காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 7!

அக்னி மற்றும் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் பண்ணி சிருங்கேரி மடம் அடைந்து உடை மாற்றி உடனே தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாக செய்தோம். அதற்குப்பின் ஸ்வாமி தரிசனம்…

செக்யூரிட்டி (செல், கேமரா, வாலட் மற்ற காபின் லக்கேஜில் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இங்கும் அனுமதி கிடையாது) செக் முடிந்ததும் நேரே கோவிலுக்குள்ளே சென்று விடுவோம். வலப்பக்கம் திரும்பிப் பார்த்திருந்தால் வித்யாசமான செந்தூர ஹனுமனை தரிசித்திருக்கலாம். ஆனால், நாம் முதலில் பிள்ளயாரைத்தானே நாடுவோம். ராமநாத ஸ்வாமி கருவறை நுழை வாசலில் எப்போதும் போல் இடப்புறத்தில் சற்றே பிரம்மாண்டமான கணபதி. அவருக்கு தோர்பிகரணம் போட்டுக் கொண்டிருக்கும் போதே வாயிலின் வலப்பக்கம் நிலை கொண்டிருக்கும் முருகப்பெருமானை கை காட்டி விடுகிறான் நவக்ரஹங்களின் அருகில் கடை போட்டிருப்பவரிடம் வேலை செய்யும் பையன். இவர்களை சுற்றி வந்தால் மிக பிரம்மாண்டமான சுதை நந்தி கண்ணில் படாமல் போகாது. அவரையும், கொடி மரத்தையும் வலம் வந்து ஸ்வாமி சன்னதிக்குள் பிரவேசிக்கும் போது, முதலில் காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டுத்தான் ராம நாதரை பார்க்க வேண்டும் என்பது மறந்து விடுகிறது. ஏன் அப்படி?

ராவணனை கொன்றதால் ஸ்ரீராமனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது. தோஷம் நீங்க சிவ பூஜை செய்ய வேண்டுமென கூறினர் ரிஷிகள். ராமன் ஹனுமனை அழைத்து உடனே விஸ்வநாத க்ஷேத்ரமான காசி சென்று நர்மதா லிங்கத்தை கொண்டு வர பணித்தார். காசியில் சிவன் எல்லோருடைய காதுகளிலும் தாரக மந்திரமான ராம நாமத்தை ஓதிக்கொண்டிருக்க, அதில் லயித்துப் போன அஞ்சனை மைந்தன் தான் வந்த கார்யத்தை மறந்தார் (இதற்கு வேறொரு கதையும் உண்டு. காசியின் காவல் தெய்வமான காலபைரவரின் அனுமதி பெறாமல் லிங்கத்தை கொண்டு வந்ததனால் அவர் ஹனுமனை வழியிலேயே அதை வைத்து விடுமாறு செய்து விட்டார். அந்த இடம் நாகலாபுரம். ஆகவே, மாருதி மீண்டும் காசி சென்று கால பைரவரிடம் பிரார்த்தித்து எதற்கும் இருக்கட்டும் என்று ஒன்றுக்கு இரண்டாக லிங்கங்களை கொண்டு வரும்படி ஆயிற்று. அதனால் கால தாமதம்).

இங்கே நல்ல நேரம் கடந்து விடும் என்பதால் ஸ்ரீசீதை மண்ணைக் கொண்டு சிவலிங்கம் பிடிக்க ராமன் அதற்கே பூஜையை செய்து விட்டார். கைக்கு ஒன்றாக இரு லிங்கங்களை கொணர்ந்த வாயு புத்திரனுக்கு வந்ததே கோபம். சீதை பிடித்த சிவலிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தார். அது அசையக்கூட இல்லை. ஹனுமன் தன் தவறை உணர்ந்து ராமனிடம் சரணடைய அவரும் ஆறுதல் கூறி வானர வீரன் கொண்டு வந்த இரு லிங்கங்களில் ஒன்றை அருகேயே பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை, தரிசனம் என்று இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்ப்பு வழங்கி விட்டார். ஆகவே, ராமனின் கூற்றுப்படி நாம் காசி விஸ்வநாதரை பார்த்துவிட்டுத்தான் ராமநாத தரிசனம் செய்ய வேண்டும். காசிநாதருக்கு அருகிலேயே பிராகாரத்தில் விசாலாக்ஷி. தொட்டடுத்து ஜோதிர் லிங்கம், சஹஸ்ரலிங்கம்….சரி, ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம்? அவர்தான் ஆத்ம லிங்கமாக கோவில் வாசலில் நாம் தரிசிக்காமல் விட்ட செந்தூரனின் சன்னதியின் பின்புறம் குடி கொண்டுள்ளார். இவர்களை பார்க்காமல் நீங்கள் கோவிலை விட்டு வெளியே வந்து விட வாய்ப்பு உண்டு. அவசியம் தரிசனம் செய்யுங்கள்…..எங்கிருந்து எங்கு வந்து விட்டோம்? திரும்பிப் போய் சுவாமியைக் காண வரிசையில் சேர்ந்து கொள்வோமா?

ராமநாதர்! அற்புத தரிசனம்! நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யார் யாரோ கொண்டு வந்திருந்த கங்கை தீர்த்தம், பூக்கள், பால் சேர்ந்த கலவையால் ராமேஸ்வரனுக்கு அபிஷேகம். இதே போல் நாமும் ஒரு நாள் அந்த புண்ணிய தீர்த்தத்தை எடுத்து வந்து அபிஷேகம் செய்வோம் என்று நினைக்கும் போதே சிலிர்க்கிறது. ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டு கீழே இறங்கி பிராகாரத்தை சுற்றி வந்தால் கோஷ்டத்தில் மஞ்சள் வஸ்த்திரம் அணிந்து தக்ஷிணாமூர்த்தி. நடராஜர், சஹஸ்ரலிங்கம், வஜ்ரேஸ்வரர், துர்க்கை, மகாலட்சுமி….ஸ்வாமி சன்னதியில் இருந்து உமையை (பர்வதவர்த்தினி) காணப் போகும் வழியில் சுக்ரவார மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகள். மண்டபத் தூண்களில் மனோன்மணி, மாஹேந்திரி,கௌமாரி, ராஜ ராஜேஸ்வரி……புவனேஸ்வரி, அன்னபூரணி என்று அம்பாளின் பதினாறு வடிவங்கள். பர்வத ராஜனின் புத்ரியை கண், மனம் குளிர தரிசித்து வலம் வந்தால் மேற்கு பிராகாரத்தில் சப்த கன்னிகைகள். அட இதென்ன, இங்கே பள்ளி கொண்ட பெருமாள்? சடாரி வைத்துக் கொண்டு, தீர்த்தம் பெற்று வெளியே வந்து கோடி மரம் முன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து இரண்டாம் பிராகாரம் வலம் வரலாம் என்று நினைத்தால், தரை முழுவதும் தண்ணீர். ஓஹோ, இதுதான் தீர்த்தங்களுக்கு செல்லும் பிராகாரம், நாம் தான் காலையில் இருந்த அவசரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டோம் போலும், அப்படியானால் அந்த உலகப் பிரசித்த பிராகாரம்? அது மூன்றாவது. கிழக்கு மேற்காக 640 அடி. கிழக்கும், மேற்கும் 400 அடி. ஐந்தடி உயரமுள்ள மேடையின் மீது வரிசையாக தூண்கள். உண்மையிலேயே கண் கொள்ளா காட்சி. பிரமிப்பின் உச்சத்துக்கே போய்விடுகிறோம்! (அடச்சே, போட்டோ எடுக்க முடியாமல் போய்விட்டதே என்கிற நினைப்பை தவிர்க்க முடியவில்லை. ஆனால், செக்யூரிட்டி தானே மிக முக்கியம் என்று நம்மை நாமே சமாதனம் செய்து கொள்கிறோம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.