பிலவ வருஷம் ஆனி மாதம் ராசி பலன்கள்

ஆனி மாதம் ராசி பலன்கள்

நாளது 15.06.2021 செவ்வாய்க்கிழமை காலை 06.01.25 மணிக்கு (சூரிய உதயாதி நாழிகை 0.35.36 வினாடிக்கு) ரிஷபத்தில் இருந்து சூரிய பகவான் மிதுன ராசியில் அடியெடுத்து வைக்கிறார்  மிதுன ராசியில் 16.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 04.53.30 மணிவரை சஞ்சரிக்கிறார். ஆனி மாதம் ராசி பலன்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

கிரஹ நிலைகள் மாதம் பிறக்கும் நேரத்தில் :

லக்னம் – மிருகசீரிடம் 3, சூரியன் – மிருகசீரிடம் 3,  சந்திரன் – ஆயில்யம் 2, செவ்வாய் – பூசம் 2

புதன் (வக்ரம்) – மிருகசீரிடம் 1, குரு – சதயம் 1, சுக்ரன் – புனர்பூசம் 1, சனி(வக்ரம்) – திருவோணம் 3

ராகு – ரோஹிணி 2, கேது –  அனுஷம் 4

பொதுவாக இந்த மாதம் : ஆனி மாதம் புதனுக்கான மாதம்  இந்த மாதம் நாட்டில் மழை, புயல் இருந்தாலும் ராஜா செவ்வாய் என்பதால் விவசாயம் செழிப்பாக இருக்கும். இருந்தாலும் புயலால் சேதம் கொஞ்சம் இருக்கும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு, கடலை போன்றவை அதிக விளைச்சல் இருக்கும். மேலும் செவ்வாயால் போர் மேகம், புதிய ஆயுதங்கள் உண்டாகுதல் அரசாங்க அடக்குமுறை, நாடுகளுக்குள் போட்டி, அதேநேரம் எண்ணை உற்பத்தி, நூதன பொருட்கள் உற்பத்தி, கால்நடைகளுக்கு நன்மை என்றும் இருக்கும். குருவால் செல்வம் பெருகுதல், கல்வி கூடங்களில் புதிய வழிமுறைகள் உண்டாகுதல் குருக்கள் மதிக்கப்படுதல், சுக்ரனுடைய பலத்தால் கலைத்துறையில் முன்னேற்றம். ஆடை வடிவமைப்பு, விற்பனை அதிகரித்தல், ஏற்றுமதி பெருகுதல் அதன் மூலம் வருமானம். திருவாதிரையில் சூரியன் சஞ்சரிக்க தொடங்கும்போது நாட்டில் வியாதிகளின் உக்ரம் தணிந்து ஆட்சியாளர்களால் நன்மை உண்டாகும்.சனி பகவான் வக்ர சஞ்சாரம் கட்டுமான துறை, இரும்பு மின் சாதன துறைகள் நல்ல ஏற்றம் காணும். பொதுவில் மாதம் பிறந்த போது உண்டான லக்னத்துக்கு 9ல் குரு இருந்து சூரியனை பார்ப்பது பலவித நன்மைகள் உண்டாகி, வியாதிகள் குறைந்து எங்கும் மகிழ்ச்சியும் மக்களிடம் பயம் நீங்கி புத்துணர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

இந்த மாதம் நன்மை பெறும் நக்ஷத்திர காரர்கள் :

அஸ்வினி, கிருத்திகை,ரோஹினி, திருவாதிரை,புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், ஹஸ்தம், ஸ்வாதி, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி

மற்றவர்கள் கொஞ்சம் நிதானம் தேவை

மேஷம் : (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

பொதுவில் ராசிநாதன் 4ல் நீசம் பங்கபெற்று சனி பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார். நினைத்த  செயல்களில் வெற்றிக்கிட்டும். நீண்ட நாள் தேங்கி இருந்த விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். சூரியன் 3ல் மலைபோல் வரும் துன்பங்கள் சூரியனை கண்ட பனி போல உருகி ஓடிவிடும். பொருளாதாரம் முன்னேற்றம் காணும், சிலருக்கு 4ல் செவ்வாய் வீடு வாங்கும் யோகத்தை தரும், புதுவீடு குடிபோகும் யோகமும். இருக்கும். 2ல் புதன் வக்ரி பின் 07.07.21 முதல் மிதுனத்தில் குடும்பத்தில் சிறு சலசலப்பு கொஞ்சம் தடங்கல் இருந்து கொண்டிருந்தாலும் நிதானித்து செயல்படும் தன்மை இருப்பதால் வெற்றி நிச்சயம். ராசிக்கு 10ல் சனியும், 11ல் குருவும் பூரண அனுக்ரஹத்தை செய்வதால் சொந்த தொழிலில் லாபம், புதிய தொழில் விஸ்தாரணம், உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்று இருக்கும். இந்த மாதம் அதிக நன்மை என்பதால் உங்கள் திட்டங்களை செயலாக்க முயலவும். பொருளாதார வகையில் நன்றாக இருக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும்.

அஸ்வினி : நக்ஷத்திரநாதன் கேது சனியின் நக்ஷ்த்திரகாலில் சனிபகவான் பத்தில் ஆட்சி, ஜீவன வகையில் குறை இருக்காது புதிய முயற்சிகள் வெற்றியை தரும். ராசிக்கு 7ம் இடம் குரு பார்வை பெறுவதால் திருமணம் கைகூடிவரும். மேலும் 5ம் இடமும் குருவின் பார்வை பெறுவதால் சிலருக்கு புத்திர பாக்கியம் இருக்கும். மகிழ்ச்சியான மாதம் பெரிய சங்கடங்கள் இருக்காது. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். கடன் அடையும், கொடுத்த கடன் வசூலாகும்.

சந்திராஷ்டமம்: 22.06.21 பகல் 12.36 முதல் 23.06.21 காலை 10.57 மணி வரை

பரணி : நக்ஷத்திரநாதன் சுக்ரன் 3ல் பலமாய் வாகன சுகம், சிலருக்கு வண்டி வாங்கும் யோகம், அக்கவுண்ட்ஸ் , பணம் புழங்கும் இடம் இவற்றில் பணிபுரிபவர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும் வருமானம் பெருகும். ஷேர்மார்க்கெட் போன்றவற்றில் ஈடுபடுவோர் 22.06.21 வரை நன்றாக இருக்கும் அதன் பின் கவனம் தேவை. பொதுவாக 22.06.21க்கு பின் சுக்ரன் கடகராசிக்கு செல்வது கொஞ்சம் பலவீனம் ஆகும் இருந்தாலும் மற்ற கிரஹ அனுகூலங்கள் இருப்பதால் சமாளித்துவிடுவீரிகள். இருந்தாலும் கவனம். திருமண முயற்சி செய்பவர்கள் ஓரளவு பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம்; 23.06.21 காலை 10.57 மணி முதல் 24.06.21 காலை 09.53 மணி வரை

கிருத்திகை 1ம் பாதம் : நக்ஷத்திராதிபதி 3ல் இருப்பதால் எதிலும் வெற்றி, தேங்கி நின்ற வழக்குகள் முடிவுக்கு வரும். கடன்தொகைகள் வசூலாகும், மனதில் உற்சாகமும் சுறு சுறுப்பும் இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணவரவு தாராளம், வரும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

சந்திராஷ்டமம்; 24.06.21 காலை 09.53 மணி முதல் 25.06.21 காலை 08.1 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : பெருமாள் தாயார் நின்ற திருக்கோலம் , விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்லது தான தர்மங்கள் நல்ல செயல்கள் நன்மை தரும்.

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிநாதன் 22.06.21 வரை ராசிக்கு 2ல்  குரு பார்வை பெறுவதால் தாமதமாகி கொண்டிருந்த திருமணம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்வுகள், பணவரவு தாராளம், உத்தியோகத்தில் பரவாயில்லை என்ற நிலை, வைத்திய செலவுகள் குறையும் அதே நேரம் 2ல் சூரியன், கண், தலைவலி பாதிப்பு,  3ல் செவ்வாய் தடுமாற்றம், சகோதரவகை தொல்லை, சனியின் பார்வை கீழிருப்பவரால் சில சங்கடங்கள், ராசியில் ராகு, புதன்  நினைவில் செயலில் ஒரு தடுமாற்றம். குடும்பத்தில் சலசலப்பு இப்படி எல்லாம் இருந்தாலும், குரு குடும்பஸ்தானத்தை, தன ஸ்தானத்தை பார்ப்பதால் ஓரளவு பணவரவு, உத்தியோகத்தில் நல்ல நிலை என்று இருக்கும். சொந்த தொழிலில் லாபம் வரும். ஆனாலும் எதிலும் ஒரு நிதானம் தேவை. 7ல் கேது வாழ்க்கை துனைவர் உடல் நலம் கொஞ்சம் பாதிக்கும். 5ம் இடத்தை கேது பார்ப்பது பிள்ளை வழியில் செலவுகள், என இருந்து கொண்டிருக்கும். பொறுமை நிதானம், கவனமுடன் செயல்படவேண்டும், கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம் தரும். பொதுவில் இந்த மாதம் நன்மை தீமை கலந்து சுமாராக இருக்கும்.

கார்த்திகை 2,3,4 பாதங்கள் : நக்ஷத்திர நாதர் சூரியன் 2ல் குரு பார்வை பெறுவதாலும், சனி பத்தில் வலுவாக இருப்பதாலும் எதையும் சமாளித்துவிடும் மன பக்குவம் இருக்கும். துணிச்சல் அதிகம் அதனால் செயல்கள் வேகம் பெறும் இருந்தாலும் நிதானம் தேவை, வார்த்தைகளை நிதானித்து பேசுவது நலம் தரும். புதிய முயற்சிகளை செய்யும் போது யோகம் நேரம் பார்த்து செய்வது நலம் தரும்.

சந்திராஷ்டமம்; 24.06.21 காலை 09.53 மணி முதல் 25.06.21 காலை 08.1 மணி வரை

ரோஹிணி : உங்கள் நக்ஷத்திராதிபர் சந்திரன் ராகுவுடன் கூடி மாதம் பிறக்கும் போது ராசியில் அதனால் கொஞ்சம் மன தடுமாற்றம் இருக்கும். இருந்தாலும் சனி, குரு, இருவரும் நன்றாக உதவி செய்வதால் ஓரளவு பண வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். ராசிநாதன் உட்பட அவ்வளவு சுகமில்லை அதனால் எதை செய்தாலும் தகுந்த ஆலோசனை நல்ல நேரம் யோகம் பார்த்து செய்வது பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவருடனும் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். தொழில் செய்வோரும் கூட்டாளியுடன் அல்லது அரசுடன் வாக்குவாதம் வேண்டாம். பரவாயில்லை என்று சொல்லும் மாதம்.

சந்திராஷ்டமம்: 25.06.21 காலை 08.01 மணி முதல் 26.06.21 காலை 06.52 மணி வரை

மிருகசீரிடம் 1,2 பாதங்கள் : உங்கள் நக்ஷத்திரநாதன் செவ்வாய் ராசிக்கு 3ல் சனி பார்வை பெற்று நீசபங்க ராஜ யோகமாய் ஒரு தைரியத்தை கொடுத்தும், குரு மற்றும் சனி இவர்களின் பார்வை வளர்ச்சியையும் கொடுக்கும். 10ல் இருக்கும் குரு, 9ல் இருக்கும் சனி இருவரும் தர்ம கர்மாதி யோகங்களை செய்வதால் முன்னோர்களின் ஆசியுடன் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும், இல்லத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். அதேநேரம் ஜென்ம ராசியில் ராகு 7ல் கேது குடும்பத்தில் சலசலப்பு, ஒரு சோம்பல் உத்தியோகம் ஜீவனத்தில் ஒரு சுணக்கம் என்று இருக்கும். சிக்கணம் தேவை உங்களுக்கு. பொறுமை நிதானம் தேவை. சுமார் மாதம்.

சந்திராஷ்டமம் : 26.06.21 காலை 06.52 மணி முதல் 27.05.2021 அதிகாலை 05.10 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : சாஸ்தா/ஐயனார்  வழிபாடு, ஐயப்பன் பாடல்கள் படிப்பது. முடிந்த அளவு அன்னதானம் செய்வது நன்மை தரும்.

மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

ராசிநாதன் புதன் வக்ரியாய் 12ல் ராகுவுடன் 23.06.21 வரை பின் வக்ர நிவர்த்தியாகி 07.07.21 வரை 12ல் இருக்கிறார். பின் 07.07.21 முதல் ராசியில் சஞ்சாரம், சுப செலவுகள், திருமணம் கைகுடுதல், வெளியூர், வெளிநாட்டு வாசம், உத்தியோகத்தில் நல்ல நிலை, அதேநேரம் ராசியில் சூரியன்  தலைவலி, உஷ்ணம், அடிக்கடி வைத்திய செலவுகள் என்று கொடுத்தாலும் பெற்றோர் வழியில் செலவுகள் இருந்தாலும் குருவின் 5ம் பார்வை இதை கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க செய்யும். சுக்ரன் ராசியில் 22.06.21 வரை பின் 2ல் முதல் பாதி பரவாயில்லை பண வரவு, வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும், உத்தியோகத்தில் சொந்த தொழிலில் லாபம், சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைத்தல் என இருந்தாலும் கடகத்தில் சுக்ரன் செல்லும் போது எதிர்பாராத செலவுகள் வேலை இழப்பு இருக்கலாம் அல்லது புதிய முயற்சிகள் பலன் தராமல் போகலாம். நிதானத்துடன் செயல்படுவது நலம் தரும். 6ல் கேது 8ல் வக்ர சனி இருப்பது மிக நன்மை தரும் கடன் வியாதி எதிரி தொல்லை மறையும், மனதில் தைரியம் கூடும். குடும்பத்தில் இருந்துவந்த சஞ்சலங்கள் தீரும். 9ல் குரு 9ம் பார்வையாக துலாத்தை பார்ப்பதும் சனி 10ம் பார்வையாக அதே துலாத்தை பார்ப்பதும் அந்த இடம் புத்திர ஸ்தானம் ஆகையால் பிள்ளைகளால் நன்மை புகழ், அதே போல் கல்வி பெயர், அதிகாரம் இவையும் உண்டாகும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பொதுவில் பெரும்பாலும் நன்மை உண்டாகும் மாதம்.

மிருகசீரிடம் 3,4 பாதங்கள் : நக்ஷத்திர நாதன் 2ல் நீசபங்க ராஜ யோகம் சனி பார்வை பெற்று. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய உறவுகள் வரும். சிலருக்கு திருமண யோகம், குழந்தை பேறு உண்டாகும். 6ல் இருக்கும் கேது செவ்வாயின் வீட்டில் சனியின் நக்ஷத்திரத்தில் இருந்து எதிர்பாராத நன்மைகளை தருகிறார் பணம் பலவிதங்களிலும் வந்து சேரும் உத்தியோகம் சொந்த தொழில் முன்னேற்றம் காணும் புதிய முயற்சிகள் வீடுவாங்குதல் போன்றவை ஈடேறும். பொதுவில் நன்மை அதிகம்.

சந்திராஷ்டமம் : 26.06.21 காலை 06.52 மணி முதல் 27.05.2021 அதிகாலை 05.10 மணி வரை

திருவாதிரை: உங்கள் நக்ஷத்திரநாதன் ராகு 12ல் எதிலும் நிதானம் தேவை, அவசரப்பட வேண்டாம், செலவுகள் கையை கடிக்கும் கடன் வாங்க நேரும். அதே  நேரம் ராசியை குரு பார்ப்பது இவற்றில் இருந்து விடுபட உதவும். பொறுமை நிதானம் தேவை, எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்க கடும் உழைப்பு தேவை, சொந்த தொழிலில் வங்கி கடன், அரசு உதவி இவை பெற அதிக முயற்சி, மற்றும் புதிய வேலைக்கான விண்ணப்பங்கள் இவற்றை யோகம் நல்ல நேரம் பார்த்து அனுப்புங்கள் பண புழக்கம் பரவாயில்லை ஜீவன ஸ்தானத்துக்கு சனி பார்வை இருப்பதால் உழைப்புக்கு ஏற்ற வருமானம் வரும் அது செலவாகவும் மாறும் சிக்கனம் தேவை, கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 27.06.21 அதிகாலை 05.10 மணி முதல்  28.06.21 அதிகாலை 05.27 மணி வரை

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் : உங்கள் நக்ஷத்திர அதிபதி குருபகவான் 9ல் பூரணமாக உங்களின் செயல்கள் அனைத்தும் வெற்றிபெறும், பணவரவு தாராளம், ராசியை குரு பார்ப்பதால் ராசியில் இருக்கும் சூரியனால் உண்டாகும் இடர்கள் குறையும். மேலும் 12ல் ராகு சுப செலவுகளை தருவார், 6ல் கேது கடன் அடையும், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிரி தொல்லை குறையும்.  7க்குடைய குரு உங்கள் ராசியை பார்ப்பது நீண்ட நாட்களாக தாமதப்பட்ட திருமணம் கைகூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும். செயல்பாடுகளில் உற்சாகம் உண்டாகும் கூட்டாளிகள் துணை நிற்பர். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டீர்கள் எனில் வெற்றி நிச்சயம். ஆனாலும் கொஞ்சம் நிதானம் தேவை 2ல் செவ்வாய் சுக்ரன் இது சில எதிர்மறைவிளைவுகளை கொடுக்கும். வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள்.

சந்திராஷ்டமம்:  28.06.21 அதிகாலை 05.27 மணி முதல்  29.06.21 அதிகாலை 05.25 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : சூரிய நமஸ்காரம் செய்வது  சிவ வழிபாடு, ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நன்மை தரும். ஏழைகளுக்கு பயன் படும் உதவிகளை செய்வது அன்னதானம் நன்மை தரும்.

கடகம் : (புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம் முடிய) :

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாதம் பிறக்கும் போது ராசியில் ஆட்சியாய் பலமுடன், செவ்வாயுடன் சேர்ந்து சந்திரமங்கள யோகத்தையும் தருகிறார். லாபத்தில் ராகு  வருவாய் இரட்டிப்பாகும். 12ம் இடத்தை  குரு பார்ப்பதால் சுப செலவுகள் தாமதித்து வந்த திருமணம் கைகூடுதல், பெற்றோர் வழியில் சொத்து போன்ற நன்மைகள் கிடைத்தல், 11ல் வக்ரியாக இருக்கும் புதன் 07.07.21 வரை எதிர்பாராத நன்மை திடீர் பணவரவு உங்கள் வாக்கு பலிதம் ஆதல் போன்றவற்றை செய்கிறார். 7ல் சனி வக்ரி நேர் பார்வை தடைபட்ட திருமணம் கைகூடும். 9ம் இடத்தை மூன்றாம் பார்வையாகவும், 4ம் இடம் 10ம் பார்வையாகவும் சனி பார்ப்பது பெற்றோர் எண்ணம் ஈடேறும் மகிழ்ச்சி உண்டாகும் அவர்களின் ஆசி கிடைக்கும், இதுவரை இருந்து வந்த மன குழப்பங்கள் விலகும். ராசியில் 10க்குடைய செவ்வாய், 5ல் கேது இரண்டும் கெடுதல் செய்யாமல் இருப்பதும் ஒருவித நன்மையே பிள்ளைகளால் தொல்லை இருக்காது. சுக்ரன் ராசிக்கு வரும்போது 22.06.21 முதல் கொஞ்சம் தூக்கம் குறைவு மன கலக்கம், பொருளாதாரத்தில் மந்தம் இருக்கும். நிதானித்து செயல்பட்டாலும் பெற்றோர் பெரியோர் ஆலோசனைப்படி நடந்தாலும் தொல்லை இல்லை. பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம்.

புனர்பூசம் 4ம் பாதம் : உங்கள் நக்ஷத்திரநாதன் ராசிக்கு 8ல் கொஞ்சம் வீக். 12ம் இடத்தை 5ம் பார்வையாக பார்ப்பது ஒரு ஆறுதல், சுப செலவுகள் உண்டாகும். இல்லத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும் அதே நேரம் குடும்பஸ்தானாதிபதி சூரியன் 12ல் சென்று சில செலவுகளை கொடுத்தாலும் குருவின் பார்வை பெற்று அது கட்டுக்குள் இருக்கும். சனி தவிர மற்ற கிரஹங்கள் சாதகம் இல்லை கொஞ்சம் நிதானம் பொறுமை தேவை எதையும் நல்ல நேரம் யோகம் பார்த்து செய்வது சிறந்தது.

சந்திராஷ்டமம்:  28.06.21 அதிகாலை 05.27 மணி முதல்  29.06.21 அதிகாலை 05.25 மணி வரை

பூசம் : நக்ஷத்திரநாதர் சனிபகவான் 7ல் வக்ரம் பெற்றாலும் உங்கள் ராசியையும் சுக ஸ்தானத்தையும் பார்ப்பதும். அதே நாலாம் இடம் குருவாலும் பார்க்கப்படுவதும் இதுவரை தாமதப்பட்டு வந்த திருமணம், உத்தியோகம், வருமானம், குழந்தை பாக்கியம், புதிய தொழில் முயற்சி வீடு நிலம் வாங்குதல் போன்றவை கைகூடி வரும். அதே நேரம் 5ல் கேது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பிள்ளைகளாலோ அல்லது உடன் இருப்பவர்களாலோ உண்டாகும் கவனம் தேவை. சுக்ரன் ராசியில் வரும்போது ஆடை ஆபரண செலவுகள், கேளிக்கைகளால் விரயம் என்று இருக்கும். பொதுவில் நன்மை இருந்தாலும் தகுந்த ஆலோசனை பெற்று புதுமுயற்சிகளில் இறங்குவது நல்லது.

சந்திராஷ்டமம்: 29.06.21 அதிகாலை 05.25 மணி முதல் 30.06.21 அதிகாலை 05.50 மணி வரை

ஆயில்யம்:  நக்ஷத்திரநாதர் புதபகவான் வக்ரியாக 23.06.21 வரை லாபத்தில் பின் நிவர்த்தியாகி 07.07.21 வரை ஒருசில நன்மைகளை தருகிறார். வேலையில் சுறுசுறுப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். மேலும் 07.07.21 முதல் 12ல் ஆட்சியாக குரு பார்வை பெற்று. திருமணம் கைகூடும். புதிய வாகன யோகம் வீடு பணப்புழக்கம் தாராளம், 5ல் கேது கொஞ்சம் வயறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, செலவுகள் அதிகரித்தல் மேலும் சனி ராசியை பார்ப்பதாலும் 4ம் இடம் நோக்குவதாலும் ஜீவன வகையில் முன்னேற்றம் என்று கலந்து இருக்கும். புத்தி சாதூர்யம் இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள் ஆனாலும் எதையும் யோசித்து பெரியோர்கள் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும்.

சந்திராஷ்டமம்: 30.06.21 அதிகாலை 05.50 மணி முதல் 01.07.21 காலை 06.45 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : அம்பாள் காளி வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம் படிப்பது நன்மை தரும்.  ஏழைப்பெண் குழந்தைகள் படிக்க , திருமணம் போன்ற உதவிகளை செய்வது பலன் தரும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதன் சூரியன் 11ல் குரு பார்வையுடன் பலமாய் நினைத்த செயல்கள் யாவிலும் வெற்றி, பிள்ளைகளால் சந்தோஷம். 7ல் குரு, இல்லத்தில் திருமண நிகழ்வுகள், குழந்தை பாக்கியம் போன்ற சுப செலவுகள் இருக்கும். 12ல் செவ்வாய் நீசபங்க ராஜ யோகமாய் புதியவீடு வாங்குதல், குடிபோகுதல், உத்தியோகத்தில் உயர்ந்த இடம் பெறுதல், மன கஷ்டங்கள் நீங்குதல், 6ல் சனி ஆட்சி, கடன் நீங்குதல் வியாதிகளின் தாக்கம் குறைதல், 4ல் கேது சனி நக்ஷத்திரத்தில் மகிழ்ச்சி அதிகரித்தல், சொந்த தொழில் தொடங்க நினைப்பவருக்கு ஏற்ற காலம், அரசியல், அரசு போன்ற துறையில் இருப்பவருக்கும், வைத்தியம் அது சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்ப்படும். 10ல் ராகு புதன் இரட்டிப்பு வருவாய், எதிர்பாராத பணவரவு, நிலுவையில் இருந்த கடன் பாக்கி தொகைகள் வசூலாதல், நீண்டகால பகைகள் விலக இல்லத்தில் திருமணத்தில் பகை உறவாய் புதுப்பித்தல் வெளிநாடு வெளியூர் வேலை குடிபோகுதல், என்று நன்றாகவே இருக்கும். சுக்ரன் 12ல் கடகத்தில் வரும்போது கொஞ்சம் வீண் செலவு, அல்லது பெண்களால் துன்பம் என்று இருக்கும் ஆனால் சமாளித்து விடுவீர்கள். பொதுவில் இந்த மாதம் நன்றாக இருக்கிறது கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மகம் : நக்ஷத்திர அதிபதி கேது 4ல் ராகு பார்க்க சனியின் நக்ஷத்திரத்தில் சுகம் மற்றும் இரட்டிப்பு வருவாய் குரு அருளும் சேர்ந்து இருப்பதால் எண்ணங்கள் ஈடேறும். வயறு & எலும்பு கால் சம்பந்தப்பட்ட சிறு பாதிப்புகளும் இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் அதிகம் இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது நல்ல சிந்தனையும் செயலில் உறுதியும் இருப்பதால் எதையும் எளிதாக முடித்துவிடுவீர்கள் இந்த மாதம் நன்மை அதிகம்.

சந்திராஷ்டமம்: 01.07.21 காலை 06.45 மணி முதல் 02.07.21 காலை 08.12 மணி வரை

பூரம்: நக்ஷத்திராதிபதி சுக்ரன் 11ல் 22.06.21 வரை பின் 12ல்  பொதுவாக 3 & 9க்குடையவர் இவர் குருவின் பார்வையும் பின் சனியின் பார்வையும் பெற்று முயற்சிகளில் லாபத்தையும் செலவுகளில் சுபத்தையும் தருவார். மற்ற கிரஹங்களும் பெரும்பாலும் சாதகம் என்பதால் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் புதிய உறவுகளின் சேர்க்கை பிரிந்தவர் கூடுதல் குடும்பத்தில் மகிழ்ச்சி என இருக்கும். மனதில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி கொள்ளும் மாதம் இது.

சந்திராஷ்டமம் : 02.07.21 காலை 08.12 மணி முதல் 03.07.21 காலை 10.06 மணி வரை

உத்திரம் 1ம் பாதம்: உங்கள் ராசிநாதன் + நக்ஷத்திர நாதன் சூரியபகவான் 11ல் லாபத்தில் மனதில் இதுவரை இருந்த துக்கம் அனைத்தும் நீங்கி கடன், பகை, நோய் என்று அனைத்தும் விலகி எதிர்பார்ப்புகள் ஈடேறி பணவரவு, புதிய வேலை கிடைத்தல், புதிய தொழில் தொடங்கும் எண்ணம் ஈடேறுதல் பண உதவி, நண்பர்களால் நன்மை, குடும்பத்தில் ஒற்றுமை என்று நன்றாகவே இருக்கும். குருவின் பார்வையும் சேர்வதால் இதுவரை இருந்துவந்த தடைகள் முற்றிலுமாக விலகி பொருளாதார ஏற்றம் இருக்கும். லாபமான மாதம் இது.

ந்திராஷ்டமம்: 03.07.21 காலை 10.06 மணி முதல் 04.07.21 பகல் 12.22 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : நந்தி வழிபாடு, பைரவ வழிபாடு நல்லது அஷ்டமி வழிபாடும் பலன் தரும். முடிந்த அளவு தர்மங்களை செய்வது சரீர ஒத்தாசை போன்றவை நன்மை தரும்.

கன்னி: (உத்திரம் 2,3,4 பாதங்கள் , ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய ) :

ராசிநாதன் புதன் 9ல் வக்ரம் 23.06.21 வரை பின் நிவர்த்தி, ராகுவுடன்,  07.07.21 முதல் 10ல் ஆட்சி, சூரியன் 10ல், 11ல் செவ்வாய் நீசபங்க ராஜயோகம் குரு 6ல் , சனி 5ல் வக்ரி ,3ல் கேது, சுக்ரன் 10ல் 22.06.21 வரை பின் 11ல் இப்படியான கிரஹ சூழ்நிலைகள் பெரும்பாலும் சாதகம் காரணம் 9ல் ராகுவும் புதனும் மன பாதிப்பை தரும், மறதி சோம்பல், வேலையில் ஸ்திரமின்மை என்று ஆனால் புதன் வக்ரி அதனால் இவை இருக்காது மேலும் புதன் செவ்வாயின் நக்ஷத்திரத்தில் செவ்வாய் லாபத்தில் அதனால் செவ்வாயை போல கொடுக்கும். குருபகவான் பார்வையால் பலவித நன்மை, மேலும் சனி 5ல் வக்ரி இதுவும் எதிர்பாரா நன்மை பெயர் புகழ் என்று கொடுக்கும். கடந்தகால துன்பங்கள் அனைத்தும் விலகும். பொதுவாக கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அதற்கு கேதுவும், சூரியன், சுக்ரனும் உதவும். மேலும் பொருளாதார ஏற்றம் இருப்பதால் கடன்களும் அடையும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும் வைத்திய செலவு குறையும். 7ம் இடம் ராகுவால் பார்க்கப்படுவதால் வாழ்க்கை துணைவர் மூலம் வருமானம் வர ஆரம்பிக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி புதிய முயற்சிகள் வெற்றி, உத்தியோகத்தில் உயர்ந்த நிலை, சொந்த தொழிலில் லாபம் அதிகரித்தல் என்று நன்றாகவே இருக்கும். அதே நேரம் சுக்ரன் லாபத்தில் இருந்தாலும் பெரிய நன்மை இல்லை மேலும் ராகு 9ல் பெற்றோர் வழியில் வைத்திய செலவுகள், தோல், ரத்த அழுத்தம், புண் போன்ற உபாதைகளால் மன வருத்தம், வைத்திய செலவுகள் என்று இருந்து கொண்டிருக்கும். பொதுவில் நன்மை அதிகம் இருக்கும் அதே நேரம் சில யோசனைகள் தவறாக போய்விடும் நிலை இருப்பதால் சிறு சிறு சங்கடங்கள் தோன்றும் பரவாயில்லை மாதம்.

உத்திரம் 2,3,4 பாதங்கள் : நக்ஷத்திரநாதன் 10ல் குரு பார்வை பெற்று, சுக்ரனும் உடன், 5ல் சனி சாதகமாய் அதனால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், புதிய உத்தியோகத்துக்கு மனு செய்தவர்களுக்கு கிடைக்கும் சிலருக்கு வெளியூர், வெளிநாடு யோகம் இருக்கும். புதிதாக சொந்த தொழில் தொடங்கியவர்களுக்கு இப்பொழுது லாபம் வர ஆரம்பிக்கும். பெண் பங்கு தாரர்களை கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சி காணும், வங்கி அரசு உதவி கிட்டும். திருமணம், குழந்தை பாக்கியம் பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 03.07.21 காலை 10.06 மணி முதல் 04.07.21 பகல் 12.22 மணி வரை

ஹஸ்தம் : நக்ஷத்திர அதிபதி சந்திரன் மாதம் பிறக்கும் போது புதனின் நக்ஷத்திரத்தில் ஆட்சி பலமாக அதனால் இதுவரை இருந்த அனைத்து தடைகளும் விலகி முன்னேற்ற பாதை இருக்கும். பெரும்பாலும் நன்மைகள் இருப்பதால் சேமிப்பு கூடும். சுப செல்வுகள் இருக்கும். தடைகல் விலகி திருமணம் கைகூடும், சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை, புதுவீடு குடிபுகுதல் போன்ற மகிழ்ச்சியான விஷயங்களும் குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும் நன்மை தரும் மாதம்.

சந்திராஷ்டமம்: 04.07.21 பகல் 12.22 மணி முதல் 05.07.21 பிற்பகல் 02.50 மணிவரை

சித்திரை 1,2 பாதங்கள் : நக்ஷ்த்திர அதிபதி செவ்வாய் 11ல் நீசபங்க ராஜயோகம் சனி பார்வையுடன், 5ல் சனியும் வக்ரியாக நன்மை தரும் நிலையில் பொதுவாக கடுமையான உழைப்பாளியான உங்களுக்கு வேலையில் அதற்கான வெகுமதி கிடைக்கும் நேரம், சொந்த தொழிலில் லாபம் வரும், சமையல் விவசாயம், சாப்பாட்டு பொருள் விற்பனை, வாகன உதிரிபாகங்கள் வாகன விற்பனை, டிராவல் போன்ற தொழில் செய்வோர் அதில் வேலை பார்ப்போருக்கு மகிழ்ச்சியும் வெகுமதியும் கிடைக்கும் பணவரவு தாராளம் அதனால் முயற்சிகள் திட்டங்கள் வெற்றி அடையும்.  கடந்தகால தடைகள் நீங்கும் வருமானம் பெருகும் இந்த மாதம் பயன் தரும் மாதம் எல்லோரும் உதவுவார்கள்.

சந்திராஷ்டமம்: 05.07.21 பிற்பகல் 02.50 மணி முதல் 06.07.21 மாலை 05.24 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : வைத்தீஸ்வரன், வைத்தியநாத அஷ்டகம் படிப்பது, ஸ்ரீவைத்யவீரராகவ வழிபாடும் பலன் தரும். அமாவாசையில் முதியோர்களுக்கு உணவளிப்பது அன்னதானம் செய்வது நன்மை தரும்.

துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :

ராசியாதிபதி சுக்ரன் 9ல் சூரியனுடன் குரு பார்வை பெற்று.குருவின் நக்ஷத்திரத்திலும் கூட குருபகவான் 5ல் பலமாய் ஆக மாத ஆரம்பம் மிக நன்றாகவே ஆரம்பிக்கும். தொழிலில் வெற்றி உத்தியோகத்தில் உயர்ந்த நிலை குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும் ஒருவரை ஒருவர் அனுசரித்து போவதால் இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். மேலும் மாதம் பிறக்கும் போது 10ல் சந்திரன் ஆட்சி அங்கு செவ்வாயுடன் சந்திரமங்கள யோகமாய் அதனால் பணம், கலை, அழகுசாதனம்  ஷேர்மார்கெட் வங்கி, போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மேலும், 8ல் புதன் வக்ரியாக 23.06.21 வரை பின் நிவர்த்தியாகி 07.07.21 வரை தெய்வ அனுகூலம் உண்டாகும் சிந்தனை தெளிவாகும். திருமண தடைகள் விலகி நிச்சயம் ஆகும், குழந்தை பாக்கியம் உண்டாகும், புதிய முயற்சிகள் நிறைவேற 2ல் இருக்கும் கேதுவும் ராசியை பார்க்கும் சனியும் கைகொடுக்கும். புதிய உத்தியோகம், புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம் இது வருமானம் பெருக ஆரம்பிக்கும், சேமித்து வையுங்கள். குடும்ப அங்கத்தினர் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக செலவை 8ல் இருக்கும் ராகு கொடுக்கும். பயணங்களின் போது சற்று கவனம் தேவை மற்றபடி இந்த மாதம் சிறப்பான மாதம் மனதில் இருக்கும் எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்.

சித்திரை 3,4 பாதங்கள் : நக்ஷத்திர நாதர் செவ்வாய் பத்தில் ராஜயோகமாய் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தருவார். அதே நேரம் 2ல் சனியின் நக்ஷ்த்திரகாலில் இருக்கும் கேதுவும் 4ல் இருக்கும் சனியும் மன கிலேசம் சிறு சிறு குடும்ப பிரச்சனைகள் என்று கொடுத்து கொண்டிருக்கும். புதன் 9ல் வரும்போது 07.07.21க்கு பின் பெயருக்கு களங்கம், அல்ல்து உத்தியோகத்தில் இறக்கம், தொழிலில் பின்னடைவு என இருக்கலாம்  கொஞ்சம் நிதானம், வார்த்தைகளில் கவனம், அனுசரித்து போகுதல் என்று இருந்தால் நலம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 05.07.21 பிற்பகல் 02.50 மணி முதல் 06.07.21 மாலை 05.24 மணி வரை

ஸ்வாதி : நக்ஷத்திரநாதர் ராகு 8ல் இருந்தாலும் சந்திரனின் நக்ஷத்திரகாலில் இருப்பதால் கெடுதல் செய்ய மாட்டார், அதே போல யோகத்தை தரும் சனிபகவானும் அவர் நக்ஷ்த்திரத்தில் 2ல் இருக்கும் கேதுவும் நன்மைகளை தருவதால் போட்ட திட்டங்கள் எளிதில் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கள் வெளியூர் வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்ய ஏற்ற காலம் வாய்ப்புகளும் தேடிவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். சிலருக்கு வீடுவாங்கும் யோகமும் நீண்ட நாள் தாமதம் ஆகிகொண்டிருந்த குழந்தை பாக்கியமும் உண்டாகும். இல்லத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் புதிய உறவுகள் நன்மை தரும். நேர்மையும் எச்சரிக்கை உணர்வும் உங்களிடம் இருப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை  நன்மை தரும் மாதம்.

சந்திராஷ்டமம்: 06.07.21 மாலை 05.24 மணி முதல் 07.07.21 இரவு 07.55 மணி வரை

விசாகம் 1,2,3 பாதங்கள் : நக்ஷத்திராதிபதி குரு 5ல் பலமாய், 9ல் சூரியன், சுக்ரன், 10ல்  7க்குடைய செவ்வாய் நீசபங்க ராஜயோகம் என்று மகிழ்ச்சி தரக்கூடிய மாதமாக இருக்கிறது. எண்ணங்கள் பூர்த்தியாகும், சனியின் பார்வை வலுதரும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும், இதுவரை தேங்கி இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகம், நோய் நீங்கும் வைத்திய செலவு குறையும். புதன் பாதகமாக இருப்பது நினைவை குழப்பி செயல்களை தாமதமாக்கும் ராகுவும் சில பெயர் கெடும்படியான நிலையை தரும். கவனம் தேவை. முன் யோசனையுடனும், பெரியோர்களுடைய ஆலோசனை படியும் எதையும் செய்வது நலம் தரும். நன்மைகள் அதிகம் என்றாலும் குழப்பமும் இருப்பதால் கவனமாக இருந்தால் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 07.07.21 இரவு 07.55 மணி முதல் 08.07.21 இரவு 10.14 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : நரசிம்மர் , நரசிம்ம ஸ்லோகம் சொல்வது, விளக்கேற்றி வழிபடுவது நலம் தரும். முடிந்த அளவு ஏழை எளியோருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதும் நன்மை தரும்.

விருச்சிகம் : (விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய):

ராசிநாதன் செவ்வாய் 9ல் நீசபங்க ராஜயோகமாய் பலமாய், 3ல் சனி, 7ல் வக்ரபுதன் மிகுந்த நன்மைகளை செய்கிறார்கள். என்ன கஷ்டம் வந்தாலும் தெய்வானுகூலம் இருக்கிறது அதனால் முயற்சிகளில் வெற்றி அதிகம் கிடைக்கும். 4ல் குரு பார்வையால் நன்மை செய்கிறார், 8ல் சூரியன் சுக்ரன் பிரச்சனை தர முயன்றாலும் வழக்குகள், உடல் ஆரோக்கியம் மன உளைச்சல் இவற்றை கொடுக்க முயன்றாலும் குருவின் பார்வையால் அவை விலகி நன்றாக இருக்கும். தனாதிபதி குரு 4ல் இருந்து ஜீவனத்தை பார்ப்பது எப்படியாவது பணம் இருந்து கொண்டிருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருப்பதால் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். அதே நேரம் நிதானம் பொறுமை வேண்டும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதாலும், அவசரப்படுவதாலும் குடும்பமும், உத்தியோகம் தொழிலும் பாதிக்கப்படும். மன வருத்தங்களை தரும். 22.06.21க்கு பின் சுக்ரன் 9ல் இடம் பெயர்ந்து இல்லத்தில் சுப நிகழ்வுகளை உண்டாக்குகிறார். திருமணம், புத்திரபாக்கியம் மற்றும் வீடு குடிபுகுவிழா என்று நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். வரும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் செயலில் நிதானத்துடன் பெரியோர்களின் ஆலோசனை படி நடக்கவும். இந்த மாதம் சுமாராக இருக்கிறது. நல்ல வாய்ப்புகள் வரும் ஆனால் ராகு கேது மற்றும் சூரியன் சுக்ரன் இவர்கள் நன்மை செய்யவில்லை அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள் இறை தியானம் நன்மை தரும்.

விசாகம் 4ம் பாதம் : நக்ஷத்திராதிபதி குரு பகவான் 4ல் இருந்தாலும்  8, 10,12 இடங்களை பார்ப்பது நலம் தரும் தெய்வ அனுகூலம் உண்டாகும், ஜீவனத்தில் குறைவு வராது, சுப செலவுகள் உண்டாகும். இருந்தாலும் ஜென்மத்தில் கேது சனியின் நக்ஷத்திரத்தில் இருப்பது கொஞ்சம் மந்த நிலை பயம் இவற்றை கொடுக்கும். உத்தியோகம், சொந்த தொழில் குடும்பம் என எங்கு இருந்தாலும் விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நலம் தரும். பொறுமையும் நிதானமும் அவசியம். ஓரளவு பரவாயில்லை என்னும்படி இந்த மாதம் இருக்கும்.

சந்திராஷ்டமம்: 07.07.21 இரவு 07.55 மணி முதல் 08.07.21 இரவு 10.14 மணி வரை

அனுஷம் 4 பாதங்கள் : நக்ஷத்திர நாதன் சனிபகவான் 3ல் தைரியஸ்தானத்தில் ஆட்சியாய், துணிச்சல் அதிகம் இருக்கும். அதே நேரம் கேது பார்வை பெறுவது ஒரு அசட்டு தைரியத்தை கொடுத்து எல்லோரையும் பகைத்து கொள்ள செய்யும் நிதானம் தேவை, 9ம் இடமும், 12ம்  சனி பார்வை பெறுவது ஓரளவு நன்மை கொடுக்கும். எதையும் யோசித்தும் தகுந்த ஆலோசனை பெற்றும் செய்வது நல்லது. புதிய வழக்குகளில் சிக்க வழி இருக்கு அதனால் கவனம் தேவை. நீங்கள் இதுவரை அடுத்தவருக்கு செய்த உதவிகள் தான தர்மங்கள் உங்கள் கோபம், நிதானம் இன்மை போன்றவற்றால் பலனற்று போய்விடும் கொஞ்சம் கவனம் தேவை சுமார் மாதம்.

சந்திராஷ்டமம்: 08.07.21 இரவு 10.14 மணி முதல் 09.07.21 இரவு 12.13 மணி வரை

கேட்டை 4 பாதங்கள் : நக்ஷத்திரநாதன் புத பகவான் 7ல் வக்ரியாக 23.06.21 வரை பின் நிவர்த்தியாகி 07.07.21ல் மிதுன ராசிக்கு பெயர்கிறார். மாத பிறப்பின் போது சந்திரன் 9ல் ஆட்சியாக புதன் நக்ஷத்திர காலில் மேலும் குருபகவானின் 7ம் பார்வை 10ம் இடத்துக்கு ஜீவன வகையில் பண வரவில் குறைவு இருக்காது. தெய்வ அனுகூலம் இருக்கும். இருந்தாலும் ஜென்மத்தில் கேது தைரியஸ்தானத்தையும் லாபத்தையும் பார்ப்பது மன உளைச்சல் வரும் எதிரிகளை தந்து உங்கள் பணத்தை விரயமாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவருடனும் மோதவேண்டாம். சொந்த தொழில் செய்பவர்கள், வேலைக்காரர்கள், அரசாங்கம் என்று பகை வேண்டாம். குடும்பத்திலும் விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நன்மை தரும். மனதை இறைவனிடம் செலுத்தி நிதானம், பொறுமை என கடைபிடிக்கவும்.  பேச்சில் நிதானம் தேவை வரும் வாய்ப்பை நீங்களே தட்டி விடுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 09.07.21 நள்ளிரவு 12.13 மணி முதல் 10.07.21 நள்ளிரவு 01.46 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : திருச்செந்தூர் முருகன்,  சஷ்டி கவசம், வேல்மாறல் படிக்கலாம், தியானம் முருகன் பெயரை  உச்சரித்து கொண்டே இருப்பது பலன் தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யவும்.

தனூர்: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதன் குருபகவான் 3ல் இருந்தாலும் பார்வையால் திருமண ஸ்தானம், பாக்கியம், லாபம் என்று பார்ப்பதும், குடும்பஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கும் சனிபகவான் லாபத்தை பார்ப்பதும் பணப்புழக்கம் தாராளம், எடுத்த செயல்கள் எளிதாக முடியும் பலவித பிரச்சனைகளும் அகன்றோடும் என்பதாக காட்டுகிறது. மேலும் 7ல் இருக்கும் சூரியன் சுக்ரன் குருபார்வை பெற்று இல்லத்தில் திருமணம், புத்திர பாக்கியம் மகிழ்ச்சி புதிய உறவுகளால் நன்மை என்று இருக்கு. போட்ட திட்டங்கள் நாள்பட்ட தாமதப்பட்ட செயல்கள் விரைந்து முடிவுக்கு வருதல், 6ல் ராகு இதுவரை இருந்துவந்த வியாதிகளின் தாக்கம் குறைதல், எதிர்ப்புகள் மறைதல், கடன் கட்டுக்குள் இருத்தல் என இருக்கும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு, சம்பள உயர்வு இவற்றுடன் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்பு, புதிய உத்தியோகத்துக்கு விண்ணப்பித்தவர்கள், வெளிநாடு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு எண்ணம் ஈடேறும். சொந்த தொழில் செய்வோர் தொழில் விஸ்தீரணம், புதிய தொழில் முயற்சி ஆகியவை ஈடேற வாய்ப்பு உண்டாகும். அரசாங்க உதவி கிடைக்கும். இல்லத்தில் அன்பும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அதே நேரம்  8ல் செவ்வாய் நீசபங்க ராஜயோகம் அடைவது நலம் என்றாலும் பிள்ளைகளால் உபத்திரவம் உண்டாகும். உடல் ரீதியான படுத்தல்கள் இருக்கலாம். ராகு செவ்வாயை பார்ப்பதால் மேலும் 12ல் கேது சுப விரயத்தை கொடுக்கும். இந்த மாதம் நன்மைகள் அதிகம் எனினும் கொஞ்சம் உடல் மனம், குடும்ப படுத்தல்களும் இருக்கும் கவனம் தேவை.

மூலம் 4 பாதங்கள் : நக்ஷத்திர நாதர் கேது பகவான் 12ல்  சுப விரயம், தேங்கி இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும் அதற்கான செலவுகள், கடன் அடைபடுதல், திருமண்ம போன்ற சுப செலவுகள் இருந்து கொண்டிருக்கும். 6ல் வக்ர புதன் ராகு , தோல் வயறு, வாயு தொந்தரவு என தரும். இருந்தாலும் குருவின் லாப பார்வை இவற்றை சமாளிக்க செய்துவிடும். புத்தி கூர்மை அதிகம் அதனால் வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பொறுமை நிதானத்துடன் செயல்பட்டால் உங்களின் திட்டங்கள் வெற்றி பெறும். பெரும் தொல்லை இல்லை இந்த மாதம் நன்மை அதிகம்.

சந்திராஷ்டமம்: 10.07.21 நள்ளிரவு 01.46 மணி முதல் 11.07.21 நள்ளிரவு 02.50 மணி வரை

பூராடம் 4 பாதங்கள் : உங்கள் நக்ஷத்திர நாதர் சுக்ர பகவான்  22.06.21 வரை 7ல்  அதற்குள் திருமண வாய்ப்புகள் தேடி வரும். மேலும் குருவின் பார்வையும் இருப்பது நலமாக அமையும். பணப்புழக்கம் தாராளம், 2ல் சனி வக்ரி இது குடும்பத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தும், 8ல் செவ்வாயுடன் சேரும் சுக்ரன் பலமற்று அதனால் நிதானம் தேவை, மற்ற கிரஹங்களும் ஓரளவே நன்மை தருகின்றது. எங்கும் எதிலும் நிதானம் தேவை, புதிய முயற்சிகளை நல்ல நேரம் பார்த்து தகுந்த ஆலோசனை பெற்று செய்வது நலம் தரும். பொறுமை அவசியம், 6ல் ராகு வக்ர புதன் மருத்துவ செலவுகளையும், வருமானத்தில் தேக்கத்தையும் தரலாம் சேமிப்பு நல்லது. கடந்த கால சேமிப்புகளும் கரைய ஆரம்பிக்கும். முன் யோசனை பெரியோர்கள் சொல்படி நடத்தல் இந்த மாதம் ஓட்டிவிட முடியும் என்ற நிலையை தரும் சுமார் மாதம்.

சந்திராஷ்டமம்: 15.06.21 இரவு 07.35 மணி வரை, மற்றும்  11.07.21 நள்ளிரவு 02.50 மணி முதல் 12.07.21 இரவு 03.25 மணி வரை

உத்திராடம் 1 பாதம் : நக்ஷத்திர நாதர் சூரிய பகவான் குருவின் பார்வையுடன் நன்மைகளை அதிகம் செய்கிறார். எதிர்பார்த்த திருமண பாக்கியம் கைகூடும். வாழ்க்கை துணைவர் வகையில் வருமானம், சந்தோஷம் பெருகும். 2ல் வக்ர சனி லாபத்தை பார்ப்பது திடிர் பணவரவு உத்தியோகத்தில் நல்ல நிலை சொந்த தொழிலில் ஏற்றம் தரும். இருந்தாலும் 10க்குடையவர் 6ல் வக்ரி அதனால் கொஞ்சம் நிதானமும் தேவை யோசித்து செயல்படுவது நலம் தரும். விட்டுக்கொடுத்து செல்வது, வார்த்தைகளை கவனமாக கையாள்வது போன்றவை நன்மை தரும். 07.07.21 மேல் நல்ல நிலை சேமிப்பு கூடும். மற்ற கிரஹங்கள் சாதகம் குறைவு அதனால் கொஞ்சம் சிக்கனமாக இருப்பது நல்லது ஆடம்பரம் வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 15.06.21 இரவு 07.35 மணி முதல் 16.06.21 இரவு 07.30 மணி வரை, மற்றும் 12.07.21 அதிகாலை 03.25 மணி முதல் 13.07.21 அதிகாலை 03.30 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபடு, ராம நாமத்தை சொல்லுதல், ஹனுமான் சாலீசா படிப்பது நன்மை தரும். உடலால் இயலாதவர்கள், முதியவர்கள் தேவை அறிந்து உதவி செய்தல் நல்ல பலனை தரும்.

மகரம்: (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய) :

ராசிநாதன் சனிபகவான் ராசியில் ஆட்சியாக இருந்து தைரிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஜீவன ஸ்தானத்தை பார்க்கிறார். மாதம் பிறக்கும்போது 7க்குடைய சந்திரன் 7ல் ஆட்சி திருமணம் கைகூடிவரும். தனஸ்தானத்தில் குரு பணவரவு தாராளம், 11ல் கேது எதிலும் எதிராராத வெற்றிகள்  நினைத்த செயல் நடத்தல், சுகாதிபதி, லாபாதிபதி 7ல் சனிபார்வை பெற்று நீசபங்க ராஜயோகம், உத்தியோகத்தில் சொந்த தொழில் நல்ல முன்னேற்றம், வீடு வாகன யோகங்கள் அமைதல், இல்லத்தில் சுப நிகழ்வுகள் மகிழ்ச்சி அதிகரித்தல், சிலருக்கு குழந்தை பாக்கியம், 5ல் ராகு,வக்ர புதன் , 5க்குடையவருக்கு குரு பார்வை பெயர் புகழ் அந்தஸ்து அதிகாரம் எல்லாம் கிடைத்தல், உயர்கல்வி முயற்சிகள் வெற்றி அடைதல், 8க்குடையவர் 6ல் குருபார்வை பெற்று தெய்வ அனுகூலம், வியாதிகள் குறைதல், அனைத்து பிரிவினருக்கும் கடன் வியாதி எதிரி தொல்லைகள் நீங்குதல், புதுவரவுகளால் உறவுகள் நெருக்கமாதல், பிரிந்து போனவர்கள் ஒன்று சேருதல், என்று  நன்மைகள் மிக அதிகம், 07.07.21க்கு பின் புதன் 6ல் ஆட்சி உடல் ரீதியாக உபாதைகள் எதிரி தொல்லை அல்லது மறதி போன்றவை கொஞ்சம் அவஸ்தை கொடுக்கலாம். பெரும்பாலும் நன்மை என்பதால் இவை பெரிய பாதிப்பை தராது. இந்த மாதம் மிக நன்றாக இருக்கிறது உங்கள் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளூம் வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: நக்ஷத்திர நாதர் சூரியபகவான் 6ல் குரு பார்வையுடன் எதிர்ப்புகள் நீங்கும், வியாதிகள் மறையும், முயற்சிகள் வெற்றி உண்டாகும் வருமானம் பெருகும். திருமணம் கைகூடும்  ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம், உத்தியோகம் சொந்த தொழில் எல்லாம் உயர்ந்த நிலையடையும், இல்லத்தேவைகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் ஒற்றுமை பெருகும் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவும் வெற்றி நிச்சயம்.

சந்திராஷ்டமம்: 15.06.21 இரவு 07.35 மணி முதல் 16.06.21 இரவு 07.30 மணி வரை, மற்றும் 12.07.21 அதிகாலை 03.25 மணி முதல் 13.07.21 அதிகாலை 03.30 மணி வரை

திருவோணம் 4 பாதங்கள் : நக்ஷத்திராதிபதி சந்திரன் மாதம் பிறக்கும் அன்று 7ல் ஆட்சியாகவும் நீசபங்க ராஜயோகம் பெற்ற செவ்வாயுடன் சந்திரமங்களயோகமாய். தாமதம் ஆகி கொண்டிருந்த திருமணம் கைகூடும். 5ல் இருக்கும் வக்ர புதன் புகழ், பெயர் முயற்சியில் வெற்றி என கொடுக்கும், உயர்கல்வி, மற்ற படிப்புகளில் முன்னேற்றம், வெளியூர் வெளிநாடு வாசம், உத்தியோகத்தில் விரும்பிய நிலை, புதிய உத்தியோகம் கிடைத்தல், சொந்த தொழிலில் எதிர்ப்புகள் நீங்கி லாபம் வருதல், இல்லத்தில் ஒற்றுமை அன்பு மகிழ்ச்சி பெருகி இருக்கும். பொதுவில் நல்ல மாதம்.

சந்திராஷ்டமம்: 16.06.21 இரவு 07.30 மணிமுதல் 17.06.21 இரவு 07.05 மணி வரை, மற்றும் 13.07.21 அதிகாலை 03.30 மணிமுதல் 14.07.21 அதிகாலை 03.08 மணி வரை

அவிட்டம் 1,2 பாதங்கள் : நக்ஷத்திரநாதர் செவ்வாய் பகவான் சனியின் பார்வையால் 7ல் நீசபங்க ராஜயோகமாய் நினைத்ததை நடத்திக்கொடுப்பார்  மேலும் குருபகவானின் பார்வை 6ல் படுவதால் இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பம், உடல் உபாதைகள், எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும். லாபத்தில் கேது எதிர்பாராத இரட்டிப்பு வருவாயை தரும். எண்ணிய செயல்கள் யாவும் எளிதில் முடியும் திருமணம், போன்ற சுப நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சியும், உறவுகளின் நெருக்கமும் இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும் சிலருக்கு வீடு வாகன யோகங்கள் அமையும். இந்த மாதம் நன்மைகள் அதிகம் உண்டு.

சந்திராஷ்டமம்: 17.06.21 இரவு 07.05 மணி முதல் 18.06.21 மாலை 06.16 மணி வரை, மற்றும் 14.07.21  அதிகாலை 03.08 மணி முதல் 15.07.21 நள்ளிரவு 02.22 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : குருவாயூரப்பன், கிருஷ்ணர்.  கிருஷ்ண ஸ்லோகம் சொல்லலாம் முடிந்த அளவு ஏழைபெண்குழந்தைகள் படிக்க உதவி, ஆடை அன்னம் இவை நன்மை தரும்.

கும்பம் : (அவிட்டம் 3,4 பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :

ராசியில் குரு, ராசியதிபதி 12ல்,  ஓரளவு பார்வையால் நன்மை, 5ல் சூரியன் சுக்ரன், 6ல் செவ்வாய் சந்திரன் என கெடுபலன் குறைவு தவிர பெரிய நன்மைகள் இல்லை 4ல் இருக்கும் ராகு வக்ர புதன் ஒரு தடுமாற்றத்தை கொடுப்பார் இருந்தாலும் ஒரு ஆறுதல் 10 ல் கேது ஜீவனவகையில் பரவாயில்லை என்பது மாதிரி இருக்கும். நல்ல நேரம் அறிந்து செயல்பட்டால் ஓரளவு நன்மை உண்டாகும். பெரும்பாலான கிரஹ நிலைகள் சாதகமில்லை என்றாலும் கேதுவும் சனியும் குருபார்வையும் பலம் தருவதால் ஓரளவு நன்மை உண்டாகும். எதையும் யோசித்து செயல்படவும். 7க்குடைய சூரியன் 5ல் குரு பார்வை பெருவதால் திருமண ஏற்பாடுகள் நடைபெறும். அதே போல புதன் வக்ர நிவர்த்தி ஆன 23.06.21 முதல் ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்படும் செயல்களில் ஒரு தீவிரம் ஏற்படும். பெரியோர்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனை கேட்டு நடப்பதும் எதிலும் ஒரு நிதானம், பொறுமை கவனம் கொண்டு செயல்படுவதும் நன்மை தரும். புதிய முயற்சிகளை நல்ல நேரம் யோகம் பார்த்து செய்வது பலன் தரும். பொருளாதாரம் ஓரளவு நன்மை தரும். குடும்ப ஸ்தானத்தை ராகு பார்ப்பதால் சிறு சிறு சலசலப்பு உண்டாகும்  விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நல்லது. பொதுவில் அனைத்து பிரிவினரும் முன் யோசனையுடனும் பொறுமை நிதானம் கொண்டு செயல்பட்டால் பெரிய பிரச்சனைகள் இல்லை.

அவிட்டம் 3,4 பாதங்கள் : நக்ஷத்திராதிபதி 6ல் நீசம் பெற்று சனியின் பார்வையில் நீசபங்க ராஜ யோகமாய் மாறுவது கடன் வியாதி எதிரி தொல்லை இவற்றை குறைக்கும் மேலும் கேது பொருளாதாரம் மேம்பட செய்யும் உத்தியோகத்தில் கடும் முயற்சிக்கு பின் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை கிடைப்பதில் இழுபறி இருக்கும். 07.07.21க்கு பின் சாதக நிலை, சொந்த தொழிலும் ஓரளவு வருமானம் வந்து கொண்டிருக்கும். நிதான பொறுமையும் தேவை யாருக்கும் வாக்குறுதி, கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டாம் நெருங்கின சொந்தமாக இருந்தால் கூட. சுமார் மாதம் கவனமுடன் செயல்பட வேண்டும்.

சந்திராஷ்டமம்: 17.06.21 இரவு 07.05 மணி முதல் 18.06.21 மாலை 06.16 மணி வரை, மற்றும் 14.07.21  அதிகாலை 03.08 மணி முதல் 15.07.21 நள்ளிரவு 02.22 மணி வரை

சதயம் : நக்ஷத்திர அதிபதி ராகுபகவான் செவ்வாய் நக்ஷத்திரத்தில் 6ம் இட செவ்வாயை பார்ப்பதால் எதிர்ப்புகள் குறையும், கடன் வியாதி தொல்லைகள் குறையும். 10ல் கேது அலுவலகத்தில் சிறு முன்னேற்றம் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுதல், அதே போல் 5ல் சூரியன், சுக்ரன் குரு பார்வை பெறுவதால் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் நிச்சயம் ஆதல் போன்றவையும், புதிய ஆடை ஆபரண சேர்க்கை, குழந்தை பாக்கியம் என்று சிலருக்கு உண்டாகும். முயற்சிகளில் ஒருசில வெற்றி பெற வாய்ப்பு இருந்தாலும் பொறுமை நிதானம் கொண்டு செயல்படுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 18.06.21 மாலை 06.16 மணி முதல் 19.06.21 மாலை 05.08மணி வரை, மற்றும் 15.07.21 நள்ளிரவு 02.22 மணி முதல் 16.07.21 நள்ளிரவு 01.18 மணி வரை

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் : நக்ஷத்திராதிபதி குரு பகவான் ராசியில் பார்வையால் நன்மை தருகிறார். ஒரு கட்டு கட்டியது போல மெதுவாக வாழ்க்கை நகரும். முயற்சிகள் தாமதம் ஆகும், இருந்தாலும் 10ல் கேதுவும் 4ல் ராகுவும் ஓரளவு விருப்பங்களை பூர்த்தி செய்வதால் பொருளாதாரம் பரவாயில்லை என்று இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் குறைவு ஏற்படும். அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் பெயர் இருக்காது பலன் கிடைக்காது சொந்த தொழிலும் மெதுவாக செல்லும், இல்லத்திலும் எல்லோருடனும் அனுசரித்து போகவேண்டிய நிலை இருக்கும், கோபம் அறவே கூடாது. விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நலம் தரும். சுமாரான மாதம் கவனமாக செயல்படுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 19.06.21 மாலை 05.08 மணி முதல் 20.06.21 பிற்பகல் 03.45 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : பிள்ளையார், துர்க்கை வழிபாடு , விநாயகர் அகவல், துர்க்கை ஸ்லோகம் இவை படிக்கலாம், பிறருக்காவும் ப்ரார்த்திப்பதும், முடிந்த உதவிகளை ஏழை எளியோருக்கு செய்வதும் நன்மை தரும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய):

ராசியாதிபதி குரு விரயத்தில் ஆனால் 3ல் ராகு பலமாய், வக்ர புதன், 4ல் சூரியன், சுக்ரன், 5ல் நீசம் பெற்று சனிபார்வையால் ராஜயோகம் பெறும் செவ்வாய் சந்திரனுடன், சனிபகவான் லாபத்தில் ஆட்சி, இவை அனைத்தும் நன்மை அதிகம் செய்கிறது. குருவால் சுப விரயம் திருமணம் போன்ற செலவுகள், 5ல் இருக்கும் செவ்வாய் வீடு வாகன யோகத்தை தருவார், ராகு கடன் எதிரி வியாதிகள் அனைத்தையும் போக்குவார், மனதில் உற்சாகம், தைரியம் பிறக்கும். கேதுவால் தந்தை வழியில் மருத்துவ செலவுகளும்  கொடுக்கும். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். மேலும் சிலருக்கு விரும்பிய இடமாற்றம், புதிய வேலை அல்லது புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் தேடி வரும்.அதே போல உயர்கல்வி படிக்க ஏற்பாடு ஆகும்., கல்வி சம்பந்தப்பட்ட தொழில்கள் வளர்ச்சி அடையும் அரசாங்க உதவியை எதிர்பார்த்தோருக்கு கிடைக்க வாய்ப்புகள். சமையல், விவசாயம், விளை பொருட்கள்  துறைகளில் இருப்போர் உத்தியோகம் அல்லது சொந்த தொழில் செய்வோர் அனைவருக்கும் இந்த மாதம் நல்ல நிலை ஏற்படும். உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்படி இந்த மாதம் அமையும். அனைத்து கிரஹங்களும் பெரும்பாலும் சாதகம்.

பூரட்டாதி 4ம் பாதம் : நக்ஷத்திராதிபதி+ ராசியாதிபதி 12ல் கொஞ்சம் மந்தம் போல இருக்கும் ஆனாலும் 4ம் இடத்தை பார்ப்பதும் சனி பகவான் லாபத்தில் இருந்து ராசியை பார்ப்பதும் முயற்சிகளில் வெற்றியையும் உற்சாகத்தை தரும். திருமண ஏற்பாடுகள் கொஞ்சம் மந்தமாக நடந்தாலும் 7க்குடைய புதன் 07.07.21ல் மிதுனத்தை அடைந்து குருபார்வை பெறுவது திருமணம் கைகூடும். புத்திரபாக்கியம் சிலருக்கு உண்டாகும் ஜீவன வகையில் நன்மை அதிகரிக்கும் திட்டங்களில் நிதானம் தேவை பரவாயில்லை மாதம்.

சந்திராஷ்டமம்: 19.06.21 மாலை 05.08 மணி முதல் 20.06.21 பிற்பகல் 03.45 மணி வரை

உத்திரட்டாதி 4 பாதங்கள் : நக்ஷத்திரநாதன் 11ல் இருந்து உங்கள் ராசியை பார்ப்பது எதிர்பார்த்தது + எதிர்பாராதது எல்லாம் கைகூடும். மேலும் ராகு 3ல் இருந்து மன தைரியம், முயற்சிகளில் வெற்றி அதிக லாபம் ஜீவன வகையில் உத்தியோகத்தில் உயர்வு, சொந்த தொழிலில் வளர்ச்சி என்று நன்றாக இருக்கும். 5ல் செவ்வாய்  & 22.06.21க்கு பின் சுக்ரன் குழந்தை பாக்கியம், திருமணம், ஆடை ஆபரண சேர்க்கை வீடு வாகன யோகம் இப்படி எல்லாம் தரும். குருபகவான் இவற்றை கொஞ்சம் மெதுவாக செய்ய வைப்பார். மேலும் தந்தை உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை எடுத்து செயல்படுவது நல்லது. கேது சனியை பார்ப்பது நல்லதல்ல. வைத்திய செலவை அதிகப்படுத்தும் மற்ற அனைத்து விஷயங்களும் உங்கள் எண்ணப்படி நடக்கும். நல்ல மாதம் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம்: 20.06.21 பிற்பகல் 03.45 மணி முதல் 21.06.21 பிற்பகல் 02.12 மணி வரை

ரேவதி : உங்கள் நக்ஷத்திராதிபதி புதபகவான் வக்ரியாக ராகுவுடன் இணைந்து 3ல்  ராசிநாதரும் 12ல்  பொதுவில் சனி, சுக்ரன், செவ்வாய், ராகு மட்டும் நல்லது செய்கின்றனர். திட்டங்கள் கொஞ்சம் முயற்சிக்கு பின் நிறைவேறும். உத்தியோகத்திலும் அதிக உழைப்புக்கு பின் பதவி சம்பள உயர்வு கிடைக்கும் ஜீவன வகையில் வருமானம் ராகுவாலும் சனியாலும் வந்து கொண்டிருக்கும். அதே நேரம், 5ல் செவ்வாய் கொஞ்சம் குழப்பம் புத்திர வகையில் மன வருத்தம் இவை தரும். 4ல் சுக்ரன் சூரியன்  உடல் உபாதையும் தரும் ஆடை ஆபரண சேர்க்கை வாகனம் இவற்றையும் தரும். குரு பார்வை இருப்பதால் ஓரளவு வியாதி கட்டுப்படும். தக்க மருத்துவ ஆலோசனை நல்லது.  புதிய முயற்சிகளை தகுந்த ஆலோசனை, நல்ல நேரம் யோகம் பார்த்து தொடங்குவது நன்மை தரும். 07.07.21க்கு பின் நல்ல நிலமை. பரவாயில்லை மாதம்.

சந்திராஷ்டமம்: 21.06.21 பிற்பகல் 02.12 மணி முதல் 22.06.21  பிற்பகல் 12.35 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : அண்ணாமலையார் உண்ணாமுலை தாயார் வழிபாடு, சிவாஷ்டகம், லிங்காஷ்டகம் படிப்பது, தான தர்மங்களை அதிகம் செய்வதும் நன்மை தரும். ப்ரதோஷம் நந்தி வழிபாடு நன்மை தரும்.

!! சுபம் !!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.