பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 5

தாடகை வதம் முடித்து விஸ்வாமித்ரர் வேள்வி காத்து முனிவரும் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்களும் அடர்ந்த காடு வழியே நடந்து சென்றனர்.

வழி முழுதும் மாமுனிவன் பாலகர்களுக்கு அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு என்று நடமாடும் பாடசாலையாகவே நடத்திக் கொண்டு வந்தான். அப்போது அவர்கள் வழியில் ஒரு அதிசயம் நடந்தது.

வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி 
வல்அரக்கர்உயிர்உண்டுகல்லைப்பெண்ணாக்கிக்

அவர்கள் வழித்தடத்தில் ராமனின் பாத தூசிப் பட்டு ஒரு கல் பெண்ணாக மாறினாள்.

இதைக் கம்பன்,

கண்ட கல்மிசைக் காகுத்தன்
   கழல் - துகள் கதுவ.-
உண்ட பேதைமை மயக்கு அற
   வேறுபட்டு. உருவம்
கொண்டு. மெய் உணர்பவன்
   கழல் கூடியது ஒப்ப.-
பண்டை வண்ணமாய் நின்றனள்;
   மா முனி பணிப்பான்;

இவர்கள் வழித்தடத்தில் கிடந்த கல்லின் மீது ராமனின் பாதத் துகள் பட்டு, தன்னுடைய பழைய வடிவத்தில் அகலிகைத் தோன்றினாள்.
இது அஞ்ஞாமாகிய அறியாமை இருள் நீங்கி உண்மை உருவம் கொண்டு திருமாலின் திருவடிகளை அடியவர் அடைவது போல் உள்ளது என்கிறார் விசுவாமித்திரர்.
மேலும்,

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
    இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர்
    துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின்
    மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்,
    கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இது போன்ற நிகழ்வைப் பார்த்து, இனிமேல் நீ இந்த உலகில் பிறந்து தீயவரை அழித்து நல்லவரை காத்து கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற வழியை காட்டிய பின் இந்த உலகில் யாரும் துன்பத்தில் உழல்வரா?
அங்கு வனத்தில் தாடகை உடன் நிகழ்ந்த போரில் உன் கை வண்ணம், வில்லாற்றலைக் கண்டேன், இங்கு உன் கால் வண்ணம், திருவடியின் திறமையைக் கண்டேன் என்றான் முனிவன்.

About Author