தமிழ் புத்தாண்டு (பிலவ ஆண்டு) ராசிபலன்

சூரியபகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார் அது முதல் புதுவருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 மணி முதல் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

இந்த ஓராண்டுக்கான ராசிபலன்கள் ஒவ்வொரு ராசிக்குமாக

பிலவ வருட வெண்பா: பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர் சலமிகுதிதுன்பந்தரும் நலமில்லை நாலுகால்சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை பாலுமின்றி செய்புவனம் பாழ்   பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிக குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மை தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குருபகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனிபகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றை கணக்கில் கொண்டு மூன்று பிரிவுகளாக கொண்டு பலன் சொல்லப்பட்டு இருக்கு. சித்திரை முதல் ஆடி வரை மற்றும் ஆவணி முதல் கார்த்திகை வரை & மார்கழி முதல் பங்குனி வரையிலாக பிரித்தும். பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும். பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது.

வருடம் பலன் சுமார் என்று வெண்பா சொன்னாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலை வேண்டியதில்லை

மேஷம் : (அஸ்வினி 4பாதங்க, பரணி 4 பாதங்கள், கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

சித்திரை – ஆடி வரையில்:  உங்கள் ராசிநாதன் வருட ஆரம்பம் மிதுனத்தில் 3ல் ப்ரவேசம் பின் வைகாசி மத்தியில் கடகம், ஆடியில் சிம்மம் பிரவேசித்து மற்ற கிரஹங்களுடனான இணக்கமான நிலையால் இந்த வருடம் பொருளாதாரம் மிக சிறந்து விளங்கும். ஜீவன வகையில் ஆதாயம் அதிகரிக்கும். அரசாங்க உதவிகள், குழந்தை பாக்கியம், உழைப்பில் லாபம் என்று பணம் வரும், உத்தியோகம் தொழில் வகையில் நல்ல முன்னேற்றம் காணும். விரும்பிய இடமாற்றம், உத்தியோக உயர்வு, தொழில் விஸ்தரிப்பு என நல்ல நிலையும் இருக்கும். பணப்புழக்கம் தாராளம், எதிர்பாரா இனங்கள் மூலம் வருவாய் வரும். இதுவரை தடைபட்டுவந்த செயல்கள் யாவும் வெற்றியை தரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மனம் குதூகலம் அடையும் புகழ், அதிகாரம் கிடைக்கும். பெரியதாக கஷ்டம் இருக்காது. குடும்ப ஒற்றுமை குதூகலம் இருக்கும். புதுவீடு குடிபோகுதல், திருமணம் குழந்தை பாக்கியம் உண்டாகுதல் என்று இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெற்றோர் வழியில் கொஞ்சம் மருத்துவ செலவு இருக்கும்.  மாணவர்கள் கல்வி நன்றாக இருக்கும். விரும்பிய பாடம், கல்லூரி என்று கிடைக்கும் பெற்றோர் ஆசிரியர் பாராட்டு கிடைக்கும். அனைத்து பிரிவினருக்கும் நன்மை உண்டாகும். எண்ணங்கள் பூர்த்தியாகும்.  வியாதிகள் பூரணமாக விலகும். நன்மை அதிகம்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: கிரஹ சஞ்சாரங்கள் கொஞ்சம் கலந்த நிலையில் இருப்பதால் ஆவணி 30 முதல் கார்த்திகை 4 வரையில் (14.09.21-20.11.21)  வரையில் கொஞ்சம் இழுபறி இருக்கும் தொழில்கள் தேக்கம் அடையும். கடன்வாங்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் தாமதப்படும். அனைத்து பிரிவினரும் சிக்கனமாக இருப்பதும் கூடுமான வரையில் கடன் வாங்காதிருப்பதும் நலம். தரும்.  பொருளாதார தேக்கம் வரும். தேவைகளை சுருக்கி கொள்வதும். உடல் ரீதியான மருத்துவ செலவுகளும் வாழ்க்கை துணை, பெற்றோர் வகையிலும் மருத்துவ செலவுகள், வீன் வழக்கு என்று சில பிரச்சனைகள் வரலாம். எதிலும் நிதான போக்கு கடைபிடிப்பது நலம் தரும். இருந்தாலும் சூரியன் மற்றும் சனியின் பார்வைகள் ஓரளவு நல்லதும் செய்யும் துன்பங்கள் குறையும். பொதுவாக இந்த நான்கு மாதங்கள்  அவரவர் ஜாதக கிரஹ பலத்தை பொறுத்து கொஞ்சம் அல்லது அதிகம் தீமை என்ற நிலை இருக்கும். எனினும் கவலை படாமல் எதையும் தகுந்த ஆலோசனை பெற்று செய்வதும், வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

மார்கழி முதல் பங்குனி வரையில் : குரு சஞ்சாரம், ராகு-கேது அடுத்தராசிக்கு பெயறுமுன் 4மாதங்கள் முன்பாக பலன் என்ற வகையில் ஓரளவு ஜென்ம ராகு நன்மை தந்தாலும் 7ல் கேது வாழ்க்கை துணைவர் நலம் பாதிப்படையலாம், குருவும் 12ல் சுப செலவுகள் என்ற வகையில் இல்லத்தில் திருமணம் சுப காரியங்கள் என்ற வகையில் பணம் செலவாகும். அதே போல் ராசி நாதன் துலாம் முதல் கும்பம் வரையில் இந்த காலங்களில் சஞ்சரிக்கிறார் அது ஓரளவு நன்மை தருவதால் முன்னேற்றம் இருக்கும். சூரியன் தன்பங்குக்கு நன்மை தருவதால் பொருளாதாரம் சீராக இருக்கும். மற்ற கிரஹங்களும் பரவாயில்லை என்பதால் உத்தியோகத்தில் கடும் முயற்சிக்கு பின் பதவி,சம்பள உயர்வு என கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவணங்கள் ஓரளவு லாபம் வரும் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொண்டால் பிரச்சனை இல்லை அனைத்து பிரிவினருக்கும் கஷ்டம் இல்லை எனினும் மெதுவாக செல்லும் சேமிப்பு வழக்கம் இருந்தால் நன்மை இருக்கும் பண கஷ்டம் ஏற்படாது. ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

பொதுவில் முதல் நான்கு மாதம் சிறப்பாக இருப்பதால் சேமிக்கும் வழக்கத்தை கொண்டால் அடுத்த எட்டு மாதங்கள் பெரிய தொல்லைகள் இருக்காது. தனிப்பட்ட ஜாதக கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் நிச்சயம் பெரிய கஷ்டம் இல்லை.

ப்ரார்த்தனைகள்: ஆண்டு தொடக்கம் நன்றாக இருப்பதால் சூரிய நமஸ்காரம் தினம் செய்ய தொடங்குங்கள். மேலும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம் இவற்றை செய்வது நலம் பயக்கும்.

ரிஷபம் : (கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4பாதம், மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :

சித்திரை – ஆடி வரையில் : உங்கள் ராசிநாதன் சூரியனுடன் 12ல் தொடங்கி சஞ்சாரம். இது ஓரளவு நன்மை தரும் எனினும், சூரியனும் உடல் பாதிப்பை தருவதால் கலந்து கட்டியது போலே வருடம் முழுவதும் இருக்கும். பணவரவு தாராளம், நினைத்தது நிறைவேறல் என்று இருக்கும் ஆடிமாதம் வரையில் பரவாயில்லை. பெற்றோர் வழியில் மருத்துவ செலவு இருக்கும். உத்தியோகத்தில் கடும் முயற்சி ஓரளவே பலன் தரும். குடும்பத்தை விட்டு பிரிய வேண்டி இருக்கும் உத்தியோக மாற்றத்தினால். அதே நேரம் குரு பார்வை இருப்பதால் ஜீவனம் கெடாது. சொந்த தொழில் செய்வோர் அனைவரும் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொண்டால் பிரச்சனைகள் அரசு மூலம் வரும் தொந்தரவுகளை தவிர்க்கலாம். சேமிக்க தொடங்குங்கள். பொதுவில் அனைத்து பிரிவினருக்கும் இந்த நான்கு மாதங்கள் மிக நன்றாகவே இருக்கும். பெரிய கஷ்டங்கள் இல்லை. யோசித்து செயல்படுவது நன்மை தரும். புதிய வீடு குடிபோகும் யோகம் வாகன யோகம் என்றும், இல்லத்தில் எதிர்பார்த்த திருமண சுப நிகழ்வுகள் உண்டாகும். குழந்தை பேறு சிலருக்கு உண்டாகும். வெளிநாட்டு/ வெளி மாநில வாழ்க்கை சிலருக்கு உண்டாகும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: இந்த நான்கு மாதங்கள் கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம் தரும். அவசரப்படுதல் கூடாது குறிப்பாக செவ்வாய், ராகு & கேது 14.11.21 வரை எதிர்பாராத தொல்லை மனதில் தேவையற்ற பயம் அவசரப்படுதல் என்றும். வழக்குகள் போன்றவற்றை சந்திக்கும் நிலை இப்படி பணவிரயம் என்று இருக்கும். 17.10.21 – 16.11.21 வரை சூரியன் சஞ்சாரமும் அரசாங்க தொல்லை என இருக்கும். கொஞ்சம் கவனம் தேவை குருவின் பார்வை 2,4,6 என்று இருப்பதால் பணம், சுகம், வீடு, ஆரோக்கியம் இவற்றுக்கு குறைவு வராது. இருந்தாலும் கொஞ்சம் நிதானித்து யோசனையுடன் எதிலும் செயல்படுவது நன்மை தரும். வீடு, நிலம் போன்ற பிரச்சனைகளில் யோசித்து செயல்படுவது அதேபோல் தேவைக்காக கடன்வாங்கும்போதும் அல்லது ஆடம்பரத்துக்காக கடன் வாங்கும் போதும் கவனம் தேவை அதே போல் நண்பர்களாலும் உறவுகளாலும் பண ரீதியான தொல்லை வரலாம். மற்றபடி ஜீவனம் வந்து கொண்டிருக்கும். பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. திருமணம் குழந்தை போன்ற இனங்களால் சுப விரயங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சியை தரும். தடை பட்ட திருமணம் அமையும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு கிட்டும். ராகுவால் பிரயாணம் சில தொந்தரவுகளை தரும். பொதுவில் நன்மை தீமை கலந்து இருக்கும். மருத்துவ செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் குடும்ப அங்கத்தினர் உட்பட பாதிப்பு இருக்கலாம்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: சனி பகவான் கருணை, ராகு கேத் & குருவின் வருட கடைசி பெயர்ச்சி இவை ஓரளவு நன்மை தரும். குருவால் லாபம் உண்டாகும். ராகு சுப செலவுகளை தரும். முன்பு செய்த முயற்சிகள் நிறைவேறும். பெரும்பாலும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புதுவீடு யோகம், வாகன யோகம், தேங்கியிருந்த வழக்குகள் வெற்றி தருதல், பிள்ளைகளால் பெருமை, உத்தியோகத்தில் நல்ல நிலை, விரும்பிய இடமாற்றம், தெய்வ அனுகூலம், தீர்த்த யாத்திரைகள், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள், புது வரவுகளால் குடும்பத்தில் ஒற்றுமை, மன மகிழ்ச்சி அதிகரித்தல் விருந்து கேளிக்கைகள் அரசு மூலம் ஆதாயம், சொந்த தொழில் செய்வோர், அனைத்து பிரிவினர்களுக்கும் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகுதல், வங்கி கடன் கிடைத்தல், உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் மருத்துவ செலவுகள் குறைதல் என நன்றாகவே இருக்கும். அடுத்து தொடங்கும் ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும். சேமிக்கும் வழக்கம் இருந்தால் பண ரீதியான பிரச்சனைகளை சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் மறைவர், பொதுவாக அனைவருக்கும் நன்மை அதிகம் இருக்கும். துன்பங்கள் குறைவு.

 ப்ரார்த்தனைகள் : நன்மை அதிகம் இருப்பதாலும், ஆவணி முதல் கார்த்திகை வரையும் கூட கொஞ்சம் கவனமாயிருந்து ஆலோசித்து நடந்தால் பெரும் துன்பங்கள் இல்லை. குருப்பெயர்ச்சிக்கு சொன்ன அதே ப்ரார்த்தனைகள். வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் ஆலயங்கள் சென்று விளக்கேற்றி வழிபடுவது மற்றும் குல தெய்வ வழிபாடு நன்மை தரும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.

மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4பாதங்கள், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  உங்கள் ராசிநாதன் புதன் 10ல் பலமாய் தன் நக்ஷத்திரகாலில் வருடம் தொடங்கும் போது. மேலும் 9ல் குரு அதிசாரம், சூரியன் லாபத்தில் என்ற நிலையில் வருட ஆரம்பம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும் எந்த வழியிலாவது பணம் வந்து சேரும். குரு 9ம் இடம் சஞ்சாரம் ஜீவன வழியில் பாதிப்பு இல்லை. தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் சிக்கணம் தேவை, அனாவசிய செலவுகளும் வரும் ஆடம்பர செலவுகளும் உண்டாகும். இருந்தாலும் கவனமாக இவற்றை தவிர்க்க இயலும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் வந்து கொண்டே இருக்கும். நெருங்கிய சொந்தங்களின் திருமணம், சுப நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் நெருக்கம் உண்டாகும் பெயர் புகழ் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு புதுவீடுவாங்கும் யோகம் புதிய வாகனங்கள் கிடைத்தல், கடன்தொல்லை முற்றிலுமாக நீங்குதல், புதிய கடன் வாங்கும் அவசியம் இல்லாமல் போகுதல் மன நிம்மதி கூடுதல் என்று நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும், பெற்றோர்களால் அல்லது சகோதரவகையில் இருந்துவந்த பிணக்குகள் தீரும். சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் சமாளித்து குடும்பம் நிம்மதியாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை , குடும்பத்தில் திருமண முயற்சிகள் கைகூடுதல், புதிய வரவுகளால் சந்தோஷம், குழந்தை பாக்கியம் உண்டாதல் என்று மிக நன்றாகவே இருக்கும்.  ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடன் எதிரி தொல்லை இருக்காது. உத்தியோகத்திலும், சொந்த தொழிலும் மிக நல்ல முன்னேற்றம் காணும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: உத்தியோகம் பொறுத்தவரை 14.11.21 வரையில் கொஞ்சம் பொறுமை வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணப்புழக்கம் குறைவாகவும் தேவைகள் சிரமத்திலும் பூர்த்தியாகும். சொந்த தொழில் செய்வோரும் கொஞ்சம் நிதானம் கணக்குவழக்குகளை சரியாக வைத்திருத்தல் புதிய திட்டங்கள், தொழில் விஸ்தரிப்பு என்பது தை பிறந்தபின் வைத்து கொள்வதும். புதிய உத்தியோகம் முயற்சிப்பவர்கள் வெளிநாடு வேலை இவை தை பிறந்து எளிதில் கிடைக்கும். வீன் விவாதங்களை தவிர்ப்பது. அக்கம்பக்கத்தாரோடு, உடன் வேலை செய்வோரோடு, வேலைக்காரர்களோடு என்று யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். மேலும் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமாக பெற்றோர்கள் வாழ்க்கை துணைவர் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக பெரிய பிரச்சனைகள் இருக்காது  கொஞ்சம் தாமதம் ஆகும் நிதானம் முன் யோசனை இவை இருந்தால் போதும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: 14.11.21 முதல் மீண்டும் உற்சாகம். 11ல் வரும் ராகு, 10ல் குரு, பின் சூரியன், புதன், செவ்வாய் சஞ்சாரங்கள் என்று அனைத்தும் அளப்பறிய நன்மைகளை செய்கிறபடியால் பொருளாதாரம் ஏற்றம் காணும். புதிய சொந்த தொழில் முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி, வேலை பளு குறைதல், கோரிக்கைகள் நிறைவேறுதல், நல்ல பெயர் உண்டாகுதல், தொழிலில் நல்ல முன்னேற்றம் நாள் பட்ட சரக்கு விற்றல், கூட்டாளிகளுடன் ஒற்றுமை. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடுதல் தடைபட்ட திருமண நிகழ்வுகள் நடைபெறுதல், புத்திரபாக்கியம் இப்படி எல்லாம் மிக நன்றாக இருக்கும். வியாதிகள் தனியும், விவசாயம் போன்றவை ஏற்றம் காணும். கடன்கள் தீரும் எதிரி தொல்லைகள் இருக்காது. மேலும் குரு பார்வையும், சனியின் பார்வையும் நல்லபலனை தரும். 6ல் இருக்கும் கேது வருட கடைசியில் 5ல் வந்து சில வியாதிகளை அல்லது பிள்ளைகளால் கஷ்டம் இவற்றை தந்தாலும் மற்ற கிரஹங்களின் சஞ்சார நிலை இவற்றை குறைத்து நன்மை தருகிறது. பொதுவில் மிக மகிழ்ச்சியான வருடம். சேமிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.

ப்ரார்த்தனைகள் : அனந்தபத்மநாபன், அரங்கன் போன்ற பாம்பு படுக்கையில் இருக்கும் பெருமாளையும், சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபடுவது விளக்கேற்றுவது முடிந்தால் விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்வது நன்மை தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.

கடகம் : (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  வருட ஆரம்பம் 10ல் சூரியன், சுக்ரனுடன் ராசி நாதன். தொழில், உத்தியோகம் நல்ல நிலையில் இருக்கும். பணவரவு தாராளம். புதிய வீடு வாகனம் நிலம் வாங்க இந்த காலம் ஏற்றது. அதேநேரம் குரு பகவான் 8ல் 13.06.21 வரை அப்பொழுது பொருளாதார கஷ்டம், பண விரயம், எதையும் செய்யமுடியாமல் தடை உண்டாகுதல், பயம், அச்சம், வழக்குகளில் சிக்குதல் அதனால் பண விரயம் இப்படி பல இருந்தும் அதிக நன்மை உண்டாவது ராகு சஞ்சாரம் மன தைரியத்தையும் துணிச்சலையும் கொடுக்கும். இருந்தாலும் கவனம் இன்மை அல்லது பொறுமை இன்மை இவற்றால் வழக்குகள் அதனால் செலவுகள் குடும்ப தேவைகள் நிறைவேறாமல் போகுதல் என்றும் இருக்கும்.நல்லவர்கள் பெரியோர்களின் ஆலோசனை படி நடப்பது கஷ்டத்தை குறைக்கும். முதல் 4மாதங்கள் பெரிய நன்மைகள் இருக்காது. பரவாயில்லை என்ற அளவில் இருக்கும் புதிய முயற்சிகளை அடுத்த நாலுமாதங்களில் செய்வது நன்மை தரும். சேமிப்பும் வளம் தரும். தனது மற்றும் குடும்ப அங்கத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது மருத்துவ செலவுகளை குறைக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: 7ல் குரு 14.11.21 வரை , சூரியனும் பலமுடன் சஞ்சாரம், செவ்வாய் ராகு, புதன் இவை அளப்பறிய நன்மை தரும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். தேவைகள் பூர்த்தியாகும். பணப்புழக்கம் தாராளம், பிரிந்த உறவுகள் ஒன்று சேருவர், உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சொந்த தொழில் வளர்ச்சியடையும் அரசு உதவிகள் கிடைக்கும். தொழில் விஸ்தரிப்பும் நல்ல பலனை தரும். தாமதமான திருமணம், குழந்தை பாக்கியம், புதுவீடு குடிபோகுதல் நிறைவேறும், முந்தய வழக்குகள், கடன்கள் தீர ஆரம்பிக்கும். சேமிப்பு அதிகம் ஆகும். அனைத்து பிரிவினருக்கும் முன்னேற்றம் நன்றாக இருக்கும். நினைத்தவை நிறைவேறும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.

மார்கழிமுதல் பங்குனி வரையில்: பொதுவாக கிரஹ நிலைகள் சாதகம் இல்லை என்றாலும் பங்குனியில் குரு,ராகு-கேது பெயர்ச்சிகள் 2மாதம் முன்பே பலன் தருவதால் ஓரளவு நன்மை இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு இருக்கும். இடமாற்றம் நிச்சயம் உண்டு. குடும்பத்தில் சிறு சிறு பணப்பிரச்சனைகள் உறவுகளால் தொல்லை என்று இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். பெரியோர்கள் ஆலோசனை படி நடப்பதும். நிதானம் அமைதி இருந்தால் பெரிய கஷ்டங்கள் வராது. பணம் கொடுக்கல்வாங்கல், அடுத்தவருக்கு உத்திரவாதம் தருவது, உணர்ச்சிவசப்படுதல், இவை தேவையில்லாத வழக்கு, மன உளைச்சலை தரும். பொதுவில் நடு நாலு மாதம் சேமிப்பை அதிகப்படுத்தி இருந்தால் இந்த நாலுமாதங்களை எளிதில் கடந்துவிடலாம். திருமணம், புனித யாத்திரை, வீட்டை சரிசெய்வது, மராமத்து வேலை, போன்ற சிலவிஷயங்கள் கைகூடும். சிலருக்கு புத்திரபாக்கியம், பதவி உயர்வு, தொழிலில் லாபம் என்று இருக்கும். மொத்தத்தில் கலந்து கட்டி இருப்பதால் சேமிக்கும் வழக்கத்தை கொண்டால் பண ரீதியான பிரச்சனைகள் குறையும். உணர்ச்சிவசப்படாமல், வீன் வாக்குவாதம் செய்யாமல் இருந்தால் மன ரீதியான உடல் ரீதியான பிரச்சனைகளையும் தீர்க்கலாம்.

ப்ரார்த்தனைகள் : அம்மன் லக்ஷ்மி போன்ற பெண் தெய்வ வழிபாடு நலம் தரும். நெய் விளக்கேற்றுதல் அம்மன் ஸ்லோகங்களை மாலை வேளையில் சொல்லுதல் பலன் தரும். வயோதிகர்கள், மாற்றுதிறனாளிகள் இவர்களுக்கு சரீரத்தால் உதவிகளை செய்வது, அன்னதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுதல், கோயில் உழவாரப்பணி இவை நன்மை தரும்.

சிம்மம் : (மகம் 4 பாதங்கள், பூரம் 4பாதங்கள், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  ராசிநாதன் ஏப்ரல் 13ம் தேதி உச்சராசியில் சஞ்சரிப்பது மேலும் புதன், சனி,சுக்ரன், செவ்வாய் இவையும் இந்த வருடம் முழுவதும் நன்மை தருகிறது. குரு 7ல் சஞ்சரிப்பதும் பின் 6ல் வக்ரியாக இருப்பதும் நன்மை தரும். பொருளாதார ஏற்றம் நிச்சயம் உண்டு. பெண்கள் மூலம் அதிக நன்மை கிடைக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மனதில் உற்சாகத்தை தரும், ஏற்கனவே போட்டுவைத்த திட்டங்கள் நிறைவேறும் காலம், தெளிவான சிந்தனை இருக்கும், எதிரிகள் தொல்லை குறையும் கடன் சுமைகள் தீரும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பாரா இனங்களில் வருவாய் வந்து மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் வழியில் திருமணம் குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். நீண்ட நாளாக தடை பட்டு வந்த திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும் வாழ்க்கை துணைவர் வகையில் வருமான உயர்வு ஏற்படலாம். இட மாற்றம் உண்டாகும். பொதுவில் பண புழக்கம் அதிகம் இருப்பதால் பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது திருப்தி அதிகம் இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் இந்த நாலுமாதங்கள் சேமிப்பை அதிகப்படுத்துங்கள். பெரிய கஷ்டங்கள் ஏதும் இருக்காது உழைப்பில் உற்சாகம் இருக்கும். தொழிலில் லாபம் வரும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: 6ல் குரு வக்ரியாகவும் பின் நீசமாகவும் இருப்பது, ராசிநாதன் ஜென்மத்தில் இருக்கும் போதும், பின் துலாத்தில் நீசம் பெறும் போதும் முடிவிலும் நன்மை தருவதாலும், நோய்கள் அகன்று, கடன் எதிரி தொல்லை நீங்கி உற்சாகம் பெருகும். ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் நல்ல நிலை பதவி உயர்வு எதிர்பார்பது கிடைக்கும். சொந்த தொழிலில் முடங்கி இருந்தது இனி லாபத்தை நோக்கி பயணிக்கும். அனைத்து பிரிவினருக்கும். பணப்புழக்கம் தாராளம். விரும்பிய இடமாற்றம், புதுவீடு குடிபோகுதல் திருமணம், புத்திரபாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, இல்லத்தில் குதூகலம், கேளிக்கை விருந்து, உல்லாச பயணம் இவை எல்லாம் இருந்து மனதில் சந்தோஷத்தை தரும். பொதுவில் இந்த மாதங்களில் பெரிய துன்பம் ஏதுமில்லை. தனிப்பட்ட ஜாதகங்களில் கிரஹவலிமை குறைவாக இருந்தால் மட்டும் கொஞ்சம் எதிர்மறை பலன்கள் இருக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: பங்குனியில் பெயர்ச்சியாகும் குரு, ராகு-கேது சஞ்சாரம் 4மாதம் முன்பே பலனை தந்துவிடுவதால் இந்த நான்கு மாதங்களும் கூட அதிக நன்மையே இருக்கும். முயற்சிகளில் அதிக வெற்றி, உத்தியோகத்தில் உயர்ந்த நிலை, புது வேலை தேடுவோருக்கு வெற்றிகிட்டும். புதிய தொழில் தொடங்க முயல்வோர், ஏற்கனவே தொழில் செய்வோர் தொழில் விஸ்தரிப்பு, கடனுதவி, அரசு ஆதரவு என நன்றாகவே இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி கூடும். புதுவீடு, வாகனம், விவசாயத்தில் நல்ல லாபம், குழந்தைகளால் மகிழ்ச்சி வீட்டு தேவைகள் பூர்த்தியாகுதல், உறவுகளால் மகிழ்ச்சி, சேமிப்பு அதிகரித்தல், பணப்புழக்கம் தாராளம் எதிரிகள் மறைதல் ஆரோக்கியம் மேம்படுதல், கடன் நீங்குதல் என அனைத்தும் நன்றாக இருக்கும். ஜீவன வகையில் பிரச்சனை வராது. வருடம் முழுவதும் நல்ல பலன்கள் இருக்கும் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் அடுத்த வருடமும் நன்மை தொடரும் சிரமங்கள் குறையும்.

ப்ரார்த்தனைகள் : உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வ வழிபாடு, கோயில்களில் உழவாரப்பணி செய்வது, கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது என்பதும் முடிந்த அளவு அன்னதானம், வஸ்திர தானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்வது போன்றவை பெரிய நன்மைகளை தரும்.

கன்னி : (உத்திரம் 2,3,4 பாதங்கள்,ஹஸ்தம் 4பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  உங்கள் ராசிநாதன் 7ல் பலமாய் தன் நக்ஷத்திரக்காலில் வருடம் ஆரம்பத்தில் அதனால் ஏற்படும் நன்மையும்,வருடம் முழுவதும் செவ்வாய்,ராகு, சூரியன், செவ்வாய், கேது,சுக்ரன் என எல்லா கிரஹங்களும் பொருளாதாரத்தை மேம்படுத்தி பணப்புழக்கத்தை செய்வர். 5ல் இருக்கும் சனி பிள்ளைகளால் மருத்துவ செலவு, கல்வி செலவு என கொடுப்பார். பணம் தாராளமாக இருக்கும் அதனால் பெரிய வருத்தங்கள் இருக்காது. புதுவீடுவாங்கும் திட்டம் கொஞ்சம் ஸ்லோவாக நடக்கும். வங்கி கடன், நிலுவை தொகையை செலுத்துவது இவற்றில் தாமதம், திடீர் பயண செலவுகள் என்று வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். அதே நேரம் சூரியனும், புதனும் புத்திகூர்மையை உண்டாக்கி சேமிப்பை அதிகரிப்பர், கேதுவும் தன்பங்குக்கு பெயர் புகழ், அதிகாரம் பணவரவு என தந்து பலத்தை சேர்ப்பார் பொதுவில் கஷ்டம் என்றால் மருத்துவ செலவுகள், வேலைகள் தாமதம் ஆகுதல் மன உளைச்சல் ஏற்படுதல் போன்றவை மட்டுமே பெரிய சிக்கல்கள் இருக்காது. உத்தியோகத்திலும் சொத்த தொழிலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை எனினும் கஷ்டப்படும் நிலை இருக்காது. கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் நிலையும் உண்டாகும், பிள்ளைகளால் செலவு இருந்தாலும் பாதிப்பு இல்லை, பெற்றோர் வகையிலும் ஓரளவு அனுகூலம் இருக்கும். உறவுகள் நெருங்கி வரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியும் ஒற்றுமையையும் தரும். புதிய உறவுகள் நன்மையை உண்டாக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: குரு 5ல் வக்ரி சனியுடன், 12ல்,1ல்,2ல்  சூரியன் சஞ்சாரம், 10ல் செவ்வாய்  என்று வெகு சுமாராகவே பலன்கள் இருக்கும். குழந்தைகள் மற்றும் பெற்றோர் வகையில் அதிக மருத்துவ செலவுகளும், தனக்கே வயிறு, குடல், கண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாகும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சக ஊழியர்களால் சில பிரச்சனைகள் வந்து தீரும். அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் கொஞ்சம் சிரமத்துக்கு பின் நிறைவேறும். பொதுவில் உத்தியோகத்தில் முன்னேற்றம் சுமாராக இருக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். நிதானம் அவசியம். சொந்த தொழிலில் எதிரிகள் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள், தொழில் விரிவாக்கம் தாமதம் ஆகலாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது நல்லது. ஊழியர்கள் வகையில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது நல்லது. மெதுவான முன்னேற்றம் என்றாலும் நஷ்டம் இல்லை. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சேமிப்பும் நல்ல பலனை தரும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: வருடக்கடையில் உண்டாகும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகள் 2-4 மாதம் முன்பே பலன் தருவதானாலும் கன்னி ராசியினருக்கு சுமாரான பலன் ஓரளவு பரவாயில்லை பணப்புழக்கம் பரவாயில்லை, உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம், விரும்பிய புதிய வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. புதிய முயற்சிகள் பலன்தரும்.கோரிக்கைகள் நிறைவேறும், சொந்த தொழிலில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். புதிய விரிவாக்க முயற்சிகள் நிறைவேறும். பொதுவில் பணத்தட்டுப்பாடு இருக்காது. இல்லத்தில் சுப நிகழ்வுகள் கூடி வரும். இருந்தாலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாய் இருத்தல் வேண்டும். ஓரளவு மருத்துவ செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரம் வீண் விவாதங்களை தவிர்ப்பது மன உளைச்சல் ஏற்படுவதை குறைக்கும்.

ப்ரார்த்தனைகள்: இந்த வருடம் சுமாராக இருப்பதால் அருகில் இருக்கும் நின்ற திருக்கோல பெருமாளை வழிபடுவதும், கோயிலில் துளசி மாலை சாற்றுவது, ஸ்லோகங்கள் சொல்வது, விளக்கேற்றுவது, முடிந்த அளவு வயோதிகர்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்வது தான தர்மம் செய்வது நன்மை தரும். நீர் மோர் தானம் செய்யுங்கள்.

துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதங்கள் , விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  உங்கள் ராசிநாதன் வருடம் தொடங்கும்போது 7ல் சூரியன் சந்திரனுடன். இந்த வருடம் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இதுவரை தடங்கலாக இருந்த எந்த ஒரு விஷயமும் இனி பூர்த்தியாகி மகிழ்ச்சியை தரும். பெரிய அளவில் பண வரவு இருக்கும். சேமிப்பு அதிகம் ஆகும். மற்ற கிரஹ சஞ்சாரங்களும் பெரிய பாதிப்பை தரவில்லை, 4ல் சனி ஆட்சி சுகஸ்தானம், தாயார் ஸ்தானம் மட்டுமல்லாது பூமி லாபமும் கூட அந்த சனிபகவானை 2ல் இருக்கும் கேது பார்ப்பது ஆசைப்பட்ட வீடு வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் செவ்வாயின் பலமும் வீட்டை உறுதி படுத்தும். இதுவரை சங்கடத்தை கொடுத்துவந்த வழக்குகள் சாதகம் ஆகும் மேலும் திருமணம் கைகூடும் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் புதிய உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பணப்புழக்கம் தாராளமாக இருப்பதாலும் தெய்வ அனுகூலம் இருப்பதாலும் உத்தியோகம், சொந்த தொழில் இவற்றில் நல்ல நிலை இருக்கும். விரும்பிய இடமாற்றம் இருக்கும். இந்த 4 மாதங்கள் உங்கள் எண்ணங்கள் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சி அதிகரிக்கும். வரும் வாய்ப்புகளை சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள்

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: பொதுவாக கிரஹங்கள் சாதக நிலையே ப்ரதிபலிக்கிறது இருந்தாலும் 2ல் கேது சங்கடங்களையும் உடல் ரீதியான படுத்தல் குடும்ப அங்கத்தினர் முன்னேற்றம் தடை, 8ல் ராகு மன குழப்பம் சில சஞ்சலங்கள் தொழில் மந்தம். பண விரயம், பணம் தாமதமாக வருதல் என்று இருக்கிறது. அதிக உழைப்பு தேவைப்படும். சிக்கணம் நன்மை தரும். ஜென்மத்தில் சூரியன் வரும்போது சனியின் 10ம் பார்வை படுவதால் நீசபங்க ராஜயோகமாக மாறி எதிலும் வெற்றி என்று தரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். வாழ்க்கை துணைவர் பிள்ளைகள் மூலம் மருத்துவ செலவும், தேவையில்லாத விரயமும் இருக்கும். உத்தியோகத்தில் அதிக சுமை இருக்கும். இருந்தாலும் நல்ல பெயரும் கொஞ்சம் ஊதிய உயர்வும் வரும். சொந்த தொழிலில் கடன் கிடைப்பது கடினமாக இருக்கும் போட்டிகள் அதிகரித்து மன சோர்வை தரும். இருந்தாலும் சனியின் பார்வை எதிர்ப்புகளை முறியடிக்கும் சக்தியை தந்து பண வரவை அதிகரிக்க செய்யும். அனைத்து பிரிவினருக்கும் தனிப்பட்ட ஜாதங்களில் கிரஹ வலிமை நன்றாக இருந்தால் நன்மை அதிகமும், சுமாராக இருந்தால் சில எதிர்பாராத சங்கடங்கள் மன வருத்தங்களும் இருக்குமே தவிர பாதிப்புகள் இருக்காது. வழக்குகளில் ஒரு தேக்க நிலை இருக்கும். புதிய வழக்குகள் உண்டாவதை தவிர்க்க எவருடனும் அனுசரித்து போவது நல்லது.

மார்கழி முதல் பங்குனி வரையில்: குரு மற்றும் ராகு கேதுகள் அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகி அதன் பலனை முன்கூட்டியே வழங்குவதால் தடைபட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும் புதியவாய்ப்புகள் தேடி வந்து பண பிரச்சனையை தீர்க்கும். பணப்புழக்கம் தாராளம், தாமதித்த திருமண நிகழ்வுகள் சிலருக்கு குழந்தைபாக்கியம் என்றும் சிலர் புதுவீடு, வாகனம் வாங்குதல் என்று சுப விரயமாக இருக்கும். கிரஹங்கள் அனைத்தும் சாதகமாய் இருப்பதால் இதுவரை செய்து வந்த செயல்கள் யாவிலும் வெற்றியும் அதன் மூலம் சமூக அந்தஸ்து புகழ், உறவுகள் நண்பர்கள் நெருக்கம் , இல்லம் மகிழ்ச்சி பெறுதல் என்று நன்றாகவே இருக்கும். சேமிப்பு குடும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கும், இடமாற்றம் மகிழ்ச்சி தரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டாகும். அனைத்து தொழில் செய்வோரும் வியாபாரம் செழித்து பணவரவை தாராளமாக்கும். சரக்குகள் விற்று தீர்ந்து லாபம் அதிகரிக்கும். அரசு உதவி, வங்கி கடன் உதவி எல்லாம் தாராளமாக கிடைக்கும். பொதுவில் பணம் பலவழியிலும் வந்து சேமிப்பையும் புதிய பொருட்சேர்க்கை வீடுவாகன யோகம் என்றும் கேளிக்கை விருந்து, புனித யாத்திரை இவைகளாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ப்ரார்த்தனைகள் : நன்மை மிக அதிகம் இருப்பதால் நரசிம்மரை வழிபடுங்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதால் குலதெய்வ வழிபாடு அபிஷேகம் வஸ்திரம் சாற்றுதல் போன்றவை செய்யுங்கள். முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம் எளியோருக்கு உதவி செய்வது என்று இருப்பதால் தீமைகள் கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.

விருச்சிகம் : (விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை 4 பாதங்கள் முடிய):

 சித்திரை முதல் ஆடி வரையில்:  வருட ஆரம்பம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8ல் மறைந்தாலும், சூரியன் 6ல் உச்சம் பெற்று உங்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை தருகிறார். புதன் சுக்ரனும், 3ல் இருக்கும் சனியும் பல்வித நன்மைகளை இந்த நாலு மாதத்தில் தருகிறபடியால் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும், பெரிய சங்கடங்கள் இருக்காது. ஜென்ம கேது உடல் ரீதியான படுத்தலும், குடும்பத்தில் ஒரு அமைதி இன்மையை தரும் என்றாலும், 7ல் ராகு வாழ்க்கை துணைவரால் மருத்துவ செலவு, மன வேதனை என்று தரும். குரு ஜீவன ஸ்தானத்தை நேரடியாக பார்ப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும் சிக்கணம், யோசித்து செலவு செய்தல் போன்றவை பண நிலையை சரியாக வைத்திருக்க உதவும். சூரியன் செவ்வாய் சஞ்சாரமும் புதனின் வக்ர நிலைகளும் அதிகப்படியான நல்ல பலனை தரும். பொதுவாக இந்த 4மாதங்கள் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலை பளு இருக்கும். அதே நேரம் பதவியும் கிடைக்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவது நன்மை தரும். வாழ்க்கை துணைவரின் ஆலோசனைக்கு மதிப்பு தருவதும் நல்ல பலனைத்தரும். சொந்த தொழில் செய்வோர் கணக்குவழக்குகளையும், தொழிலாளர் காப்பீடு முறையும் சரியாக வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. கொஞ்சம் ஆறுதலாக வீடுவாங்க முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும். திருமணம், சுபநிகழ்வுகளால் மனம் ஆறுதல் அடையும். பரவாயில்லை என்பதாக இந்த நாலுமாதங்கள் இருக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: சூரியன் 10,11ல் வரும் இரண்டு மாதமும் முன்னேற்றம் இருக்கும். ராசிநாதனும் அவ்வாறே வருவதால் முன்பிருந்த சங்கடங்கள், தடைகள் மன வருத்தங்கள் யாவும் நீங்கி ஒரு புத்துணர்ச்சி உண்டாகும். உழைப்பில் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். குருவின் பார்வையும் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் பணவரவை அதிகரிக்க செய்யும். இல்லத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் குழந்தைகளால் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் மகிழ்ச்சி பெருகும். மேலும் உத்தியோகத்தில் பதவி சம்பள உயர்வும் அலுவலகத்தில் வைத்திருந்த கோரிக்கைகள் நிறைவேறுதலும், வேறு உத்தியோகம், வெளிநாடு முயற்சிகள் இப்பொழுது நல்ல பலனை தந்து நோக்கத்தை நிறைவேற்றுவதால் அப்பாடா என்று பெருமூச்சு விட துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடும். தாமதமான திருமணம் புத்திரபாக்கியம் கைகூடும். பிரிந்த தம்பதிகள் குடும்பம் ஒன்று சேரும் பொதுவில் இந்த 4 மாதங்கள் அதிக நன்மை இதில் சேமிக்கும் பழக்கத்தை கொண்டால் அடுத்துவரும் காலங்கள் சிரமம் குறையும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: குரு பங்குனியில் 5ல் ப்ரவேசம், ராகு 6ல், கேது 12ல் இது துக்கத்தை குறைக்கும். இதுவரை தடைபட்டு வந்த முயற்சிகள் யாவிலும் வெற்றி, இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் இதுவரை இருந்துவந்த மன அழுத்தம் முற்றிலுமாக நீங்கி அவர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு, நல்ல வேலை கிடைத்தல் என்று மனதில் நினைத்தது நிறைவேறும். சொந்த தொழில் செய்யும் அனைவருக்கும் இது ஏற்ற காலம். லாபம் பெருகும். எதிரிகள் மறைவர், கடன் தொல்லை முற்றிலுமாக நீங்கும். தொழில் விரிவாக்கம் நன்றாக நடை பெறும். சிலருக்கு புதிய சொந்த தொழில் முனையும் வாய்ப்பு கைகூடு ஆர்டர்களும் நிறைய வரும். விவசாயத்தில் விளைச்சல் அதிகமாகும். வீட்டின் பேரில் பணம் கட்டி யிருந்து மிகுந்த தாமதம் ஆகி கொண்டிருந்தால் அது இப்பொழுது திர்த்து வீடு கைக்கு வரும். நண்பர்கள் உறவினர்கள் சமூகம் இடையே நல்ல பெயர், அந்தஸ்து உண்டாகும். நெருக்கம் கூடும். புதிய முயற்சிகளுக்கு இவர்கள் துணை இருப்பர். பணவரவு தாராளம். பொதுவில் இந்த வருடம் அதிகப்படியான நன்மைகள் இருக்கு. இடையில் சில சங்கடங்கள் இருக்கும். பொறுமை நிதானம் பெரியோர்கள் ஆலோசனைபடி நடப்பது என்று இருந்தால் பாதிப்பில்லை

ப்ரார்த்தனைகள் : ராசிக்குறிய முருகனை வழிபடுவது அருகில் உள்ள முருகர் கோயிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வது விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது, நாம ஜெபம் செய்வது முடிந்த வரை தான தர்மங்களை செய்வது பொறுமை அமைதி எப்பொழுதும் இறைத்யானம் இவை இருந்தால் இந்த வருடத்தை சுலபமாக கடந்துவிடலாம். கோபத்தை குறையுங்கள் அதற்கு முருகனின் நாம ஜெபம் நிச்சயம் உதவும்.

தனூர் : (மூலம் 4பாதங்கள், பூராடம் 4பாதங்கள், உத்திராடம் 1ம் பாதம் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்:  சூரியன் 5ல் உச்சம் சந்திரன் சுக்ரனுடன் 5ம் இடம் என்பது புத்திரம், புகழ், கல்வி அந்தஸ்து அதிகாரம் உங்கள் செல்வாக்கு உயரும் நேரம் ஆரம்பம். மற்ற கிரஹங்களில் 2ல் இருக்கும் சனி பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார். 6ல் இருக்கும் ராகு நோய், கடன், எதிரிகளை கட்டுப்படுத்தி எதிர்பாராத வெற்றி, பணவரவு போன்றவற்றை தருகிறார். இவர்கள் வருடம் முழுவதும் அங்கு இருப்பவர்கள், செவ்வாய்,புதன் அவ்வப்போது நன்மையும், சுக்ரன் பெரும்பாலும் நன்மையும் தருவதால் பொருளாதாரம் நல்ல நிலையில் வருடம் முழுவதும் இருக்கும். சனி கேதுவால் சில எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரிப்பதால் சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி அந்யோந்யம் ஏற்படும். 7ல் செவ்வாய் திருமணம் போன்ற தடைகளை செய்யும். ஆனாலும் தனிப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் திருமணம் கைகூடும். 12ல் கேது+2ல் சனி குடும்பத்தில் சங்கடங்களையும் சச்சரவுகளையும் தரும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவு தரும். உத்தியோகத்தில் நல்ல நிலை பதவி உயர்வு இருக்கும். சொந்த தொழில் நல்ல லாபம் உண்டாகும். தொழிலாளர்கள் வகையில் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். பெரும்பாலும் இந்த நாலு மாதங்கள் நன்மையே

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: தடைபட்டுவந்த திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூமி, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், கடந்தகாலத்தில் ஏற்பட்ட வழக்குகள் யாவும் சாதக நிலைக்கு திரும்பும். அவப்பெயர்களும் மாறும். மனதில் உற்சாகம் ஏற்பட்டு எல்லோருடனும் அனுசரித்து போவீர்கள். அதேபோல தெய்வ வழிபாடு, விருந்து கேளிக்கைகள் இல்லத்தில் வரும் புதிய உறவுகளால் நன்மை என்று நன்றாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உடல் ஆரோக்கியத்தில் செலவு ஏற்படலாம், அதே போல குரு வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலமும் புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலமும் முயற்சிகளில் தடை தாமதம், மன உளைச்சல் ஏற்படும். பெரும்பாலும் நன்மை என்பதால் இவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகம் தொழில் இவற்றில் முன்னேற்றம் இருக்கும். பொதுவில் நன்மை அதிகம்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: பங்குனியில் மாறும் குரு, ராகு-கேது பெயர்சிகள் முன்கூட்டியே நல்லபலன்களை தருவதால் செவ்வாய், சனி போன்ற கிரஹங்களால் ஏற்படும் தொல்லைகள் குறையும். நினைத்ததை சாதித்து கொள்ளலாம். பணப்புழக்கம் மிக தாராளம். வீடு வாகன வகையில் சுப செலவுகள் இருக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு மட்டுமல்லாது வெளிநாடு வேறு உத்தியோகம் போன்ற முயற்சிகள் வெற்றிதரும். அலுவலகத்தில் வைத்திருந்த நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். சொந்த தொழில் செய்யும் அனைவரும் லாபம் பார்ப்பார்கள், புதிய தொழில் தொடங்கும் திட்டம் செயலுக்கு வரும். பண உதவிகள் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். தொழில் விஸ்தரிப்பு எளிதாகும் பெயர் புகழ் பரவும். பொதுவில் இந்த வருடம் முழுவதும் நன்மை அதிகம். குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்வீர்கள், தெய்வ அனுகூலம் இருக்கு. அதனால் வழக்குகளில் சாதக தீர்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் மூலம் அதிக மகிழ்ச்சி கிடைக்கும். பெற்றோர்கள் சகோதர வகையிலும் ஆதாயம் உண்டு. சேமிப்பு நல்ல நிலையை உண்டாகும். துன்பங்கள் குறைவு. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள்.

ப்ரார்த்தனைகள் : தக்ஷிணாமூர்த்தி, விக்னவிநாயகர், யோஹ ஹயக்ரீவரை வழிபடுவது கோயிலில் விளக்கேற்றுவது, நாம ஜெபம் செய்வது நன்மை தரும். அதிக நன்மை இருப்பதால், தான தர்மங்கள், அன்னதானம், வஸ்திரதானம் இவற்றை அதிகமாக செய்யுங்கள். சரீர ஒத்தாசை செய்வதும் நற்பலன் தரும்.

மகரம் : (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4பாதங்கள், அவிட்டம் 1,2 பாதம் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்: சூரியன் சந்திரன் சுக்ரன் வருட துவக்கத்தில் 4ல்  பெருமூச்சுவிட்டுக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியும் சுகமும் நல்ல நிகழ்வுகளும் உண்டாகி ஒரு உற்சாகத்தை தரும், பணப்புழக்கம் தாராளம், செலவுகளும் சுப செலவுகளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் ஒற்றுமை, கணவன் மனைவி அந்யோந்யம், குழந்தைகளால் சந்தோஷம், பெற்றோர் சகோதர வகையிலும் நன்மை என்ற அளவில் வருடம் தொடங்கி 4மாதம் வரையில் நன்றாகவே இருக்கும். புதுவீடு போகும் பாக்கியம் சிலருக்கு இருக்கும். நீண்டநாள் வழக்கு, ஜீவனத்தில் இருந்த தடை வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள் இவையெல்லாம் மாறி சுமூகமாகவும் நல்ல வேலையும் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர். வேலையில் உற்சாகம், நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறுதல், சிலர் சொந்த தொழில் தொடங்குதல் அதில் வெற்றி, நாட்பட்ட சரக்குகள் விற்று லாபம், தொழில் விஸ்தரிப்பு இப்படி பலவும் நடந்து மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க உதவி எதிர்பார்த்தோருக்கு அது கிடைக்கும். பணப்புழக்கம் கடனை அடைக்க உதவும். 06.04.21 – 13.06.21 வரையில் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி பண சேமிப்பை அதிகரித்து வைத்துகொண்டாலும் முயற்சிகளில் உண்டாகும் வெற்றியை தக்கவைத்து கொண்டாலும் அடுத்த நான்கு மாதங்களை சமாளித்து விடலாம்.

 ஆவணி முதல் கார்த்திகை வரையில்:  சில விஷயங்கள் கட்டுப்பட்டு, சில முயற்சிகள் தாமதம் என்ற நிலையில் இருக்கும். 13.06.21 – 14.11.21 வரையிலான காலங்கள் மந்தமாக இருக்கும், வேலை பளு, வருமானத்தில் தொய்வு என்று இருக்கும். உடல் ஆரோக்கியம் மருத்துவ செலவு வாழ்க்கை துணை,பெற்றோர், பிள்ளைகள் வழியிலும் மருத்தவ செலவுகள் என்று பெருகும். அக்கம்பக்கத்தாரோடு அல்லது வேலை பார்க்கும் இடத்தில் என்று வீண் வம்புகள் வந்து மன உளைச்சலை தரும். கவனம் தேவை மௌன விரதம் நல்லது செய்யும். சொந்த தொழில் செய்வோரும் தொழிலாளர்களிடம் கனிவாக நடந்து கொள்வது அவசியம். போட்டிகள் அதிகரிக்கும். கடும் உழைப்பு தேவை படும், வீடு வாகனம், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்யும் எண்ணத்தை தள்ளி போடுவது நன்மைதரும். பண பிரச்சனை இருக்கும். அதே போல இல்லத்தில் எதிர்பாராத இழப்புகளும் இருக்கும். அமைதியும், நிதானமும் நலம்விரும்புவோர்களின் ஆலோசனையும் படி நடப்பது நன்மை தரும். கவனம் தேவை

மார்கழி முதல் பங்குனி வரையில்: வரும் பங்குனியில் வரும் குரு, ராகு-கேது பெயர்ச்சிகள் ஓரளவு முன்கூட்டியே நன்மை தரும், மேலும் சூரியன், புதன், சுக்ரன் சந்திரன் சாதகமாக இருப்பதால் முயற்சிகள் வெற்றி அடையும். 14.11.21 முதல் நல்ல காலம் திரும்ப ஆரம்பிக்கும். பொதுவாக பொருளாதார ஏற்றம் இருக்கும் பண வரவு தாராளமாக இருக்கும். அதை சேமித்தால் நலம் தரும். மேலும் குருபகவான் பார்வை சனிபகவான் பார்வை இரண்டும் வீடு வாகன யோகம், இல்லத்தில் சுப நிகழ்வுகளால் புதிய உறவுகள் உண்டாதல், புதிய வேலை, யாத்திரை, விருந்து என்று நன்றாகவே இருக்கும். பெரிய சங்கடங்கள் இருக்காது காரணம் மற்ற கிரஹங்களும் பெரும்பாலான நேரங்கள் நன்மை தருவதால் கவலை வேண்டாம். அதே நேரம் 5ல் இருக்கும் ராகு, 6ல் செவ்வாய் மருத்துவ செலவு மறதியினால் பொருள் விரயம், புகழ், செல்வாக்கு பாதித்தல் கொடுத்த வாக்கை தவறவிடுதல் போன்ற பாதிப்புகள் பண விரயம், வீண் செலவுகள், மன உளைச்சல் என்று கொடுக்கும். பெரும்பாலும் நன்மை அதிகம் என்பதால் தீமைகளை சமாளித்து விடுவீர்கள். இந்த பிலவ ஆண்டு நன்றாக இருக்கிறது கவலை வேண்டாம்.

ப்ரார்த்தனைகள் : திருமாலை வணங்குவது அவன் கோயிலகளில் விளக்கேற்றி வழிபடுவது இஷ்ட தெய்வம் அல்லது ஓம் நமோ நாராயணா என்று காலை இரவு 108 தடவை உச்சரிப்பது மன உறுதியை தந்து சங்கடங்களை போக்கும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வது அன்னதானம், நன்மை தரும்.

கும்பம் : (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்: வருட ஆரம்பம் 3ல் சூரியன் சஞ்சாரம் ஒரு ஆறுதல் ஓரளவு நன்மை மனம் தைரியம் ஏற்படும் சந்திரனும் சுக்ரனும் கூட பணவரவை தாராளமாக்கும் ஆனால் குருபகவான் ஜென்மத்தில் 13.06.21 வரை + ராகு, 5ல் செவ்வாய் கொஞ்சம் பாதிப்பை தருகிறது. எதிலும் ஒரு மந்த நிலையும், பொருள்விரயம், பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மற்ற கிரஹங்களில் புதன் சுக்ரன் பெரும்பாலும் நன்மை தருவதால் ஓரளவு நினைப்பது நிறைவேறும். மற்ற கிரஹங்கள் நன்மை தீமை கலந்து செய்கின்றனர். அமைதி பொறுமை, யோசித்து செயல்படுதல், சிக்கனம், சேமிப்பு என்று இருந்தால் ஓரளவு இந்த நான்கு மாதங்களை கடந்துவிடும். அவசரப்படுதல் எவரையும் நம்பி பொறுப்பை பணத்தை கொடுப்பது என்று இருந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் சொந்த தொழிலில் அதிக சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனமாக இருப்பது அவசியம். பணப்புழக்கம் சுமாராக இருக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கும். உறவினர்களால் வரும் சங்கடம் பணப்பிரச்சனை இவை மன உளைச்சலை தரும். வாக்குவாதம், எரிச்சலால் வார்த்தைகளை கொட்டுதல் இவை பெரும்பாதிப்பை தரும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: 12ல் குரு சனி, 7ல் சூரியன் , வக்ர புதன் இப்படி எதில் எடுத்தாலும் விரயம், பாதிப்பு என்ற அளவிலேயே இருக்கும், சுக்ரனும் சனி பார்வையாலும் பணவரவையும் முன்னேற்றத்தை கொடுத்தாலும், மனம் அதைரியப்படும் தேவையில்லாத மருத்துவ செல்வுகள், உத்தியோகத்தில் பின்னடைவு சொந்த தொழிலில் மந்த நிலை, புதிய முயற்சிகள் தடை படுதல், இல்லத்தில் மன விரோதங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சண்டை என்றெல்லாம் போய் கொண்டே இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் போதாது என்பது போல இருக்கும். அவசரப்படாமல் நிதானமாக யோசித்து, நலம்விரும்பும் பெரியோர்களின் ஆலோசனைப்படியும், வார்த்தைகளை கொட்டாமலும் இருந்தால் ஓரளவு நன்றாக கடந்துவிடலாம். மருத்துவ செலவுகள் தனக்கே, வாழ்க்கை துணைவர், பெற்றோர் குழந்தைகள் என்று எல்லோராலும் அதிகரிக்கலாம். பிள்ளைகள் வழியில் வரும் பிரச்சனைகளை குடும்ப அங்கத்தினருடன் விவாதித்து முடிவெடுப்பது என்று இருந்தால் சந்தோஷமாக குடும்பம் ஓடும். புது வீடு அல்லது பணத்தை இன்வெஸ்ட் செய்வது போன்ற விஷயங்களில் 14.11.21க்கு பின் செயல்படுத்துவதும் தக்க ஆலோசனை பெற்று செய்வதும் நன்மை தரும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்த 4 மாதம் அதிக சிரமம் உண்டாகும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: குரு 2லும், ராகு கேது 3-9லுமாக பங்குனியில் மாறுவது அதற்கு முன்னர் அந்த பலனை தருவதால் இதுவரை இருந்துவந்த வேதனைகள் தீரும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய வேலை, பதவி உயர்வு போன்றவை கிடைத்து பணப்புழக்கம் தாராளம் என்று இருக்கும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும், சொந்த தொழிலில் வளர்ச்சி கூட ஆரம்பிக்கும். இல்லத்தில் திருமணம், குழந்தை போன்ற சுப செலவுகள் மகிழ்ச்சியை தரும். சிலருக்கு வீடுவாங்கும் யோகம் கைகூடும். வரவேண்டிய கடன்கள் வசூலாகும், விவசாயம் வளர்ச்சி அடையும், தடைபட்டுவந்த வழக்குகள் சாதகமாக தீர்ப்பு வரும். அரசாங்கம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வந்து ஒரு நிம்மதியை தரும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். இல்லத்து உறுப்பினர்கள் மருத்துவ செலவும் குறைய ஆரம்பிக்கும். விட்டுப்போன தொடர்புகள் புதிப்பிக்கப்பட்டு மன ஆறுதல் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து கேளிக்கைகள், ஆடை ஆபரண சேர்க்கை, புனித பயணம், வேலை நிமித்தம் பிரிந்த குடும்பம் திரும்ப ஒன்று சேருதல். எதிரிகள் தொல்லை குறையும். நல்ல நிலை உண்டாகும். மகிழ்ச்சி கூடும். பொதுவில் இந்த கடைசி 4மாதங்கள் மிக நன்றாக இருக்கும்.

ப்ரார்த்தனைகள் : ப்ரத்யுங்கராதேவி, சாஸ்தா போன்ற தெய்வங்களை வழிபடுவது துர்க்கை கோயிலில் விளக்கேற்றுவது அம்பாள் ஸ்லோகங்களை சொல்வது போன்றவையும், முடிந்த அளவு அன்ன தானம், வஸ்திர தானம் இயலாதவர்களுக்கு சரீர ஒத்தாசை பண உதவி செய்வதும் நன்மை தரும்.குல தெய்வ வழிபாடும் முக்கியம்.

மீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 4பாதங்கள், ரேவதி 4பாதங்கள் முடிய) :

சித்திரை முதல் ஆடி வரையில்: ராசிநாதன் குரு சஞ்சாரம் சுபம் கருதி நல்ல செலவுகளாக இருக்கும். குழந்தைகள் படிப்பு செலவு, வீடுவாங்குதல், திருமணம் குழந்தை போன்ற செலவுகளாக இருக்கும். சூரியன் 2ல் உச்சம் கொஞ்சம் உடல் உபாதைகள் கண் வலி, தலைவலி கொடுக்கும். மேலும் சுக்ரன் 2ல் அதிக பணவரவு, உத்தியோகம்/தொழிலில் மேன்மை புதிய வீடுவாங்குதல், புனித யாத்திரை, விருந்து கேளிக்கைகள் இப்படி நன்மையாகவே இருக்கும் 3ல் ராகு 11ல் சனி ஆட்சி இருவரும் வருடம் முழுவதும் பணத்தை அள்ளித்தருகின்றனர். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் அதேநேரம் 9ல் இருக்கும் கேது பெற்றோர் உடல் நலம் பாதிக்க செய்வார் மன கவலைகளை தருவார் செவ்வாய் 6,8 ராசிகளில் சஞ்சரிக்கும் காலமும் சில எதிர்பாராத தொல்லைகள், மன உளைச்சல், பண விரயம் வழக்கு என தருவார் இருந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மை தருவதாலும் குருபகவான் பார்வை பலம் தருவதாலும் சங்கடங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் இருப்பதும் பண சேமிப்பு அதிகரிக்க செய்யும். மகிழ்ச்சியான மாதங்களாக இருக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: குரு சனி லாபத்தில் 5ல் சூரியன் ஆட்சி என்று இதுவும் மிக நன்றாக இருக்கும், மற்ற கிரஹங்களும் சாதகம், குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம், குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் ஒற்றுமை, புதிய உறவுகளால் மகிழ்ச்சி என இருக்கும். தடை பட்டுவந்த குழந்தை பாக்கியம், திருமணம் இவை நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையும் சிலருக்கு சகோதரவகையால் நண்மையும். விட்ட்ப்போன சொந்தங்கள் திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளுதலும் அதை ஏற்று மகிழ்ச்சியாக இருப்பதும் நடக்கும். பழைய நண்பர்களால் பெரிய நன்மைகளும் உண்டாகும் அது குடும்பத்தினரை உற்சாக படவைக்கும். வீடு யோகம் உடாகும். பெற்றோர் வழியில் மருத்துவ செலவுகள் இருக்கும் கவனம் தேவை. உத்தியோகம், சொந்ததொழில் என்று ஜீவன வகையில் நன்றாகவே இருக்கும். விரும்பிய வேலை இடமாற்றம், சொந்த தொழிலில் லாபம் அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத்தை சேமிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் இந்த நான்கு மாதமும் வருமானம் அதிகரிக்கும். நல்ல நிகழ்வுகளாகவே அதிகம் நடக்கும். மருத்துவ செலவுகள், வீண் விரயம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: பங்குனியில் குருபகவான் ஜென்மத்தில், ராகு 2ல் , 8ல் கேது என்று முன்கூட்டியே தரும் பலனால் மந்த நிலை, குடும்பத்தில் அதிக செல்வு, கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு, பிரயாணத்தால் விபத்து காயம், முயற்சிகள் தடைபடுதல் கொஞ்சம் ஸ்லோவாக உத்தியோகம், சொந்த தொழில் என்று செல்வது, வேலை பளு அதிகரித்தல் என்று ஒருபக்கம் இருக்கும். குடும்பத்தை பிரிய நேரும். இருந்தாலும் சூரியன் புதன் சுக்ரன் செவ்வாய் சஞ்சாரம் நன்மைகளை செய்வதாலும் சனி பலம் தருவதாலும் இவற்றை சமாளித்து பெரிய பாதிப்பில்லாமல் பார்த்து கொள்வீர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை, பயணங்கள் போது கவனமாயிருத்தல் என்றிருந்தால் போதும், அதே போல் கூடுமானவரையில் எவரோடும் மோதல் போக்கு வேண்டாம். கடந்த 8மாதங்களில் ஏற்படும் அதிக நற்பலன்கள் இந்த 4 மாதங்களை சமாளிக்க உதவும். அதே போல் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மேற்சொன்ன கஷ்டங்கள் அதிகம் இருக்காது. ஜீவன வகையிலும் பெரிய பாதிப்புகள் இல்லை அதனால் கவலை வேண்டாம். பொதுவில் கடைசி நாலுமாதங்கள் சுமார்.

ப்ரார்த்தனைகள் : நன்மைகள் அதிகம் இருப்பதால் உங்களுக்கு மிகவும் பிடித்த தெய்வத்தின் பெயரை உச்சரித்து கொண்டிருங்கள், குல தெய்வ வழிபாடும் விளக்கேற்றுதல் வஸ்திரம் சாற்றி படையல் (அமுது படைத்தல்) செய்தல் இவை நன்மை தரும். மேலும் தாராளமாக அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்ற தான தர்மங்களை செய்வதால் நன்மை அதிகரிக்கும்.

!! சுபம் !!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.