வலம்புரி சங்கு என்று விற்கிறார்கள். அதில் முள்ளு முள்ளா இருக்கும். இலக்கணப்படி அது வலம்புரியாவே இருக்கும். அதாவது நுனி இடப்புறம் இருக்கும்போது திறப்பு மேல் நோக்கியும், நம்மை விட்டு எதிர்பக்கமும் இருக்கும். ஆனால் இது ரேர் இல்லை. அதாவது இந்த ஸ்பீஷீஸ் ஹிந்து மஹா சமுத்திர சங்கு எப்பவும் இப்படித்தான் இருக்கும்! வழ வழவென்று இருக்கும் வங்காள விரிகுடா சங்கு எப்பவும் இடம்புரியாக இருக்கும். இதில் எப்போதாவது தோன்றுகிற வலம்புரிதான் விசேஷம். அவ்வளோதானே, மழிச்சு கொடுத்துடறேன்னு பெரிய முள்ளு சங்கை மொழு மொழு ஆக்கியும் விற்கிறார்கள்! வெட்டி மாற்றி ஒட்டியும் விற்கிறார்கள். என்னென்னெவோ நடக்கிறது! இதெல்லாம் நிறைய விற்கிற ராமேஸ்வரம் மாதிரி இடங்களில விவரம் தெரிஞ்ச உள்ளூர் ஆசாமி கூட போய்தான் வாங்கணும்!
சந்தனப்பவுடர், வில்லை எல்லாம் இரண்டாம் பக்ஷம். வெகு சுலபமாக ஏதோ ஒரு மரத்தூளை வாச்னைக்கு கொஞ்சமே கொஞ்சம் சந்தன தைலம் சேர்த்து விற்கிறார்கள். சந்தன கட்டை வாங்கி சந்தனக்கல்லில் இழைப்பதே நல்லது.
நல்ல கற்பூரம் கிடைப்பதே இல்லை! கற்பூர மரத்து தயாரிப்பெல்லாம் எப்பவோ போய்விட்டது. இப்போது கிடைப்பது கெமிக்கல் தயாரிப்பே. இதாவது நல்லா இருக்கக்கூடாதா? கற்பூரம் எரிந்தபின் ஒன்றுமே மிஞ்சாமல் இருந்தால் நல்ல கற்பூரம். கரி மிஞ்சினால் இல்லை.
பருத்தியாக வாங்கி பஞ்சில் நூற்று திரியாக்கி பயன்படுத்துவது சிரத்தை உள்ளோர் செயல். இதெல்லாம் வேஸ்ட் காட்டன் என்று வாங்கி வியாபார நோக்கில் செய்கிறார்கள். துணிக்காக உருவாக்கும் இந்த காட்டனில் செயற்கை இழை சேர்ந்திருக்கும். அது விளக்குத்திரிக்கு சரியில்லை.
வெள்ளை வெளேர் என்று விபூதி இருந்தால் அனேகமாக அது சரியில்லை! வெள்ளை நிறத்துக்காக எதேதோ ரசாயனங்கள் சேர்க்கிறார்கள். சாம்பல் என்றால் அது சாம்பல் கலர் இல்லாமல் எப்படி இருக்கும்? ஏதேனும் பெரிய யாகங்கள் மாதிரி நடந்தால் முந்திய நாள் சொல்லி வைத்து அடுத்த நாள் மடியாக போய் சேகரித்து வாருங்கள்.