படைப்புத் தொழிலுக்கு வேண்டி, தனது நாபியிலிருந்து பிரமனை உருவாக்குகிறார் விஷ்ணு (எ) நாராயணன்.
படைப்புத் தொழிலைத் துவங்கிய பிரமன் முதலில் தோற்றுவித்தவர்கள் ‘ஸனத் குமாரர்கள்’ என்று அழைக்கப்படும் நான்கு மைந்தர்களான, சனக, சனந்தன, சனாதன, சனத் குமாரர் ஆகியோர்.
தோற்றுவிக்கும்போதே குமாரர்கள் (எ) மைந்தர்கள் எவ்வித உலக இச்சையும் இன்றி இருப்பதைக் கவனிக்கிறார் பிரமன். அவர்களின் நாட்டம் தவத்திலும், துறவறத்திலும் இருப்பதையறிந்தும் அவர்களை ‘உயிர்கள் உருவாக்குதலில்’ ஈடுபடுமாறு வற்புறுத்துகிறார். அவர்கள் மறுத்துவிட்டுத் தவ வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தங்களது தந்தையான பிரம்மனிடம் தாங்கள் பச்சிளம் சிறார்களாக இருக்க வரமும் பெறுகின்றனர்.
உயரிய குணங்களினாலும், அளவற்ற தவத்தாலும் அவர்களின் சக்தி பெருகுகிறது; இருந்தாலும் அவர்கள் சிறுவர்களாகவும், அமைதியும், பணிவும் கொண்டவர்களாகவும் காட்சியளிக்கின்றனர்; இதனால், வைகுந்தத்தில் இருக்கும் பரமனைத் தரிசிக்கும் போது இவர்களுக்குச் சிக்கல் வருகிறது; ஜய, விஜயன் என்கிற மெய்க் காப்பாளர்கள் இவர்களின் பின்புலம் அறியாது தடுக்கின்றனர். பரமன் விளையாடத் துவங்கிய தருணம் அது.
‘பாற்கடலில் பரமன் துயில்கிறார் என்றும் இப்போது அவரைத் தரிசிக்க இயலாது’ என்று ஜய/விஜயர்கள் காரணங் காட்டுகின்றனர்; பரமன் துயின்றால் என்னவாகும் என்பதை அவர்கள் அறியாதது பரமனின் திருவிளையாடல் தானே?
‘அடியவர்களை என்றும் காக்க வைத்ததில்லை பரமன்; அவர்களுக்குத்தான் முழுமையாக அவன்’ என்று எத்துணை முறை அமைதியாக உரைத்தாலும் ஜய/விஜயர்கள் கேட்கும் மனநிலையில் இல்லாதது பரமனின் திருவிளையாடல்தானே?
எதற்குமே சினங் கொள்ளாத, பச்சிள சிறார்கள் வடிவு கொண்ட சனத் குமாரர்களைச் சினங் கொள்ள வைத்தது பரமனின் திருவிளையாடல்தானே?
‘தெய்வத் தன்மை கொண்டதால், பரமனின் அருகே இருக்கிறீர்கள் என்கிற ஆணவத்தினால் எங்களைத் தடுத்தீர்கள். இத்தன்மையை இழந்து, மனிதர்களாக நீங்கள் பிறப்பு எடுத்து, பூமியில் வாழ்வீர்கள்.’ என்கிற சாபம் அவர்களிடமிருந்து வெளிப்படுவதும் பரமனின் திருவிளையாடல்தானே?
தங்களது தகாத செயலை உணர்ந்து வருந்தத் துவங்கிய ஜய-விஜயர்களுக்கும், சபித்த சனத்குமாரர்களுக்கும் உடனே காட்சி தருகிறார் பரமன். தவத்தில் வலிமை கொண்ட சனத்குமாரர்களின் சாபம் வீண் போகாது என்று ஜய-விஜயர்களிடம் உறுதியாக உரைத்த பரமன் அவர்களுக்கு இரு வழிகளைக் கொடுத்து, ஒன்றைத் தெரிவு செய்யுமாறு அருளுகிறார்.
‘என் அடியார்களாக ஏழு பிறவிகள்; என் விரோதிகளாக மூன்று பிறவிகள்’ என்றவுடன், ஜய-விஜயர்கள் பரமனின் விரோதிகளாக மூன்று பிறவிகள் எடுத்தபின் உடனடியாக வைகுந்தம் வந்து விடலாம் என்பதால் அவ்வழியைத் தெரிவு செய்கின்றனர்.
முதலில், கச்யப/திதி தம்பதியினருக்கு மகன்கள் – இரண்யாட்சன், இரண்யகசிபு – ஆகப் பிறப்பெடுத்து, பரமனைப் பரம விரோதியாகக் கொள்கின்றனர். இரண்யாட்சன் கடுமையான போருக்குப் பின் (10000 வருடப் போர்!) ஶ்ரீ வராஹ மூர்த்தி வடிவு கொண்ட பரமனால் கொல்லப்படுகிறான்.
இனி இரண்யகசிபுவின் புதல்வனான பிரகலாதன் கதை…