ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 2

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படிமுந்தைய பகுதியை படிக்க

தோஷங்கள்

நம்மை ரொம்பவே பயமுறுத்தும் விஷயம் இந்த தோஷங்கள். செவ்வாய் தோஷம், ராகு தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம் இப்படி லக்னம், 2,4,7,8,12 இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் என்கிறார்கள் அதற்கு விலக்குகளும் இருக்கு. மேற்படி இடங்களில் இருக்கும் செவ்வாயை சூரியன், சந்திரன்,குரு,சுக்ரன்,சனி பார்த்தாலோ சேர்ந்தாலோ தோஷ நிவர்த்தி, மற்றும் மேற்படி இடங்கள் மேஷம், விருச்சிகம், மகரம் ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை. – இவை பொதுவானவை

செவ்வாய் மேற்படி இடங்களில் இருந்தாலே தோஷம் என முடிவுக்கு வருவது சரியல்ல. உதாரணமாக மீன லக்னத்துக்கு 7ல் அல்லது 8ல் செவ்வாய் இருக்கு அதனால் அது பயங்கர தோஷம் என முடிவுக்கு வரக்கூடாது செவ்வாயின் ஷட்பலம், செவ்வாய் ஏறி நின்ற நக்ஷத்திராதிபதி பலம், செவ்வாயை பார்க்கும் கிரஹங்களின் பலம் என பார்த்தும். நவாம்ஸம் (திருமணத்துக்கான கட்டம்) அதில் செவ்வாயின் நிலை இவற்றை எல்லாம் வைத்து முடிவுக்கு வரவேண்டும். மேலும் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் என்ன நிலை இருக்கு அது என்ன காரகத்துவத்தை (பொதுவாக செவ்வாய் சகோதர காரகம் என சொல்லப்பட்டாலும் ஒவ்வொரு ஜாதகருக்கும் வெவ்வேறு வேலையை செய்யும்) செய்கிறது என பார்க்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் என பார்த்தவுடன் முடிவு செய்யக்கூடாது என்பது அடியேன் அனுபவம் அபிப்ராயம்.

இதே போல் ராகு கேது தோஷங்கள். சனி,ராகு,கேது இயற்கை பாபர்கள் எனினும் எல்லோருக்கும் அது கெடுதலை செய்யும் என சொல்லிவிட முடியாது. லக்னம்,7, 2,8 இடங்களில் ராகு கேது இருந்தால் மேலே செவ்வாய்க்கு சொன்ன அதே முறைகள், ராகு கேது எந்த ராசியில் இருக்கோ அந்த ராசியின் வலு, ராகுவின் காரகம், ஷட்பலம், நவாம்ஸத்தில் ராகு கேதுக்களின் நிலை, பார்த்து முடிவு செய்யனும். கன்னி ராகுவுக்கு ஆட்சி வீடு, மீனம் கேதுவுக்கு ஆட்சிவீடு (சிலர் ராகுவுக்கு கும்பம் ஆட்சி வீடென்பர்) , தனூர்,மிதுனம் ராகு கேதுவுக்கு மூல திரிகோண வீடு, விருச்சிகம், ரிஷபம் நீச உச்ச வீடுகள் இவற்றையும் பார்த்தே தோஷம் என முடிவு செய்ய வேண்டும். மேலும் ஜாதகருக்கு ராகுவின் காரகத்துவம் என்ன என்றும் பார்க்க வேண்டும்.

தாரகாரகர் (களத்திரகாரகர்) நீசம் பகை வீடு ஏறி இருப்பது. பொதுவாக சுக்ரனை களத்திரகாரகன் என சொன்னாலும் ஒவ்வொருவருவருக்கும் திருமணத்தை செய்யும் கிரஹம் வேறொன்று. ஜாதகத்தில் சுக்ரன் நீசம் என்றால் களத்திர தோஷம் என கொள்ள கூடாது. சுக்ரன் பார்வை உச்சத்தை நோக்கி மேலும் அதன் காரகத்துவம் என்ன என பார்க்கனும். ஜாதகரின் திருமணத்தை செய்யும் கிரஹம் எது அதன் வலிவென்ன. ஆண்பெண் இருவருடைய ஜாதகத்தில் சுக்ரனின் நிலை பலம், திருமணத்தை செய்யும் கிரஹத்தின் நட்பு பலம், எல்லாம் பார்த்து முடிவு செய்யனும்.

கால சர்ப தோஷம்

ராகு கேதுவுக்குள் அனைத்து கிரஹங்களும் அடங்குவது. இதில் ராகு கேது எதிர் திசையில் (ஆண்டிகிளாக்) சுற்றும் மற்ற கிரங்கள் நேர் திசையில் (கிளாக்) சுற்றும். ராகுவிலிருந்து கேதுவுக்குள் இருந்தால் மட்டுமே இந்த தோஷம் என்பதாக சொல்கின்றனர். இது திருமண தடையை செய்யும் மணவாழ்க்கையை பாதிக்கும் என்றும் சொல்கின்றனர். இங்கும் மேலே சொன்ன கணக்குதான் கிரஹ வலிமைகளை கொண்டே முடிவு செய்ய வேண்டும். இந்த காலசர்பதோஷத்திலும் பலவகையாக இருக்கு.

பொதுவாக லக்னம்+7, 2+8 இந்த இடங்களில் ராகு கேது இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்காது, திருமண தாமதம் ஏற்படும், இப்படியாக சிலர் சொல்லுகின்றனர். 5ல் ராகு இருந்தாலே புத்திர தோஷம் எனவும் சிலர் சொல்லுகின்றனர். இதெல்லாம் பொத்தம் பொதுவானவை, பல ஜாதகங்களில் இவைகள் தவறாக போய்விடுகின்றன. அதற்கு காரணம் கிரஹ வலிமை, காரகம் இவைதான்.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, சனிதசை ராகு தசை இவை நடக்கும் போது தான் பலருக்கு திருமணம் கூடிவரும். ஆனால் பலர் இதற்கு பயப்பட்டு திருமணத்தை தள்ளி போட நினைப்பர் வரனை ஒதுக்கி விடுவர். இந்த பயத்துக்கும் ஆதாரம் ஏதும் கிடையாது. திருமணம் இந்த காலத்தில் தான் நடக்க வேண்டும் என இருந்தால் அதை தடுத்துவிட முடியாது.

சிலர் சொல்வர் லக்னம் ஏழு, இரண்டு எட்டு இந்த இடங்களில் ராகு இருந்தால் அதே போல ஜாதகங்களைத்தான் சேர்க்கனும் என்று இதுவுமே சரியில்லாத ஒன்று. காரணம் எப்படி தேடுவீர்கள் சரி அப்படி தேடி எடுக்கையில் அதில், ஒருவருக்கு லக்னம் 7,2,8 இடங்களில் இருக்கும் ராகு வலிமையாகவும்,நன்மை செய்வதாயும், இன்னொருவருக்கு வலிமை அற்றும் கெடுதல் தருவதாகவும் இருந்தால் அதுவும் கூட பிரிவை அல்லது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையை தரலாம். மேலும் சில ஜாதகங்களில் ஒருவருக்கு ராகு நன்மை செய்வதாயும் இன்னொருவருடைய கேது விரோதமாகவும் கூட இருக்கலாம். அதை அந்த கிரஹங்களின் வலிமை காரகம் இதை கொண்டு முடிவு செய்யனும்.

ஒருவழியாக தோஷ நிலைகளை பார்த்து பொருத்தம் முடிவு செய்யும் போது இந்த தசா சந்திகள் என ஒன்று வந்து கொஞ்சம் திருமணத்தை தள்ளி போட செய்யும்.

அது அடுத்த பகுதியில்…

About Author