சார்வரி வருஷம் தை மாதம் ராசி பலன்கள்

வருகின்ற 14.01.2021 வியாழக்கிழமை காலை 08.06.37க்கு தனூர் ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார் இது லஹரி அயனாம்ஸப்படி (ஜகந்நாத் ஹோரா). 12.02.2021 இரவு 08.58 மணி வரை மகரத்தில் சஞ்சாரம் செய்வார்.

வாக்கியப்பஞ்சாங்கப்படி சூரியோதய நாழிகை 12.45க்கு (பகல் 11.08மணிக்கு) பெயர்ச்சி ஆகிறார்.

ஷட் பலம் : செவ்வாய் 173% நன்மை, புதன் 127% தீமை

அஷ்டவர்கமும்  செவ்வாயின் வலு அதிகம் நன்மையை தரும்

புதன் & கேது கெடுதலை தரும். மிதுனம், கன்னி, கும்பம், மேஷம் ராசிகளுக்கு கவன நாட்கள் கொடுக்க பட்டு இருக்கிறது. அந்த நாளில் பொறுமை நிதானம் அவசியம். (ராசிகள் கெடுதலின் அளவை கொண்டு வரிசைப்படுத்தப்பட்டு இருக்கு)

மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய : 45/100

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி, பலமும் கூட அவரும், சுக்ரனும் பணவரவையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தருவார் அதோடு அவர் 28.01.21க்கு பின் மகரத்தில் வந்து செலவுகளை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப செலவுகளும் இருக்கும். வேலையில் சொந்த தொழிலில் அனைத்து பிரிவினருக்கும் வருமானம் அதிகரிப்பு, மனதில் தைரியம் எல்லாம் இருக்குக். சூரியன் பத்தில் உத்தியோகத்தில் ஜீவனத்தில் நன்மை செய்யனும் ஆனால் 5க்குடைய சூரியன் பகை வீட்டில் தன் 5வீட்டிலிருந்த் 6ல் மறைவு என்பதால் பொருளாதாரம் உத்தியோக நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பணம் வரும் ஆனால் செலவும் அதிகம் ஆகும் வைத்திய செலவுகள் தாய் தந்தை வழியிலும் இருக்கும். குரு தொழிலில் ஒரு ஏற்றம் தந்தாலும் இடமாற்றம் தருவார் மேலும் உடன் பிறந்தோர் வழியில் சிறு உதவிகளையும் தருவார். சனி உத்தியோகத்தில் பாராட்டை தேடித்தருவார். சனியின் பார்வை வாழ்க்கை துனை மூலம் நன்மை தரும். தாயார் உடல் பாதிப்பையும் தரும். புதன் பெரிய நன்மை செய்யவில்லை 30.01.2021 வரை தான் ஆரோக்கியம் வியாபாரத்தில் லாபம், பொருளாதார அபிவிருத்தி உறவுகளின் நெருக்கம் என தரும் அதன் பின் வக்ரியாகி 03.02.21 வரை வாகனத்தால் விபத்து, மன உளைச்சல் அபகீர்த்தி களங்கம் உண்டாகுதல் வீண் வாக்குவாதம் என்று மன சங்கடத்தையும் பொருள் விரயத்தையும் தரும் கவனம் தேவை. மேலும் 2ல் இருக்கும் ராகு வீடு மனை போன்றவற்றால் வழக்கு தீக்கிரை, அல்லது பணம் முடங்குதல் போன்றவை இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் முன்னேற்றம் தடைபடும். 8ல் புதன் நக்ஷத்திர காலில் இருக்கும் கேது நண்பர்கள் சூழ்ச்சி, பொருள் திருட்டு போகுதல் நோய் பாதிப்பு எல்லா செயல்களும் தடை படுதல் மேலும் தேவையில்லாத தொடர்புகள் உண்டாகி சங்கடம் ஏற்படுதல் என்று இருக்கும். பொதுவில் இந்த மாதம் நன்மை 45% கெடுதல் 65% என்று இருப்பதால் அனைத்து பிரிவினரும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

சந்திராஷ்டமம் : அஸ்வினி – 06.02.21, பரணி – 07.02.21, கார்த்திகை 1 – 08.02.21

கவன நாட்கள்  : 30.01.21 முதல் 03.02.21 வரை

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : முருகனை வணங்க வேண்டும். விளக்கேற்றுதல் சஷ்டி கவசம் படித்தல், செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்தல், அன்னதானம், ஏழைக்கு பொருள் உதவி செய்தல் போன்றவை நன்மை தரும்.

ரிஷபம் : கார்த்திகை 2,3,4 பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதம் முடிய : 60/100

மாதம் பிறந்த முதல் 27.01.21 வரை ராசிநாதன் சுக்ரன் அவ்வளவு நன்மை தரமாட்டார். 4க்குடைய சூரியனும் மாதம் முழுவதும் 9ல் சஞ்சரித்தாலும் பெற்றோர்வகையில் மருத்துவ செலவை கொடுப்பார். சுக்ரன் 28.01.21 முதல் பொருளாதாரத்தில் முன்னேற்றம், கல்வியில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம், தர்ம கைங்கர்யங்களில் ஈடுபடுதல் அதனால் மன நிம்மதி, வீட்டில் சுப நிகழ்ச்சி என்று கொடுப்பார். மேலும் 9ல் இருக்கும் சனி மற்றும் குரு  ஆடம்பரபொருள் சேர்க்கை சிலருக்கு குழந்தை உண்டாகுதல், பெண்கள் மூலம் நன்மை, ஜீவன வகையில் உயர்வு, செல்வாக்கு அதிகரித்தல், விவசாயிகளுக்கு நன்மை, சிலர் வீடு வாங்கலாம், அயல்நாட்டு தொடர்புகள், வேலை படிப்பு, சொந்த தொழில் இவை விருத்தியாகும். அதே நேரம் தாய்வழி உறவுகள் பிரிவு இருக்கும். 12ல் ஆட்சியான செவ்வாய் சுப செலவுகள், வீடு வாங்குதல், நோய்,கடன், எதிரிகள் இவைகள் நீங்குதல், மனதில் ஒரு உத்வேகம் செயல்கள் வெற்றி என்று தருவார். புதன் அவ்வளவு நன்மை செய்யவில்லை, தீராத தொல்லை, வீண் விவாதம், பெயர் கெடுதல் இவற்றையும் கொடுப்பார் உத்தியோகத்தில் முன்னேற்றம், தொழிலில் போட்டி குறைதல் லாபம் வருதல், விளைச்சல் அதிரித்து பண வரவை தாராளமாக செய்வார் மாணவர்கள் கல்வியில் நல்ல நிலை அடைவர். ராகு முயற்சிகளை தடை செய்வார், பண விரயம், கேதுவால் வாழ்க்கை துணைவர் நலம் கெடுதல் மருத்துவ செலவு இப்படி எல்லாம் இருந்தாலும் சுக்ரன்,செவ்வாய், குரு, சனி, கொஞ்சம் புதன் என்று நன்மைகளை செய்வதால் இந்த மாதம் 60% நன்மை இருக்கும். உங்கள் ஜாதகத்தில் தன காரகன் குரு மற்றும் தனாதிபதி புதன் நன்றாக இருந்தால் கெடுபலன்கள் வெகுவாக குறைந்துவிடும்.

சந்திராஷ்டமம் : கார்த்திகை 2,3,4 – 08.02.21, ரோஹிணி – 09.02.21, மிருகசீரிடம் 1,2 – 10.02.21

கவன நாள் 26.01.21 – 30.01.21 வரை

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயலும் : மஹாலக்ஷ்மி . அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தாயாருக்கு விளக்கேற்றி துளசிமாலை சாற்றுதல் அன்னதானம், வஸ்திரதானம், ஏழைகளுக்கு கல்வி உதவி போன்றவை நல்ல பலன் தரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய : 40/100

மேலோட்டமாக பார்த்தால் ராசிநாதன் உட்பட பெரும்பாலான கிரஹங்கள் 8ல் அதனால் நல்ல பலன்கள் இல்லை. செவ்வாய்,ராகு,கேது மட்டுமே பூரண நற்பலன்களை மாதம் முழுவதும் தருகிறார்கள். தனிப்பட்ட ஜாதகங்களில் கிரஹ நிலைகளை பொறுத்து இது கூடவோ குறையவோ அமையும். செவ்வாய் 11ல்  எதிரிகளை வென்று நினைத்ததை சாதித்து கொள்வீர்கள், அதிகார பதவி, உத்தியோகத்தில் உயர்வு, சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம், பொருளாதார நிலை மேம்படுதல், சமூகத்தில் கௌரவம், உறவுகளின் நெருக்கம், இல்லத்தில் மகிழ்ச்சி, 12ல் இருக்கும் ராகு சுப செலவுகள், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள், இதுவரை இருந்துவந்த கடன்கள் அடைபடுதல் வழக்குகள் சாதகமாதல், மறைமுக எதிரிகள் விலகுதல் என்றும், கேது 6ல் பெரியமனிதர்களின் ஆதரவு, அரசாங்கத்தால் நன்மை மனதில் பயம் நீங்குதல் என்று செய்வார் சந்திரன் ஜனவரி 19,20 தேதிகளில் கொஞ்சம் கவலை, 21,22,23 தேதிகளில் மகிழ்ச்சி விருந்து கேளிக்கைகள், வெளியூர் பயணம் அதில் நன்மை, 26,27 தேதிகளில் ஓரளவு சந்தோஷம் என்று தரலாம். பொதுவாக இருக்கும் பணத்தை சிக்கனமாக செலவழிப்பது, நிதானித்து செயல்படுவது பொறுமை வார்த்தைகளை கவனமாக விடுதல் என்று இருக்க வேண்டும். 8ல் இருக்கும் ராசிநாதன் உட்பட சூரியன், சுக்ரன், சனி,குரு அனைவரும் நன்மை தரவில்லை செயல்பாடுகளில் தடை, மனக்கலக்கம், வயிறு கண் சம்பந்தப்பட்ட உபாதைகள், உத்தியோக மாற்றம், இடமாற்றம், பெண்களால் தொல்லை, பொருளாதாரத்தில் இறக்கம், கடன் வாங்குதல், செய்யும் தொழிலில் நஷ்டம், உத்தியோகத்தில் தொல்லை, வாக்கில் கடுமை உண்டாதல், விபத்துகள், இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. இஷ்ட தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டு எந்த சமயத்திலும் நேர்மையை விடாமல் எல்லோருடனும் அனுசரித்து போய்க்கொண்டிருந்தால் பாதிப்புகளிலிருந்து தப்பலாம். இருந்தாலும் ஒரு ஆறுதல் 8ல் கிரஹங்கள் ஒன்றுக்கொன்று மற்றவர்கொடுக்கும் பலனை தடை செய்வதால் பெரிய கஷ்டங்கள் வராது தனிப்பட்ட ஜாதக கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் கெடுதல் குறையும். பொதுவில் 40% நன்மை நடக்கும்.

சந்திராஷ்டமம் : மிருகசீரிடம் 3,4 – 14.01.21, பிப் 9 &10, திருவாதிரை – ஜன 15,பிப் 11,

புனர்பூசம் 1,2,3 – ஜன 16, பிப் 12

கவன நாட்கள் : 30.01.21 முதல் 03.02.21 முடிய

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல் : இஷ்ட தெய்வம் & பரமேஸ்வரன், சிவ நாமத்தை உச்சரிப்பது நல்லது திங்கள் கிழமைகளில் சிவனுக்கு பாலபிஷேகம் செய்ய பால் கொடுக்கவும். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது நல்லது.

கடகம் : புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம் முடிய : 75/100

பெரும்பாலான கிரஹங்கள் 7ல் நன்மை தீமை கலந்து செய்யும், ராசிநாதன் சந்திரன் கன்னி, தனூர், மகரம், ரிஷபம் இவற்றில் சஞ்சரிக்கும் நாளில் மிகுந்த நன்மையை செய்வார், 11ல் ராகு இரட்டை வருமானம், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி, உத்தியோகத்தில் பதவி சம்பள உயர்வு, சொந்த தொழிலில் லாபம், அனைத்து துறையினருக்கும் அதிக நன்மை , எதிர்பார்ப்புகள், திட்டங்கள் நிறைவேறுதல் சுறுசுறுப்பு என்று செய்வார். புதன் வக்ரியாகும் காலம் 30.01.21 முதல் 03.02.21 வரை ஓரளவு நன்மையும் தெய்வனுகூலம், மன நிம்மதி என்று தருவார். குரு எப்படிப்பட்ட துன்பத்தையும் தீர்ப்பார் பொருள் வரவு, புத்திரபாக்கியம், மாணவர்கள் கல்வியில் சிறத்தல், கல்வி துறையில் மற்றும் எழுத்து துறை பத்திரிகை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும், பாராட்டு பெருமை கிடைக்கும், சேமிக்கும் பழக்கம் உண்டாகும், 7ல் சுக்ரன் 27.01.21 முதல் விருந்து கேளிக்கைகள், வாழ்க்கை துணையின் உடல் நலம் முன்னேற்றம், குழந்தை பாக்கியம், பொருளாதார ஏற்றம் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியம் உண்டாகுதல், சனிபகவான் 7ல் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யனும் ஆனால் அவர் இங்கு நன்மையை செய்கிறார். ராசியை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி புதுவீடு குடிபோகுதல் என்றும், உத்தியோகம் தொழில் இவற்றில் முன்னேற்றம் என்று இருக்கும். அதே நேரம் சூரியன் பெற்றோரால் மருத்துவ செலவு, மன கஷ்டம் என்று கொடுப்பார் அரசாங்க வேலைகள் தாமதம் ஆகும். கேதுவும் தன் பங்குக்கு குழந்தைகள் ஆரோக்கியத்தில் பாதிப்பு மருத்துவ செலவு, தனக்கே கண், குடல், வாயு போன்ற தொல்லைகளை கொடுத்து மருத்துவ செலவை வைப்பார், மனக்குழப்பங்களை உண்டாக்குவார். இருந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மைகளை செய்வதால் 75% நன்மை உண்டாகும். கொஞ்சம் நிதானம் இருந்தால் பெரியபாதிப்புகள் இல்லை

சந்திராஷ்டமம் : புனர்பூசம் 4 – ஜன 16, பிப் 12,  பூசம் – 17.01.21, ஆயில்யம் – 18.01.21

கவன நாள் ; 25.01.21 முதல் 27.01.21 வரை

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பிள்ளையார், துர்கை, கோயிலில் விளக்கேற்றவும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் நன்மை தரும்.

சிம்மம் : மகம்,பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய : 50/100

ராசிநாதன் 6ல் அனுகூலம், நோய் அகலும், மனம் தெம்பாக இருக்கும், பிரச்சனைகள் ஓடிவிடும், சனி 6ல் ஆட்சி வழக்குகள் சாதகம், எதிரிகள் மறைவர், பொருளாதார ஏற்றம் ஏற்படும், கடன் தொல்லை குறையும், புதுவீடுவாங்குதல், இல்லத்தில் திருமணம் நடத்தல், உத்தியோகத்தில் உயர்வு சொந்த தொழில், விவசாயம் போன்றவற்றில் அதிகலாபம், பண சேமிப்பு என்று நன்றாகவே இருக்கும். 10ல் ராகு இரட்டை வருவாய் பூமி, நிலம் வாங்குதல் விரும்பிய இடமாற்றம், பெரியோர்களின் ஆசிகள், தொழில் செய்வோருக்கு நாள்பட்ட பொருட்கள் விற்று லாபம் உண்டாகுதல்,கடந்தகாலம் உழைத்தமைக்கு இப்பொழுது வருமானம் வருதல், புதன் 26.01.21 வரையும் பின் 03.02.21 – 12.02.21 வரையும் ஓரளவு நன்மை தருகிறார் குடும்பத்தில் நல்ல சூழல் ஒற்றுமை உண்டாகும். மற்ற கிரஹங்கள் அனைத்தும் நன்மை செய்யவில்லை, மன உளைச்சல் பிரயாணத்தில் அலைச்சல், விபத்து ஏற்படுதல், எதிரி தொல்லை உடல் சோர்வு பொருளாதாரத்தில் சிக்கல்,கடன் கொடுத்து இருந்தால் அது வசூல் ஆவது கடினம். மேலும் சந்திரன் மீனத்தில் சஞ்சரிக்கும் ஜனவரி 18,19,20 நாட்கள் சந்திராஷ்டம் அப்பொழுதும் விருச்சிகம், தனூர், மகரம், ரிஷபம் இவற்றில் சஞ்சரிக்கும்போதும் மிகுந்த மன உளைச்சல் பண விரயம், நேரம் விரையம் உழைப்பு வீணாகுதல் போன்றவற்றையும் உறவினர் நண்பர்களுடன் பகையையும் செய்வார். கேது 4ல் மிகுந்த கவனம் தேவை தாயார் உடல் நலக்குறைவு, மனசோர்வு, தூக்கம் இன்மை, உறவினர் மறைவு போன்றவையும் செயல்பாடுகளில் குழப்பம் உண்டாக்கி அதில் நஷ்டத்தையும் செய்வார். பொதுவில் கலந்து கட்டி ஒரு 50% நன்மை என்ற அளவில் இருக்கும். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: மகம் -19.01.21, பூரம் – 20.01.21, உத்திரம் 1ம்பாதம் – 21.01.21

கவன நாட்கள் : 27.01.21 முதல் 02.02.21 வரை (புதன் & கேது கெடுதல் தரும்)

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல் : ஸ்வாமி ஐய்யப்பன் மற்றும் எல்லை தெய்வங்கள் இந்த கோயில்கள் சென்று விளக்கேற்றுவது ஐயப்பன் ஸ்லோகங்களை சொல்வது, ஏழை எளியோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவுவது, ஏழை மாணவன் படிக்க உதவி செய்வது போன்றவை நன்மை தரும்.

கன்னி : உத்திரம் 2,3,4 பாதம் முடிய, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை :

ராசிநாதன் புதன் 26.01.21 முதல் 03.02.21 வரை பொருளாதாரத்தில் ஏற்றம், எடுத்த செயல்களில் வெற்றி குடும்பத்தில் சுபிக்ஷம் நல்ல பெயர் மன அமைதி என்று தருகிறார் மற்ற நாட்களில் அவ்வளவு நன்மை செய்யவில்லை. 5 இருக்கும் சூரியன், சுக்ரன் இருவரும் நோயை அதிகரிக்க செய்வர். பெண்களால் தொல்லை, கண் பாதிப்பு, பெரியோர்கள், மேலதிகாரிகள், அரசு இவர்களால் மனஸ்தாபம் உண்டாகும். சுக்ரன் 27.01.21 வரை பணவரவு, எல்லோருடனும் சுமூக உறவு கேளிக்கைகள், மகிழ்ச்சி என்று தருவார். குரு 5ல் மழலை உண்டாகுதல், புதியவீடு குடி போகுதல் பூமி நில ப்ராப்தி உண்டாகுதல், பொருளாதார முன்னேற்றம், வேலையில் பதவி சம்பள உயர்வு சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைத்தல் அசலூர் வெளிநாடு செல்லும் யோகம், மகிழ்ச்சி என்று கொடுப்பார் அதே நேரம் சனிபகவான் குழந்தைகளால் மன வருத்தம், வைத்திய செலவு, கர்பமாய் இருக்கும் பெண்களுக்கு சிதைவு ஏற்படுதல், குழப்பம், செயல்களில் தடை என்று இருக்கும். மேலும் 9ல் ராகுவும் குடும்பத்தில் அமைதியின்மையை செய்வார். ஆனால் 8ல் இருக்கும் செவ்வாய் ஆட்சியாக இருப்பதாலும் 2ம் இடத்தை பார்ப்பதாலும் ஓரளவு நல்லது நடக்கும். விபத்து ஏற்படுவதிலிருந்து தப்பித்தல், மன தைரியம் வேலையில் அக்கறை, சுறுசுறுப்பு என்று தருவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து நன்மை உண்டாகும்.3ல் கேது நன்மைக்கு பதில் குழப்பத்தை தரும். எதிர்பாராத தடங்கல், மந்த நிலை, உடல் பாதிப்பு, சாப்பாடு செரிமானம் ஆகாமல் அவஸ்தை பொதுவில் இந்த மாதம் மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் பாதிப்புகள் குறையும். 55% நன்மை நடக்கும்

சந்திராஷ்டமம்: உத்திரம் 2,3,4 – ஜனவரி 21, ஹஸ்தம் – ஜனவரி 22, சித்திரை 1,2 – ஜனவரி 23

கவன நாட்கள்    28.01.21 முதல் 03.02.21 வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : திருப்பதி வேங்கடாஜலபதி மற்றும் நின்ற திருக்கோல பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுதல் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தல் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் முதியோருக்கு உதவுதல்

துலாம் : சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய : 75/100

மேலோட்டமாக பார்த்தால் 4ல் சனி குரு,சூரியன், புதன்,சுக்ரன், 2ல் கேது, 8ல் ராகு ம்ஹூம் நன்மை மாதிரி தெரியலை அப்படின்னு கவலை படவேண்டாம். கிரஹ யுத்தம் அது எதிர்பாராத நன்மை தரும். ராசிநாதன் சுக்ரன் 3ல் 27.01.21 ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் லாபம் உண்டாகும் லாகிரி வஸ்து ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்வோர், மீடியா, விளம்பரம், புகைப்பட தொழில் செய்வோர் உத்தியோகம் செய்வோர் நல்லபலனை பெறுவர், மேலும் 7ல் இருக்கும் செவ்வாய் லாபத்தை தேடி கொண்டுவந்து தரும் மகிழ்ச்சி கணவன் மனைவி ஒற்றுமை, குடும்பத்தில் சுப நிகழ்ச்சி, ஜீவன வகையில் லாபம் என்று இருக்கும். 4ல் சூரியன், குரு, சனி, சுக்ரன் சஞ்சாரம் கொஞ்சம் கவனம் தேவை, வழக்குகள், நண்பர்கள் உறவினர் தொல்லை, வீன் பழி வேலை இழத்தல், பொருளாதார பாதிப்பு என்று இருக்கும் ஆனால் புதனும் சந்திரனும் மற்றும் 8ல் இருக்கும் ராகுவும் காப்பாற்றி விடுகிறார்கள். ராகு கெடுதல் செய்வதற்கு பதில் செவ்வாயின் நக்ஷத்திரக்காலிலும், கேது புதனின் நக்ஷத்திரத்திலும் இருந்து செவ்வாய் புதன் கொடுக்கும் நன்மைகளை இவர்கள் செய்கிறார்கள். துணிச்சல் ஏற்படும். போட்டிகளில் வெற்றி உண்டாகும் சேமிப்பு பெருகும். ரொம்ப்ப மனசை போட்டு அலட்டிக்க வேண்டாம் தனிப்பட்ட ஜாதகம் சுமாராய் இருந்தால் கூட பெரிய பாதிப்புகள் இல்லை ஒரு கிரஹம் கெடுதல் செய்ய நினைத்தால் இன்னொருகிரஹம் அதை சமன் செய்து விடுவதால் லாபமாக மாறி விடுகிறது பொதுவில் இந்த மாதம் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும் பணவரவு தாராளம், நினைத்தது நடக்கும். 75% நன்மை

சந்திராஷ்டமம் : சித்திரை 3,4 – ஜனவரி 23, ஸ்வாதி – ஜனவரி 24, விசாகம் 1,2,3 – ஜனவரி 25

கவன நாட்கள் : 30.01.21 முதல் 03.02.21 வரை

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : நரசிம்மர் யோக நிஷ்டையில் இருக்கும் நரசிம்மரை மனதில் தியானித்து அவருக்கு விளக்கேற்றவும். உங்கள் வருமானம் அதில் 10சதவீதம் அன்னதானம் செய்யவும் ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்தல் நன்மை தரும்.

விருச்சிகம் : விசாகம் 4ம்பாதம், அனுஷம், கேட்டை : 90/100

ஜென்மத்தில் கேதுவும் 7ல் ராகுவும் கொஞ்சம் படுத்தினாலும் ராசிநாதன் செவ்வாய் பூரண பலம், மற்றும் 3ல் இருக்கும் சூரியன், குரு,சனி,புதன்,சுக்ரன் அதிக நன்மைகளை செய்வதால் இருக்கும் ராசிகளில் உங்களுக்கு தான் அதிக நன்மை உண்டாகும். எவ்வளவு நாள் துன்பங்களை அனுபவித்து இருப்பீர்கள் இனி தை முதல் நன்மையே அதிகம் நடக்கும். ராசிநாதன் 6ல் வியாதிகள் குணம் அடையும், வழக்குகளில் வெற்றி, செல்வாக்கு உயரும், வருவாயில் லாபம் உண்டாகும், குடும்பத்தில் லக்ஷ்மீகடாக்ஷம், சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி, ஜீவன வகையில் நல்ல பெயர் என்று இருக்கும். 3ல் சூரியன், சனி, சுக்ரன் இவர்கள் பணவரவு, நினைத்த செயல்கள் நடத்தல், உத்தியோகம் வியாபாரம் இவற்றில் வருமானம் லாபம் அதிகரித்தல், வெளிநாட்டு உத்தியோகம், அல்லது புதிய உத்தியோகத்துக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைத்தல், சொந்த தொழில் தொடங்க நினைப்போருக்கு ஏற்றகாலம், அனைத்து பிரிவினருக்கும் லாபம் உண்டாகும், 3ல் குரு புதன் அவ்வளவு நன்மை தரவில்லை என்றாலும் கெடுதல் இல்லை, சுக்ரன் 2ல் 27.01.21 வரை குடும்பத்தில் புதுவரவு, குதூகலம் தீர்த்த யாத்திரைகள், கேளிக்கைகள் என்று தருகிறார். அதன் பின் ஓரளவு பணவரவை தருகிறார். ஜென்ம கேது அபகீர்த்தியை உண்டாக்க செய்வார் கவனமுடன் வார்த்தைகளை விடுவது, பிறருக்கு உத்திரவாதம் தராமல் இருப்பது ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் என்று இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை, 8ல் ராகு கெடுதல் செய்வதற்கு பதில் நன்மை செய்வது அவர் ராசிநாதன் செவ்வாயின் நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பதால் பொதுவில் இந்தமாதம் 90% நன்மை உண்டாகும் கவலையே வேண்டாம்.

சந்திராஷ்டமம் : விசாகம் 4 – ஜனவரி 25, அனுஷம் – ஜனவரி 26, கேட்டை – ஜனவரி 27

கவன நாட்கள் : 30.01.21 முதல் 03.02.21 வரை

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர், முருகனை நினைத்து கொள்ளுங்கள் தைபூச தினம் அன்று அன்னதானம் செய்யுங்கள், நீர்மோர் கொடுங்கள்

தனூர் : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய : 60/100

ராசிநாதன் குரு 2ல் பெருமூச்சு விட வைப்பார் சரிந்திருந்த பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் காணும், 2ல் சனி,சுக்ரன்,புதன் அரசால் நன்மை, பெரியோர்கள் ஆசீர்வாதம், குடும்பத்தில் புதுவரவு தொழில் உத்தியோகம் இவற்றில் உயர்வு, கணவன் மனைவி ஒற்றுமை எதிர்பாராத தன வரவு, எடுத்த செயல்களில் வெற்றி என்று இருக்கும். 5ல் செவ்வாய் ஆட்சி குழந்தைகளின் கல்வி சிறக்கும் வைத்திய செலவுகள் குறையும், சுப நிகழ்ச்சிகள், கேளிக்கைகள் இதனால் சந்தோஷம் அதிகரிக்கும் இருந்தாலும் 2ல் சூரியன் பொருளாதார நெருக்கடி தலை கண் போன்ற பாதிப்புகளை செய்வார் வங்கி கடன் போன்றவை தாமதம் ஆகும். சிக்கனமாக இருந்தால் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. புதன் 26.01.21 வரையும் பின் 30.01.21 முதலும் 2ல் இருந்து கொண்டு நன்மை செய்வார். எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தன் பேச்சு திறமையால் முறியடித்து வெற்றி பெறும் நிலை தருவார் முன்னேற்றம் ஜீவன வகையில் நன்றாக இருக்கும்.

ராகு 6ல் நோய், கடன் அகலும் எதிரிகள் தொல்லை மறையும், மறைமுக வருமானம் உண்டாகும். பெரியமனிதர்களின் நட்பு ஆதரவு உண்டாகும். அரசியலில் இருப்போர் பதவியை பெறுவர். கேதுவும் கூட 12ல் இருந்து கொண்டு சுபம் கருதி செலவுகளை செய்வார். நோய் நொடி, வழக்குவியாஜிதங்கள், மறைமுக எதிரி தொல்லை கடன்கள் அனைத்தும் இல்லாமல் செய்துவிடுவார். தனிப்பட்ட ஜாதகத்தில் கிரஹ வலிமைகள் நன்றாக இருந்தால் நன்மை அதிகரிக்கும். பொதுவில் ஒரு 60% நன்மை உண்டாகும். இருந்தாலும் புதன் 26.01.21 முதல் 30.01.21 வரையிலும், சுக்ரன் 27.01.21 வரையிலும் கொஞ்சம் பாதிப்புகளை செய்வார். சிந்திக்கும் திறன் குறையும், உறவுகளுடன் மனஸ்தாபம், பெண்களால் தொல்லை என்று இருக்கும்.

சந்திராஷ்டமம்: மூலம் – ஜனவரி 28, பூராடம் – ஜனவரி 29, உத்திராடம் 1ம்பாதம் – ஜனவரி 30

கவன நாட்கள் : 26.01.21 முதல் 30.01.21 வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அம்பாள் , தக்ஷிணாமூர்த்தி, கோயிலில் விளக்கேற்றவும் லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது, தான தர்மங்கள் செய்வது அன்னதானம் செய்வது உடல் ஊனமுற்றோர்க்கு உதவுதல் நன்மை தரும்.

மகரம் : உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய:  

ராசிநாதன் சனி ஆட்சியாக இருப்பதால் ஓரளவு நன்மை உண்டாகும். நற்பெயருக்கு களங்கம் உண்டாவதை தடுப்பார். குடும்ப உறவினர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஜென்மத்தில் இருக்கும் சூரியன் மன கஷ்டம், வியாதி,பிரயாண களைப்பு அசதி, நண்பர்கள் உறவுகளால் தொல்லை என்றுதருவார், 4ல் இருக்கும் செவ்வாய் நன்மைகளை தருகிறார் 10 இடத்தை நேராக பார்ப்பதால் ஜீவனத்தில் லாபம் வரும் உத்தியோகம், சொந்த தொழில் இவற்றில் முன்னேற்றம் அதிகம் இருக்கும் பொருளாதார நிலை மேம்படும். இவர் ஒருவரே மாதம் முழுவதும் நன்மை தருகிறார். ராசியில் இருக்கும் புதன் பணத்தட்டுப்பாடு, அலைச்சல், கவன குறைவு, செயல்கள் தடை என்று கொடுத்தாலும், கும்பராசியில் சஞ்சரிக்கும்போது 26.01.21 முதல் 30.01.21 வரை நல்ல வாக்கு, எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியை தருதல் என்று நன்மை செய்கிறார். குரு ராசியில் இருந்து கொண்டு ஒரு சிறைவாசம் போன்ற நிலையை தருகிறார்.

பணத்தட்டுப்பாடு, கௌரவம் பாதித்தல் பிறரின் சொல்லுக்கு கட்டுப்படுதல் செயல்பாடுகள் முடிக்க முடியாமல் போகுதல் என்று இருக்கும். மன உளைச்சலும் இருக்கும். சுக்ரன் 28.01.21 வரை சுப செலவுகளை கொடுத்தாலும் மாதம் முழுவதும் பெண்களால் நன்மை, உத்தியோகத்தில் சொந்த தொழிலில் என்று அனைத்து பிரிவினருக்கும் வருமானத்தை அதிகரித்து மகிழ்ச்சி தருகிறார். 11ல் இருக்கும் கேது பொருளாதார சரிவை மீட்டு பணத்தட்டுப்பாடில்லாமல் செய்வார் அதேநேரம் 5ல் இருக்கும் ராகு வியாதிகளை கொடுத்து வைத்திய செலவுகளை வைப்பார். இருந்தாலும் செவ்வாய் நக்ஷத்திரத்தில் இருப்பதால் பெரிய கெடுதலை செய்யமாட்டார். பொதுவில் நண்மைகள் தீமைகள் கலந்து இருக்கும். கொஞ்சம் கவனம் நிதானம் இருந்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது. தனிப்பட்ட ஜாதக கிரஹ நிலைகளை பொருத்து தீமைகளின் அளவுகள் இருக்கும்.

சந்திராஷ்டமம்: உத்திராடம் 2,3,4  – ஜனவரி 30, திருவோணம் – ஜனவரி 31, அவிட்டம் 1,2 – பிப்ரவரி 1

கவன நாட்கள் : 14.01.21 – 27.01.21 முடிய

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஹயக்ரீவர் & ஆஞ்சநேயர், சனிக்கிழமைகளில் விளக்கேற்றி அனுமான் சாலீசா, ஹயக்ரீவர் ஸ்லோகம் சொல்வது நல்லது, தான தர்மங்கள், கோயிலில் உழவாரப்பணி, அன்னதானம் போன்று செய்வது நல்லது

கும்பம் : அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய: 40/100  

ராசிநாதன் சனி 12ல் ஆட்சி, விரயம் சுபமாய் இருக்கும் அதிக கெடுதல் இல்லை 6ம் இடத்தை நேர் பார்வை பார்ப்பதால் எதிரி தொல்லை, கடன் தொல்லை குறையும். 10ம் பார்வையாக 9ம் இடத்தை பார்ப்பது எதிர்பாராத லாபங்களை கொடுக்கும். மற்றபடி 12ல் சூரியன், குரு, சுக்ரன்,புதன் எதுவும் நன்மை செய்யவில்லை. வீணான வழிகளில் பணம் செலவாகும், சுபம் கருதியும் பணம் செலவழியும் வியாதிகள் அதிகரிக்கும்.மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி செலவு உத்தியோகத்தில், தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலை கிடைப்பதில் கஷ்டம் பொருளாராத பின்னடைவு என்று இருந்து கொண்டிருக்கும். 3ல் செவ்வாய் ஆட்சி ஒரு ஆறுதல் மனதில் தெம்பு பணவரவு, பூமி, நிலம் லாபம் என்று இருக்கும். புதனின் வக்ரகாலம் 30.01.21 தொடங்கி 12.02.21 வரையுமே கவனம் தேவை பலவித பிரச்சனைகளில் சிக்கல் இருக்கும். 4ல் ராகு சுகம் குறைவு, தாயார் உடல் நிலை பாதிப்பு, மன கஷ்டம் இப்படி எல்லா கிரஹங்களும் கஷ்டம் கொடுத்தாலும் சுக்ரன் 27.01.21 வரை பணவரவு மகிழ்ச்சி சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடத்தல் என்று நன்றாகவே இருக்கும் வாகன சுகம் இருக்கும். பயணம் தீர்த்த யாத்திரை இவை ஓரளவு சந்தோஷம் தரும். புதன் வக்ரி ஆகாதவரை ஓரளவு நன்மை இருக்கும் மாணவர்கள் கல்வியில் தடை இருக்காது உத்தியோகத்தில் பிரச்சனை இல்லை வங்கி பணம் புழங்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கவனம் தேவை, 10ல் இருக்கும் கேது இருவித வருவாயை தந்தாலும் உத்தியோகத்தில் இடமாற்றம், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் எல்லாம் இருக்கும். ஆனாலும் புதன் நக்ஷத்திரத்தில் பயணிப்பதால் கொஞ்சம் குழப்பத்தையும் உண்டாக்கும். எதிலும் நிதானம் முன் யோசனை, பெரியோர்கள் அறிவுரை கேட்பது போன்றவை நன்மை தரும். பொதுவில் 40% நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: அவிட்டம் 3,4  – பிப்ரவரி 1, சதயம் – பிப்ரவரி 2, பூரட்டாதி 1,2,3 – பிப்ரவரி 3

கவன நாட்கள் : மாதம் முழுவதும் ,  30.01.21 முதல் 03.02.21 வரையிலும் அதிக கவனம்

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாடு நன்மை தரும். மனதில் குலதெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டு அந்த கோயிலுக்கு சென்று விளக்கேற்றி அபிஷேகம், வஸ்திரம் சாற்றுதல் வழிபாடு செய்யவேண்டும். முடிந்த அளவு தானங்கள் செய்யுங்கள் மனதை ஒருமுக படுத்தி இறைவனின் நாமத்தை காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கும் போதும் உச்சரியுங்கள் 28/56/108 தடவை

மீனம் : பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய :

ராசிநாதன் உட்பட சூரியன், சனி, சுக்ரன், புதன் லாபத்தில் அதனாலும், 3ல் இருக்கும் ராகுவும் மாதம் முழுவதும் நல்ல பலன்களை தருகின்றனர். 2ல் ஆட்சி செவ்வாய் நன்மை அதிகம் இல்லை என்றாலும் கெடுதல் செய்யாமல் இருப்பதே நன்மை ஆகும். 11ல் இருக்கும் கிரஹங்கள் கடந்த காலத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைத்தல், புது ஆடை ஆபரண சேர்க்கை, எடுத்த செயல்களில் வெற்றியும், ஜீவன வகையில் கணிசமான ஆதாயமும் உண்டாகும். வீடு பூமி நிலம் வாங்கும் யோகம், திருமணம் கைகூடுதல், குழந்தை பாக்கியம், ஆலய தரிசனம், தெய்வ கைங்கர்யங்களில் ஈடுபடுதல், சுற்றுலா போன்று பல நன்மைகள் அதன் மூலம் மகிழ்ச்சி இருக்கும், பொருளாதார நிலை நன்றாக இருத்தல், புதிய உத்தியோகம் கிடைத்தல், வெளிநாட்டு உத்தியோகம் கிடைத்தல் தொழில் அபிவிருத்தி, போடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பிணி, கடன் சத்ரு தொல்லை நீங்குதல், வாகன சுகம், மன மகிழ்ச்சி, விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். புதன் மட்டும் 26.01.21 முதல் 30.01.21 வரை கொஞ்சம் தொல்லை கொடுப்பார். வாக்குவாதம் உண்டாகும் வீன் மன உளைச்சல் இருக்கும். 3ல் ராகு புகழ் பரவும், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும், திருமணம் போன்றவை நடக்கும். பணவரவு அதிகரிக்கும். கேது கொஞ்சம் கஷ்டம் கொடுப்பார் ஆனாலும் அது பெரியதாக இருக்காது.வாழ்க்கை துணைவர் உடல் நலம் பெற்றோர் உடல் நலம் பாதிக்கப்படும். பொதுவில் பெரிய கஷ்டம் வராது 90% நன்மை வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த மாதம் உங்களுக்கான மாதம்.

சந்திராஷ்டமம் : பூரட்டாதி 4 – 03.02.21, உத்திரட்டாதி – 04.02.21, ரேவதி – 05.02.21

கவனமான நாள் : 26.01.21 முதல் 30.01.21 முடிய

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பெருமாள், தாயார் அல்லது இஷ்ட தெய்வம், கோயிலுக்கு சென்று விளக்கேற்றி பெருமாள் ஸ்லோகங்களை சொல்லவும் நன்றாக இருப்பதால் தான தர்மங்களை நிறைய செய்யவும். அன்னதானம் செய்வது நன்மை தரும்.

குறிப்பு : இது பொது பலன் உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை பெறுவது நலம் தரும். கவன நாட்கள் என குறிப்பிட்ட நாளில் நிதானமும் பொறுமையும் வாக்கு கொடுக்காமல் இருந்தலும், இறை தியானம் செய்தலும் நன்மை தரும். கோபம் வேண்டாம்.

உங்கள் அன்பன் :

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)

ஜோதிடர்

ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block 1, Alsa Green Park Appartment

Hasthinapuram Main Road, Nehru nagar

Chrompet , Chennai – 600 044

Phone : 044 – 22230808 / Whats app No. 8056207965

Email : mannargudirs1960@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.