துலாம் ராசி

துலாம் ராசி(சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதம் முடிய)–55/100

சனிபகவான் உங்கள் ராசிக்கு 4ம் ராசியான சுகஸ்தானத்திற்கு செல்கிறார், அர்த்தாஷ்டம சனி என சொன்னாலும், உங்கள் ராசியையும், ருணரோகசத்ரு ஸ்தானமான 6ம் இடத்தையும் பார்க்கிறார் அதனால் நல்ல பலன்களை அதிகம் பெறுவீர்கள். தாங்கள் ஜீவன காரகனான சனியின் அருளை பெற நேர்மையாக உழைத்தால் போதும் பெரிய துன்பங்கள் வராது. தொழில்/உத்தியோக ரீதியான முன்னேற்றம் அதிகம், தனலாபம் அதிகம் என்பதால் சொத்து சுகம் அதிகம், மேலும் உழைப்பதற்க்கான தெம்பு அதிகரிக்கும், மனதில் ஒரு தைரியம் தோன்றும். அடுத்த மூன்று ஆண்டுகளும் ஓரளவு நன்றாக சென்றாலும் குருவின் சஞ்சாரமும் ராகு/கேது சஞ்சாரமுமும் நல்ல பலனை தரவில்லை, இருந்தாலும் மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் + சனியின் முழுக்கடாக்ஷம் சேர்ந்து  சொத்து, திருமணம், உத்தியோகத்தில் லாபம், குழந்தை பாக்கியம், பெற்றோர் குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி என்று எல்லாம் இருக்கும். பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சியில் அதிக நன்மை நடக்கும்.

உடல்நலம்/ஆரோக்கியம்:

வயதில் பெரியோராய் இருக்கும் துலா ராசி அன்பர்களுக்கு மறதி, ஜீரணக்கோளாறுகள் ஏற்படும், வயதில் சிறியோருக்கு மந்த நிலை தூக்கமின்மை ஏற்படும், மற்றவர்களுக்கு வயறு சம்பந்தப்பட்ட கோளாறுகளும் உணவுப்பழக்கத்தால் இருதய சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கமும் இருக்கும். சரியான மருத்துவ சிகிச்சைமுறைகளை மேற்க்கொண்டால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை, பொதுவாக குடும்ப அங்கத்தினர் உடல் நிலையும் சிறு சிறுபாதிப்புகளுக்குள்ளாகும். குரு 4 ம் இடம் சஞ்சரிக்கும் ஏப்ரல்,மே, ஜூன் 2020 மற்றும் 2021 முடியவும் பின் ராகு கேது பெயர்ச்சி காலம் முழுவதும் உடல்ரீதியான படுத்தல்கள் மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும் கவனம் தேவை.

குடும்பம் மற்றும் உறவுகள்:

சுகஸ்தானத்தில் குருவுடன் சேர்ந்திருக்கும் காலங்கள் ஏப்ரல்,மே,ஜூன் 2020, மற்றும் செப்டம்பர் 2020 முதல் ஜூலை 2021 வரை கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வரலாம், விட்டுக்கொடுத்து செல்வது நல்லது,  பெற்றோர்கள் சகோதர உறவுகளிடையேயும் பிணக்கம் வரலாம், மற்ற காலங்களில் நல்ல சுமூகமான உறவு இருக்கும், பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதன்படி அனுசரித்து போவது நல்லது. குழந்தைகளால் சிறு சிறு தொல்லை இருக்கலாம். 4ல் குரு வரும்போது குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம், ஆனால் தனிப்பட்ட ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால் கவலையில்லை. பொதுவில் குடும்ப உறவுகளிடம் அனுசரித்து போவது நல்லது. இந்த சனி பெயர்ச்சியில் புதிய உறவுகள் வரும்.

வேலை / உத்தியோகம்:

புதிய வேலைக்கு முயற்சித்திருந்தால் அது கிடைக்கும்.வெளிநாட்டு வேலையும் கிடைக்கும். இருந்தாலும் அரசியல் இருப்பதால் நன்மை / தீமை கலந்து வரும். குருவும் சனியும்சேரும் நேரம் ஏப்ரல்,மே,ஜூன் 2020 மற்றும் ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டங்களும், சனிவக்ர சஞ்சாரகால கட்டமும் (முன்னுரையில் கொடுக்கப்பட்டு இருக்கு) அதிக வேலைபளு எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை, சகஊழியர் மேலதிகாரியால் தொல்லை என்று இருக்கும். இருந்தாலும் இந்த 3 ஆண்டுகளில் நல்லவருமானம்,சொத்து சேர்ப்பு, பதவி உயர்வு என்றெல்லாம் இருக்கும். வசதிகள்வந்துசேரும்.

தொழிலதிபர்கள்:

தொழிலில் மேன்மை உண்டாகும்.வாடிக்கையாளர்கள் பெருகி வருமானம் அதிகரிக்கும்.எதிரிகள் தொல்லை நீங்கும். புதிய தொழில் விஸ்தரிப்புக்கு ஏற்ற நேரம். புதியதாய் தொழில் தொடங்குவோருக்கு ஏற்ற காலம், வருமானம் இரட்டிப்பாகும். தொல்லைகள் அகலும்.வங்கி கடன் கிடைக்கும். தொழிலாளர்கள் மூலம் வருவாய் பெருகும். அதே நேரம் குரு மற்றும் ராகு/கேது சஞ்சாரங்கள் இந்த சனிப்பெயர்ச்சி முழுவதும்சரியில்லை.கணக்குகளை சரியாக வைத்து கொள்ளவும்.எதிலும் கவனத்துடன் நல்ல ஆலோசனையை பெற்று எந்த வேலையையும் செய்யவும். கூட்டாளிகளுடன் மோதல் போக்கு வேண்டாம். அனுசரித்து போவது நல்லது. பண விஷயத்தில் உஷாராய் இருப்பது நல்லது.

மாணவர்கள்:

படிப்பில் திறன் கூடும் எதிலும் அதிக சிரத்தை எடுத்து கொண்டு படிப்பார்கள், மேல்படிப்பு, அயல்நாட்டு படிப்பு போன்றவை கைகூடும், போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். சனிபகவானால் நன்மை இருந்தாலும் இந்த சனிப்பெயர்ச்சி முழுவதும் ராகு/கேது சஞ்சாரம் மற்றும் குரு சஞ்சாரம் நன்மையை தராது. பெரியோர்கள், பெற்றோர் ஆசிரியர் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும். நண்பர்கள் சகவாசம் சரியாக இருந்தால் தொல்லை இருக்காது. எந்த ஒரு முயற்சியை தொடங்குமுன் தீவிவிர ஆலோசனையை மேற்கொள்வது நல்லது.

கலைஞர்கள் / அரசியல்வாதிகள்/ விவசாயிகள்:

மிக நன்றாக ஆரம்பிக்கிறது சனிப்பெயர்ச்சி. கலைஞர்களுக்கு/திரைதுறையினருக்கு நல்லவாய்ப்புகள் தேடிவரும்.பணம் குவியும். ரசிகர்கள் பாராட்டு கிடைக்கும். வருமானத்தை சேமிக்க பழக்குவது நல்லது. காரணம் குரு, ராகு/கேது சஞ்சாரங்கள் நன்றாக இல்லை.ரசிகர்களை தக்கவைப்பது, வீண்விவாதங்களை குறைப்பது செலவுகளை கட்டுப்படுத்துவது போன்றவை நன்மை தரும்.

அரசியல்வாதிகள் அதிக செலவை செய்து பதவியை தக்கவைக்க வேண்டிவரும். தொண்டர்கள் ஆதரவு இருந்தாலும் எதிரி தொல்லையால் மேலிடத்தில் மோதல் போக்கு இல்லாமல் இருந்தால் நலம். பதவிக்கு எப்பொழுதும் ஆபத்து இருந்து கொண்டிருக்கும். விவசாயிகள் விளைச்சல் நன்றாக இருந்தாலும், வழக்குகள் சாதகம் ஆவது கடினம்.புதிய வழக்குகளில் சிக்காமல் இருக்கவும் முயற்சிக்க வேண்டும், பொறுமை,நிதானம் இவற்றை கடைபிடிப்பதுஅவசியம். குடும்பத்திலும் சிறுசிறு பிரச்சனைகள் வரும். கால்நடையால் மருத்துவ செலவுகள் இருக்கும்.

பெண்கள்:

மேற்சொன்ன அனைத்து பலன்கள் இருந்தாலும் உடல்ரீதியான பிரச்சனைகள் சிறுசிறு தொல்லை தரும். வயதான பெண்மணிகளுக்கு தடுமாற்றம், மறதி இவற்றால் அவதிப்பட நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தாலும் வீண் விவாதங்களை தவிர்ப்பது நலம் தரும்.புனித யாத்திரைகள் கேளிக்கைகள் சென்று வருவீர்கள். திருமணத்துக்கு காத்திருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும், வார்த்தைகளை விடுவதில் எச்சரிக்கை தேவை. கோபம் வந்தாலும் அடக்கிக் கொள்ள பழக வேண்டும். பொதுவாக நன்மை/தீமை இரண்டும் கலந்து வருகிறது.கவனம்தேவை.

ப்ரார்த்தனையும் வணங்க வேண்டிய தெய்வமும்:

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹரை வணங்குதல், அருகில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமைகளில் ந்ருஸிம்ஹா என்று சொல்லி பிரதக்ஷினம் செய்யவேண்டும், முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம் போன்றவைகளை செய்வது, குழந்தைகள் படிக்க உதவி போன்றவற்றை நிறைய செய்தால் நலம் உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.