின்றான். ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறையைக் காட்டிலும் புகழுடைய தலம்) ஆகியோரை தரிசிக்கலாம்.


பொய் சொல்லி சாபம் பெற்ற பிரம்மன் தவமியற்றி விமோசனம் பெற்ற தலம். ஆகவே, இக்கோவிலில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ சார்த்தப்படுகிறது.ஸ்தல வ்ரிக்ஷம் இலந்தை. மூவாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. இன்றும் காணக் கிடைக்கிறது.


மீண்டும் மெயின் ரோடை அடைந்து கிழக்கு நோக்கி பயணித்து ராமநாதபுரத்திலிருந்து தெற்கே போனால் சேதுக்கரையில் திருப்புல்லாணி (தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி வழி) வடக்கில் சென்றால் நவபாஷாணம் (திருச்சி, சென்னை மார்கம்).


சீதையை தேடி வந்த ராமன் முதலில் வேதாரண்யம் சென்றடைந்தான். அங்கு கடலுக்கு குறுக்கே அணையோ, பாலமோ கட்டமுடியாது என்று தெரிந்த உடனே கோடிக்கரை பக்கம் வந்தான். அங்கிருந்து ராமேஸ்வரம் (த்ரேத யுகத்தில் இந்திய துணைக் கண்டத்துடன் சேர்ந்தே இருந்தது), தனுஷ் கோடி (அன்று பிரிந்து இன்று சேர்ந்து விட்டது) வந்த ராமன் தன் முன் விரிந்து கிடந்த இரு மாபெரும் கடல்களை பார்த்தான். வலப்பக்கம் ரத்னாகரம் (ராவணன், இந்தியப் பெருங்கடல், ஆர்ப்பாட்டம், ஆபத்தில்லை) இடதில் மகோததி (மண்டோதரி, வங்காள விரிகுடா, அமைதி,ஆபத்தானது). இவ்விரண்டும் இணையும் வில் முனை போன்ற இடம் (ஆகவே, தனுஷ் கோடி). சரி, இதுவே இலங்கையை அடையும் வழி என்று முடிவு செய்து அங்கு பாலம் கட்ட இடம் தேடி அலைந்த ராமன் அருகில் உள்ள உப்பூரை (லவணபுரி) சென்றடைந்து தான் வந்த கார்யம் தடை இல்லாமல் நடக்க விக்னேஸ்வரனை வழிபட்டான். இந்த மூஷிக வாகனர் தன் தலை மீது கூரையின்றி இருப்பதால் ‘ வெய்யில் உகந்த விநாயகர்’ என்று நாமகரணம் கொண்டுள்ளார். காரணம் சூர்யன். தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்றதால் சிவனின் சாபம் பெற்று அது நீங்க நாரதன் சொற்படி ஆனை வயிற்றானை நோக்கி தவிமிருந்து விமோசனம் அடைந்து, தான் ஒவ்வொரு நாளும் அவரை பூஜிக்க வேண்டுமென வேண்ட, வினை களைபவன் வேய்கூரை இன்றிப் போனார்.


அங்கிருந்து தேவி பட்டணம் வந்த ராமனுக்கு மகிஷாசுர மர்த்தினியாக தேவி காட்சி தர அவளிடம் சக்தியை வேண்டிப் பெற்றிருக்கிறான். அங்கு நவக்ரஹ வழிபாடும் செய்திருக்கிறான். அதுவே நவ பாஷாணம். மகோததியில் உள்ளது. ஐந்து வெளியே தெரிய, மீதம் நான்கும் தண்ணீருக்குள்ளே. கடல் அலைகள் அவன் பிரதிஷ்டை செய்த க்ரஹங்களை புரட்டிப்போட நினைக்க ராமன் ஜகன்னாத பெருமாளை வேண்டி இருக்கிறான். அவர் அக்கடலில் அலையே இல்லாதபடி செய்து விட்டார். அதனால், கடலடைத்த பெருமாள் என்கிற நாமமும் பெற்றார். அதற்கருகில் திலகேஸ்வரர் கோவில். எள் கொண்டு ராமன் ஈசனை பூஜிக்க இவ்விடம் நீத்தார் புகழ் கூறும் தலமாகி விட்டது.


ராமன் பாலம் கட்ட தேர்ந்தெடுத்த சேதுக்கரையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் திருமங்கை மன்னன் மங்களா சாசனம் செய்த திருப்புல்லாணி திவ்ய தேசம். இங்குள்ள பெருமாளின் நாமம் ஆதி ஜகன்னாதர். ராமன் அஸ்திரங்கள் பெற்ற க்ஷேத்ரம். விபீஷணன் சரணாகதி அடைந்த தலம். ராவணனின் தூதுவர்களை ராமன் சந்தித்த இடம். இங்கு, தசரதன் பிள்ளைப்பேறு வேண்டி ஜகன்னாத பெருமாளை வணங்கி புத்திர காமேஷ்டி யாகம் செய்திருக்கிறார். ஆகவே, இராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம்.


கிழக்கு நோக்கிய ஆலயம். கோவில் எதிரில் பிரம்மாண்ட சக்கர தீர்த்தக் குளம் (நீர் தெளிவாக இருந்தால் நன்மை, பொன்னிறமானால் விளைச்சல் குறையும், பாசி படிந்தால் கால் நடைகள் மடியும்). கருவறையில் ஆதி ஜகன்னாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன். பிராகாரத்தில் தாயார் சன்னதி. சுற்றி வந்தால், ராமன் இளைப்பாறியதன் அடையாளமாக தர்பசயன பெருமாள். மழலைப்பேறு வேண்டுவோர் இங்குள்ள சந்தான கோபால கிருஷ்ணனிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். அடுத்தது, பட்டாபிஷேக ராமன்.


இந்த தரிசனங்கள் எல்லாம் முடிந்து மீண்டும் ராமநாத புரத்தை அடைந்து மண்டபத்தில் பாலம் ஏறி பாம்பனில் இறங்கி சற்று தூரம் சென்றால் தங்கச்சி மடம், வில்லுறுணி தீர்த்தம். ராமன் தனது வில்லின் நுனியால் நிலத்தை கீறி நீர் எடுத்ததால் இப்பெயர். அது சரி, அதென்ன தங்கச்சி மடம்?



மறுநாள் காலை ஸ்நான சங்கல்பம், நாங்கள் டைம் டேபிளில் மாற்றம் செய்து தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக்கென செய்யப்படுவது) பண்ண உத்தேசித்திருந்தோம். அது முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி. செல்லும் பாதை பின் பார்க்கப்போவதை முன்னமே எடுத்துக் காட்டும் வகையில் சற்று சூன்யமாகத்தான் இருந்தது. ஜன, கால் நடைகள் நடமாட்டம் அதிகம் இல்லை. இரு பக்கங்களிலும் கருவேலம், பனை (அ) தென்னை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் சில கிராமங்கள். எப்போதோ, எதிர் திசையில் இருந்து கடந்து செல்லும் மினி பஸ்கள், ஜீப்புகள். எங்கள் ஜீப் முகுந்த ராயர் சத்திரத்தை அடைந்ததும் டிரைவர் கீழிறங்கி வண்டியை போர் வீல் டிரைவ் ஆக மாற்றினார். இல்லையேல் கடற்கரை மணலில் ஜீப்பை நினைத்தபடி வளைத்து செலுத்த முடியாது. போகும் வழியெங்கும் 1964 ஆண்டில் அடித்த புயலின் சேதாரங்கள் நினைவுச் சின்னங்களாக தென்படுகிறது. துருப்பிடித்த படகுகள்,உருக்குலைந்த ரயில் நிலையம்….அந்த ரயில்….சட்டென்று மின்விளக்குகள் அணைய, என்ன செய்வது என்று புரியாமல் என்ஜின் டிரைவர் ரயிலை மேற்கொண்டு செலுத்த, கடல் எனும் பகாசுரன் மொத்த பயணிகளுடன் அதை அப்படியே விழுங்கி விடுகிறது. நினைக்கும் போதே மனசு படபடக்கிறது. ஓரத்தில் கொஞ்சம் பயமும் எட்டிப் பார்க்கிறது. என்றாலும் இது மாதிரியான அட்வென்ச்சர் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல.
இப்படியே சுமார் எட்டு கிலோமீட்டர் பயணம். சில இடங்களில் கடல் நீர், சகதி. ஒரு வழியாக கரையை அடைந்து, முன்னோர்களுக்கான பிண்டங்களை கடலில் இட்டு, முப்பத்தி ஆறு முறை மூழ்கிக் குளித்து, கரையில் இருந்து சிவலிங்கங்கள் பிடிக்க மண் எடுத்துக்கொண்டு மீண்டும் ஜீப்புக்கு திரும்பினோம். முகுந்த ராயர் சத்திரம் வந்ததும் டிரைவர் மீண்டும் டூ வீல் டிரைவுக்கு மாற்றினார் (மைலேஜ் கிடைக்க வேண்டுமே). இந்த வாகனங்கள் வெகு சீக்கிரத்தில் பழுதாகி விடுகின்றன. நாங்கள் பார்க்கும் போதே ஒரு ஜீப் ப்ரேக் டௌன் ஆகி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் டிரைவர் இதற்கு முன்னால் கேரளாவுக்கு லாரி ஒட்டிக் கொண்டிருந்தாராம். அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை, ஆனால் ஓனர்ஷிப் ஆகாது, வருகிற பணத்தில் பாதிக்கு மேல் பராமரிப்பு, இத்யாதி (!) செலவுகளுக்கே போய்விடும் என்றார்.


வரும் வழியில் கோதண்ட ராமர் கோவிலில் ஜீப்பை நிறுத்தினார். இங்குதான் ஸ்ரீராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்திருக்கிறார். இக்கோவிலும் புயலின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்திருக்கிறது. அதன் மீதமாக வாசலில் இரு தூண்கள் மட்டுமே. சுவாமி தரிசனத்திற்கு ஈரத்தை உடுத்திக் கொண்டு போகக்கூடாதே என்று கேட்டேன். எல்லோரும் அப்படிதான் செல்கிறார்கள் என்றார் (இதற்கு ஒரு உபாயம் உண்டு. வேஷ்டியை 6/7 முறை உதறி கட்டிக்கொண்டால் அது உலர்ந்ததை கட்டிக் கொண்டதற்கு சமம்).


இன்னும் கொஞ்ச தூரம் வந்ததும் ஜடா மகுட தீர்த்தம். ராவண சம்ஹாரம் முடிந்து ராமன் தன் ஜடையை களைந்து இங்கு நீராடி இருக்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு சிம்ம ராசிக்கு வரும் போது மாசி மகமும், பௌர்ணமி திதியும் கூடிய சுப தினத்தில் இத்தீர்த்தத்தில் குளிப்பது விசேஷமாம். மற்ற நாட்களில் யாரும் இங்கு போவது இல்லை. அட்லீஸ்ட், டிரைவர் அப்படித்தான் சொன்னார்.


மீண்டும் சிருங்கேரி மடத்தை அடைந்து, கொண்டு வந்த மண்ணை மூன்று சிவலிங்களாக (சேது, பிந்து, வேணி மாதவர்) பிடித்து பூஜை செய்தோம். பிறகு, வேணி மாதவரை ஒரு பெரிய துண்டில் கட்டி எடுத்துக் கொண்டோம் (மூடி போட்ட தாமிர (அ ) பித்தளை பாத்திரத்தில் எடுத்துக் கொள்வது உசிதம்).இது இனி திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் வரை நம் பூஜை அறையில். சேது மாதவரை அவர் சன்னதியில் சேர்க்க வேண்டும். ஆனால், அது இப்போது சாத்தியம் இல்லை. எனவே, அவரை கடலில் கரைப்பதற்கு அங்கேயே வைத்து விட வேண்டும். பிந்து மாதவரை காசி யாத்திரையில் நம் கூட வருமாறு வேண்டிக்கொண்டு அந்தணருக்கு தானமாக தர வேண்டும் (அவர் பஞ்ச கங்கா காட் டில் (காசி) இருக்கும் போது ஏன் இங்கேயே தானம் கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை).


அது சரி, எதற்காக இங்கிருந்து சிவலிங்கம் பிடித்துக் கொண்டு போய் அங்கு கரைத்து, அங்கிருந்து கங்கை நீர் எடுத்து வந்து இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்?


கங்கையைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த ஸ்ரீராமர் தன் வில்லைக்கொண்டு நிலத்தை கீற அவளும் பீறிட்டு வெளிப்பட்டாள் (கோடி தீர்த்தம்). ஆனால், நாம் கீறினால் கங்கை வருவாளா? அதனால், சிவன் மனம் குளிர இங்கிருந்து பிரயாகை கொண்டு போய் கங்கையில் சேர்க்கிறோம். அங்கிருந்து கங்கையை கொண்டு வந்து இங்கு ஸ்ரீசீதை பிடித்த சிவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். மேலும், இங்கிருந்து சிவன் நமக்கு துணையாகவும், அங்கிருந்து கங்கை நம் கூடவும் வருகிறார்கள். கிட்டத் தட்ட (இல்லை, ரொம்ப ரொம்ப தூரத் தட்ட) நாமும் பகீரதன் போலத்தான்.


பகீரதன் என்று சொன்னவுடன், அவன் சகர மன்னனின் புதல்வர்களான தன் பாட்டனார்கள் அறுபதினாயிரம் பேரை கரை சேர்க்கத் (சத் கதி அடைய) தானே கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான், ஆகவே அந்த கங்கையின் கரைகளில் காசியிலும், அவள் யமுனை, சரஸ்வதியுடன் சங்கமிக்கும் பிரயாகையிலும் நம் மூதாதையர்களுக்கு பித்ரு கார்யங்கள் செய்வது தானே விசேஷம். நம் பாக்கியம். நம் வம்சத்திற்கு அனுக்ரஹமும் கூட எனத் தோன்றுகிறது.


தில ஹோமம் செய்த அன்று மதியம் ராமேஸ்வர கோவில்களை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். ரூபாய் இருநூறுக்கு கண்டக்டட் டூர். அந்த லிஸ்டில் சர்வரோகஹர தீர்த்தத்தக் கரையில் தென் திசை காவல் தெய்வமாக கோவில் கொண்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த நம்பு நாயகி அம்மன் இல்லை. ஆட்டோக் காரரை கேட்டதில் அக்கோவில் அதிக தூரம் எனவும் அதையும் சேர்த்தால் நானூற்று ஐம்பது ருபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். கொஞ்சம் பேரம் பேசியதில் நானூறுக்கு ஒப்புக்கொண்டார்.


நாங்கள் முதலில் போனது கந்த மாதன பர்வதத்திற்கு. ஸ்ரீராமர் இந்த மலை ஏறித்தான் இலங்கைக்கு பாலம் கட்ட உகந்த இடத்தை தேடியிருக்கிறார். அவர் இம்மணர்குன்றின் மீது தன் பாதம் பதித்ததின் அடையாளம் இன்றும் காணக்கிடைக்கிறது. இதன் காரணமாக இவ்விடம் ‘ராமர் பாதம்’ என்றும் வழங்கப்படுகிறது.


இருட்டிவிட்டால் போக முடியாது, கோவிலையும் மூடிவிடுவார்கள் என்று ஆட்டோ டிரைவர் சொன்னதன் காரணமாக நாங்கள் அடுத்து சென்றது நம்பு நாயகி கோவிலுக்குத் தான். சுயம்பு அம்மன். அருகிலேயே பூஜைக்குரிய விக்ரஹம். வயதான பூசாரி மிகவும் மெல்லிய குரலில் பேசினார். குனிந்து, சுயம்பு நம்பு நாயகியிடம் நம்மைப் பற்றி விவரம் கூறினார். நம்மிடம், அவள் அளப்பரிய சக்தி உடையவள், நம் கூடவே இருந்து காப்பாள் என்றும் சொன்னார். தன் தந்தை, பாட்டன் பரம்பரை வழி வந்த நம்பு நாயகியின் பிரசித்தத்தை கூறும் பல கதைகளை எடுத்துரைத்தார்.
அங்கிருந்து பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். பிரம்மாண்ட சிலா ரூபம். இங்குதான், ஸ்ரீராமர் பாலம் அமைக்க உபயோகப்படுத்திய மிதக்கும் கற்களைக் கண்டோம். அங்கிருந்தவர் ஏதாவது ஒரு கல்லை தூக்கச் சொன்னார். தண்ணீரை விட்டு வெளியே எடுத்ததும் கனம் கூடிற்று. இங்கு, இக்கற்கள் விலைக்கு கிடைக்கிறது.
(இப்போதே கருமை படர்ந்து விட்டதாலும், மின் வெட்டு காரணமாகவும், ஆடி அமாவாசை அடுத்த சில நாட்களில் என்பதாலும் இனி பார்த்த தீர்த்தங்கள், கோவில்களில் போட்டோ எடுக்க முடியவில்லை)


அடுத்தது, லக்ஷ்மண தீர்த்தம். சேது மகாத்மியம் இத்தீர்த்தத்தின் மஹிமையை விஸ்தாரமாக எடுத்துரைக்கிறது. இத்தலத்தில் தீர்த்த ஸ்ராத்தம் செய்வது விசேஷமானது. சங்கல்பம் செய்து, முடி கொடுத்து, இக்குளத்தில் நீராடி பிண்டப்ரதானம் செய்து பித்ருக் கடனை நிறைவேற்ற வேண்டும்.


‘அஸ்வத்தாமா ஹத : குஞ்ஜர :’ என்று தர்ம புத்திரனை சொல்ல வைத்து ‘குஞ்ஜர :’ என்பது துரோணாச்சாரியர் காதில் விழாமல் துந்துபி முழக்கி அவரை வீழ்த்திய ஸ்ரீகிருஷ்ணனின் தந்திரம் தெரிந்ததும் யுதிஷ்டிரர் மனக்கிலேசமுற்று இங்கு அமைந்துள்ள ராம தீர்த்தத்தில் நீராடி அருகிலேயே கோவில் கொண்டுள்ள ஸ்ரீராமரை தரிசித்திருக்கிறார்.
எதிர் திசையில் சீதா தீர்த்தம். குளத்தில் தண்ணீர் இல்லை. தூர்வாரி ஊற்றுக் கண்களை திறக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் போகும் போது நீர் நிரம்பி காட்சி அளிக்கலாம்.


ராமேஸ்வரத்தின் மற்ற திசைகளுக்கும் காவல் தெய்வங்கள் உண்டு. வடக்கில் பத்ரகாளி. கிழக்கில் உஜ்ஜயினி காளி (அக்னி தீர்த்தம், சங்கர மடம் அருகில்),மேற்கில் துர்க்கை அம்மன். இவர்களையும் தரிசித்து விட்டு சிருங்கேரி மடம் திரும்பினோம்.

உங்கள் கவனத்திற்கு :



‘காசி யாத்திரை’ என்பது எல்லோருக்குமானது, எந்த வட்டத்திற்குள்ளும் அடக்க முடியாதது. நம் குலம் தழைக்க, செழிக்க ஒவ்வொருவரும் அத்யாவஸ்யமாக செய்ய வேண்டியது பித்ரு கார்யம் (ஸ்ராத்தம், தர்ப்பணம்), இதற்கு அடுத்ததுதான் மற்ற எல்லாமே (நித்யகர்மா, குல தெய்வம், குல குரு, இஷ்ட தெய்வம், கோவில், குளம், மந்த்ரம், ஜபம், தியானம், ஹோமம், யாகம், இத்யாதிகள்). பித்ரு கர்மா செய்யாமல் கோவில் போவதனால் எந்த பிரயோசனமும் இல்லை. கோவிலில் இருக்கும் தெய்வம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், நம் முன்னோர்கள் நமக்கானவர்கள் மட்டுமே. அவர்கள் வாழ்த்தினால் நம் வம்சம் செழித்தோங்கும். வருந்தினால் கஷ்டப்படும். அது எப்படி, நம் பித்ருக்கள் நம்மை சபிப்பார்களா என்றால், இல்லை. ஆனால், பித்ரு தேவதைகள் அப்படி சும்மா விட்டு விட மாட்டார்கள். இது ஏதடா, பயமுறுத்துகிறானே, நாம் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என்றால், கவலைப்படவேண்டாம் அதற்குத்தான் இந்த ராமேஸ்வர, பிரயாக, காசி, கயா ஸ்ராத்தங்கள் (முக்கியமாக, கயாவில் பிண்டம் அளிப்பது நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல, இறந்து போன நம் அடுத்த வட்ட உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள், எதிர், பக்கத்து வீட்டார்கள், ஏன் நாம் வளர்த்த மாடு, ஆடு, குதிரை, நாய், பூனைகள் போன்ற பிராணிகளுக்காகவும் கூட). இதை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஸ்ராத்தம், தர்ப்பணம் (ஆண்டுக்கு குறைந்த பட்சம் 15) இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதுமானது நம் வம்சம் சுபிக்ஷம் அடைய. இதில் மாளய பக்ஷ ஸ்ராத்தங்களும் அடங்கும்.


ஆனால், இந்த யாத்திரை அவ்வளவு சுலபமானது அல்ல. ராமேஸ்வரம் வேண்டுமானால் தனித்து இருப்பதனால் கொஞ்சம் எளிதாக இருக்கும். ஊரும் நம்ம ஊர். கர்மாக்களும் குறைவு. ஆனால், காசி போய் சேர்ந்து விட்டால் காலில் சக்கரம்தான் கட்டிக் கொள்ளவேண்டும். பித்ரு கர்மாக்கள் அதிகம். எல்லாமே ஜெட் வேகத்தில் நடக்கும். ஒவ்வொருநாளும் அதிகாலையிலேயே எழுந்து ஒவ்வொரு திசையில் 3 – 5 மணி நேர பயணம். போய் சேர்ந்த உடனே கார்யங்களை ஆரம்பிக்க வேண்டி இருக்கும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிவதற்கு முன்பே முடிந்தும் விடும். சரியாக செய்தோமா என்று சந்தேகமாகவே இருக்கும். இப்படியெல்லாம் மன வருத்தங்கள் ஏற்படாமல் பித்ரு கர்மாக்களை முடிந்த அளவு சரியாக செய்வதற்காக நம்மை ஓரளவு தயார் செய்து கொள்வதற்காகவே இந்தத் தொடர். ஆகவே, காசி யாத்திரை சென்று பித்ரு கர்மா செய்ய இருப்பவர்கள் இத்தொடரை கவனமாக படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக, எல்லோருமே படித்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது.


மறு நாள் காலை, அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்று ஸ்படிக லிங்க தரிசனம் (ஐந்து முதல் ஆறு மணி வரை). பின் மடம் திரும்பி ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்தத்தில் (இந்திய பெருங்கடல்) முதல் குளியல். அதென்ன அக்னி தீர்த்தம்? ஸ்ரீசீதையை மீட்டு வந்த ஸ்ரீராமன் அவளை அக்னிப் ப்ரவேசம் செய்யச் சொன்னான். இதைகேட்டு அக்னி பயந்தான். ஸ்ரீ சீதை அவனை சமாதானப் படுத்தினாள் ‘உன்னால் எனக்கு ஒரு தீங்கும் நேராது. உன் வெப்பம் என்னை தாக்காது. நான் இக்குளியல் செய்வதனால் உனக்கு எந்த வித அபகீர்த்தியையும் உண்டாகாது. என் பதிவ்ரதத்தீ உனக்கு புகழே சேர்க்கும்’ என்று. அவள் தீ புகுந்த இடமே இன்று ‘அக்னி தீர்த்தக் கரை’யாக விளங்குகிறது. அக்னியும் அவளை சுடாமல் குளிர்ந்தான். தன் பாவம் நீங்க இங்கு நீராடியிருக்கிறான். ஆகவே, ‘அக்னி தீர்த்தம்’. (இங்குதான் ஸ்ரீசீதை இதை சொல்லி இருப்பாள், அக்னி பிரவேசம் செய்திருப்பாள் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஸ்தலங்களை நாம் காண்பதற்கே பல ஜன்மாக்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்).
அக்னி தீர்த்தத்தில் இருந்து ராமநாத ஸ்வாமி கோவிலை நோக்கி வரும் போது வளைவில், இடதில் உஜ்ஜயினி காளி கோவில். திறந்திருந்தது. ஒருவரும் இல்லை. தூரத்தில் இருந்தே வணங்கி விட்டு திரும்பினால் வலதில் ஸ்ரீசங்கர மண்டபம் (பிரயாகை பாலத்தில் செல்லும் போது (காசியில் இருந்து) கங்கை, யமுனை, சங்கமத்தில் படகுகள் இவற்றைத் தவிர தூரத்தில் தென்படுவது ஸ்ரீசங்கர விமானமே. இதற்கெல்லாம் காரணம் யார்? வேறு யார்? நம் ஸ்ரீ மஹா பெரியவா தான். காசியிலும் பஞ்சாயதன முறையில் ஒரு கோவில் கட்டி இருக்கிறார்). இந்த சங்கர மண்டபத்தில் நுழைந்தால் தாமதாகி விடும் என்பதால் (தவிர ஈர உடையில் இருப்பதும் ஞாபகத்துக்கு வந்தது) பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே அதைத் தாண்டி விரைகிறோம் (அவசியம் பாருங்கள்).


ஆலயத்தில் நுழைந்து தீர்த்தப் பிரகாரத்தை சுற்றி வந்தால் இருபத்தி இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். இவற்றில், ஸ்ரீமஹாலக்ஷ்மி, சேது மாதவ தீர்த்தங்கள் மட்டும் குளங்கள். மற்றவை கிணறுகள். அனைத்துமே விசேஷம். எனினும் சர்வ, சேது மாதவ, கோடி தீர்த்தங்கள் மிகவும் ஸ்ரேஷ்டமானவை. ஸ்ரீராமன் தன் வில்லினால் சிவ அபிஷேகத்திற்கென உண்டாக்கியதே கோடி தீர்த்தம். தன் மாமன் கம்சனை கொன்ற தோஷ நிவர்த்திக்காக ஸ்ரீக்ருஷ்ணனே இதில் நீராடி இருக்கிறான். ஆனால், ஸ்வாமி அபிஷேக்கதிற்கு இந்த தீர்த்தம் பயன்படுத்தப் படுவதால் இதில் நாம் நேரடியாக ஸ்நானம் செய்ய முடியாது. உள்ளிருந்து கொட்டும் நீர் கோமுகம் வழியாக நம்மை நனைக்கும். காசி யாத்திரை முடிந்து மீண்டும் இங்கு வந்து கங்கையினால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு ஊர் திரும்பும் போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கோடி தீர்த்தமும் வாங்கிக் கொண்டு போய் அதையும் கங்கை சொம்புகளுடன் சேர்த்து வைத்தே சமாராதனை பூஜை செய்ய வேண்டும்.


தீர்த்தக் குளியல்கள் முடிந்ததும் இருப்பிடம் அடைந்து (சிருங்கேரி மடம்) உடை மாற்றி பார்வண (அ) ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து, பின் சுவாமி தரிசனம் (பித்ருக்களை காக்க வைத்து விட்டு கோவிலுக்கு செல்லக் கூடாது).


அக்னி மற்றும் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் பண்ணி சிருங்கேரி மடம் அடைந்து உடை மாற்றி உடனே தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாக செய்தோம். அதற்குப்பின் ஸ்வாமி தரிசனம்…
செக்யூரிட்டி (செல், கேமரா, வாலட் மற்ற காபின் லக்கேஜில் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இங்கும் அனுமதி கிடையாது) செக் முடிந்ததும் நேரே கோவிலுக்குள்ளே சென்று விடுவோம். வலப்பக்கம் திரும்பிப் பார்த்திருந்தால் வித்யாசமான செந்தூர ஹனுமனை தரிசித்திருக்கலாம். ஆனால், நாம் முதலில் பிள்ளயாரைத்தானே நாடுவோம். ராமநாத ஸ்வாமி கருவறை நுழை வாசலில் எப்போதும் போல் இடப்புறத்தில் சற்றே பிரம்மாண்டமான கணபதி. அவருக்கு தோர்பிகரணம் போட்டுக் கொண்டிருக்கும் போதே வாயிலின் வலப்பக்கம் நிலை கொண்டிருக்கும் முருகப்பெருமானை கை காட்டி விடுகிறான் நவக்ரஹங்களின் அருகில் கடை போட்டிருப்பவரிடம் வேலை செய்யும் பையன். இவர்களை சுற்றி வந்தால் மிக பிரம்மாண்டமான சுதை நந்தி கண்ணில் படாமல் போகாது. அவரையும், கொடி மரத்தையும் வலம் வந்து ஸ்வாமி சன்னதிக்குள் பிரவேசிக்கும் போது, முதலில் காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டுத்தான் ராம நாதரை பார்க்க வேண்டும் என்பது மறந்து விடுகிறது. ஏன் அப்படி?


ராவணனை கொன்றதால் ஸ்ரீராமனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது. தோஷம் நீங்க சிவ பூஜை செய்ய வேண்டுமென கூறினர் ரிஷிகள். ராமன் ஹனுமனை அழைத்து உடனே விஸ்வநாத க்ஷேத்ரமான காசி சென்று நர்மதா லிங்கத்தை கொண்டு வர பணித்தார். காசியில் சிவன் எல்லோருடைய காதுகளிலும் தாரக மந்திரமான ராம நாமத்தை ஓதிக்கொண்டிருக்க, அதில் லயித்துப் போன அஞ்சனை மைந்தன் தான் வந்த கார்யத்தை மறந்தார் (இதற்கு வேறொரு கதையும் உண்டு. காசியின் காவல் தெய்வமான காலபைரவரின் அனுமதி பெறாமல் லிங்கத்தை கொண்டு வந்ததனால் அவர் ஹனுமனை வழியிலேயே அதை வைத்து விடுமாறு செய்து விட்டார். அந்த இடம் நாகலாபுரம். ஆகவே, மாருதி மீண்டும் காசி சென்று கால பைரவரிடம் பிரார்த்தித்து எதற்கும் இருக்கட்டும் என்று ஒன்றுக்கு இரண்டாக லிங்கங்களை கொண்டு வரும்படி ஆயிற்று. அதனால் கால தாமதம்).


இங்கே முகூர்த்த நேரம் கடந்து விடும் என்பதால் ஸ்ரீசீதை மண்ணைக் கொண்டு சிவலிங்கம் பிடிக்க ராமன் அதற்கே பூஜையை செய்து விட்டார். கைக்கு ஒன்றாக இரு லிங்கங்களை கொணர்ந்த வாயு புத்திரனுக்கு வந்ததே கோபம். சீதை பிடித்த சிவலிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தார். அது அசையக்கூட இல்லை. ஹனுமன் தன் தவறை உணர்ந்து ராமனிடம் சரணடைய அவரும் ஆறுதல் கூறி வானர வீரன் கொண்டு வந்த இரு லிங்கங்களில் ஒன்றை அருகேயே பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை, தரிசனம் என்று பிரச்சனைக்கு நல்ல தீர்ப்பு வழங்கி விட்டார். ஆகவே, ராமனின் கூற்றுப்படி நாம் காசி விஸ்வநாதரை பார்த்துவிட்டுத்தான் ராமநாத தரிசனம் செய்ய வேண்டும். காசிநாதருக்கு அருகிலேயே பிராகாரத்தில் விசாலாக்ஷி. தொட்டடுத்து ஜோதிர் லிங்கம், சஹஸ்ரலிங்கம்….சரி, ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம்? அவர்தான் ஆத்ம லிங்கமாக கோவில் வாசலில் நாம் தரிசிக்காமல் விட்ட செந்தூரனின் சன்னதியின் பின்புறம் குடி கொண்டுள்ளார். இவர்களை பார்க்காமல் நீங்கள் கோவிலை விட்டு வெளியே வந்து விட வாய்ப்பு உண்டு. அவசியம் தரிசனம் செய்யுங்கள்…..எங்கிருந்து எங்கு வந்து விட்டோம்? திரும்பிப் போய் சுவாமியைக் காண வரிசையில் சேர்ந்து கொள்வோமா?


ராமநாதர்! அற்புத தரிசனம்! நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யார் யாரோ கொண்டு வந்திருந்த கங்கை தீர்த்தம், பூக்கள், பால் சேர்ந்த கலவையால் ராமேஸ்வரனுக்கு அபிஷேகம். இதே போல் நாமும் ஒரு நாள் அந்த புண்ணிய தீர்த்தத்தை எடுத்து வந்து அபிஷேகம் செய்வோம் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டு கீழே இறங்கி பிராகாரத்தை சுற்றி வந்தால் கோஷ்டத்தில் மஞ்சள் வஸ்த்திரம் அணிந்து தக்ஷிணாமூர்த்தி. நடராஜர், சஹஸ்ரலிங்கம், வஜ்ரேஸ்வரர், துர்க்கை, மகாலட்சுமி….ஸ்வாமி சன்னதியில் இருந்து உமையை (பர்வதவர்த்தினி) காணப் போகும் வழியில் சுக்ரவார மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகள். மண்டபத் தூண்களில் மனோன்மணி, மாஹேந்திரி,கௌமாரி, ராஜ ராஜேஸ்வரி……புவனேஸ்வரி, அன்னபூரணி என்று அம்பாளின் பதினாறு வடிவங்கள். பர்வத ராஜனின் புத்ரியை கண், மனம் குளிர தரிசித்து வலம் வந்தால் மேற்கு பிராகாரத்தில் சப்த மாதர்கள். அட இதென்ன, இங்கே பள்ளி கொண்ட பெருமாள்? சடாரி வைத்துக் கொண்டு, தீர்த்தம் பெற்று வெளியே வந்து கோடி மரம் முன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து இரண்டாம் பிராகாரம் வலம் வரலாம் என்று நினைத்தால், தரை முழுவதும் தண்ணீர். ஓஹோ, இதுதான் தீர்த்தங்களுக்கு செல்லும் பிராகாரம், நாம் தான் காலையில் இருந்த அவசரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டோம் போலும், அப்படியானால் அந்த உலகப் பிரசித்த பிராகாரம்? அது மூன்றாவது. கிழக்கு மேற்காக 640 அடி. கிழக்கும், மேற்கும் 400 அடி. ஐந்தடி உயரமுள்ள மேடையின் மீது வரிசையாக தூண்கள். கண் கொள்ளா காட்சி. பிரமிப்பின் உச்சத்துக்கே போய்விடுகிறோம்! (அடச்சே, போட்டோ எடுக்க முடியாமல் போய்விட்டதே என்கிற நினைப்பை தவிர்க்க முடியவில்லை. ஆனால், செக்யூரிட்டி தானே மிக முக்கியம் என்று நம்மை நாமே சமாதனம் செய்து கொள்கிறோம்).


வந்த கார்யம் முடிந்து விட்டது. தீர்த்த ஸ்ராத்தம் செய்து, பிரயாகையில் கரைக்க வேணி மாதவரை பத்திரப்படுத்திக் கொண்டாகி விட்டது. ராமேஸ்வரத்துக்கு வெளியே, உள்ளே உள்ள இதிகாச, புராண, சரித்திர புகழ் பெற்ற கோவில்களில் உறையும் தெய்வங்களையும் ஆலயத்திற்குள்ளே அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்தாகி….வெயிட். இன்னுமொரு மூர்த்தத்தை பார்க்க வேண்டியுள்ளது. ராமநாத ஸ்வாமியின் பின்புறம் இரண்டு, மூன்றாவது ப்ராகாரங்களுக்கு இடையே வெள்ளை சலவைக்கல்லால் (ஆகவே, ஸ்வேத மாதவர்) ஆன சேது மாதவர் ‘என்னை பார்க்காமல் போகிறீர்களே, என்னாலும் உங்களை சந்திக்க வர முடியாமல் கால்களில் சங்கிலி போட்டு கட்டி இருக்கிறார்களே’ என்று வருத்தத்துடன் சொல்கிறார். வாருங்கள், ஏன் அவரை அவ்வாறு பிணைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, நம் அனுதாபத்தை தெரிவித்து, தரிசனமும் செய்து விட்டு வருவோம்.


பாண்டிய மன்னன் யாகம் செய்ததன் பொருட்டு தன் மனையாளோடு கடலாடி திரும்பும் போது அழுதுக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி எதிர்ப்பட்டிருக்கிறாள். அரசன் தன்னோடு வருமாறு அழைக்க, அவள் ஒரு நிபந்தனை விதித்தாள் ‘என் விருப்பமின்றி என்னை யாராவது தொட்டால் அவரை தண்டிக்க வேண்டும்’ என்று. வேந்தன் அதிர்ந்தான். என்றாலும் சம்மதித்தான். பின்னொரு நாள் எவனோ ஒருவன் அவளை கைப்பிடிக்க அவள் கூச்சலிட்டாள்.கோன் ஓடோடி வந்தான். கை பிடித்தவன் கால்களை சங்கிலியால் பிணைத்து விட்டான். அன்றிரவு கனவு. வந்த கள்வன் ஸ்ரீமன் நாராயணனே, அவன் பிடித்த கைகள் ஸ்ரீமஹாலக்ஷ்மியுடயதே என்பதையும், அவள் தன் பக்தியை சோதிக்கவே செய்தாள் என்றும் புரிந்து கொள்கிறான். உருகி உருகி சேது மாதவ லக்ஷ்மி ஸ்துதி பாடுகிறான். இதை சேது மகாத்மியம் சிறப்பித்துக் கூறுகிறது.


ஸ்ரீமஹா லக்ஷ்மி இப்படி என்றால், பர்வத வர்த்தினி அப்படி. எப்படி?அவள் ராமர் பாதம் பதிந்த கந்தமாதன பர்வதத்தையே தன் பிறந்த வீடாகக் கொண்டு ஆடி மாதத்தில் அங்கு போய்விடுகிறாள். ஸ்ரீராமனாதர் திருக்கல்யாண உற்சவத்தின் போது மாமனார் வீடு சென்று தங்குகிறார் (அங்கேயும் இதே கதை தானா?). இந்த சமயத்தில் ராமேஸ்வர ஆலயம் அடைக்கப் பட்டிருக்கும். ஆகவே, ஆடி மாதம் ராமேஸ்வரம் போகிறீர்கள் என்றால் விசாரித்துக் கொண்டு செல்லவும்.


சொல்வதற்கு இன்னும் ஓரிரு விஷயங்கள் உள்ளது. ஸ்ரீசீதை இம்மண்ணை எடுத்து சிவலிங்கம் பிடித்ததால் ராமேஸ்வரத்தில் ஏர் கட்டி உழவில்லை, சூளையிட்டு சட்டிப்பானை சுட்டெடுப்பதும் இல்லை, சிவலிங்க வடிவமாக இருப்பதால் செக்கு ஆடுவதும் கிடையாது.


சரி, இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்போது காசி சென்று சேர்வது? ஆகவே, ராமேஸ்வர பார்ட்டை இத்துடன் முடித்துக் கொள்வோமா? இப்போது நாம் வடக்கு நோக்கி வாயு புத்திரனைப் போல பறந்து சென்று வாராணசி அடைகிறோம்.

Series Navigationகாசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 2 – ராமேஸ்வரம் ! >>

About Author

2 Replies to “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1”

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.