குருப்பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி இரவு 12.24.45 மணிக்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரை சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு. இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
குறிப்பு : குருபகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ரகதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாத்ததில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கு இதை கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தை பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தை காட்டி சரியான பலனை பெறுவது சரி. |
மேஷம் : (அஸ்வினி 4பாதங்க, பரணி 4 பாதங்கள், கிருத்திகை 1ம் பாதம் முடிய) :
குடும்பம் : வாழ்க்கை துணைவர் வழியில் வருமானம் பெருகும். கணவர் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய வீடு சிலர் குடிபோகலாம், பெற்றோர் வழியிலும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதர வகையால் நன்மை உண்டாகும். புனித பயணங்கள் , விருந்து கேளிக்கைகள் என்று மகிழ்ச்சி பெருகி இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.
ஆரோக்கியம் : இதுவரை இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். பெற்றோர்வழியில் கொஞ்சம் மருத்துவ செலவுகள் இருந்தாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது. செப்டம்பர் 14 முதல் நவம்பர் 20 வரையிலான காலத்தில் கொஞ்சம் கூடுதல் செலவு வாழ்க்கை துணைவர் அவரது பெற்றோர் என்றும், வயறு கோளாறுகள், தலைவலி போன்றவை இருக்கும். கொஞ்சம் கவனமாகவும் தகுந்த மருத்துவ சேவையும் பெறுவது நலம் தரும்.
வேலை: உத்தியோகத்தில் இருப்போருக்கு (எல்லா துறையும்) எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பளஉயர்வு, மற்றும் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். புதிய வேலை வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்திவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். பணப்புழக்கம் தாராளம், மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். அதே நேரம் 14.09.21 – 20.11.21 வரையில் கொஞ்சம் கவனமாகவும் வார்த்தைகளை விடாமலும் எவருடனும் பகையில்லாமல் இருத்தல் அவசியம் இல்லாவிடில் வேலை இழப்பு அல்லது வழக்குகளில் சிக்குவது என இருக்கும்.
சொந்த தொழில் : இதுவரை தடைபட்டுவந்த முயற்சிகள் வெற்றி அடையும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கு ஏற்றகாலம், பெண்களை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சி காணும், வங்கி உதவி, எதிர்பார்த்த கடன் கிடைத்தல், நாள்பட்ட சரக்குகள் விற்றுதீரல் என்று செழிப்பாகவே இருக்கும். 14.09.21 – 20-11.21 காலத்தில் கொஞ்சம் நிதானமும், யோசித்து செயல்படலும் அவசியம் பெரிய கஷ்டம் இல்லை எனினும் மன வருத்தங்கள் பொருள் பண விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கல்வி : மாணவர்கள் உற்சாகமாக படிப்பார்கள், விரும்பிய பாடங்கள், கல்லூரிகள் கிடைக்கும் சிலருக்கு வெளிநாட்டு படிப்பு கைகூடும். ஆசிரியர் பெற்றோர் பாராட்டு பெறுவர் போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். இருந்தாலும் நண்பர்களை தேர்ந்தெடுப்பது அல்லது புதிய யோசனைகளை செயல்படுத்துவது என வரும்போது பெற்றோர் ஆசிரியர்கள் ஆலோசனை பெற்று செய்வது நலம் தரும்.
ப்ரார்த்தனைகள் : பெரும்பாலும் நன்மை அதிகம் இருப்பதால் உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வ வழிபாடு கோயில் சென்று விளக்கேற்றுதல் அன்னதானம், தர்மங்கள் செய்வது நன்மை தரும்.
ரிஷபம் : (கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4பாதம், மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு 10ல்-9ல்-10ல் குருவின் சஞ்சாரம் நன்மை அதிகம் தான். பணவரவு தாராளம், நினைத்தது நிறைவேறல் என்று இருக்கும் அதே நேரம் செவ்வாய், ராகு & கேது 14.11.21 வரை எதிர்பாராத தொல்லை மனதில் தேவையற்ற பயம் அவசரப்படுதல் என்றும். வழக்குகள் போன்றவற்றை சந்திக்கும் நிலை இப்படி பணவிரயம் என்று இருக்கும். 17.10.21 – 16.11.21 வரை சூரியன் சஞ்சாரமும் அரசாங்க தொல்லை என இருக்கும். கொஞ்சம் கவனம் தேவை குருவின் பார்வை 2,4,6 என்று இருப்பதால் பணம், சுகம், வீடு, ஆரோக்கியம் இவற்றுக்கு குறைவு வராது. இருந்தாலும் கொஞ்சம் நிதானித்து யோசனையுடன் எதிலும் செயல்படுவது நன்மை தரும். வீடு, நிலம் போன்ற பிரச்சனைகளில் யோசித்து செயல்படுவது அதேபோல் தேவைக்காக கடன்வாங்கும்போதும் அல்லது ஆடம்பரத்துக்காக கடன் வாங்கும் போதும் கவனம் தேவை அதே போல் நண்பர்களாலும் உறவுகளாலும் பண ரீதியான தொல்லை வரலாம். மற்றபடி ஜீவனம் வந்து கொண்டிருக்கும். பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. திருமணம் குழந்தை போன்ற இனங்களால் சுப விரயங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சியை தரும். தடை பட்ட திருமணம் அமையும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு கிட்டும். ராகுவால் பிரயாணம் சில தொந்தரவுகளை தரும். பொதுவில் நன்மை தீமை கலந்து இருக்கும்.
குடும்பம் : கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும் அதே நேரம் வாழ்க்கை துணையின் உறவுகளால் சண்டைகள் கோபம் வருத்தம் இவையும் இருக்கும். பெரும்பாலும் அது பணத்தை சுற்றி இருக்கலாம். பெற்றோர்கள், குழந்தைகள் இவர்களாலும் மகிழ்ச்சியும் இருக்கும் புனித பயணம் செல்வீர்கள், வேண்டுதல்கள் நிறைவேறும் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும் புதிய வீடு நிலம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். அக்கம்பக்கத்தாரோடு நல்ல உறவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு கூடும்.
ஆரோக்கியம் : தலை, எலும்பு, வாயு தொந்தரவு இருக்கும். அடிக்கடி மருத்துவ செலவு உண்டாகும், வாழ்க்கை துணைவராலும், 9ல் இருக்கும் சனி பெற்றோர்களாலும் மருத்துவ செலவை அதிகரிக்க செய்யும். ரிஷபராசி காரர்களில் ஜனன ஜாதகத்தில் லக்னம் மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆக இருந்தால் விபத்துகள் அல்லது நாள்பட்ட வியாதிகளால் மருத்துவ செலவு கூடும் மற்ற லக்னங்கள் அவ்வளவு செலவு இருக்காது பெரிய பாதிப்பும் இருக்காது.
வேலை: உத்தியோகத்தில் ஒரு நல்ல நிலை ஏற்படும் பதவி, சம்பள உயர்வு விரும்பிய இட மாற்றம் எல்லாம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும் பெரும்பாலும் உத்தியோக நிலையில் பிரச்சனை இருக்காது காரணம் 9 & 10ல் குரு சஞ்சரிப்பதாலும் மற்ற கிரஹங்கள் சாதகமாய் இருப்பதாலும். வீன் விவாதங்களை தவிர்ப்பதும். போராட்டங்கள் போன்றவற்றில் பங்கெடுக்காமல் இருப்பதும். சக ஊழியரிடம் நிர்வாக சம்பந்தமான பேச்சுக்களை பகிராமலும் இருப்பது நன்மை தரும். புதிய வேலை அல்லது இருக்கும் வேலையில் இடமாற்றம் நிச்சயம் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும். அரசு துறையில் இருப்போருக்கு போனஸாக எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும் புகழ் நல்ல பெயர் உண்டாகும்.
சொந்த தொழில் : நிலம், விவசாயம், விவசாய உபகரணங்கள் விற்பனை, மளிகை, ஓட்டல் போன்ற தொழிலில் இருப்போருக்கு அவ்வப்போது பிரச்சனைகள் பண விரயம் உண்டாகும் மற்ற அனைத்து தொழில் செய்வோருக்கும் பெரும்பாலும் லாபம் உண்டாகும் புதிய தொழிலும் தொழில் விரிவாக்கமும் உண்டாகும் தொழிலாளர்களின் பூரண ஒத்துழைப்பும் அரசாங்க அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல்வாங்கல், கடன் வாங்கும் போது, அல்லது கடனாக கொடுக்கும் போது அதிக கவனம் தேவை இல்லாவிடில் வக்ர சஞ்சார காலங்களில் மன உளைச்சலும் வீண் விரயமும் ஏற்படும். பொதுவில் லாபம் நன்றாக இருக்கும்.
கல்வி : புதன் 6,8,12ல் (துலாம், தனூர், மேஷம்) சஞ்சரிக்கும் போது மந்த நிலையில் தேவையற்ற செலவும் ஞாபக மறதியும் உண்டாகும். பெரும்பாலும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 16.04 – 01.5, 27.09. – 01.10, 02.11 -20.11 & 10.12 -04.01.22 வரையிலான பிரியர்டுகளில் கவனம் தேவை புதுமுயற்சிகள் தடைபடும், ஆசிரியர் பெற்றோர் ஆலோசனை படி நடப்பது நன்மை தரும். வெளிநாட்டு படிப்பு இருக்கும் இந்த காலங்களில் முயற்சித்தால் பணவிரயம் அல்லது தடைகள் ஏற்பட்டு மன உளைச்சல் இருந்து கொண்டிருக்கும். மற்ற காலங்கள் நல்ல முன்னேற்றம் உண்டாகும் போட்டி பந்தயங்களிலும் வெற்றி உண்டாகும்.
ப்ரார்த்தனைகள் : நன்மை தீமை சரிசமமாக இருப்பதால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் ஆலயங்கள் சென்று விளக்கேற்றி வழிபடுவது மற்றும் குல தெய்வ வழிபாடு நன்மை தரும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.
மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4பாதங்கள், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : 9ல் -8ல்- பின் 9லுமாக குருபகவான் சஞ்சரிக்கிறார் முதல் பாதி அதாவது 20.06.21 முதல் 14.11.21 வரையில் சுமாராகவும் அதன் பின் நிறைய யோகங்களையும் தருகிறார். இருந்தாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும் எந்த வழியிலாவது பணம் வந்து சேரும். பொதுவாக 10க்குடையவர் என்பதால் ஜீவன வழியில் பாதிப்பு இல்லை. தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் சிக்கணம் தேவை, அனாவசிய செலவுகளும் வரும் ஆடம்பர செலவுகளும் உண்டாகும். இருந்தாலும் கவனமாக இவற்றை தவிர்க்க இயலும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். நெருங்கிய சொந்தங்களின் திருமணம், சுப நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் நெருக்கம் உண்டாகும் பெயர் புகழ் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு புதுவீடுவாங்கும் யோகம் புதிய வாகனங்கள் கிடைத்தல், கடன்தொல்லை முற்றிலுமாக நீங்குதல், புதிய கடன் வாங்கும் அவசியம் இல்லாமல் போகுதல் மன நிம்மதி கூடுதல் என்று நன்றாகவே இருக்கும். முன்னேற்றம் ஸ்லோவாக இருந்தாலும் 14.11.21க்கு பின் மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் காலம் முடிய நல்ல நிலை இருக்கும். பொறுமையாகவும் சிக்கனமாகவும் இருப்பவர்களுக்கு நினைத்த வெற்றி கிடைக்கும்
குடும்பம் : கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும், பெற்றோர்களால் அல்லது சகோதரவகையில் இருந்துவந்த பிணக்குகள் தீரும். சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் சமாளித்து குடும்பம் நிம்மதியாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை , குடும்பத்தில் திருமண முயற்சிகள் கைகூடுதல், புதிய வரவுகளால் சந்தோஷம், குழந்தை பாக்கியம் உண்டாதல் என்று மிக நன்றாகவே இருக்கும். 6ல் கேது வருடம் முழுவதும் இருப்பது மிக பெரிய நன்மை, நோய் கடன் எதிரி தொல்லைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும்.
ஆரோக்கியம் : 6ல் கேது வருடம் முழுவதும் அதே நேரம் 8ல் சனி ஆட்சி வருடம் முழுவதும் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது குரு, மற்ற கிரஹ சஞ்சாரங்கள் வியாதியை குறைத்து மருத்துவ செலவுகளை வெகுவாக குறைத்துவிடும். குடும்ப அங்கத்தினர்களின் மருத்துவ செலவுகளும் முற்றிலுமாக நீங்கிவிட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
வேலை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை தொழில் நிமித்தமாக அலைச்சல் சிலகாலம் குடும்பத்தை பிரிதல் வேலை பளு கூடுதல் என்ற அளவில் இருக்கும். நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கைகள் 14.11.21க்கு முன் ஸ்லோவாக வும் அதன் பின் வைக்கும் கோரிக்கைகள் விரைந்தும் நிறைவேறும் ஆனால் கட்டாயம் தேவை நிறைவேறிவிடும். இடமாற்றம் கொஞ்சம் மன வருத்தம் தந்தாலும் 14.11.21க்கு பின் மீண்டும் சொந்த இடம் வந்துவிடலாம். வெளிநாட்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீன் விவாதங்களை மேலதிகாரி, உடன் வேலை செய்வோரிடம் தவிர்க்கவும். வேலை போய் மீண்டும் வேறுவேலை கிடைக்கும் ஆனால் அதன் மூலம் வருவாய் குறைய வாய்ப்புண்டு. அதனால் கவனமாக இருத்தல் அவசியம்.
சொந்த தொழில் : புதிய முதலீடுகள், தொழில் விரிவாக்கம் 14.11.21க்கு பின் நிறைவேறும். அரசாங்கத்தினால் உபத்திரவம் இல்லை ஆனால் அனுகூலம் என்பதும் நவம்பர் 14ம் தேதிக்கு பின்னரே. வேலைக்காரர்களை விரட்டுவது அவர்கள் கோரிக்கைகளை அலட்சிய படுத்துவது கொஞ்சம் மந்த நிலையை வருமான குறைவை ஏற்படுத்தும். போட்டியாளர்கள் தூண்டுதல் இருக்கலாம் கவனமுடன் செயல்படுவது அவசியம். நவம்பர் 14க்கு பின் அரசாங்க உதவி வங்கி கடன் போன்றவை எளிதில் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
கல்வி : மாணவர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் எதிர்பார்த்த பாடங்கள், கல்லூரி, வெளிநாட்டு படிப்பு, மதிப்பெண்கள் கூடுதல் போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்றோர் ஆசிரியர் பாராட்டு என்று பலமாகவே இருக்கும். ராசி நாதன் புதன் சஞ்சாரம் நல்ல நிலையில் வருடம் முழுவதும் இருக்கு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். படிப்பில் கவனம் உண்டாகும். புகழ் வரும்.
ப்ரார்த்தனைகள் : அனந்தபத்மநாபன், அரங்கன் போன்ற பாம்பு படுக்கையில் இருக்கும் பெருமாளையும், சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபடுவது விளக்கேற்றுவது முடிந்தால் விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்வது நன்மை தரும். இந்த பெயர்ச்சியில் நன்மை அதிகம் இருப்பதால் முடிந்த அளவு தர்மங்களை செய்யவும்.
கடகம் : (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : குருபகவான் உங்கள் ராசிக்கு 8லும்- 7லும் பின் 8லுமாக சஞ்சரிக்கிறார் இதில் 7ல் சஞ்சரிக்கும் 13.09.21 முதல் 14.11.21 வரையிலான காலம் அதிக நன்மை பொருளாதார ஏற்றம் இருக்கும். இதை சாதகமாக மாற்றிக்கொண்டு செயல்பட்டால் பொருளாதார நஷ்டம் தவிர்க்கலாம். புதிய வீடு வாகனம் நிலம் வாங்க இந்த காலம் ஏற்றது. மற்ற காலங்களில் பொருளாதார கஷ்டம், பண விரயம், எதையும் செய்யமுடியாமல் தடை உண்டாகுதல், பயம், அச்சம், வழக்குகளில் சிக்குதல் அதனால் பண விரயம் இப்படி பல இருந்தும் அதிக நன்மை உண்டாவது 11ல் செவ்வாய் ராகு சஞ்சாரம் மன தைரியத்தையும் துணிச்சலையும் கொடுக்கும். மேலும் சூரியன் ரிஷபம், கன்னி, தனூர்,மேஷம் இவற்றில் சஞ்சரிக்கும் போது பல நன்மைகளும் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுதலும் இருக்கும். இருந்தாலும் கவனம் இன்மை அல்லது பொறுமை இன்மை இவற்றால் வழக்குகள் அதனால் செலவுகள் குடும்ப தேவைகள் நிறைவேறாமல் போகுதல் என்றும் இருக்கும். பொதுவில் நன்மை ஒரு 55% தான் கவனம் தேவை, நல்லவர்கள் பெரியோர்களின் ஆலோசனை படி நடப்பது கஷ்டத்தை குறைக்கும். அதே நேரம் பெரிய பாதிப்புகள் வராது கவலை வேண்டாம் அலட்சியமாக இருப்பதை தவிர்த்தால் போதும்.
குடும்பம் : வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது வீட்டில் பெரியோர் பெற்றோர் பேச்சு கேட்டு நடப்பது பொறுமை நிதானம் நன்மை தரும். கணவர் மனைவி இடையே பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை வரலாம். அதே நேரம் குடும்ப ஒற்றுமை பெரிய அளவில் பாதிக்காது. குடும்ப அங்கத்தினர்களின் முயற்சிகள் தடை உண்டாகும். 13.09.21 – 14.11.21 காலங்களில் சேமித்து வைத்து கொள்ளவும் புதிய வீடு முயற்சிகள் நிறைவேறும். அக்கம்பக்கத்தாரோடு மோதல் வேண்டாம்.
ஆரோக்கியம் : மன உளைச்சல் அதிகம் ஆகும் வாழ்க்கை துணைவரின் ஜாதகம் நன்றாக இருந்தால் மருத்துவ செலவுகள் குறையும். பெரும்பாலும் ஆகாரத்தினால் தான் மருத்துவ செலவுகள் உண்டாகும் உணவு கட்டுப்பாடு அவசியம், 9க்குடைய குரு 8ல் மறைவதால் பெற்றோர்வகையிலும் மருத்துவ செலவுகள் உண்டாகும்.
வேலை: மிகுந்த கவனத்துடன் வேலை செய்வது அவசியம், தேவையற்ற பேச்சுகளை குறைத்து கொள்ளவும், மேலதிகாரிகள் மட்டுமல்லாது உடன் வேலை செய்வோருடனும் அனுசரித்து போவது நன்மை தரும். பெரிய முன்னேற்றம் என்பது குறைவு. 13.09.21 – 14.11.21 வரையில் தங்கள் தேவைகள் கோரிக்கைகள் பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாக அதிக வாய்ப்பு சந்தர்பத்தை பயன்படுத்துங்கள் மற்ற காலத்தில் அமைதியாக வேலையை செய்யுங்கள். பொறுமை நன்மை தரும். புதிய வேலை முயற்சிகள் மேற்படி காலத்தில் செய்தால் பலன் உண்டு.
சொந்த தொழில் : வங்கி கடன் கொடுக்கல் வாங்கல், போன்றவற்றில் கவனமாய் இருத்தல், கணக்குவழக்குகளை வரவு செலவுகளை சரிவர வைத்தல் இவை போதும் நிதானமாக தொழில் ஓடும். வருமானம் வரும். 13.09.21 – 14.11.21 இந்த காலத்தில் புதிய தொழில், விரிவாக்கம் போன்றவற்றை செய்யலாம். பொதுவில் ஆடை வடிவமைப்பு, நெசவு தொழில், பிரிண்டிங்க், எழுத்து துறை போன்றவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் பாதிப்பு இருக்கும் மற்றவர்களுக்கு பரவாயில்லை. நிதானித்து செயல்படுவது தகுந்த ஆலோசனைகள் பெற்று செயல்படுவது நன்மை தரும்.
கல்வி : பெரிய அளவில் பாதிப்பில்லை, படிப்பில் அதிக கவனம் தேவை, பண விரயம் இருக்கும், தடைகள் இருக்காது விரும்பிய பாடங்கள், கல்லூரி அதிக பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும். ஆனாலும் புதன் நன்றாக இருப்பதால் மதிப்பெண்கள் பரவாயில்லை என்ற அளவில் இருக்கும் போட்டி பந்தயங்களும் பரிசை பெற்றுத்தரும். ஆசிரியர் பெற்றோர் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும்.
ப்ரார்த்தனைகள் : அம்மன் லக்ஷ்மி போன்ற பெண் தெய்வ வழிபாடு நலம் தரும். நெய் விளக்கேற்றுதல் அம்மன் ஸ்லோகங்களை மாலை வேளையில் சொல்லுதல் பலன் தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.
சிம்மம் : (மகம் 4 பாதங்கள், பூரம் 4பாதங்கள், உத்திரம் 1ம் பாதம் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு குருபகவான் 07ல் – 06ல் – 07லுமாக சஞ்சரிக்கிறார் நன்மைகள் அதிகம் காரணம், ராசிநாதன் ஏப்ரல் 13ம் தேதி உச்சராசியில் சஞ்சரிப்பது மேலும் புதன், சனி,சுக்ரன், செவ்வாய் இவையும் இந்த வருடம் முழுவதும் நன்மை தருகிறது. 4ல் இருக்கும் கேது நன்மை தரவில்லை ஆக பெரும்பாலான கிரஹங்கள் நன்மை செயவதால் பொருளாதார ஏற்றம் நிச்சயம் உண்டு. 6லும் கூட குரு நீசம் பெறுவது வக்ரியாக இருப்பது நன்மையே தரும் பிணிகள் அகலும், செலவுகள் குறையும். பெண்கள் மூலம் அதிக நன்மை கிடைக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மனதில் உற்சாகத்தை தரும், ஏற்கனவே போட்டுவைத்த திட்டங்கள் நிறைவேறும் காலம், தெளிவான சிந்தனை இருக்கும், எதிரிகள் தொல்லை குறையும் கடன் சுமைகள் தீரும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பாரா இனங்களில் வருவாய் வந்து மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் வழியில் திருமணம் குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். நீண்ட நாளாக தடை பட்டு வந்த திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும் வாழ்க்கை துணைவர் வகையில் வருமான உயர்வு ஏற்படலாம். இட மாற்றம் உண்டாகும். பொதுவில் பண புழக்கம் அதிகம் இருப்பதால் பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது திருப்தி அதிகம் இருக்கும்.
குடும்பம் : வாழ்க்கை துணைவரால் அதிக மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பிள்ளைகளின் தேவை நிறைவேறும். திருமணம், குழந்தை வரவு என்று குதூகலம் இருக்கும் கேளிக்கைகள் ஆடம்பர பொருட்கள் ஆடை ஆபரண சேர்க்கை, அக்கம்பக்கத்தாரோடு சுமூக உறவு என்று மகிழ்ச்சி இருக்கும். பெற்றோர்கள் ஆசீர்வாதங்கள் இருக்கும். பிரிந்தவர்கள் சேருவர் புதிய உறவுகளால் மகிழ்ச்சி இருக்கும்.
ஆரோக்கியம் : 6ல் சனி நோயை அகற்றும் எதிரிகளை வெல்லும் திறம் உண்டாகும், குடும்ப அங்கத்தினர்கள் பெற்றோர் வகையில் மருத்துவ செலவுகள் வெகுவாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய மருத்துவ செலவுகள் இருக்காது.
வேலை: உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். 10ல் ராகுவும் செவ்வாயும் பத்துக்குடைய சுக்ரன் சஞ்சாரம், லாபத்தையும் ராசியையும் பார்க்கும் குருவின் பார்வை இவை பதவி உயர்வு, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் வேலை முயற்சிப்போர்க்கு வேலை கிடைத்தல் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம், மற்றும் அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுதல் என்று இருக்கும். பொதுவில் பெரிய கஷ்டங்கள் ஏதுமில்லை. வேலை பளு அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான பலனும் வருஷ கடைசியில் கிடைக்கும். வீன் விவாதங்களை தவிர்க்கவும். அரட்டை என்ற பெயரில் நிர்வாகத்தை குறை சொல்வதை தவிர்க்கவும்.
சொந்த தொழில் : போட்டிகள் குறைந்து லாபம் வரும் பெண்களை பங்குதாரரக கொண்ட நிறுவனங்கள் பெண்கள் நடத்தும் நிறுவனங்கள் நல்ல நிலையை தக்க வைத்து கொண்டு வளர்ச்சியும் பெறும். புதிய தொழில் திட்டங்கள் , தொழில் விஸ்தரிப்பு இவற்றுக்கு வங்கி கடன், அரசு உதவிகள் எளிதில் கிடைக்கும், விவசாயம், உணவகம், ட்ரேடிங்க், ஃபேஷன் டிசைன், கலைத்துறை போன்ற தொழில்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் பெரிய சங்கடங்கள் இருக்காது அதே நேரம் தொழிலாளர் இன்ஷூரன்ஸ் போன்றவை செய்து கொள்வது நலம் தரும்.
கல்வி : புதன், சுக்ரன் வருடம் முழுவதும் நன்மை செய்வதும் ராசிநாதன் பலமாக இருப்பதாலும் படிப்பில் முன்னேற்றம், மேற்படிப்பு, விரும்பிய பாடம், கல்லூரி வெளிநாட்டு படிப்பு என்று நினைத்தது நிறைவேறும் போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். ஆசிரியர் பெற்றோர் பாராட்டுகளையும் அன்பையும் பெறுவீர்கள்.
ப்ரார்த்தனைகள் : வருடம் முழுவதும் பெரும்பாலும் நல்ல பலன்கள் இருப்பதால் உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வ வழிபாடு, கோயில்களில் உழவாரப்பணி செய்வது, கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது என்பதும் முடிந்த அளவு அன்னதானம், வஸ்திர தானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்வது போன்றவை பெரிய நன்மைகளை தரும்.
கன்னி : (உத்திரம் 2,3,4 பாதங்கள்,ஹஸ்தம் 4பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : 7க்குடைய குருபகவான் 6 மறைவதும் 5ல் நீசம் ஆவதும் எதிர்மறை பலன்கள் தருவதாக பொதுவாக சொல்லப்பட்டாலும் வருடம் முழுவதும் செவ்வாய்,ராகு, குரு நக்ஷத்திர கால்களில் சஞ்சரிப்பதும் வருடம் முழுவதும் 10,12,2 இடங்களையும், பின் 9,11, ராசியையும் பார்பதால் நன்மைகளே அதிகம் நடக்கும் மேலும் சூரியன், செவ்வாய், கேது, புதன், சுக்ரன் என எல்லா கிரஹங்களும் பொருளாதாரத்தை மேம்படுத்தி பணப்புழக்கத்தை செய்வர். 5ல் இருக்கும் சனி பிள்ளைகளால் மருத்துவ செலவு, கல்வி செலவு என கொடுப்பார். பணம் தாராளமாக இருக்கும் அதனால் பெரிய வருத்தங்கள் இருக்காது. புதுவீடுவாங்கும் திட்டம் கொஞ்சம் ஸ்லோவாக நடக்கும். வங்கி கடன், நிலுவை தொகையை செலுத்துவது இவற்றில் தாமதம், திடீர் பயண செலவுகள் என்று வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். அதே நேரம் சூரியனும், புதனும் புத்திகூர்மையை உண்டாக்கி சேமிப்பை அதிகரிப்பர், கேதுவும் தன்பங்குக்கு பெயர் புகழ், அதிகாரம் பணவரவு என தந்து பலத்தை சேர்ப்பார் பொதுவில் கஷ்டம் என்றால் மருத்துவ செலவுகள், வேலைகள் தாமதம் ஆகுதல் மன உளைச்சல் ஏற்படுதல் போன்றவை மட்டுமே பெரிய சிக்கல்கள் இருக்காது. 70-30 என்றா அளவில் நன்மை தீமை பலன் இருக்கும்.
குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் நிலையும் உண்டாகும், பிள்ளைகளால் செலவு இருந்தாலும் பாதிப்பு இல்லை, பெற்றோர் வகையிலும் ஓரளவு அனுகூலம் இருக்கும். உறவுகள் நெருங்கி வரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியும் ஒற்றுமையையும் தரும். புதிய உறவுகள் நன்மையை உண்டாக்கும்.
ஆரோக்கியம் : குழந்தைகள் மற்றும் பெற்றோர் வகையில் அதிக மருத்துவ செலவுகளும், தனக்கே வயிறு, குடல், கண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நன்மைகளை தரும் ஆரோக்கியம் மேம்படும்.
வேலை: உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாகும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அதே நேரம் விரும்பிய இடமாற்றம், விரும்பிய புதிய வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. புதிய முயற்சிகள் பலன்தரும். சக ஊழியர்களால் சில பிரச்சனைகள் வந்து தீரும். அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் கொஞ்சம் சிரமத்துக்கு பின் நிறைவேறும். பொதுவில் உத்தியோகத்தில் முன்னேற்றம் சுமாராக இருக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். நிதானம் அவசியம்.
சொந்த தொழில் : எதிரிகள் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள், தொழில் விரிவாக்கம் தாமதம் ஆகலாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது நல்லது. ஊழியர்கள் வகையில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது நல்லது. மெதுவான முன்னேற்றம் என்றாலும் நஷ்டம் இல்லை. மீடியா, கலை, சினிமா, ஃபோட்டோகிராபி, மற்றும் சுயமாக ஆன்லைனில் டிசைன் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வோர்களுக்கு கொஞ்சம் அதிகம் முன்னேற்றம் இருக்கும். மற்ற தொழில்கள் பரவாயில்லை, கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சேமிப்பும் நல்ல பலனை தரும்.
கல்வி : புதன்,சூரியன், மற்றும் குருவின் பார்வைகள் சாதகம் அதனால் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்கள் பெற்றோர்களின் பாராட்டும் இருக்கும் ஆனால் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். விரும்பிய படிப்பு, வெளிநாட்டு படிப்பு, கல்லூரி இவைகள் பெருமுயற்சிக்கு பின் கிடைக்கும் போட்டி பந்தயங்களிலும் அதிக உழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். எதிலும் சிரத்தையுடன் படிப்பதும் ஈடுபடுவதும் நன்மை தரும்.
ப்ரார்த்தனைகள் : நின்ற திருக்கோல பெருமாளை வழிபடுவதும், கோயிலில் துளசி மாலை சாற்றுவது, ஸ்லோகங்கள் சொல்வது, விளக்கேற்றுவது, முடிந்த அளவு வயோதிகர்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்வது தான தர்மம் செய்வது நன்மை தரும்.
துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதங்கள் , விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு 5ல் வந்திருக்கிறார் பின் 4ம் இடம் திரும்ப 5ம் இடம் என்று வருடம் முழுவதும் சஞ்சாரம். பொதுவா 5ல் சஞ்சரித்தால் குழந்தை பிறக்கும். புதியவீடு குடிபோகுதல், பொருளாதாரம் பூரணமாக இருத்தல், வளர்ச்சி பாதை நோக்கி செல்லுதல் என்று இருக்கும். 4லில் அவ்வளவு நல்ல பலன் இல்லை ஆனாலும் பார்வை பலத்தினால் நன்மை உண்டு. இந்த வருடம் தேவைகள் பூர்த்தியாகும். இதுவரை தடங்கலாக இருந்த எந்த ஒரு விஷயமும் இனி பூர்த்தியாகி மகிழ்ச்சியை தரும். பெரிய அளவில் பண வரவு இருக்கும். சேமிப்பு அதிகம் ஆகும். மற்ற கிரஹ சஞ்சாரங்களும் பெரிய பாதிப்பை தரவில்லை, 4ல் சனி ஆட்சி சுகஸ்தானம், தாயார் ஸ்தானம் மட்டுமல்லாது பூமி லாபமும் கூட அந்த சனிபகவானை 2ல் இருக்கும் கேது பார்ப்பது ஆசைப்பட்ட வீடு வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் செவ்வாயின் பலமும் வீட்டை உறுதி படுத்தும். இதுவரை சங்கடத்தை கொடுத்துவந்த வழக்குகள் சாதகம் ஆகும் மேலும் திருமணம் கைகூடும் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் புதிய உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பணப்புழக்கம் தாராளமாக இருப்பதாலும் தெய்வ அனுகூலம் இருப்பதாலும் பிரயாணங்களால் நன்மை, கோயில் செல்லுதல், சமூகத்தில் அந்தஸ்து கூடுதல், எதிரிகள் மறைதல், எதிலும் வெற்றி என்று இருக்கும். அதே நேரம் 13.09.21 முதல் 18.10.21 வரையில் கொஞ்சம் மருத்துவ செலவுகள் முயற்சிகளில் தாமதம், நண்பர்களால் தொல்லை, இல்லத்தில் சலசலப்பு பணி மிக தாமதமாக செல்லுதல், அரசு வழியில் ஆதரவில்லை, கடன்வாங்கும் சூழல் என்று சில சங்கடங்கள் இருக்கும் ஆனால் பெரிய பாதிப்பில்லை. இந்த வருடம் உங்கள் எண்ணங்கள் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பம் : கணவர் மனைவி ஒற்றுமை நீடிக்கும். பெற்றோர், பிள்ளை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாக்கு எடுபடும். உறவினர்களிடம் மரியாதை கூடும். புதிய வீடு, வாகனம், ஜீவன வகையில் லாபம் என்று இருக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். நீண்ட காலம் குழந்தைபேறு எதிர்பார்த்து இருந்தோருக்கு குழந்தை பிறக்கும். வசதிகள் கூடும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை கொடுக்கும் நிலை ஏற்படும்.
ஆரோக்கியம் : தாயார் வழியில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மருத்துவ செலவு இருந்து கொண்டிருக்கும். 13.09.21-18.10.21 வரையில் கவனம் தேவை பிரயாணங்கள் சிறு விபத்து காயங்களை உண்டாக்கலாம். தாயார் ஆரோக்கியத்தில் மேலும் அதிக மருத்துவ செலவு கொடுக்கும். வீடு நிலம் விஷயத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். தியான பயிற்சி, மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவது என்று இருந்தால் இவை குறையும்.
வேலை: புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கு, சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு என்று பணவரவு அதிகரித்து தேவைகள் பூர்த்தியாகும். விரும்பிய இடமாற்றம் வெளிநாட்டு வேலை இவை உண்டாகும் அலுவலகத்தில் நல்ல பெயர் இருக்கும். 13.09.21 முதல் 18.10.21 வரையில் வேலை பளு அதிகரிக்கும், எதிர்பார்த்த பதவி தாமதம் ஆகும், சக ஊழியர்களுடன் விரோதம் உண்டாகும். வாக்கு தடிக்கும். கவனமாக இருக்க வேண்டும். வேலை இழப்புக்கு காரணமாக 2ல் இருக்கும் கேதுவும், 12ல் வரும் சூரியனின் சஞ்சாரமும் இருக்கலாம். பொறுமையும் நிதானமும் வார்த்தைகளை விடுவதில் கவனமும் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை.
சொந்த தொழில் : கலைத்துறையில் சொந்த தொழில் செய்வோர், அரசு தொடர்பு தொழில் செய்வோர், பால், உணவு பொருட்கள் ஷேர் மார்கெட் போன்றவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிப்பர். மற்றவர்களுக்கும் நல்ல ஏற்றம் இருக்கும். தொழில் விரிவாக்கம் நல்ல முறையில் உண்டாகும் எதிரிகள் மறைந்து வெற்றி அதிகரித்து பணம் கொழிக்கும். முயற்சிகள் எளிதில் வெற்றி அடையும். அரசாங்க உதவி வங்கி கடன் எளிதில் கிடைக்கும். கிடைக்கும் சந்தர்பங்களை பயன்படுத்தினால் அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் கூட பெரிய துன்பங்கள் இருக்காது தொழில் நன்றாக இருக்கும். வரும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நிதானம் தேவை தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கும் செலவுகளை உண்டாக்கும். பொருள் பாதுகாப்பையும் தொழிற்ச்சாலை பாதுகாப்பையும் சரியாக செய்யவும் தொழிலாளர்கள் நலனை காக்க உண்டான முயற்சிகளையும் சரியாக செய்தால் பெரிய பாதிப்பு இல்லை.
கல்வி : மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். மேல்படிப்பு படிக்க விரும்புவோர் தங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற வருடம் இது. வெளிநாட்டு படிப்பும் கைகூடும், உயர்ந்த கல்வி விரும்பிய கல்லூரி கிடைக்கும், சில சமயம் மந்த உணர்வு தோன்றும் ஆனாலும் பெற்றோர் பெரியோர் ஆசிரியர்கள் ஆலோசனை படி நடப்பது நலம் தரும். போட்டி பந்தயங்கள் வெற்றியை தரும்.
ப்ரார்த்தனைகள் : நன்மை மிக அதிகம் இருப்பதால் நரசிம்மரை வழிபடுங்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதால் குலதெய்வ வழிபாடு அபிஷேகம் வஸ்திரம் சாற்றுதல் போன்றவை செய்யுங்கள். முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம் எளியோருக்கு உதவி செய்வது என்று இருப்பதால் தீமைகள் கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.
விருச்சிகம் : (விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை 4 பாதங்கள் முடிய):
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : பொதுவா குருபகவான் 3,4ல் இருந்தால் பெரிய நன்மைகளை செய்வதில்லை ஜீவன வகையில் பிரச்சனை நண்பர்கள் உறவுகளால் தொல்லை, வழக்குகள் சாதகமற்ற நிலை இப்படியெல்லாம் இருக்கும் என்று பாடம் ஆனால் குரு பகவான் மனோ திடத்தையும், பார்வையால் நன்மைகளையும் செய்வதால் பலருக்கும் மேற்படி கஷ்டங்கள் மிக குறைவாகவே இருக்கும். இந்த வருடம் 4ல் சஞ்சாரம் பின் 13.09.21 முதல் 14.11.21 வரை 3ல் மற்றும் அதன் பின் திரும்ப 4ல் என்று சஞ்சரிக்கிறார். பெரிய அளவில் கஷ்டம் என்பது ஜென்ம கேது 7ல் ராகு இவர்களால் மட்டும் உண்டாகும். அதை மற்ற கிரஹங்களின் சஞ்சாரங்கள் சமன் செய்து தீமைகளை குறைக்கிறது. உங்கள் முயற்சி தாமதம் உண்டாகும் சில சமயம் கடும் முயற்சிக்கு பின்னர் வெற்றி உண்டாகும். எதையும் யோசித்து செயல்படவேண்டும். குரு ஜீவன ஸ்தானத்தை நேரடியாக பார்ப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும் சிக்கணம், யோசித்து செலவு செய்தல் போன்றவை பணப்பற்றாக்குறையை போக்கும். சூரியன் செவ்வாய் சஞ்சாரமும் புதனின் வக்ர நிலைகளும் அதிகப்படியான நல்ல பலனை தரும். பொதுவாக இந்த வருடம் தேவைகள் கடும்முயற்சிக்கு பின்னர் பூர்த்தியாகும். பணவரவும் இருக்கும் செலவும் உண்டாகும். பரவாயில்லை என்ற அளவில் இருக்கும். எதையும் கவனத்துடன் ஆலோசித்து நல்லவர்கள் ஆலோசனை பெற்று பின் செயலில் இறங்கினால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமையில் விட்டுக்கொடுத்தால் பிரச்சனையில்லை வாழ்க்கை துணைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அனுசரித்து போனால் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருந்தால் சுகம் உண்டாகும். பிள்ளைகளாலும் பெற்றோராலும் மன கசப்பு விரோதம் உண்டாகும். இருந்தாலும் செவ்வாயும் சூரியனும் ஒரு மகிழ்ச்சியை குடும்பத்தில் உண்டாக்குவர். புதியவரவு நன்மை செய்யும். திருமணம் குழந்தை பாக்கியம் போன்றவை பெருமுயற்சிக்கு பின் வெற்றி தரும். குடும்பம் மற்றும் உறவுகள் அக்கம்பக்கத்தாரோடு அனுசரித்தும் கோபத்தை தவிர்த்தலும் நன்மை தரும்.
ஆரோக்கியம் : வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியம் சிறுபாதிப்பு தரும் மருத்துவ செலவு உண்டாகும். பெற்றோர் பிள்ளைகள் சகோதரவகை இப்படி எவருக்காவது சில மருத்துவ செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். பெரிய அளவில் கஷ்டம் இருக்காது. தியான பயிற்சிகள் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை கடைபிடித்தல் என்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வேலை: உத்தியோகத்தில் பெரிய பிரச்சனைகள் வராது. வாக்குவாதங்களை தவிர்த்தால் போதும். வேலை பளு இருந்து கொண்டிருக்கும். 3ல் இருக்கும் சனி மன உறுதியை கொடுத்து 5ம் இடம், 12ம் இடம் பார்ப்பதால் எதிர்பாராத பதவி சம்பள உயர்வு என்று இருக்கும். மேலும் நல்ல பெயர் கூடும். வேலையில் ஆர்வம் வரும். உயர் அதிகார பொறுப்பில் இருப்பவர்களை விட கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். பண தேவைகள் பூர்த்தியாகும். 10ம் இடத்தை குரு நேரடியாக பார்ப்பதால் வேறு வேலை அல்லது வேறு இடம் மாற்றம் என்று இருக்கும் அதுவும் நன்மை தருவதாக இருக்கும். பலன் குறைவாக இருந்தாலும் உத்தியோகம் நிலைத்து இருக்கும்.
சொந்த தொழில் : வட்டிக்கு விடுதல், பண பரிவர்த்தனை செய்வோர், சேர்மார்க்கெட், நகை வியாபாரம், நகை தயாரித்தல், ஃபேன்ஸி கடைகள், கொஞ்சம் அதிகம் பாதிப்பு அல்லது மந்த நிலை இருந்து கொண்டிருக்கும். பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். மற்ற அனைத்து தொழிலுக்கும் பெரிய பாதிப்பு இல்லை எனினும் கணக்கு வழக்கை சரியாக வைத்து இருக்க வேண்டும். கூடுமான வரையில் கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம் தரும். புதிய தொழில் முயற்சிகளை வருட கடைசியில் தள்ளி போடுவதும் பண இழப்பை தவிர்க்க உதவும். பொதுவாக தொழிலில் நேர்மையாக இருப்போருக்கு பெரிய ஆபத்துகள் இல்லை சுமாராக வருமானம் வந்து தொழில் நன்றாக இருக்கும்.
கல்வி : மாணவர்களுக்கு மறதி மந்த நிலை இருப்பதால் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. அதிக முயற்ச்சி எடுத்து படிக்க வேண்டும். விரும்பிய பாடம், விரும்பிய கல்லூரி, வெளிநாட்டு படிப்பு போன்ற முயற்சிகளில் அதிக பிரயத்தன பட வேண்டி இருக்கும். பெற்றோர் ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும். நண்பர்கள் சேர்க்கையில் கவனம் தேவை பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெற்றோருடைய கவனம் அவசியம். பொதுவாக ஓரளவு மதிப்பெண் பெறுவார்கள் கல்வி தடைபடாது.
ப்ரார்த்தனைகள் : ராசிக்குறிய முருகனை வழிபடுவது அருகில் உள்ள முருகர் கோயிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வது விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது, நாம ஜெபம் செய்வது முடிந்த வரை தான தர்மங்களை செய்வது பொறுமை அமைதி எப்பொழுதும் இறைத்யானம் இவை இருந்தால் இந்த வருடத்தை சுலபமாக கடந்துவிடலாம்.
தனூர் : (மூலம் 4பாதங்கள், பூராடம் 4பாதங்கள், உத்திராடம் 1ம் பாதம் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : ராசிநாதன் குரு 3லும் பின் 2லும் பின் 3லுமாக இந்த வருட சஞ்சாரம். பெரியதாக பலன் இருக்காது எனினும் பெரிய கஷ்டங்களும் இருக்காது. மற்ற கிரஹங்களில் 2ல் இருக்கும் சனி பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார். 6ல் இருக்கும் ராகு நோய், கடன், எதிரிகளை கட்டுப்படுத்தி எதிர்பாராத வெற்றி, பணவரவு போன்றவற்றை தருகிறார். இவர்கள் வருடம் முழுவதும் அங்கு இருப்பவர்கள், மற்ற கிரஹங்களில் சூரியன், செவ்வாய்,புதன் அவ்வப்போது நன்மையும், சுக்ரன் பெரும்பாலும் நன்மையும் தருவதால் பொருளாதாரம் நல்ல நிலையில் வருடம் முழுவதும் இருக்கும். சனி கேதுவால் சில எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரிப்பதால் சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். புதுவேலை தொழில் தொடங்க 13.06.21 – 14.11.21 காலம் ஏற்றது. அதேபோல் தடைபட்டுவந்த திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூமி, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், கடந்தகாலத்தில் ஏற்பட்ட வழக்குகள் யாவும் சாதக நிலைக்கு திரும்பும். அவப்பெயர்களும் மாறும். மனதில் உற்சாகம் ஏற்பட்டு எல்லோருடனும் அனுசரித்து போவீர்கள். அதேபோல தெய்வ வழிபாடு, விருந்து கேளிக்கைகள் இல்லத்தில் வரும் புதிய உறவுகளால் நன்மை என்று நன்றாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உடல் ஆரோக்கியத்தில் செலவு ஏற்படலாம், அதே போல குரு வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலமும் புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலமும் முயற்சிகளில் தடை தாமதம், மன உளைச்சல் ஏற்படும். பெரும்பாலும் நன்மை என்பதால் இவைகளை சமாளித்து விடுவீர்கள்
குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து போவீர்கள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் தடைபட்ட திருமணம் கைகூடுதல், குழந்தை பாக்கியம் போன்றவற்றால் மகிழ்ச்சி கூடும். புதியவீடு யோகம் சிலருக்கு அமையும், பெற்றோர்கள் ஆஸீர்வாதங்கள் இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு கூடும். சின்னச்சின்ன சண்டைகள் சில உறவுகளால் ஏற்படலாம்.
ஆரோக்கியம் : தலைவலி, தோல், புண், உஷ்ணம் இவற்றால் சிறுசிறு பாதிப்புகளும், வாழ்க்கை துணைவரது உடல் ஆரோக்கியம் பாதிப்படையலாம், பிள்ளைகளாலும் அடிபடுதல் காயம்படுதல் போன்ற மருத்துவ செலவுகளூம் இருக்கும் பெற்றோர்கள் வழியில் பெரிய பாதிப்புகள் இருக்காது வழக்கமான மருத்துவ செலவுகள் தான் ஆகும். பெரிய பாதிப்பில்லை கவலை வேண்டாம்.
வேலை: உத்தியோகத்தில் மெதுவான முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி, சம்பள உயர்வு இருக்கும். இருந்தாலும் வேலை பளுவும் இருந்து கொண்டு இருக்கும் சக ஊழியர்களுடன் கருத்து மோதலை தவிர்ப்பது நன்மை தரும். கோரிக்கைகள் பெருமுயற்சிக்கு பின் நிறைவேறும். வேலை இழப்புக்கு காரணமாக வாக்குவாதம் இருக்கலாம் இதில் கவனம் தேவை. புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் வெற்றி பெறுவர்.
சொந்த தொழில் : ஓரளவு வளர்ச்சி இருக்கும் லாபங்கள் இருக்கும். இருந்தாலும் எதிரி தொந்தரவுகளை விட கூட்டாளிகளால் மன வருத்தம் இருக்கும். அதே போல் தொழிலாளர்கள் நலனை காப்பது நன்மை தரும். புதிய தொழில் முயற்சிகள் விரிவாக்கம் போன்றவற்றை 14.11.21க்கு பின் தொடங்கலாம். பெரிய பாதிப்புகள் இல்லை கவலை வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது அவசியம்.
கல்வி : மாணவர்கள் உற்சாகமாக படிப்பர் இருந்தாலும் புதன் வக்ரகதி அடையும் காலங்கள் மறதி, கவன சிதறல்கள் அதிகம் இருக்கும். அப்படி உண்டாகும் சமயங்களில் மனதில் இறைவனின் நாமத்தை சொல்லி கொண்டே இருந்தால் போதும். காலையிலும் இரவும் இறைவனின் பெயரை உச்சரிப்பது மன தெளிவை தரும். படிப்பதை மனதில் கொண்டு வரும். பெற்றோர் பெரியோர், ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி நடப்பதும் நலம் தரும். போட்டி பந்தயங்கள் ஓரளவு வெற்றி தரும்.
ப்ரார்த்தனைகள் : தக்ஷிணாமூர்த்தி, விக்னவிநாயகர், யோஹ ஹயக்ரீவரை வழிபடுவது கோயிலில் விளக்கேற்றுவது, நாம ஜெபம் செய்வது நன்மை தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் நல்ல பலனை தரும்.
மகரம் : (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4பாதங்கள், அவிட்டம் 1,2 பாதம் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்): வருடம் முழுவதும் ராசிநாதன் ராசியில் ஆட்சி அதோடு குருபகவான் 2லும், ஜென்மத்திலும்,பின் 2லுமாக சஞ்சாரம், ஜென்மகுரு சிறைவாசம் என்று சொல்லப்பட்டாலும், பெரியதாக பாதிப்பு இல்லை, சில விஷயங்கள் கட்டுப்பட்டு, சில முயற்சிகள் தாமதம் என்ற நிலையில் இருக்கும். 13.06.21 – 14.11.21 வரையிலான காலங்கள் மந்தமாக இருக்கும், வேலை பளு, வருமானத்தில் தொய்வு என்று இருக்கும். வரும் 06.04.21 – 13.06.21 வரையில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி பண சேமிப்பை அதிகரித்து வைத்துகொண்டாலும் முயற்சிகளில் உண்டாகும் வெற்றியை தக்கவைத்து கொண்டாலும் அடுத்த மூன்றுமாதங்களை சமாளித்து விடலாம். 14.11.21 முதல் நல்ல காலம் திரும்ப ஆரம்பிக்கும். பொதுவாக பொருளாதார ஏற்றம் இருக்கும் பண வரவு தாராளமாக இருக்கும். அதை சேமித்தால் நலம் தரும். மேலும் குருபகவான் பார்வை சனிபகவான் பார்வை இரண்டும் வீடு வாகன யோகம், இல்லத்தில் சுப நிகழ்வுகளால் புதிய உறவுகள் உண்டாதல், புதிய வேலை, யாத்திரை, விருந்து என்று நன்றாகவே இருக்கும். பெரிய சங்கடங்கள் இருக்காது காரணம் மற்ற கிரஹங்களும் பெரும்பாலான நேரங்கள் நன்மை தருவதால் கவலை வேண்டாம். அதே நேரம் 5ல் இருக்கும் ராகு செவ்வாய் இணைவு மருத்துவ செலவு மறதியினால் பொருள் விரயம், புகழ், செல்வாக்கு பாதித்தல் கொடுத்த வாக்கை தவறவிடுதல் போன்ற பாதிப்புகள் பண விரயம், வீண் செலவுகள், மன உளைச்சல் என்று கொடுக்கும். பெரும்பாலும் நன்மை அதிகம் என்பதால் தீமைகளை சமாளித்து விடுவீர்கள்.
குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நலம் தரும். பெற்றோர்கள் மன சங்கடம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாமல் பொறுமை நிதானத்துடன் அவர்கள் பேச்சை கேட்பதும் பிற்காலத்தில் துன்பங்களை குறைக்கும். பிள்ளைகளால் சங்கடம் உண்டாகலாம் நிதானமாக கையாள்வது குடும்ப நிம்மதியை காக்கும். திருமணம் குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆரோக்கியம் : வாழ்க்கை துணவர் வழியிலும், பெற்றோர்வழியிலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம், உங்களுக்கு புண், தலைவலி, வயறு உபாதைகளாலும் மன உளைச்சலாலும் மருத்துவ செலவுகள் இருக்கும். பெரும்பாலும் ஏற்கனவே இருந்து கொண்டிருந்த நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை இருக்கும் புதிய பாதிப்புகள் ஆகார வகையால் உண்டாக கூடும். அதில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
வேலை: உத்தியோகத்தில் வேலை பளு இருந்து கொண்டிருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பதும் பொறுமையை கைகொள்வதும் பதவி உயர்வு, சம்பள உயர்வு இவற்றை தரும். மன உளைச்சல் தரும்படி சக ஊழியர்கள் மேலதிகாரிகள் நடந்தாலும் பொறுமையும் நிதானமும் இருந்து அதை கடந்தால் வெற்றி நிச்சயம். விரும்பாத இடமாற்றமும் உண்டாகும் பொருளாதாரம் பாதிப்பை தராது எனினும் செலவுகளும் கூடுவதால் ஒரு மந்த நிலை போல் இருக்கும்.14.11.21க்கும் நல்ல நிலை இருக்கும். புதிய வேலை முயற்சிகள் பலன் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் 14.11.21க்கு பின்னர் நல்ல சூழல் உண்டாகும்.
சொந்த தொழில் : லாபங்கள் வருவது அதிகரித்தாலும் எதிரி போட்டியாளர்கள் தொல்லையும் இருந்து கொண்டிருக்கும் அதனால் பண விரயம் உண்டாகும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது கடந்த காலங்களில் ஏற்பட்ட வழக்குகள் சாதமாக இருக்கு பொறுமை நிதானத்தை கடைபிடிப்பது தொலாளர்களோடு மோதல் இல்லாமல் இருத்தல், புதிய முயற்சிகளை 14.11.21க்கு பின் ஒத்தி போடுவது என இருந்தால் நஷ்டம் ஏற்படாது. பெண் கூட்டாளிகளை கொண்ட நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் காணும். அதே போல் கூட்டாளிகளுடன் விவாதம் வேண்டாம் அனுசரித்து போவது நல்ல பலனை தரும். பொதுவில் இந்த வருடம் நஷ்டம் வராது எனினும் சில சங்கடங்கள் வரும் அதனால் கவனம் தேவை.
கல்வி : மாணவர்கள் பெரு முயற்சிக்கு பின்னர் வெற்றி காண்பர். கூட்டாளிகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை புதிய படிப்பு, வெளிநாட்டு கல்வி, விரும்பிய கல்லூரி இவற்றுக்கு பெற்றோர் பெரியோர் ஆலோசனை கேட்டு செய்வது நலம் தரும். போட்டி பந்தயங்கள் பெருமுயற்சிக்கு பின்னர் ஓரளவு வெற்றி தரும். மீண்டும் மேல் படிப்பை தொடங்க விழைபவர்கள் 14.11.21க்கு பின் முயற்சிக்கவும்.
ப்ரார்த்தனைகள் : திருவேங்கடமுடையான், நின்ற திருக்கோல பெருமாள், கோயிலகளில் விளக்கேற்றி வழிபடுவது இஷ்ட தெய்வம் அல்லது ஓம் நமோ நாராயணா என்று காலை இரவு 108 தடவை உச்சரிப்பது மன உறுதியை தந்து சங்கடங்களை போக்கும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வது நன்மை தரும்.
கும்பம் : (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்): உங்கள் ராசிக்கு வரும் குருபகவான் 13.06.21 – 14.11.21 வரை மீண்டும் மகரத்தில் 12ம் வீட்டில் சஞ்சரித்து விட்டு பின் உங்கள் ராசியை அடைந்து 13.04.22 வரை சஞ்சரிக்கிறார். ஜனன ஜாதகத்தை பொருத்து கெடு பலன்களின் தாக்கம் இருக்கும். எதிலும் ஒரு மந்த நிலையும், பொருள்விரயம், பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மற்ற கிரஹங்களில் புதன் சுக்ரன் பெரும்பாலும் நன்மை தருவதால் ஓரளவு நினைப்பது நிறைவேறும். மற்ற கிரஹங்கள் நன்மை தீமை கலந்து செய்கின்றனர். அமைதி பொறுமை, யோசித்து செயல்படுதல், சிக்கனம், சேமிப்பு என்று இருந்தால் ஓரளவு இந்த வருடம் கடந்துவிடும். அவசரப்படுதல் எவரையும் நம்பி பொருப்பை பணத்தை கொடுப்பது என்று இருந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் சொந்த தொழிலில் அதிக சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனமாக இருப்பது அவசியம். பணப்புழக்கம் சுமாராக இருக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கும். உறவினர்களால் வரும் சங்கடம் பணப்பிரச்சனை இவை மன உளைச்சலை தரும். வாக்குவாதம், எரிச்சலால் வார்த்தைகளை கொட்டுதல் இவை பெரும்பாதிப்பை தரும். இந்த வருடம் வருமானம் சுமார் சுப நிகழ்வுகள் இருந்தாலும் செலவு கட்டுக்கடங்காது, ஒவ்வொரு விஷயத்திலும் பெருமுயற்சி செய்யவேண்டும்.
குடும்பம் : மகிழ்ச்சி ஓரளவு இருந்தாலும் வாழ்க்கை துணைவருடன் அனுசரித்து போவது அவரை கலந்து ஆலோசித்து செய்வது பெற்றோருடன் விவாதம் செய்யாமல் அவர்கள் யோசனையை செயல்படுத்துவது பிள்ளைகள் வழியில் வரும் பிரச்சனைகளை குடும்ப அங்கத்தினருடன் விவாதித்து முடிவெடுப்பது என்று இருந்தால் சந்தோஷமாக குடும்பம் ஓடும்.
ஆரோக்கியம் : ஏற்கனவே இருந்த வியாதிகளின் தாக்கம் 13.06.21 வரை அதிகரிக்கலாம். வாழ்க்கை துணைவர் பெற்றோர்கள் உடல் நிலையிலும் சில மருத்துவ செலவுகளை கொண்டு வரலாம், பயணங்கள் ஒரு ஜாக்கிரதை உணர்வை கொண்டு இருப்பது நலம் தரும். பெரிய பாதிப்புகள் என்பது வருமான குறைவால் மன உளைச்சலை தருவதால் ஆகும். நிதான போக்கை கடைபிடித்து மருத்துவ ஆலோசனை படி நடப்பது தியான பயிற்சி இறை நம்பிக்கை இவை ஓரளவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வேலை: வேலை பளு அதிகரிக்கும், விரும்பாத இடமாற்றம் இருக்கும் பதவி,சம்பள உயர்வுகள் தன் நாக்கினால் கிடைக்காமல் போகலாம். நிதானமும் பொறுமையும் கொண்டு எவருடனும் சண்டை செய்யாமல் தன் வேலையை சரிவர செய்வது அவசியம் இதன் பலன் 14.11.21க்கு பின் கிடைக்கும். புதிய வேலை கிடைப்பதிலும் ஓரளவு சுமாராக இருக்கும் வேலை பளு இருந்து கொண்டிருக்கும். வேலையில் கவனம் தேவை
சொந்த தொழில் : வருமானம் ஓரளவே இருக்கும் பெரிய லாபங்கள் இருக்காது போட்டியாளர்கள் தொல்லை, ஊழியர்களால் பிரச்சனைகள் அதிக செலவு, அதிக உழைப்பு என்று இருக்கும். புதிய முயற்சிகள் தொழில்விரிவாக்கம் 14.11.21 பின்னரே வெற்றி பெறும். கூடுமானவரையில் கடன்வாங்குவதையும், அரசாங்கத்துடனான மோதலையும் தவிர்ப்பது கணக்கு வழக்குகளை சரிவர வைத்து கொள்ளுதல், கூட்டாளிகளுடன் ஆலோசித்து அவர்கள் சொல்லும் யோசனையை ஏற்று செயல்படுவது பெரும் நஷ்டங்களை குறைக்கும். இந்த வருடம் சுமார்.
கல்வி : மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல மதிப்பெண்கள் பெறுவர், ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுவர். விரும்பிய பாடம், கல்லூரி வெளிநாட்டு படிப்பு இவை கிடைக்கும். இருந்தாலும் கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து செல்வது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் தகுந்த ஆலோசனைகளை பெறுவது, எவருடனும் மோதல் போக்கு இல்லாமல் இருத்தல் படிப்புக்கு தடைகள் வராமலும் மன உளைச்சல் ஏற்படாமலும் தடுக்கும். பெற்றோர் ஆஸிரியர் ஆலோசனை படி நடப்பது நலம் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
ப்ரார்த்தனைகள் : ப்ரத்யுங்கராதேவி, சாஸ்தா போன்ற தெய்வங்களை வழிபடுவது துர்க்கை கோயிலில் விளக்கேற்றுவது அம்பாள் ஸ்லோகங்களை சொல்வது போன்றவையும், முடிந்த அளவு அன்ன தானம், வஸ்திர தானம் இயலாதவர்களுக்கு சரீர ஒத்தாசை பண உதவி செய்வதும் நன்மை தரும்.
மீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 4பாதங்கள், ரேவதி 4பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்): உங்கள் ராசிநாதன் 12லும் – 11லும் – 12லுமாக சஞ்சாரம் செய்கிறார். விரயங்கள்(செலவுகள்) சுபம் கருதி நல்ல செலவுகளாக இருக்கும். குழந்தைகள் படிப்பு செலவு, வீடுவாங்குதல், திருமணம் குழந்தை போன்ற செலவுகளாக இருக்கும். அதே போல் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 13.06.21 – 14.11.21 வரையிலும் அதிக பணவரவு, உத்தியோகம்/தொழிலில் மேன்மை புதிய வீடுவாங்குதல், புனித யாத்திரை, விருந்து கேளிக்கைகள் இப்படி நன்மையாகவே இருக்கும் 3ல் ராகு 11ல் சனி ஆட்சி இருவரும் வருடம் முழுவதும் பணத்தை அள்ளித்தருகின்றனர். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் அதேநேரம் 9ல் இருக்கும் கேது பெற்றோர் உடல் நலம் பாதிக்க செய்வார் மன கவலைகளை தருவார் செவ்வாய் 6,8 ராசிகளில் சஞ்சரிக்கும் காலமும் சில எதிர்பாராத தொல்லைகள், மன உளைச்சல், பண விரயம் வழக்கு என தருவார் இருந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மை தருவதாலும் குருபகவான் பார்வை பலம் தருவதாலும் சங்கடங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் இருப்பதும் பண சேமிப்பு அதிகரிக்க செய்யும். மகிழ்ச்சியான வருடமாக அமையும்.
குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம், குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் ஒற்றுமை, புதிய உறவுகளால் மகிழ்ச்சி என இருக்கும். தடை பட்டுவந்த குழந்தை பாக்கியம், திருமணம் இவை நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையும் சிலருக்கு சகோதரவகையால் நண்மையும். விட்ட்ப்போன சொந்தங்கள் திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளுதலும் அதை ஏற்று மகிழ்ச்சியாக இருப்பதும் நடக்கும். பழைய நண்பர்களால் பெரிய நன்மைகளும் உண்டாகும் அது குடும்பத்தினரை உற்சாக படவைக்கும். வீடு யோகம் உடாகும்.
ஆரோக்கியம் : பெற்றோர் வழியில் கொஞ்சம் அதிக செலவு இருக்கும் எலும்பு, வயறு கண், ரத்தம் இவற்றால்ல் அவர்களுக்கு அதிக தொல்லை ஏற்பட்டு செலவு அதிகரிக்கும். ஏற்கனவே இருந்த வியாதிகள் ஓரளவு கட்டுப்படும். பிரயாணங்களின் போது கவனம் தேவை விபத்து அடிபடுதல் என்று வைத்திய செலவு உண்டாகும். மற்றபடி பெரிய ஆரோக்கிய குறைபாடு இருக்காது.
வேலை: உற்சாகம் ஏற்படும் பதவி உயர்வு சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம், அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுதல், புதிய கடன்கள் கிடைத்தல், குடும்பத்தேவைகள் நிறைவேறுதல், உத்தியோகத்தால் பிரிந்து இருந்த குடும்பங்கள் ஒன்று சேர்தல், இவை இருந்தாலும் அவ்வப்போது வேலை பளு அதிகரித்தல் அதனால் சிறு சஞ்சலம் சோம்பேறித்தனம் இவை உண்டாகும். இருந்தாலும் பெரும்பாலும் நன்மை புதிய வேலைக்கு வெளிநாட்டு வேலை முயற்சிப்பவருக்கு அது கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சொந்த தொழில் : லாபம் அதிகம் வரும் அதே நேரம் விரயமும் அதிகம் இருக்கும். ஏற்கனவே வாங்கிய கடன்கள் அடைந்து புதிய கடன் உண்டாகும், போட்டிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள் அரசாங்க உதவி வங்கி கடன் போன்றவை எளிதில் கிடைக்கும். வருமான வரி போன்றவற்றால் சில சிக்கல்கள் கடந்த காலத்தில் தாமதமாக வரி கட்டியதால் கொஞ்சம் அதிப்படியாக + பெனாலிடி போன்று கட்டவேண்டியிருக்கும். கணக்கு வழக்குகளை சரிவர வைத்து கொள்ள வேண்டும். புதிய தொழில் ,விரிவாக்கம் போன்றவைகளை 13.06.21 – 14.11.21க்குள் ஆரம்பித்து விடுவது நன்மை தரும் பொதுவில் பெரிய பிரச்சனைகள் இருக்காது கடந்த காலங்களில் வரி கட்டாமல் இருந்தால் அரசுடன் மோதல் போக்கு இருந்தால் அது இப்பொழுது சிறு பாதிப்பை தரும்.
கல்வி : புதனும் குருவும் நன்றாக இருப்பதால் பாடங்களில் அதிக மதிப்பெண்களை பெறலாம். கவனம் அதிகரிக்கும். புதிய பாடங்கள், கல்லூரி, வெளிநாடு போன்ற முயற்சிகள் வெற்றியை தரும் கொஞ்சம் கூடுதல் பணம் செலவாகும். இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர்களை மகிழ்விப்பீர்கள். உடல் நலத்தில் அக்கறை தேவை கேது, செவ்வாய் சிறு பாதிப்பை தரும், வெளியூர்களுக்கு செல்லும்போது அதிக கவனம் நிதானம் தேவை.
ப்ரார்த்தனைகள் : நன்மைகள் அதிகம் இருப்பதால் உங்களுக்கு மிகவும் பிடித்த தெய்வத்தின் பெயரை உச்சரித்து கொண்டிருங்கள், குல தெய்வ வழிபாடும் விளக்கேற்றுதல் வஸ்திரம் சாற்றி படையல் (அமுது படைத்தல்) செய்தல் இவை நன்மை தரும். மேலும் தாராளமாக அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்ற தான தர்மங்களை செய்வதால் நன்மை அதிகரிக்கும்.
!! சுபம் !!